Thursday, July 24, 2008

Wednesday, July 23, 2008

பெரும்பாலும்

நாற்பது வயதுப்
பெண்கள்
தூங்குபவர் மேல்
போட்ட கால் தனதை
கட்டிலுக்கும் தெரியாது
எடுக்கும்
பெருந்தன்மையோடு
முறித்துக்கொள்கிறார்கள்
உறவை.

Tuesday, July 22, 2008

மிச்சம்

இத்தனை எஸ்எம்எஸ்களை
மிக நிதானமாக
ஒன்றன் பின் ஒன்றாக
ஆடைகள் அவிழ்ப்பதைப்போல
அழிக்கிறாள்
மறைகின்றன அவை
போதைகளால் நடனமாகவே
உருவானவள்
நிறங்களோடியபடியிருக்கின்ற
வண்ணமேடையோரமாய்
நகர்ந்துமறைந்ததைப் போல.
ஒரு கோப்பை காபுசினோவையோ
சிறிய மிராண்டாவையோ
நீட்டிய ஒருவனின் அந்நிய விழிகளில்
அவள் அகம்
வெட்டுப்பட்ட குட்டியுடலின்
காத்திருந்த
ரத்தம் சோர்கிறது
துடித்து வாரியணைக்க
தன்னுரிமையை யோசிக்கும் முன்னமே
அவன்முன்
வேறு நிர்வாணத்துக்கான ஒப்பனைகளோடு
நிற்கிறாள் அவள்
பாடலாய் செவிகள்கொள்கின்றன
அலறுதல்கள்.
'ஸிம் கார்டுகளை கழிவறைக்கிண்ணத்துக்குள்
தொலையவிடுங்கள்.
செல்போனை யோனிக்குள்
அலையவிடுங்கள்'
கரகோஷங்களுக்கிடையில்
சிக்குப்பிடித்தது அவள்
அகம் என்று
வேறொருவன் கத்துகிறான்.
கண்டறிந்தது அவன் மனமா கரமா
தன் முடிக்கற்றையை அவன் மூக்குத்துளைக்குள்
நுழைக்கிறாள் அவள்.
அவன் தும்மலை
ஆதிக்கக் கருத்தியல் என்று
நகையாடுகிறாள்.
கூட்டமும் சிரித்தலறுகிறது.

தொலையாத உன் செல்போனுடன்
எத்தனை தொலைவுதான் செல்வாய்
துடித்தல் மேலும் அவனதாய் கேட்கிறான்
கொஞ்சம் முன் அவளுக்கு
மிராண்டா கொடுத்தவன்
அல்லது காபுசினோ கொடுத்தவன்.
வெறுத்து அவன் கேள்வியை
ஒறுக்கிறாள்
ஒரு சீமாட்டியைப்போல
நூறு ரூபாயொன்றை நீட்டி
அவனை ஓடிப்போகச்சொல்கிறாள்.
உன்னை நீயே புணர்ந்துகொள்
என்பது ஏன்
அவள் சொல்ல கெட்டவார்த்தைகளாகக்
கேட்கவில்லை?
பின்னும் வினவுகிறான்.
வேறென்ன,
அவளை அவன் காதலித்திருக்க வேண்டும்.
பௌர்ணமி
அறைகளுக்கு வெளியே
இன்னமும் மிச்சமிருக்கிறது.
வராத வந்துவிட்டிருந்த
எஸ்எம்எஸ்களுக்காக
அவள் தன்னை
மன்னித்துத்தான் தீர வேண்டும்.
வராத வந்துவிட்டிராத
அவள் கண்
நீர்த்துளிகளுக்காக
அவனும் காத்துக்கொண்டுதான்.
வரப்போகுமா?
தளத்தின் வேறொரு மூலையில்
வெயிட்டர்கள்
காத்திருக்கும் வேளையில் அணிந்துபார்க்கும்
கோமாளிக்குல்லாவின் குஞ்சலம்
ஒருவேளை ஒருவேளை
என்றே ஆடியசைகிறது.

(இக்கடல் இச்சுவை தொகுதியிலிருந்து)

காத்திருந்தவள்

இச்செடி துளிர்க்கும்போது
வந்தாள் அவள் மொட்டரும்பி
அவிழ்ந்து
பூக்கள் கண்ணை நிறைத்து
உதிரவும்
தொடங்கிவிட்டன
காத்திருந்ததன் அடையாளமாக
இனி இங்கேயே நிற்கும் செடி.
துரோகத்தின் அடையாளமாக
ஒரு பூச்சருகை மட்டும்
எடுத்தவள்
தன் பெட்டிக்குள்ளே
போகிறாள்.

