Tuesday, January 8, 2013

பெருமாள் முருகனின் “ஆளண்டாப் பட்சி”



(காலச்சுவடு ஜனவரி 5, 2013 அன்று நடத்திய நூல்கள் வெளியீட்டுவிழாவில் வாசித்த கட்டுரை)
              இன்றைக்கு என் அன்புக்கும் மதிப்புக்குமுரிய எழுத்தாளர் பெருமாள்முருகன் அவர்களின் “ஆளண்டாப் பட்சி” என்கிற நாவல் ஆக்கத்தை வெளியிட்டதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.  இது பெருமாள் முருகனுடைய ஆறாவது நாவல். இதற்குமுன் வெளியான அவரது நாவல்களில் அவரது முதல் ஆக்கமான ஏறுவெயில், கூளமாதாரி, மாதொருபாகன், கங்கணம் ஆகியவற்றை நான் ஏற்கெனவே வாசித்த்திருக்கிறேன். இந்த ஆக்கங்களில் நாம் காணும் சில பொதுவான அம்சங்கள் இவை:  பல்வேறுத் தன்மையிலான நிலப்பகுதிகள், உதாரணமாக விளைகாடு, மேய்ச்சல்நிலம், மொட்டைப்பாறை, திருத்தப்படாத காடு, புல்டோசரால் சிதைக்கப்பட்ட நவீனகுடியிருப்பாகும் நிலம்,  போன்றவற்றின் காட்சிகள், நிலவுடமைச்சாதிகளுக்கும், ஒடுக்கப்பட்ட சேவைச்சாதிகளுக்கும் இடையிலான சிக்கலான உறவுச் சமன்பாடு, ஆண்-பெண்ணிடையே உள்ளிடையான  பால் மற்றும் குடும்ப அதிகாரம், பிணைப்பும் பிணக்கும் கூடிய சகோதர உறவு என்பவை.  இந்த அம்சங்களை, கதைக்கூறுகளை ஆளண்டாப் பட்சியிலும் நெடுகக் காணலாம்.  நாவலில் இவற்றோடு பின்னிப்பிணைகிறது இடம்பெயர்தல் எனும் நிகழ்வு. இந்த நிகழ்வு கதையின் அடிப்படையான சரடாகி நாவலாக விரிகிறது. தன் முன்னுரையில் பெருமாள்முருகன் இவ்வாறு கூறுகிறார்: ”இந்நாவல் என் முன்னோர் குடும்பம் ஒன்றின் இடப்பெயர்வு நிகழ்வை மையமிட்டது. சிறுசிறு இடப்பெயர்வேனும் நடக்காத வாழ்க்கையில்லை. ஒவ்வொரு இடப்பெயர்வின் பின்னும் வலியும் துன்பமும் நிர்ப்பந்தமும் இருக்கின்றன. இடப்பெயர்வின் பின்னான நிலைகொள்ளுதலும் எளிதல்ல. இடப்பெயர்வுகள் வழங்கும் மனவிரிவும் புதுமைகளும்கூட முக்கியமானவையே.”
இடம்பெயர்தலின் பின்னிருக்கும் துன்பம், அதைத் தூண்டும் சூழல் நிர்ப்பந்தம்,  நிலைகொள்ளுதல்,புது இடம் வழங்கும் மனவிரிவு, புதுமைகள் இவற்றின் விவரணைகளை அளிக்கும்ஆக்கமான ஆளண்டாப் பட்சி இவற்றைத் தாண்டியும் சில முக்கிய கேள்விகளை வாசகரிடத்தில் எழுப்புகிறது: இடம்பெயர்தல் என்பதன் சமூகப்பண்பாட்டு அர்த்தம் என்ன?  ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு மனிதர்களும் குடும்பங்களும் இனக்குழுக்களும் இடம்பெயர்கையில் எந்தச் சமூக பண்பாட்டுக்கூறுகள் தொடர்கின்றன? எவை விடுபட்டுப்போகின்றன? சொந்தபந்தங்களில் எவை தொடர்கின்றனர்? எவை விடுபட்டு அல்லது விடப்பட்டு போகின்றனர்?  