Saturday, February 29, 2020

தில்லி: வரலாற்றில் வலதுசாரி வன்முறையும் காவல்துறை போன்றவற்றின் பங்கும்

தில்லியில் ’கலவரங்’களைத் தடுக்க வேண்டியது அரசின் கடமையில்லையா என்று வெகுளித்தனமாகவோ அல்லது தெரிந்தே கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்டோ சமூகவலைதளங்களில் இன்னும் கேட்பவர்களைப் பார்க்கமுடிகிறது. வருத்தத்தோடும் இயலாமையோடு சொல்லவேண்டியிருக்கிறது. பல சமயம் இத்தகைய வன்முறை நிகழ்வுகள் திட்டமிட்டு அரசால், அரசு நிர்வாகங்களால் உருவாக்கப்படுபவை. மத அடிப்படையில் பாரபட்சம் காட்டும் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தற்சமயம் போராடும் இஸ்லாமியர் உள்ளிட்ட நாட்டு மக்களை அச்சப்படுத்தும் அரசின் நடவடிக்கை, மதச்சார்பின்மையையோ மதச் சமத்துவத்தையோ மதிக்காத அரசு, அதன் ஆதரவாளர்களால் விளைந்தது தில்லி வன்முறை என்பது வெளிப்படை. எனவே இரண்டு மதச் சமூகங்களுக்கு இடையிலான மோதல் என்ற எளிய, சிறுபிள்ளைத்தனமான பேச்சிலிருந்து முதலில் வெளிவர வேண்டும்.
மேலும் இத்தகைய ‘உருவாக்கப்படும்’ கலவரங்களின் போது காவல்துறை, துணை ராணுவம் போன்ற அமைப்புகளின் மெத்தனம் என்பது அத்தகைய அமைப்புகள் அடிப்படையிலேயே சுவீகரித்துக்கொண்டிருக்கும் மெத்தனம், விளைவான பாரபட்சம். இவையெல்லாம் இன்று நேற்றல்ல, காலம்காலமாக இருப்பது. மறந்துபோன சில வன்முறைச் சம்பவங்களை நினைவுபடுத்த நினைக்கிறேன். பல சமயம் இத்தகைய வன்முறை நிகழ்வுகளில் கொல்லப்படுபவர்களில், உடைமைகள் இழந்து பாதிக்கப்படுபவர்களில் பெரிதும் சிறுபான்மையினரே என்பதுதான் வரலாற்றுரீதியான உண்மை.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு 1960இல் அஹமதாபாத்தில் நடந்த மிகப்பெரிய முதல் கலவரத்தை எடுத்துக்கொள்வோம். அரசின் குறிப்பின்படி, அதில் இறந்தவர்களில் 413 பேர் இஸ்லாமியர். 14 பேர் இந்துக்கள். 75 பேர் அடையாளம் கண்டுபிடிக்கப்படாதவர்கள். ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளையும் வீடுகளையும் இழந்தவர்கள் இஸ்லாமியர்கள். மாறாக, அதில் பத்து சதவிகித இழப்பே இந்துக்களுக்கு ஏற்பட்டது. அதே போல, 1984இல் நடந்த மும்பை-பில்வந்தி கலவரத்தில் எண்பது சதவிகிதத்துக்கு மேலான உயிரிழப்புகளையும் உடைமை இழப்புகளையும் சந்தித்தவர்கள் இஸ்லாமியர்கள்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில், 1971இலிருந்து 1987 வரை மாத்திரம் 31 மதரீதியான மோதல்கள் நடந்திருக்கின்றன. இதில் அதிர்ச்சி தரும் விஷயம், 15 மோதல்கள் PAC (provincial armed constabulary) சார்ந்து முன்னெடுக்கப்பட்டவை. அவர்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்டவை. இதில் இருந்த முப்பத்தி