Monday, July 21, 2008

E.E. Cummings (4) மேகியும் மில்லியும் மோலியும் மேயும்

மேகியும் மில்லியும் மோலியும் மேயும்
கடற்கரைக்குச் சென்றார்கள் (ஒருநாள் விளையாட)

தொல்லைகளையே நினைக்க இயலாமல் செய்த
அத்தனை இனிதாகப் பாடும் கிளிஞ்சல் ஒன்றை மேகியும் கண்டாள்

சோம்பலுற்ற ஐந்து விரல்கள் கதிர்களாக இருந்த
வழிதட்டிப் போன நட்சத்திரம் ஒன்றை நட்பாக மில்லியும் கொண்டாள்

குமிழிகளை ஊதியபடி பக்கவாட்டில் விரைந்தோடிவந்த
பயங்கரம் ஒன்றால் மோலியும் துரத்தப்பட்டாள்

வீட்டுக்கு வந்தாள் மேயும்
இந்த உலகத்தைப் போல அத்தனை சிறிதான
தனிமையைப் போல அத்தனை பெரிதான
வழவழத்த உருண்டைக் கல் ஒன்றோடு

ஏனென்றால் எதை நாம் இழந்தாலும் (ஒரு உன்னை அல்லது ஒரு என்னைப்போல)
எப்போதும் நம்மையே நாம் கண்டுபிடிக்கிறோம் கடலில்.

Saturday, July 19, 2008

சுருட்டை முடிக்கற்றைகளோடான

அந்தக் குழந்தைக்கு
இருவயது இருக்கலாம்
முதல் மொட்டை அடிக்கவில்லையாம்
மடியில் வைத்துக்கொண்டு
முடிவளையங்களில்
விரலை
விட்டுவிட்டு அலைந்தவர்
அசப்பில் சிவன் வேஷம் போட்ட
சிவகுமார் மாதிரியே இருந்தார்
ஏனோ எனக்கு
யானைமுடி மோதிரம்
நினைவில் வந்தது
எல்லாமறிந்த குழந்தையின் தாய்
ஓடோடி வந்து
குழந்தையை
வாரி எடுத்துச் சென்றுவிட்டாள்.

கடிதங்கள்

நண்பர் கார்த்திக் எழுதியது:

July 7, 2008

"பெயர் தரும் தேவி". நல்ல அங்கதம் :)
உங்கள் இரு கவிதைகளை (என்ன பருவம் இது, அவா) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறேன். "என்ன பருவம் இது" invocative ஆகவுள்ளது. (பிரபு என்ன கொடுமை சரவணா என்பது போல சொல்லிப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை). "கேசவா" யாரோலோ ஏற்கெனவே எழுதப்பட்ட மாதிரி படித்துவிட்ட மாதிரி உள்ளது.

E.E. Cummings மொழிபெயர்ப்பு மிக நன்றாக இருக்கிறது. குறிப்பாக அந்தக் கடைசி வரி கம்பீரமாக. ("மன்னியுங்கள் எங்களை, வாழ்வே, மரணத்தின் பாவமே.")
"அண்டசராசரம்" மிக அடர்த்தியாகவும் கச்சிதமாகவும். திரும்பத் திரும்ப அதைப் படித்தேன். எந்தக்காரணத்தினாலோ பிரமிளை நினைவுபடுத்தியது.

"அறியாமையின் பெருவெளி
சிறகடிக்கத் தூண்டியது
அவநம்பிக்கையின் ஒரு கல்
பறத்தலை ஊர்தலாக்கியது."
இதை அப்படியே உணர்ந்தேன்.....சமீபத்தில். நம்பிக்கையின்மை, ஏமாற்றம் குறித்த பயம், சந்தேகம். இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று பிணைந்து வேரூன்றியிருப்பது தன்னை உள்குவித்த சுயத்தில் அல்லவா?
Kate Chopin-ன் "The Awakening" வாசித்துக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு இருக்கும் வேலைகளுக்கும் நடுவில் நிறைய எழுதுகிறீர்கள். நல்லது.