இடம்பெயர்தலின் உந்துசக்தி எங்கிருந்து எவ்வாறு கிடைக்கிறது? புதிய இடம் பழைய இடத்தின் நீட்சியாக அல்லது பழைய இடத்தின் பதிலியாக தனிமனித, சமூக மனங்களில் எப்படி உருக்கொள்கிறது? பழைய இடத்தின் எந்தத் தன்மைகள், எத்தகைய நினைவுகள் புது இடத்துக்குத் தக்கவாறு புத்துருவாக்கப்படுகின்றன, எவை புறந்தள்ளப்படுகின்றன? வாசிக்கின்ற போதும் வாசித்து முடித்துபின்னும் இந்தக் கேள்விகள் என் எண்ணத்தில் தொடர்ந்து பதில்கோரியவண்ணம் இருக்கின்றன. இந்த அல்லது இதுபோன்ற கேள்விகளை எழுப்பும் வலிமையை பெற்றிருப்பதே இந்த நாவல் கலையாக்கமாக நிலைத்து நிற்கும்  என்பதற்கான அடையாளமாக, அத்தாட்சியாக இருக்கிறது.
சிறு இடம்பெயர்தல்கூட இல்லாத வாழ்க்கையில்லை என்று பெருமாள்முருகன் எழுதியிருப்பது சரிதான். ஒரு வீட்டிலிருந்து இன்னொன்றுக்கு, கிராமத்திலிருந்து நகரத்துக்கு, ஒரு ஊரிலிருந்து இன்னொன்றுக்கு, ஒரு கண்டத்திலிருந்து இன்னொன்றுக்கு,. தனி நபராகவோ குடும்பத்தோடோ ஏதோ ஒரு இடம்பெயர்தல் நம் வாழ்க்கையில் நேர்ந்திருக்கும். என்னை எடுத்துக்கொண்டால் பதினைந்து வயதுவரை  கிட்டத்தட்ட ஏழெட்டு ஊர்களில் பள்ளிக்குச் சென்றிருக்கிறேன். அதன்பின்னரும் மேற்படிப்புக்காக வேலைக்காக என்று பல இடங்களுக்கு மாறியிருக்கிறேன்.  நகரமயமாக்கப்பட்ட சூழலில் இடம்மாறுதல் என்பதுவேறு; ஆனால் குடும்பம் என்பது மனிதர்கள் என்பதாக மட்டுமல்லாமல் கடவுளர், வேலைசெய்பவர்கள், ஆடுமாடுகள், மரம்செடிகளையும் சேர்த்துக் குறிக்கும்போது, வீடு என்பது மூடிய கட்டிடமாக அன்றி காடு வெளி என்பதாக நெகிழ்ந்து அர்த்தப்படும்போது இடம்மாறுதல் என்பதன் பரிமாணங்களே வேறு. இத்தகைய இடம்பெயர்தலில் நிலமும் நிலத்தின் மண்ணும் இடம்பெயரும் நிகழ்வுக்கான பின்னணிப்படுதாவாக அன்றி ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே ஆகிவிடுகின்றன; அதேபோல ஆடுமாடுகளும் மரம்செடிகளும் மனிதருக்குப் பயன்படும் பொருள்களாக மட்டுமேயன்றி இடம்பெயரும் பயணத்தில், அப்பயணம் நிர்மாணிக்கும் வாழ்க்கையில் பங்குகொள்ளுபவையாக மாறிவிடுகின்றன.    
ஆளண்டாப் பட்சியில் செல்லுமிடம் எதுவென்றே முடிவெடுக்கப்படாமல், அது குறித்த திட்டமிடலுக்கு முன்னமே இடம்பெயர்தல் அவசியமாகிறது. ஆள்களை அண்டவிடாத பட்சி என்று தொன்மப்பறவையாக கதையில் வர்ணிக்கப்படும், மையப் பெண்கதாபாத்திரம் தருகிற உந்துதல் அல்லது கோரிக்கை இந்த இடப்பெயர்தல். ”எங்கே என்று தீர்மானிக்காத பயணம். பிழைக்கலாம் என்னும் தைரியத்தை எந்த இடம் தருகிறதோ அங்கே நின்றுவிடலாம். வண்டி நிதானமாகவே போகும். ஒவ்வொரு ஊருக்குப் பக்கத்திலும் நின்றுவிடும். சாலையிலிருந்து பிரிந்து செல்லும் வண்டிப் பாதைகளிலும் திடுமெனத் திரும்பும். உள்ளே போய் அலைந்துவிட்டு மீண்டும் ஏதாவதொரு இடத்தில் சாலைக்கு வந்து இணைந்துகொள்ளும்..” என்று விவரிக்கப்படுகிறது இந்தப்பயணம்.  