இரண்டாயிரம் துணை ராணுவத்தினரில் பெரும்பான்மையினர் ’உயர்’சாதி, இடைநிலைசாதி இந்துக்கள் என்பதும் இரண்டிலிருந்து மூன்று சதவிகிதம் மட்டுமே இஸ்லாமியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மொரதாபாத்தில் 1980ஆம் ஆண்டு நடந்த PAC சம்பந்தப்பட்ட வன்முறை வரலாற்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது. ஆகஸ்ட் 13 அன்று ரமதான் நோன்பு மாதத்துக்கு அடுத்த நாள் ‘இத்கா’ எனப்படும் இடத்தில் பிரார்த்தனைக்காக இஸ்லாமியர்கள் கூடியபோது, ஒரு சின்ன அசம்பாவிதம் நடந்தது. ஒரு பன்றியை யாரோ கூட்டத்தில் விட்டிருக்கிறார்கள். பிரார்த்தனையின்போது இவ்வாறு நடந்ததால் கோபப்பட்டு கூட்டத்திலிருந்து சிலர் கல்லெறியத் தொடங்கினார்கள். ஒரு அதிகாரி இதில் தாக்கப்பட்டு கீழே விழுந்திருக்கிறார். இதைக் காரணம் காட்டி PAC தாக்குதலைத் தொடங்கியது. துப்பாக்கிகளால் கண்டபடி சுடத்தொடங்கினர். இத்காவின் மூலையில் இருந்த ஒரு சிறிய மசூதியில் பிரார்த்தனைக்கு வந்த பலரும் (குழந்தைகள் உட்பட) ஒதுங்கினர். அவர்களுக்குப் பாதுகாப்பாக அது இருக்குமென்று. ஆனால், பதின்மூன்று குழந்தைகள் உட்பட இருபத்திநான்கு உடல்கள் மசூதிக்குள்ளிருந்து மட்டும் கண்டெடுக்கப்பட்டன. இந்த வன்முறை நிகழ்வு இந்து-முஸ்லீம் குழுக்களுக்கிடையிலான சண்டையாகவும் கலவரமாகவும்அரசுத் தரப்பில் காட்டப்பட்டது. ஆனால் இதில் சிறிய அளவிலான தூண்டுதலுக்கு எதிர்வினையாக, disproportionate ஆன மிக அதிகமான வன்முறையைக் காட்டியது PAC. சில கான்ஸ்டபிள்கள் இதில் மரணமடைந்தார்கள். கான்ஸ்டபிள்கள் தாக்குதலுக்கு உள்ளானபின் தான் தாங்கள் சுட்டதாக PAC கூறிய பொய் பின்னர் அம்பலமானது. இந்தக் கலவரத்தில் சாதாரண இந்து மக்கள் ஒருவர்கூட பாதிக்கப்படவில்லை, ஆனால் ஐநூறு இஸ்லாமியர்கள் இறந்தார்கள் என்று கள நிலவரம் தெரிவித்தது. இதில் இன்னும் அதிரவைக்கக்கூடியது, PAC கடைசிவரை, ஒரு டோகனிஸமாகக்கூட எந்த அரசு விசாரணைக்கும் ஆளாக்கப்படவில்லை என்பது.
போலவே மீரட்டில் 1987ஆம் ஆண்டு மே மாதம் நடந்த கலவரம். ராணுவத்தினர், துணை ராணுவத்தினர், சாதாரண காவல்துறையினர் என பதின்மூன்றாயிரம் பேர் பதற்றத்தைக் கட்டுப்படுத்த களத்தில் இருந்தனர். ஆனால், பல கொலைகளும் தாக்குதல்களும் இவர்கள் களத்துக்கு வந்தபின் தான் நடந்தன எனச் சொல்லப்படுகிறது. இக்கலவரத்தில் முந்நூறுக்கும் மேலாக கொள்ளையடிக்கப்பட்ட, அழிக்கப்பட்ட கடைகளில், சிறிய தொழிற்சாலைகளில் தொண்ணூறு சதவிகிதத்துக்கும் மேல் இஸ்லாமியர்கள் நடத்தியவை. சாரிசாரியாக அவர்கள் கடைகள் அழிக்கப்பட்டன. ஹஸ்தினாபுர், மொராத் நகர், மலியானா பகுதி என்ற மூன்று இடங்களில் வன்முறையின் கோர தாண்டவம் நடந்தது.