June 26, 2008

உங்கள் சமீபத்திய கவிதைகள் intense ஆக இருக்கின்றன. சொற்கள் புடைத்து உடைபட்டு எப்படி பருத்தி வெடிக்கிறதோ அதைப்போல.

"மெகாசீரியல் காட்சியில்
வருத்தம் தோய்ந்த
ஒரு கணவன்
உருண்டுபடுக்கக்
கற்றுத்தந்தான்
இப்படி இப்படி"
Could not stop smiling after reading this. It is a kind of teasingly funny.

கார்த்திக்

*****

அன்பின் கார்த்திக்,

முதலில் ஒரு விஷயம்: நண்பர்களைக் கலாய்த்த பதிவை நீக்கி விட்டேன். என்னுடைய "Statcounter" தந்த விவரப்படி, குறிப்பிட்ட அந்தப்பதிவுக்கு நிறைய வருகைகள் இருந்தன. பதிவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் சட்டென்று கூடியிருந்தது. கொஞ்சம் வருத்தம் கொள்ளச்செய்த தனி உரையாடலும் நிகழ்ந்தது. என் பதிவை இலக்கிய, தத்துவப் பிரதிகளின் வாசிப்புக்காகவும் விசாரணைகளுக்காகவும் கவிதைகளைப் பகிரவுமே தொடங்கினேன். இந்த நோக்கத்திலிருந்து என்னைப் பிறழவைக்கும் அபாயம் அந்தப் பதிவின் பிரதியில் இருந்தது என்று உணர்ந்து விலக்கிக்கொண்டேன்.

"என்ன பருவம் இது": பிரபுவைப் போலத்தான் சொல்ல வேண்டும். சரிதான். "அவா"-வை கவிஞர் ரிஷி ஏற்கெனவே மொழிபெயர்த்திருக்கிறார். "கேசவா" எளிமையான கவிதை. ஏற்கெனவே படித்ததுபோல் தோன்றியதில் அதிசயமில்லை.

"அண்டசராசரம்" எனக்கும் பிடித்த கவிதை. ஆனால், பிரமிள் ஏன் உங்கள் நினைவுக்கு வந்தார் என்று புரியவில்லை. என் கவிதைமொழி பிரமிளிடமிருந்து மிகவும் மாறுபட்டது என்று நண்பர்கள் சொல்லக் கேள்வி. என்னையும் பிரமிள் பெரிய அளவில் பாதித்ததில்லை. ஏன் என்று பின்னர் ஒரு பதிவில் எழுதுகிறேன்.

"அவநம்பிக்கையின் கல்" பற்றி இன்னொரு நண்பரும் பேசிக்கொண்டிருந்தார். கல் வெளியிலிருந்தும் எறியப்படலாம், நமக்குள்ளிருந்துதான் என்றில்லை. மேலும் சுயமும் தன்னிலையும் பிறரால் பிறவற்றால் கட்டப்படுவதும் சுட்டப்படுவதும் தானே. நாம் கழிவிரக்கப்படத் தேவையில்லை சில சமயங்களில் என்றே சொல்லுவேன்.

கேட் சோபின் அமெரிக்கப் பெண்ணிய எழுத்தாளர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இனிமேல்தான் வாசிக்கவேண்டும். நீங்கள் வாசித்துவிட்டு எழுதுங்கள்.
பெருந்தேவி