சேரவேண்டிய இடத்தை தீர்மானிக்க ஏலாத  சூழ்நிலையில், அந்த இடத்தை வண்டிமாடுதான் கழிபோட்டு படுத்துக் காட்டித்தருகிறது:  மாடு காட்டித்தந்த இடத்தில் வாங்குகிற காட்டில் மனைவி மக்களோடு குடித்தனம் துவங்குமுன்னரே வெள்ளாட்டுக்குட்டிகளும் வெங்காயப்பொட்டுக்கூடைக்குள் மொழுக்குக்கல்லாக கருப்பசாமியும் வந்துவிடுகின்றனர்.  கருப்பனாரை வெங்காயப் பொட்டுக்கூடை ஒன்றினுள் போட்டுக் கொடுத்திருந்தாள் பெருமா.  சிறுகூடை. கோப்பா மூடி போட்டு இரண்டு படி வெங்காயம் பிடிக்கும் அளவுக்கூடை. அதற்குள் பொரி வாங்கி வந்த மழைக்காகிதத்தில் மண், கருப்பனார் கல், சூடம், ஊதுவத்தி, சாம்பிராணி, முழங்கை நீளம் உள்ள வேல் எல்லாம் இருந்தன.” கருப்பசாமி மட்டும் தனியாக எப்படி தனியாக வரமுடியும் அவருக்கு உகந்த பாலமரமும் நிலத்துமண்ணும் இல்லாமல்? வாங்கியிருக்கிற புது நிலத்தில் பாலமரமில்லாதாதல் பாலமரக்கொத்தும், கூடவே பழைய நிலத்திலிருந்து கருப்பசாமிக் கோயில் மண்ணும் எடுத்துவரப்படுகிறது. அதேபோல  விட்டுவருகிற ஊர்ப்பகுதியில் பண்ணையத்தில் வேலைசெய்யும் அருந்ததியரும் கூடவே வருகிறார்.
ஏன் புதிய இடத்தில் அவ்விடத்தின் மண்ணோடும் சாமியோடும் மரங்களோடும் மாந்தரோடும் மட்டும் இருக்கமுடியவில்லை? புதுஇடத்தில் மாதாரிகள் இல்லாவிட்டாலும் அவ்விடத்துக்கேயான நிலத்தில் பாடுபடுபவர்கள் இருக்கிறார்கள்; பாலமரமில்லாவிட்டாலும் வேப்பமரங்கள் தழைத்திருக்கின்றன. வெள்ளாடுகள் கிடைக்காவிட்டாலும் வேறுவகை ஆடுகள் கிட்டக்கூடிய இடமும்தான் அது.  வந்துசேர்ந்த இடத்தின் கடவுளான வடமலை ஐய்யன் மீது கதையின் நாயகனுக்கும் ஈர்ப்பும் வந்துவிட்டிருக்கிறது. ஐய்யனின் கோயில் திருவிழாவில் பங்கேற்கும் வரிசெலுத்தும் உரிமை கிடைத்துவிட்டது, இருந்தபோதும் விட்டுவந்த இடத்தின் கருப்பசாமியும் மண்ணும் மரமும் வெள்ளாடுகளும் புதிய இடத்திலும் குடியேற்றப்படுகிறார்கள். பழைய இடத்தின் தொடர்ச்சியாகவும் புதிய இடம் உருவாக்கப்படுகிறது என்று நாம் சொல்லலாம்தான். ஆனால் இங்கே வேறொன்றும் நடக்கிறது.
தமிழகத்தில் ஆய்வுசெய்திருக்கும் பண்பாட்டு மானுடவியல் அறிஞர் வேலண்டைன் டேனியல் தமிழர் பண்பாட்டில் transaction of substances அதாவது பொருள்சாரத்தின் பரிமாற்றம் என்பது பெரும்பங்கு வகிப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். அதாவது ஒருவரது உடல், வீடு, ஊர், உணவு, பாலியல் துணை போன்ற இவை எல்லாமும் குறிப்பிட்ட பொருள்சாரங்களால் ஆனவையாக  உருவகிக்கப்படுகின்றன, ஆகவே ஒரு நபருக்கும் அவர் வசிப்பிடத்துக்குமான உறவு, அவர் கொள்ளும் குடும்ப உறவுகள் அல்லது மற்ற உறவுகள் போன்றவற்றில் இந்த சப்ஸ்டன்சஸ் அல்லது பொருட்சாரங்களுக்கிடையிலான பரிமாற்றம்  பரிவர்த்தனை நடக்கிறது; உதாரணமாக குளிர்ச்சியான இளநீரைக் குடித்தால் உடல் குளிர்ந்துபோகும் என்பதுபோல.  