இதற்குமுன் பதற்றம் நிலவியிருந்ததா என்றால் நிலவியிருந்ததுதான். ஒரு இஸ்லாமியர் கடை, ஒரு இந்துவின் கடை தாக்கப்பட்டது, ஒரு இந்து கொல்லப்பட்டார். துணை ராணுவத்தினர் அழைக்கப்பட்டவுடன் அவர்கள் வீடு வீடாக மிரட்டி, சோதனை செய்யப் புகுந்தனர். இதை எதிர்க்கும் விதமாக இஸ்லாமியர் வாழும் பகுதியிலிருந்து சிலர் கல்லெறிந்தனர். உடனடியாக மிகப் பெரிய வலுவுடன் PAC நுழைந்தது. நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பதற்கு பதிலாக எடுத்தவுடனேயே அச்சுறுத்தத் தொடங்கினர், சோதனைக்கு உட்படவில்லை என்றால் சுட்டுவிடுவோம் என மிரட்டினார்கள். இம்லியான் மசூதிக்கருகே மூவாயிரம் பேர்கள், குழந்தைகள், பெண்கள் உட்பட, வந்து அமர்ந்து இந்த அச்சுறுத்தலுக்கு எதிராகப் போராடத் தொடங்கினர். இந்தக் களேபரத்தில் ஒரு படைவீரரின் துப்பாக்கி காணாமல் போய் ஒரு இஸ்லாமியர் வீட்டருகே கண்டெடுக்கப்பட்டது. பின்னர் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்து காவல்துறை அழைத்துச் சென்றபோது, சில பெண்கள் தடுக்க முயற்சித்தார்கள். இதில் சிலர் மீது ஜீப் ஏறியது, அவர்கள் காயமடைந்தார்கள் எனக் கூறப்படுகிறது. இதன்பின் PAC மீது கல்வீச்சு நடந்தது. இந்து-முஸ்லீம் கலவரமாக வடிவெடுத்தது. இருபுறமும் தாக்குதல் தொடங்கியது.
ஆனால், இது மிக முக்கியம், இருபுறத் தாக்குதல்கள் நடக்கும்போது, மே 19 அன்று, இந்துக் கும்பலுக்கு மாத்திரம் எந்தப் பின்விளைவுமின்றி இஸ்லாமியரைத் தாக்க அனுமதி கிடைத்தது. இருநூறுக்கும் மேற்பட்ட எளிய இஸ்லாமியர்கள், ரிக்‌ஷா ஓட்டுநர்கள், காய்கறி விற்பவர்கள் போன்றவர்கள், கொல்லப்பட்டார்கள். பற்பல இஸ்லாமிய வீடுகள் கொளுத்தப்பட்டன.. மொராத் நகரில் நாற்பதுக்கும் மேம்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு வாய்க்கால்களில் தூக்கியெறியப்பட்டார்கள். மலியானாவில் திடீரென நுழைந்த PAC தாறுமாறாகச் சுடத் தொடங்கியது. துரதிர்ஷ்டமான விஷயம், மலியானாவில் இஸ்லாமியர்களின் வீடுகளை, கடைகளைக் கொள்ளையடித்தவர்களில் ’உயர்’சாதியினர், இடைநிலைச் சாதியினரோடு, ஒடுக்கப்பட்ட மக்களும் இருந்தார்கள். இஸ்லாமியர்களை ஒறுக்கும் இந்து அரசியல் அடையாளத்தில் ஒடுக்கப்பட்டவர்களும் இணைந்த அவலத் தருணம் அது. கடைசியில் PAC 2500 கலவரக்காரர்களைக் கைது செய்தது. அதில் பெரும்பாலும் இஸ்லாமியர்கள். கடுமையான காவல் சித்ரவதைக்கு அவர்கள் உள்ளாக்கப்பட்டார்கள்