டெஸ்க்டாப்பில் பொரியுண்ணும் மீன்

--கவிதை நீக்கப்படுகிறது--

Friday, July 18, 2008

எளிய சமையல் குறிப்பு

வெள்ளிக்கிழமையின் காற்பகுதியையும்
திங்கட்கிழமையின் தலைப்பகுதியையும்
அலுவலகத்திலிருந்து வெட்டி
ஒரு வாரவிடுமுறைச் சாற்றில் இட்டு
(உன் துணைவர் நச்சரிக்காதவர் என்றால் மட்டுமே)
தொடர்ப் பகற்கனாவில்
அதை அடுப்பில் வைத்து
(கடிகாரம் பார்க்காதிருப்பது முக்கியம்)
விண்மீன்கள்
ஒன்றிரண்டையும்
(நீ தனித்துக் காணப்போகிறவை)
ஒரு நாவலின் சில பக்கங்களையும்
(ரமணிசந்திரனுடையது அல்ல)
பொடித்துத் தூவி
கொதிக்கையில்
(இப்படியும் அப்படியும்
அறையில் உலாவும் நீ
இதை அதை
ஒழுங்குபடுத்தாதே
இந்நேரம்)
கொஞ்சம்
தாளிப்பைச் சேர்த்து
(இது உன் இஷ்டம்,
ஒன்று மட்டும்,
கவிதை பகுதிநேரமாய்
எழுதிச்சேர்த்தல்
ஆரோக்கியக்கேடு)
பதனமாய்
இறக்கி வைக்கும்வரை
(கவனம் இணையத்தைப்
பார்த்தால் சுவை மாறிவிடும்)
உன் மேல்
தயவுசெய்து
சற்றே தள்ளியிருக்கும்
பிள்ளைகள்
(சுறுசுறுப்பானவார்களா?
ஆம் என்றால்)
சிரிப்புக் கொத்துமல்லிகளை
கிள்ளிப் போட்டதும், அதை
வரும் மாதங்களுக்காக
குளிர்ச்சாதனப்பெட்டியில்
(இப்போது கருவளையங்கள்
நீங்கிவிட்ட உன்
கண்களாகவும் இருக்கலாம்)
பத்திரப்படுத்தியபின்
பகிர்ந்து கொள்
மீதியை யாருடனும்.

கடலும் கைப்பை அளவும்

உன் விழிகள்
காண்புலனின் வெறும் கொள்கலமல்ல
முத்துக்களின் பொக்கிஷமே
என்றறிவேன்.
என்னிடம் உருண்டோடி வந்த
இரண்டு முத்துக்களை
வேறு பெண்களுக்குச்
செய்த துரோகங்கள்
என மறுத்து
மீட்டெடுத்துக்கொண்டாய்.
துரதிர்ஷ்டக் காற்றின் இரவென்றால்
திறம்பெற்ற மூழ்குபவருக்கும்
முத்து கிடைப்பதில்லை.
கடல் அதற்குப்
பொறுப்பெடுப்பதில்லை ஒருபோதும்.
தங்கள்
கைப்பைகளில்
கடல்களையே அள்ளிவந்துவிடுகிறார்கள்
சில பெண்கள்.(அவர்கள் கைப்பைகளில்
மணல்திவலைகள் வேறெப்படி வந்ததாம்)
கடல் அதற்கும்
கோபப்படுவதில்லை ஒருபோதும்.
கடலிடமிருந்து நீ கற்க இருக்கின்றன
ஓராயிரம்
பொறுப்பின்மையும் பொறுமையும்.
இப்பெண்களிடமிருந்து
நான் பெற்றுக்கொள்ள இருக்கின்றன
ஓராயிரம் பேராசைகள்.

Thursday, July 17, 2008

கவிஞன்

அரங்கத்தின் மேடைக்கு
அழைக்கப்படுமுன்
தன்னைக் கேட்டுக்கொள்கிறான்
இன்று எப்படி எழுதப் போகிறேன்
இங்கிருந்து வெளிசெல்லும் வழி எங்கே
கேள்விகளை
யோசிக்கும்போதே
கையில் பிடித்த
பாம்பாகிறது
ஒலிபெருக்கி.

இளவெயிலில்
அலையும் முடிக்கற்றைகள்
கவிதைகளின் மகுடியை இசைக்கின்றன.
அவனைக்
காப்பாற்றப்போகும் கருணை
விரல்களுக்குத்
திரும்பத்தரப்படுகிறது
அவனுக்குப் புலப்படாமலே.

Wednesday, July 16, 2008

முன்னேற்பாடு

வா ழ் க்
செங்கல்களை
அடுக்கிவைத்து
கட்டிக்கொண்டிருக்கும்போது
கை குறைந்தால்
என்ன செய்வீர்?
உத்திரவாதம் ஏதும்
தரப்படவில்லை இன்னும்
ஒரு செங்கலால்
வீடு வீழாதென்றாலும்.

பறவை பாம்பான கதை

அறியாமையின் பெருவெளி
சிறகடிக்கத் தூண்டியது.
அவநம்பிக்கையின் ஒரு கல்
பறத்தலை ஊர்தலாக்கியது.

