Sunday, January 30, 2011

தேவை இங்கே திசைதிருப்பல் அல்ல

பேராசிரியர் சூர்யநாராயணனின் ”LIVELIHOOD OF FISHERMEN IN THE PALK BAY- SRI LANKAN TAMIL PERSPECTIVE” (28 ஜனவரி 2011) கட்டுரையைப் படிக்க நேர்ந்தது (http://www.southasiaanalysis.org/papers44/paper4304.html, நன்றி, பத்ரி சேஷாத்ரி). கட்டுரை பாக் வளைகுடா மீனவர் பிரச்சினை பற்றிய அவதானிப்புகளைத் தீவிரமாக முன்னெடுப்பது போலத் தோற்றம் தருகிறது. சமீபத்தில் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டதாக ”சொல்லப்படுவதைக்” குறிப்பிட்டு, எல்லை தாண்டி மீன்பிடிக்க வருபவர்களை பொதுவாக மற்ற நாடுகள் கையாளுவதைப் போல இலங்கை கையாளுவதில்லை என்று சுருக்கமாக அவதானிக்கிறது. என்றாலும், கட்டுரையில் வைக்கப்பட்டிருக்கிற வாதங்களும் தகவல்களும் சில கேள்விகளை எழுப்புகின்றன:

கிடைத்திருக்கும் செய்திகளின்படி 530-க்கும் மேல் இருக்கிறது கொல்லப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை. ஆனால் சூர்யநாராயணன் இறந்தவர்களின் எண்ணிக்கை 100 என்கிறார். என்ன வருடத்திலிருந்து இந்தக் கணக்கைச் சொல்கிறார் என்று எனக்குப் புரியவில்லை.

எண்ணிக்கைப் பிரச்சினை இருக்கட்டும். கட்டுரையில் சுட்டப்படுகிற ”இலங்கையின் தமிழ் மீனவர்” என்பதற்கும், “இலங்கை மீனவர்” என்கிற சொற்றொடருக்குமான பொருள் வேறுபாட்டை கவனிக்க வேண்டும். எதற்கு இந்தத் தமிழ் அடையாளம் இங்கே என்று யோசிக்கலாம். இரு விதங்களில் இந்த அடையாளம் இயங்குகிறது; (அ) தமிழக மீனவர்களின் ட்ராலர்களைக் குறைக்கச் சொல்லும்வகையில், ’நாமே’ (தமிழக மீனவர்களே) நம்மின மக்களின் (இலங்கைத் தமிழ் மீனவர்களின்) வாழ்வாதாரத்தைக் குலைக்கலாமா என்று “மனசாட்சியை” நோக்கிய கேள்வி போல் ஒன்று; (ஆ) தமிழக மீனவர்களின் சாவுக்கு அடிப்படை ’வெளியிலிருந்து’ இல்லை, ‘நமக்குள் (தமிழக மீனவர்-இலங்கைத் தமிழ் மீனவர்)’ நடக்கும் தொழில்போட்டிதான் என்று செயல்முறை விளக்கக் காரணம் காட்டும் மற்றொன்று. பிணைந்திருக்கிற இவ்விரு சொல்லாடல்களும் இலங்கை என்கிற நாட்டின் கடல்நீரில் நடந்த கொலைகளுக்கான பொறுப்பிலிருந்து அந்த நாட்டை அழகாகக் காப்பாற்றி விட முயல்கின்றன.

இதற்கு நீட்சியாக அடுத்த படியாக, நடந்த கொலைகளுக்கு இலங்கை அரசும் இந்திய அரசும் பதில் சொல்லவேண்டும் என்று தமிழகத்தில் எழத் தொடங்கியிருக்கும் கோரிக்கையை திசைதிருப்பும்முகமாக, குற்றச்சாட்டைத் தமிழக அரசில்பால் திருப்பிவிடுகிறது கட்டுரை. இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் குலைகிறது, இதற்குக் காரணம் தமிழக மீனவர்களின் ட்ராலர்கள் முதலியவை, தமிழக அரசு இதைக் கண்டும் காணாமலும் இருப்பது மனித உரிமை மீறல் என்று கட்டுரை சொல்லிக்கொண்டு போகிறது.

