Monday, September 22, 2008

க்ராஸ் டாக்

(அல்லது குறுக்குச்சால்)

இப்படித்தான்
அன்னைக்கி ஆத்தில என்ன நடந்ததுனா
சைக்கிள் காரு மீனுக்கில்லை காலு
பர்ஸ்ட் க்ளாஸ் பாட்டு போட்டான்யா
ஓரம்போவில கருமத்தைப் பேசாதே
சிரித்து சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
ஆஹஹா
பொம்பளை சிரிச்சாப்போச்சு
சிரிப்பா சிரிச்சிரும் கதை அப்புறம்
கதைக்கு காலு கை முளைச்சி
ஆண்குறியும் பெண் அதிகாரமும்
வெவ்வேற வீடுகளுக்குப் போவது தான்
கலசம், அரசி, கோலங்கள்
ஏழைகளின் வாழ்வில் விளக்கேற்றுவோம்
வா மானாடி மயிலாடி
அய்யா ஏற்கெனவே திட்டிப்புட்டாரு
கையை காலை வச்சுக்கிட்டு சும்மா
இருக்கமாட்டீங்களா
பட்டாணி சுண்டல் சுக்குக்காப்பி
சரி சரிச் சும்மா டைம்பாஸ¤க்கு
சனியனே மேட்ச் பாக்கிறப்ப
உயிரை வாங்காதே
பிடிக்குங்களா
காலிப்ளவர் பக்கோடா
பக்கார்டி ரம்மோடு
பொறந்தா தமிழ் எழுத்தாளரா
பொறக்கணும்
பொரவலர் கிடைக்க
என்னுயிரே என்னுயிரே
மகளின் போனில் ரிங்டோன்
டிங் மெசேஜா வருதே
எந்தப் பொறுக்கி அது
ஏன் மூட்டுவலி இப்பல்லாம் வருது
கோப்பையிலே என் குடியிருக்கும்
அவன் யாரு சார் மகா கவிஞன்
இப்பல்லாம்
இன்னாத்த எழுதிக்கிழிக்கிறாங்க
மூத்திரம் முலை பத்தாததுக்கு
உடல் அரசியல்
கோஷ்டி அலையுது அவுங்களும்
கல்கி படிச்சி கவுந்தவங்க தான்
சார்
வந்தியத்தேவனை குந்தவை
மல்லாக்கவா யாருக்குத்
தெரியும் ஷகீலாவின் கண்ணீர்
மிகப்பெரிய பெரிசு தான்
ஆமாமாம் மிகப்பெரிய
கோப்பைகளையே நிரப்பப்
பற்றாது அஸிஸ்டெண்ட் டைரக்டரு
பேசினா என்ன துப்பினாகூட
மார்க்வெஸ் தான்
நடிகைகளின் வாழ்க்கைகள்
துயரப்பொதிமூட்டைகள் என்கிற
மானுடவியல் ஆய்வைச்
செய்த அமெரிக்க மாணவி
படுபேஜார்டி
கண்ணீரால் ஆய்வறிக்கையை
எண்ணூறு பக்கம் நிரப்பினாள்
தி ஹிந்து இலக்கியத் துணையிதழ்
படிச்சிட்டு இன்னிக்கு
வாழ்வாங்கு வாழ்ந்தப்புறம்
அதான்ப்பா அதேதான்
குப்புறப்படுத்துட்டு
நாளைக்காலையில்
சுனாமி வருமா
என மாற்றத்தை எதிர்நோக்கும்
உங்கள் அன்பன்.

Friday, September 19, 2008

E.E. Cummings (5) எப்பொதும் அப்படி இல்லாதிருக்கலாம் அது; மேலும் சொல்கிறேன்

எப்பொதும் அப்படி இல்லாதிருக்கலாம் அது; மேலும் சொல்கிறேன்,
உன் உதடுகள், நான் நேசித்திருப்பவை, இன்னொருவருடையதைத்
தொடுமானால், உன் அரும் வலிய விரல்கள் அவர் இதயத்தைப்
பற்றுமானால், நேரத்தில் வெகுதொலைவில் இல்லாத என்னுடையதைப்போலவே;
இன்னொருவரின் முகத்தின்மேல் நான் அறிந்ததுபோல் மௌனத்தில்
இனிய முடியுனது படியுமானால், அல்லது அதேபோல் மேன்மையாய்
சுருளும் வார்த்தைகள், அதீதமாய்ப் பேசிக்கொண்டு
மடக்கப்பட்ட ஆன்மாவின்முன் கையறுநிலையில் நிற்குமானால்;

இப்படி நேரவேண்டுமென்றால், சொல்கிறேன் இப்படி நேரவேண்டுமென்றால்--
என் இதயத்தின் நீ எனக்கொரு சிறுவார்த்தை அனுப்பு,
அவரிடம் நான் சென்று அவர் கரங்களைப் பற்றி
என்னிடமிருந்து எல்லா சந்தோஷத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்ல.
பிறகு என்முகத்தை நான் திருப்பிக்கொள்வேன், தொலைந்த நிலங்களில்
தூரத்தே பறவையொன்று பயங்கரமாய்ப் பாடுவதைக் கேட்பேன்.


(குறிப்பு: கவிதையில் ஆண்பால் படர்க்கைகளை பொதுப்பாலாக மாற்றியிருக்கிறேன்.)