Tuesday, July 15, 2008

E.E. Cummings (3): யாருக்குத் தெரியும், நிலாவோ

வானத்தில் அழகிய மாந்தர் நிரம்பிய
ஆர்வமிக்க தொரு நகரத்திலிருந்து
வெளியேவரும் பலூன்
நிலாவோ,
யாருக்குத் தெரியும்?
(மேலும்
நீயும் நானும் அதில் நுழைந்தால்,
அவர்கள் உன்னையும் என்னையும்
அந்தப் பலூனில் ஏற்றிக்கொண்டால்,
அழகிய மாந்தரோடெல்லாம் நாம்
வீடுகள் சிகரங்கள் மேகங்களுக்கும்
உயரே
ஏன் செல்லமாட்டோம்:
மிதந்தபடி தொலைவில் தொலைவில்
மிதந்தபடி
ஒருவரும் வருகைதந்திராத
ஆர்வமிக்க நகரத்துக்குள்,
எப்போதும்
அங்கே
வசந்தம்) மேலும் அங்கே
ஒவ்வொருவரும் காதலில்,
தாமே பறித்துக்கொள்ளும் பூக்களும்.

(பதிவில் வெளிவரும் கவிதைகளையோ கருத்துகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.)

Monday, July 14, 2008

கேசவா

மூன்றாம் முறையாக
விபத்தை எதிர்த்து
வீடு மீண்ட என்னிடம்
அத்தையொருத்தி
கேசவா கேசவா என்று
இனியாவது சொல்லென்றாள்.
கேசவனைக் கூப்பிட்டால்
வாசல் வரும் விபத்து
வராந்தாவில் நின்றுவிடுமாம்.
அன்றிலிருந்து
ஆகாயம் முதல் நிலம் வரை
எதில் வேகஞ் சென்றாலும்
சொல்ல மறப்பதில்லை.
ஒருமுறை
தூக்கத்தில்
கேசவா என்றேன் போல.
கனவில்
என்னோடு
இயக்கத்திலிருந்த
சிநேகிதன்
கோபித்துப்போனவன்தான்.
இதுவரை
கண்ணுக்குத் திரும்பவில்லை.

சில கவிதைகள் (1997)

அண்டசராசரம்

மடிப்புள் மாம்ச
வெயில் விரித்தெனைக்
கொத்தும் தனிமையோர்
காகம்.


*******

ஒரு செந்நிறப் பள்ளத்தாக்கு அழுகை
ஒளிபுகா
பனி சுமந்து இறுகிக்கிடப்பன
வெட்கம் ஒரு மருங்கு
நிந்தை மற்றொன்று
கடந்தும் ஏதோவொன்றின்
ஆவியாகித் தொலைய வான்நோக்கி
நீலம் மறைக்கும் வெட்டுக்கிளி மந்தை.
அப்போது காற்று புகா
மண்டிக்கிடப்போம் தழைகளின் ஈரவாடையோடு
சுடுமூச்சுகளின் நாசி சிகப்புப்புதர்
கெக்கலிக்கும் விளையாட்டுச்சிறுமிகள் போலும்
அலைந்து செல்லும்
அந்நியரின் கரு ஆறு உடல்கள் மேலே
திரும்ப அவர் குரல் திரும்ப
சுட்டும் அதன் முனை அநாதி காலம்
மிகப்பழையன சுவைமொட்டுகள்
இறைத்த யாரோ ஏக்கங்களின்
அசையொலி நாம் பாறைகளூடே
கசியும் பிளவுகள்

எதிரே ஆழத்தின் சிகப்பருவி வெகு உறவு
எப்போதைக்குமாய் வீழ எண்ணி கடந்தவண்ணம்.


*****

சப்தம்
குளம்புகள் மழலைகளின்
யார்
வெகுதூரம் புவிகடக்க
சுற்றமும் உற்றாரும்
சாரதிக்க
யாழினித்து மரிக்கும்
தேயும் அடிகளின்
செம்மையுறும்.

வளர்ந்தோம்.