தொடர்ந்து தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் வரும் நிலையில், மீனவர் எதிர்கொள்ளும் வன்முறை குறித்த பேச்சை நாம் கூர்மைப்படுத்த வேண்டியிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், இக்கட்டுரை “இலங்கை தமிழ் மீனவர்” “தமிழக மீனவர்” என்கிற தொழில்போட்டி எதிரிணையை தமிழக மீனவர் எதிர்கொள்ளும் இலங்கைக் கடற்படையின் வன்முறையோடு conflate செய்து பேசுவது மிகவும் பிரச்சினைக்குரிய ஒன்று.

மேலும், ட்ராலர்களை உபயோகித்தல், அடுத்த நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டுதல் போன்றவை இன்றைய உலகளாவிய முதலீட்டியம் குறித்த இன்னமும் விரிவான ஆய்வுச்சட்டகங்களின் ஊடே அணுக வேண்டியவை. இத்தகைய அணுகுதலுக்கு மாறாக தமிழக மீனவர் தொடர்கொலை வன்முறையோடுகூட இந்த செயல்பாடுகளை இணைத்துப் பேசுவது, இந்த வன்முறையைப் புரிந்துகொள்ளவும் உதவாது; சூழலியல் மற்றும் குடிகளின் வாழ்வாதாரங்கள் பகிர்தல் போன்றவற்றின் மீதாக நாம் கொள்ள வேண்டிய தொலைநோக்கு அக்கறையையும் விசாரணையையும்கூட திசைதிருப்பிவிடும்.

Sunday, January 16, 2011

”கவிதை வாசிப்பு என்பது ஒரு பறத்தலாகவும் அதே சமயம் ஒரு புதைவாகவும் இருக்க வேண்டும்:” உலோகருசி வெளியீட்டு நிகழ்வில் திலீப் குமார்

(புத்தகக் கண்காட்சியில் 10 ஜனவரி 2011 அன்று உலோகருசி கவிதைத் தொகுப்பை வெளியிட்டு எழுத்தாளர் திலீப் குமார் பேசியதன் உரைவடிவம்)


உலோக ருசி: ஓரு சிறு குறிப்பு

பெருந்தேவியை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். சொல்லப்போனால் அவர் கவிஞராக உருவாகிக்கொண்டிருந்தை நான் கூட இருந்தே பார்த்து வந்துள்ளேன். இன்று அவருடைய ”உலோக ருசி” என்கிற மூன்றாவது தொகுப்பை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

அவரது முதல் தொகுப்பான தீயுறைத்தூக்கத்திலிருந்து தொடர்ந்து பார்த்து வரும் போது அவரது கவிதைக்ளின் உருவத்திலும் உருவாக்கத்திலும் படிப்படியான என்றாலும் ஒரு சீரான செறிவு தென்படுகிறது. முந்தைய கவிதைகளில் காணப்பட்ட இறுக்கம் குறைந்து ஒரு வித நீர்மையும் பெருக்கும் மிளிர்வதைப் பார்க்க முடியும். பெருந்தேவியின் கவிதைகளின் இன்னும் ஓரிரு முக்கிய அம்சங்கள்:
* பெருந்தேவி ஒரு நவீனக் கவிஞராக இருந்தாலும் துவக்கம் முதலே தமிழ் செவ்வியல் கவிதையின் எதாவதொரு அம்சத்தை தன் கவிதைகளில் மிக இயல்பாகக் கலந்து எழுதக் கூடியவராக இருந்திருக்கிறார். அதே போல உலகக் கவிதைகளில் அவருக்கு உள்ள வாசிப்பின் காரணமாக அவற்றின் கூறுகளையும் தன் கவிதைகளில் அவரால் பிணைக்க முடிந்துள்ளது.
* பொதுவாக, கவிதை என்பது சொல்லில் பிறந்து பொருளை அடைகிறது. இங்கு பொருள் என்று சொல்லப்படுவது அதன் சம்பிரதாயமான பொருளில் அல்ல. கவிதையில் பொருள் என்பது பாடுபொருளின் எல்லைகளுக்கப்பால் பல திறப்புகள் கொண்ட பொருளாகச் செயல்படுகின்றது. ஒரு உரைநடைப் படைப்பில் சொல்லின் பொருள் என்பது அப்படைப்பின் மற்ற விவரங்களின் சேர்க்கையால் அது ஒரு குறிப்பிட்ட சம்பிரதாயமான நிலையில் கூட சிறைபட்டுவிடக்கூடியது. ஆனால் கவிதையில் வரும் சொல்லுக்கு ஏராளமான சிறகுகள் உண்டு. அதற்கென்று ஒரு பரந்த வானம் உண்டு. பெருந்தேவியின் கவிதைகளில் இக்கூற்று மிக சிறப்பாகத் துலக்கம் கொள்கிறது.