இந்தப் பரிவர்த்தனை எப்போதுமே தமக்குள்ளான மற்றும் தமக்கும் உலகத்துக்குமான ஒரு இசைவுநிலையை (equilibrium) இலக்காகக் கொண்டு செயல்படுகிறது என விவரிக்கிறார் டேனியல்.  இதன் அடிப்படையில் பார்த்தால், எந்த பழக்கமும் பிணைப்பும் இல்லாத புது இடத்தோடான  ஒரு இசைவான உறவைப் பெற வேண்டி, அத்தகைய உறவை நிர்மாணிக்கும் வகையில் ஏற்கெனவே பழகிய, பரிவர்த்தனை நடந்த, விட்டுவந்த நிலத்தைச் சார்ந்தவைகளும் சார்ந்தவர்களும் அழைத்துவரப்படுகிறார்கள், குடியேற்றப்படுகிறார்கள் எனலாம். மேலும் இத்தகைய குடியேற்றத்தின்மூலம் குடியேறுபவர்களின் பண்பாட்டுக்களத்துக்குள், நடைமுறைகளுக்குள் குடியேறுகிற நிலம் உள்வாங்கப்படுகிறது; தூய இயற்கையான நிலம் குடும்ப இடமாக குழுப் பண்பாட்டு விழுமியமாக மாறுகிறது.
காட்டைத் திருத்தி விளைநிலமாக்குதல் பற்றிய விரிவான விவரணைகள் இந்நாவலில் வருகின்றன. ஆவணப்படி எந்தக் காடுமே ஆணின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் சொத்துதான்: என்றாலும்கூட, பெண்களும் பண்ணையவேலை செய்யும் அருந்ததி இனத்தவரும் பஞ்சமில்லாமல் உழைக்கிறார்கள்.   பெண் “பிடுங்கி வந்து நட்டுவைத்த செடி,” அவளுக்கு “ஊரும் மண்ணும், அதாவது புகுந்தவீட்டின் ஊரும் மண்ணும் கசக்கும்” என்று மைய ஆண்கதாபாத்திரம் நாவலில் ஓரிடத்தில் குறைகூறுகிறது. என்றாலும் இந்தக்கூற்றுகளை கதையில்வரும் பெண்பாத்திரங்களின் வாழ்க்கைமுறையே நிராகரிக்கமுடியும்.   தன் கணவன்வீட்டு மோட்டாங்காட்டை ஒண்டியாளாக நின்று திருத்திய ஒரு பெண்ணை நாவலில் எதிர்கொள்கிறோம். தனக்குப் பிரியமானவர்களின் நிலத்தைத் திருத்தும் பணியில் தான் செத்தாலும் வெள்ளாமைக்கு எருவாகி வருடம்தோறும் பயிராக செடிகொடியாக முளைத்து ருவேன் என்று பின்னொரு கணத்தில் ஒலிக்கிறது முதியவளான அவள் குரல்.   தனக்குப் பிரியமானவர்களை கடைசிவரை காப்பாற்றும், அவர்களுக்கு சகாயம் செய்யும் ஆளண்டாப்பட்சியின் வடிவமாகவே இந்தப்பெண்ணையும் நாம் காண்கிறோம். பொருண்மையான சொத்து ஆணுக்கு; தொன்மச்சிறப்பு மட்டும் பெண்ணுக்கா என்ற விமர்சனம் எழ வாய்ப்பிருக்கிறது. அப்படியொரு விமர்சனம் எழுந்தாலும் அது நியாயமாகவே இருக்கும்.
 இந்த ஆக்கத்தைப் பற்றிப் பேச இன்னும் நிறைய இருக்கின்றன. என்றாலும் நேரம் கருதி இத்துடம் முடித்துக்கொள்கிறேன்.  