******

("தீயுறைத்தூக்கம்" விருட்சம்-ஸஹானா வெளியீடு, 1997)

Sunday, July 13, 2008

இன்பம்: ஓரம் போ திரைப்படம் அல்லது பிரியாணியா, குஸ்காவா? (2)

(இது விமரிசனம் அல்ல)

7. படம் இனவரைவியலாக மட்டுமே காட்சிப்படுத்தப்படாமல் இருப்பதும் நவீனத்தின் பிம்பங்களோடு தன்னைத் தொடர்ந்து இணைத்தபடியிருப்பதும் குறிப்பிடப்படவேண்டியவை. சிலபல தமிழ் எழுத்தாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட பருத்திவீரன் எனக்குப் பிடிக்கவில்லை. காரணம், இனவரைவியல் எனும் காட்சிப்பரப்பில் அது கட்டியெழுப்பும் லிங்கமைய (phallocentric) மதிப்பீடுகள். பருத்திவீரன் என்கிற பெயரே லிங்கமையச்சார்போடு நிலப்பிரபுத்துவ வாசனை வீசுகிறது. படத்தின் கடைசியில், லிங்கமையங்கள் கதைப்பரப்பிலிருந்து எழும்பி நிஜலிங்கங்களாகி பெண் புண்டையை வன்புணர்த்தி ரத்தம் தெறிப்பது கொடுமை. அந்தக் கொடுமையை மறந்துவிட்டு நம் படத்துக்கு வரலாம். பாட்டொன்றில் கல்லூரியில் தோற்றுப்போகும் வாலிபனாக, ஆட்டோ நிறுத்தத்தில் பங்க்சர் ஒட்டுபவராக வரும் தொந்தி கணபதி நடிகர் ஊர்வலத்தில் நீரில் மூழ்குகிறார். பங்க்சர் கணபதி மூழ்கும்போது நீருக்கு மேல் குவிகிற அவரது கரங்கள்மூலம் வலதுசாரி கணபதி ஊர்வலங்களுக்கு ஜாலியாக உரையெழுதப்படுகிறது. இன்னும் சில காட்சிகளில் சாராயக்கடைக்கு மேல் அமர்ந்து சிவன் நிஜமாகவே அருளாசி வழங்குகிறார். அனுமான் வேடமிட்டவர் குளிர்கண்ணாடியோடு நீலவண்ணத்தில் காட்சியில் இயைகிறார் (என் குட்டிச்சீதை கவிதைவரிகள் நினைவுக்கு வருகின்றன: http://innapira.blogspot.com/2008/06/blog-post_29.html)

8. Life is fart. படத்தின் தொடக்கத்தில் வாழ்க்கை பிறப்புக்கும் இறப்புக்கும் இடையான நான்கு குசு என்று விவரிக்கப்படுகிறது. படமுடிவில், (ஜெயகாந்தனின்?) வாழைப்பழச்சாமி அனுமான் வேடத்தில் நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்று பாடி வருகிறார். மண் வனைத்த பானையாக காற்றுகொண்ட வெற்றிடமாக நம் உடல்கள் சுட்டப்படுகின்றன. உடல் பற்றிய தொடர்ந்த வலியுறுத்தல் செய்கிற கதையாடலில் இந்த வெற்றிடத்துக்கு அர்த்தம் தருவது வேகம் வேகம் வேகம் மட்டுமே. (நா. முத்துக்குமாரின் பாடல் வரிகளில், ஜி.வி. பிரகாஷ்குமாரின் இசையில், வாழ்க்கையெனும் போட்டியின் வேகம் அருமையாக இணைகிறது பாடல்களில்.)

8 (ஆ). என் தலைப்பின் பிரகாரம் எட்டுக்கு மேல் எழுதக்கூடாது. என்றாலும் தொடர்கிறேன். சிலகுறைகள் இல்லாமல் இல்லை. ராணியின் கதாபாத்திரத்துக்கு டப்பிங் குரல் பொருந்தவேயில்லை. கேட்டுப் புளித்துபோன elite வகைமாதிரிக் குரல் அது. தொந்தரவு செய்தது. இரண்டாவது, சேட்களையும் அய்யங்கார்களையும் காட்டியிருக்கிறவிதம். வடசென்னையில் எனக்குத் தெரிந்த எல்லா சேட்களும் இட்லி சாப்பிட்டுக்கொண்டு தமிழ் நன்றாகப் பேசுகிறார்கள். பிராமணர்களைப் பொறுத்தவரை--பிராமண உடலை எல்லாம்வல்ல இறை உடலாக அல்லது வல்லமை மிக்க சத்திரிய உடலாக விதந்தோதும் ஷங்கர், கமல் தருவது அருவெறுப்பு என்றால், இப்படத்தில் வருவது போல வேகம் பிடிக்காத தயிர்சாதமாக பிராமணர்கள் காட்டப்படுவது அவர்களைப்பற்றிய சமகாலப் புரிதல் அற்ற போக்கு. ஓரிரு சண்டை, ஒன்றிரண்டு குத்தாட்டம் போல, சூப்பில் ஆங்காங்கே மிளகையும் உப்பையும் தெறிப்பதுபோல இப்படியான 'சரித்தன்மையோடான' அடையாள அரசியலும் இறைக்கப்படவேண்டும் போல.