Tuesday, September 16, 2008

இருட்டில் பிள்ளைபெறுபவன்

(எரிகா யுங்-ன் கவிதை)

இருட்டில் பிள்ளைபெறும் மனிதன்
இறந்துபடுகிறான்
மீண்டும்
வாழ்வுக்குத் திரும்புகிறான்

தன் கரங்களை விரிக்கிறான்
இருட்டில்
உகப்பான பிசாசுகளை
அணைப்பதுபோல

அவன் இருதயம் நிற்கிறது
துவங்குகிறது
மீண்டும்
அவன் மன்னிக்கப்படுகிறான்

எதற்காகவும் இல்லாமல்.
என் தந்தை
யவன்
இருட்டைப் பெண்பிள்ளைகளாகச்
செய்பவன்.

ஏன் புதுப்பதிவுகள் இல்லை?

ஏன் புதுப்பதிவுகள் இல்லை என்று நண்பர்கள் சிலர் எழுதிக்கேட்டிருக்கிறார்கள். உண்மையில், எழுத நிறைய இருக்கின்றன. ஹெலன் சிக்ஸுஸ் கட்டுரை ஒன்றை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். சில கவிதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறேன். ஆனால், இன்னும் சிலபல நாட்களுக்கு பதிவில் கவனம் செலுத்தமுடியாது போலிருக்கிறது. இப்போது என் ஆய்வின் இறுதிப்பகுதிகளை எழுதிக்கொண்டிருக்கிறேன். டிசம்பருக்குள் முதல்பிரதியை முடித்தாக வேண்டும். என்னுடைய பிரச்சினை என்னவென்றால் தமிழில் எழுதும்போது ஆங்கிலத்திலும் எழுதநேர்ந்தால் தமிழாக ஆங்கிலத்தை எழுதுவது போலாகிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், இருமொழிகளிலுமே நன்றாக மொழிதல், வெளிப்படுத்தல் போன்றவை குறித்த பயமும் வந்துவிடுகிறது. அதனால், என் பதிவை வாசிக்கும் நண்பர்கள் சில மாதங்களுக்கு பொறுத்து அருளுங்கள். திரும்பவும் சீக்கிரம் வருவேன். நன்றி.

சிறுநடைகள் பயில்வோம்

நடக்கிறோம்.
விழாநிலம் வாயில்கள் வாயில்கள் ப்ராண்டட் உள்ளாடைகளுக்காக
முளைத்தவை ஓதம் தோய்ந்த கால்களின் அடுக்கு டிஸ்கவுண்ட்
உருப்பொட்டலங்கள் வாகனம் நிரம்பிய அச்
சாலையில் முகம்திருப்பிக் கிடந்த ஒற்றைச்செருப்பு யாரது
நடக்கிறோம்.
சாக்லேட் திரவம் விற்கும் கலன்களுடன் இந்த யுவதிக்கு என்ன
பேச்சு சுருளாத அவள் விரிகூந்தலின் ஒருபுறமாக ஜ்வலித்தது
கண் ஒளிர்ந்த இன்னொன்று பனிச்சதுரமா ஜெல்லியா
நடக்கிறோம்.
உயர்த்துகிறது ஊடுகாண் கூண்டு நகரும்படிகளிலிருந்த சிறுமிகள் ஏன்
கையசைத்தனர் ரேப்பர் இனிப்பு நழுவி நழுவி கீழே நிறுத்தப்
பூங்காவின் கார்க்கூரை மேலே நகர்ந்து நகர்ந்து உயரே
உயரே உச்சிச்சூரியனோடு சம்பாஷிக்கலாம் பின்னால்
நடக்கிறோம்.
க்ரீம்கள் கெட்டித்த உடல் அச்சுகள் ஹென்னா பெண் அலங்காரம்
உதிரிமுடிகள் வரவேற்பில் நெருங்கிய வாசனைகளுடன் அடைய
முடியாதென்று அறிவிக்கிற அவள் மொபைல்
நடக்கிறோம்.
கேளிக்கையின் விதவித துண்டுகளின் கண்ணாடி மேடை
ஆடியுடைக்காத கணேசர்வகைக்கு பேரமில்லை தம்புராவோடு
ஒட்டிப்பாடி வெளுத்தவை பளிங்கு மீராக்கள் நிற்க நகர
இயலாதவர் அகர்பத்திக் குழாத்தோடு அமர்ந்திருக்கட்டும்
நடக்கிறோம்.
இளைஞர் முதியர் சிறார் எப்பாலாரும் உகந்த
டாய்லெட்டுகள் உன்னத மூளைப்பக்கங்களுக்கு ஒரே புத்தகச்
சந்தை பின்னர் கடைசி வார்த்தைக்குத் தட்டத் துவங்கிய கைகளால்
ஆசிரிய வாசகர் நிழற்படம் முறைக்கிறார் கவனம் சதுக்கத்தின்
ஊற்றுகள் நெளியும் மின்சாரம் நிரம்பிக் களிக்கின்றன
தூண்டுதல் உயர்தரக் குஷன்களில் காத்துக்கிடக்கும் மூட்டைகள்
பேரம் தொடுதல் புத்திர வுணர்ச்சிக்கு போலோ வளையம்
பொருந்தும் சுண்டுவிரலென்றால் பரிசுமழை அறுத்துத் தரலாம்
நடக்கிறோம்.
இங்கில்லை விளம்பரப்பலகை-மனைவியை மட்டும் நேசி எய்ட்ஸ்
வருமா யோசி-சரசர சம் சிரி சரசர யாரோடும் நடக்கலாம்
நடக்கிறோம்.


(இக்கடல் இச்சுவை தொகுதியிலிருந்து)