சமீப வருடங்களில் தமிழில் ஏராளமான பெண் கவிஞர்கள் எழுதி வருகிறார்கள். அவர்களின் கவிதைகளை வகைப்படுத்துவதற்கென்றே சில முறைமைகளும் உருவாகிவிட்டிருக்கின்றன. (இத்தகைய வகைப்பாட்டிற்கு அந்தக் கவிஞர்களே ஒத்துக்கொள்ளாவிட்டாலும் கூட இது எப்படியோ நிகழ்ந்து விடுகின்றது). இதற்கு ஒரு வரலாற்றுத் தேவையும் பொருத்தப்பாடும் இருந்தாலும், இவை காலப்போக்கில் தமிழ்க்கவிதையின் ஆதார நீரோட்டத்தோடு இணைந்துகொள்ளக்கூடிய இலக்கியச் சிறப்புகளை கொண்டிருக்கவேண்டும். பொதுவாக, தரப்புகள், சார்புகள், நிலைப்பாடுகள் இவற்றின் அடிப்படையில் உருவாகும், உருவாக்கப்படும் இலக்கியப் படைப்புகளுக்கு ஆயுள் குறைவு. பெருந்தேவியைப் பொறுத்தவரை, அவரது உடனடியான பறிமாறல்களுக்கும் / உரையாடல்களுக்கும் தேவையான அரசியலும் நிலைப்பாடும் காணப்பட்டாலும் கூட, கூடவே இந்த தற்காலிக வரம்புகளைக் கடந்து செல்லும் பண்புகளைக் கொண்டவையாக உள்ளன. இது மிக முக்கியமான விஷயமென்று நான் கருதுகிறேன். எந்த ஒரு எழுத்தும் நிரந்தரமானதல்ல. ஆனால், நிரந்தரத் தன்மையை நோக்கிய பாய்ச்சல்களும் அவற்றில் இல்லாமல் இருக்க முடியாது.

பெருந்தேவியின் இத்தொகுப்பில் உள்ள கவிதைகளைத் தனித்தனியாகக் குறிப்பிட்டு பேசுவதை விட, தொகுப்பாக இவை தரும் நிறைவுக்கான தர்க்கத்தையே நான் மேலே குறிப்பிட்டுள்ளேன். ஒரு கவிதையின் வாசிப்புப் பயணத்தில் அது நாம் ஆழ்மனதுக்குள் மூழ்கி எழ வசதியான பல தருணங்களையும் பல வழிகளையும் கொண்டிருக்க வேண்டும். கவிதை வாசிப்பு என்பது ஒரு பறத்தலாகவும் அதே சமயம் ஒரு புதைவாகவும் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பெருந்தேவியின் கவிதைகளில் இந்த அம்சங்கள் மிக அலாதியான ஒரு வீச்சோடு உருக்கொண்டுள்ளன.

இந்தப் புத்தகத்தை வெளியிட வாய்ப்பு தந்த பெருந்தேவிக்கும், காலச்சுவடு கண்ணனுக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழத்துகளும்.

திலீப்குமார்
சென்னை.

(புகைப்படத்தில் இடமிருந்து வலம்: கண்ணன், திலீப் குமார், அம்பை, பெருந்தேவி. கவிதைத் தொகுப்பைப் பிரசுரம் செய்த காலச்சுவடு பதிப்பகத்தார், வெளியிட்ட திலீப், முதல் பிரதியைப் பெற்றுக்கொண்ட அம்பை மற்றும் வருகை தந்திருந்த நண்பர்களுக்கு என் நன்றியும் அன்பும். அதேபோல, கவிதைகளுக்கு விரிவான பின்னுரையொன்றை நல்கியிருக்கும் ஜமாலனுக்கும் அட்டையை வித்யாசமாக வடிவமைத்துக் கொடுத்திருக்கும் பயணிக்கும் என் அன்பு கலந்த நன்றி: பெருந்தேவி)