கருத்தரங்கு ஒன்றுக்காக சென்ற வாரம் மான்செஸ்டர் சென்று திரும்புகையில் ஏர் கத்தார் புண்ணியத்தில் ஓரம் போ- வைப் பார்த்தேன். என் அருகே அமர்ந்திருந்த, இதே படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த இரண்டு பதின்மவயதுக் குழந்தைகள் சிரித்துக்கொண்டே இருந்தார்கள். தீம் பாடலில் ப்ளேஸ்-ன் குரல் கேட்டவுடனேயே எங்கள் கால்கள் தாளம்போட ஆரம்பித்தன. எப்பேர்ப்பட்ட பாடகர் அவர். ஊருக்கு வந்தவுடன் இப்படத்தைப் பற்றிச் சிலநண்பர்களிடம் கேட்டேன். யாருமே இதைப் பார்த்திருக்கவில்லை என்று தெரிந்ததும் ஆச்சரியமும் விசனமும் ஒருங்கே வந்தன. மீண்டும் இப்படத்தைப் பார்க்கவேண்டும். படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்.

Saturday, July 12, 2008

இன்பம்: ஓரம் போ திரைப்படம் அல்லது பிரியாணியா, குஸ்காவா?

(இது விமரிசனம் அல்ல)

ஓரம் போ என்கிற நகர உதிரிகள் பற்றிய திரைப்படம் எனக்குப் பிடித்ததற்கான ஏழெட்டு காரணங்கள்:

0. நமக்கு இதுவரை தமிழ்த்திரைப்படங்களில் காணக்கிடைத்திருக்கிற பல விஷயங்கள் பகடி செய்யப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, 'போட்டி' என்பதை எடுத்துக்கொள்வோம். ஆட்டோ ஓட்டுகிற கதாநாயகன் சந்துருவுக்கும் அவன் போட்டியாளனுக்கும் நடைபெறுகிற ஆட்டோ 'இரவு ரேஸ்' உறுதிசெய்யப்படுகிற இடம். குத்துவெறி கொலைவெறி பாவனைகளில் முகத்தை வைத்துக்கொள்கிற இருவரிடமும் (படத்தில், படத்தைப்) பார்ப்பவர்கள் வேறெதையோ எதிர்பார்க்க, அவர்களோ பொதுவாக இப்படியான காட்சிகளில் காட்டப்படும் சண்டை உறுமலைப் பகடிசெய்கிற விதத்தில் போட்டிபோட்டுக்கொண்டு இட்லிகளையும் தோசைகளையும் ஆர்டர் செய்துசாப்பிட்டுவிட்டு ரேஸ் செய்யப்புறப்படுவது. இன்னொரு இடத்தில் “அறியாப்பெண்” என்கிற புனைவு பகடிசெய்யப்படுகிறது. "ஒன்றும் தெரியாத சின்னப்பொண்ணு" என்று அப்பாக்காரர் மகளைப்பற்றி தன் மச்சானிடம் பேசிக்கொண்டிருக்கையில், ஆட்டோவில் அந்தப் பொண்ணு தன் காதலனிடம் "நான் சொல்வதை நீ செய்" என்று அவள் விரும்புகிற உடலுறவு மஜாவுக்கு உத்தரவு பிறப்பிக்கிறாள். ("பிரியாணியா, குஸ்காவா?")

1. ஆண் தொடங்குகிற உறவை இன்புற்று வலியத் தொடர்கிற பெண்ணாக கதாநாயகி ராணி. பின்னால் வாழ்க்கை போகிறபோக்கில் திருமணத்தை அவள் கேட்கிறாளே தவிர, இன்பத்துக்கு ஆண் தருகிற விலையாக திருமணத்தை அவள் முன்வைப்பதில்லை. அதேபோல, திருமணத்தை ஆண் மறுக்கிற போது, கோபத்தில் சாபம் கொடுத்தாலும் அவள் தற்கொலையை நோக்கியோ ஏன் அழுதுகொண்டோகூட இருப்பதில்லை. எப்போதும்போல பிரியாணி விற்கிறாள். இன்பம் துய்த்ததற்காக கண்ணீர் வார்க்காத பெண் எத்தனை புதிது நமக்கு.