5 comments:

பெருமாள் முருகன் said...

பெருந்தேவி அவர்களுக்கு,
வெளியீட்டு விழா உரையை வாசித்தேன். கேட்டபோதைவிட வாசிக்கும்போது உங்கள் கருத்துக்களைத் தெளிவாகப் பின்தொடர முடிகின்றது. நேரம் கருதி நீங்கள் எழுதாமல் விட்ட பகுதியையும் எழுதினால் மகிழ்வேன்.
அன்புடன்,
பெருமாள்முருகன்

Perundevi said...

நன்றி பெருமாள்முருகன் சார்.

ஜமாலன் said...

உரை நன்றாக உள்ளது. விரிவாக எழதுங்கள். மாடு கழிபோட்டு இடம் தேடித்தரும் நிகழ்ச்சியை வாசித்தபோது உங்க்ள கட்டுமுரையில், முகமது நபி இடம்பெயர்ந்தபோது (மெக்காவிலிருந்து மதீனாவிற்கு- ஹிஜ்ரா செய்தபொழுது) அவர் தங்க மதீனாவில் ஒட்டகம்தான் ஒரு இடத்தில் படுத்து இடம் காட்டிய வரலாறு நினைவிற்கு வந்தது. இடம்பெயர்தல் என்பதில் உள்ள ஒரு உளவியல் சிக்கல் இது எனத் தோன்றுகிறது. எப்போதும் இயற்கை என்பதை அதிகபட்ச நீதியாக கொள்ளும் ஒரு மனநிலை அல்லது இயற்கையாக ஒரு இடத்தை நமக்கென ஏற்பதில் உள்ள ஒரு பாதுகாப்பு உணர்வு. அந்த நாவலைப் படிக்கவில்லை. உங்கள் உரை ஒரு நல்ல அறிமுகமாக உள்ளது.

Perundevi said...

ஜமாலன், மெக்காவிலிருந்து மதீனாவுக்கு நபி இடம்பெயர்ந்தபோது ஒட்டகம் மறித்துப்படுத்து இடம்காட்டியது இங்கே பொருத்தமான ஒரு முன்னுதாரணக் கதைத்தருணம். சுட்டியதற்கு நன்றி. இயற்கையை அதிகபட்ச நீதி என்றி நீங்கள் குறிப்பிடுவதைப்பற்றி கொஞ்சம் விரித்து எழுதுங்கள். இயற்கைக்கும் மனிதவாழ்வுக்கும் இடையிலான அல்லது இரண்டையும் தொடர்புறுத்தும் இசைவுநிலையைப் பற்றி கட்டுரையில் சுட்டியிருக்கிறேன். “நீதி” என்கிறபோது இயற்கைக்கு மேலதிக இடம் அல்லது இறையொத்த நிலையை தருவதாகிவிடுகிறதே.

Unknown said...

இந்த நாவலை பாதிதான் வாசித்திருக்கிறன் (இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது). அதற்குள் எனக்குள் எண்ணற்ற மன ஓட்டங்கள். அதற்குள்ளாகவே விமர்சனங்களை மனம் தேடியது. அவசரக்குடுக்கை என்பதை விட என் மன சஞ்சலமே இதற்க்கான காரணமாக நான் கருதுகிறேன். ஒரு குடியானவனின் வாழ்வியலும் குடும்பப் பிணைப்புகளும் பிணக்குகளும் நாவலின் சாரமாக இருக்கின்றது. இதே சாயலுள்ள கொங்கு நாட்டிலிருந்து 200-300 ஆண்டுகளுக்கு முன் இடம்பெயர்ந்த சந்ததியைச் சார்ந்தவன் நான். நானும் தொடர்ந்து இடம் பெயர்வதால் நாவலின் அடி நாதத்தை உணர முடிவதாக உணர்கிறேன். இது வரை வாசித்ததில் இதை நாவல் என்று என்னால் நம்ப முடியவில்லை. யாரோ ஒருவர் அருகில் அமர்ந்து தனது நெடிய துயர வாழ்க்கைப் பயணத்தை வருணிப்பது போலவே உள்ளது. வாசிப்பு முடிந்தவுடன் நீண்டதொரு விமர்சனம் எழுத ஆசை.