2. திரைப்பட வளாகத்தில் இடுப்பைத்தொடுகிற ஆணை எத்தி உதைக்கிறாள் ராணி. ஆனால், காதலன் டிக்கெட் வாங்கிக்கொண்டு திரும்பிவந்து "என்ன நடந்தது?" என்று கேட்கும்போது ஒன்றும் இல்லை என்று சொல்கிறாள். தன் பலத்தை அறிந்துகொண்டால் ஆண் பயந்து ஒதுங்கி விடுவான் என்பதை அறிந்து வைத்துக்கொண்டிருக்கிற புத்திசாலிப்பெண். அவனிடம் அவள் "பெண்ணாக" நடப்பது கூட ஒரு பாவனை தான் போல.

3. உடல் கொண்டாடப்படுகிற படத்தில் காதலின் ஞாபகங்களாகவும் பாலுறவுத் தருணங்களே இருக்கின்றன. ஆட்டோ ரேஸ்களில் வென்று கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வரும் சந்துருவை, அவனும் ராணியும் அதே ஆட்டோவில் கொண்ட உறவு ஞாபகபிம்பங்களாக தொடர்ந்து அலைக்கழிக்கிறது, கவனம் சிதறடிக்கப்பட்ட அவனின் ஆட்டோ போலீஸ் வண்டியோடு மோதி விபத்துக்குள்ளாகிறது.

4. படத்தில் கதாநாயகனும் சரி 'வில்லனும்' சரி இருவருமே வெற்றி பெறுகிறார்கள். இதில் முக்கியமான விஷயம், 'வில்லனின்' வெற்றி அவன் ஆளுக்கும் கதாநாயகனுக்கும் நடக்கும் போட்டியில். முதல் முறை ரேஸில் ஜெயிக்கும் கதாநாயகன் அடுத்து நடக்கும் ரேஸில் பங்குபெறுவதில்லை. மூன்றாவதில் தோற்றுவிடுகிறான். பால் விற்றும் தரிசுநிலங்களைத் தோண்டியும் சட்டென்று கோடீஸ்வரராகும் முயற்சி திருவினையாக்கும் கதாநாயகன்கள் நிரம்பிய தமிழ் சினிமாவில் தொடர்ந்து முயற்சியில் தோற்கும் கதாநாயகனை இதில் காண்கிறோம். கடைசியில் அவன் பணக்காரனாவது யதேச்சையால் தானே தவிர உழைப்பால் அல்ல. ("விதி யதேச்சையென்னும் வடிவெடுத்து வரும்" என்று சொன்னது மிலன் குந்தேரா என்று நினைக்கிறேன்.).

5. நல்லவன்/கெட்டவன் வித்தியாசங்களும் குழம்பியபடிதான் இருக்கின்றன படத்தில். சந்துருவும் ராணியும் இன்பம் துய்க்கும்போது இடர் தராதவன் 'வில்லன் - காமெடியன்' சன் ஆப் கன். கதாநாயகியின் மீது கண்வைக்காதவனும் கூட.

6. ரேஸின் வேகத்துக்கு தம்மை, தம் வாழ்க்கையை தந்துவிடுபவர்கள் கதாபாத்திரங்கள். சந்துருவின் தோஸ்து பிகிலிடம் எல்லாவற்றையும் பந்தயத்தில் பறித்துவிட்டு, டிவி (ரோஜா போல ஒரு மெகாசீரியலின் வசனங்கள் பின்னணியில்) பார்த்துக்கொண்டிருக்கும் 'வில்லன்,' மிகவேகமாகச் செல்ல கட்டமைக்கப்பட்ட "சீட்டா" எனப்படும் பிகிலின் ஆட்டோவைப்பார்த்துவிட்டு ("நம்ம ஆத்தா சிலுக்கு ஸ்மித்தா மாதிரியில்ல இருக்கு"), மீண்டும் பந்தயத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கிறான். பிகிலையும் சந்துருவையும் தோற்கடிப்பதைவிட வேகம்செல்லும் ஆட்டோவின் மீதான அவன் காதல் படத்தைப் பின்னர் வழிநடத்துகிறது.
(தொடரும்)