இப்போது நடந்த தில்லி வன்முறைகளைப் பேசும்போது மறக்கப்பட்ட இவ்வரலாறுகளை நினைவுகூர்வது நமக்குச் சிலவற்றை புரிந்துகொள்ள உதவும். முதலாவது, பாஜக அரசின் சதித்திட்டம், ஆம் ஆத்மி தில்லி அரசின் கையாலாகாத்தனம் (அல்லது அதன் கைகள் கட்டப்பட்டிருப்பது) இவற்றை நாம் புரிந்துகொள்ளும் அதே நேரத்தில் காவல்துறை, துணை ராணுவம் உள்ளிட்டவற்றில் அமைப்புரீதியாகவே இருக்கும், செயல்படும் பாரபட்சத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அமைப்புகளில் எந்த அளவுக்கு இஸ்லாமியர்களுக்குப் பிரதிநிதித்துவம் தரப்படுகிறது, எந்த அளவுக்கு அவர்களது போதாமையுள்ள பிரதிநிதித்துவம் அநீதிக்கு வழிவகுக்கிறது, அதனால் அவர்களின் பொருண்மையான உயிர், உடைமை சேதாரங்களுக்கு வழிகோலுகிறது என்பதையும் சேர்த்து சிந்திக்க வேண்டும். இரண்டாவது, சிவிலியன்களுக்கும் காவல்துறை/துணை ராணுவத்தினருக்கும் இடையில் மனித உயிர் என்ற அளவில் காட்டப்படும் பாகுபாடு. ஒரு கல் மேலே பட்டாலோ, அல்லது ஒரு காவல்துறை அதிகாரி கீழே விழுந்தாலோ, அவர்களுடைய ’வீரத்துக்கு’ எதிராக முன்வைக்கப்படும் மிகப் பெரிய சவாலாக அது கருதப்படுகிறது. இதற்கும் ஆண்மை-வீரம் சொல்லாடல்களுக்கும் இருக்கும் தொடர்பை மறுத்துவிட முடியாது. இந்தச் சொல்லாடல்களுக்கும், காவல்துறை/துணை ராணுவம் போன்றவற்றில் உள்ளிடையாகச் செயல்படும் ’சத்திரியத் தன்மைக்குமான’ தொடர்பும் குறிப்பிடத்தக்கது. காவல் துறை/ துணை ராணுவம் போன்றவற்றில் கணிசமான பெண்கள் இருக்கும்போது, சிவிலியன்களுக்கும் காவல்துறை,துணை ராணுவம் உள்ளிட்ட ‘வீர’ உயிர்களுக்கு இடையில் காட்டப்படும் பாகுபாடு ஓரளவு குறையலாம். ஓரளவு குறையலாம் என்றுதான் சொல்கிறேன். உடனடியாக பெண்கள் வன்முறையில் ஈடுபடாதவர்கள் என்கிறேன் என கட்சிகட்டிக்கொண்டு யாரும் வரவேண்டியதில்லை. இன்றைக்கும்கூட ஜனநாயகரீதியாக நடக்கும் ஷாஹின்பாக் போராட்டங்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். அதே நேரத்தில் பொதுவாகவே எந்தக் கலவரம் என்றாலும் அதை முன்னெடுப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள். இந்தப் பால் பேதம் யதேச்சையானதல்ல. மேலும் தில்லியில் இப்போது நடந்திருக்கும் வன்முறையில் ஐபி அதிகாரி கொலையும், காவல் அதிகாரி ஒருவரது கொலையும் திரும்பத் திரும்ப வலதுசாரி ஆதரவு ஊடகத்தில் காட்டப்படுகின்றன. இந்தப் படுகொலைகளைச் செய்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள், மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் இந்தக் கொலைகளை முன்வைத்து எண்பத்தைந்து வயது மூதாட்டி எரிக்கப்பட்டது உட்பட பல உயிர்ப்பலிகளை இஸ்லாமியர்கள் சந்தித்திருப்பதையும் அவர்கள் பெரும் பாதிப்புக்கும் அச்சத்துக்கும் உள்ளாகியிருப்பதையும் நியாயப்படுத்த முடியாது. இன்றுவரை கலவரத்தைத் தூண்டிவிட்ட கபில் மிஸ்ரா போன்றவர்கள் கைது செய்யப்படவில்லை என்பதோடு அவர்களது எக்காளத்தைத் தடுக்கும் ஒரு சின்ன சமிக்ஞை கூட பாஜக தரப்பில் தரப்படவில்லை.
மூன்றாவது, இஸ்லாமியர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட முந்தைய வன்முறைகளுக்கு தில்லியில் நடந்திருப்பதற்குமான கால இடைவெளியில் கணிசமான எதிர்மறை மாற்றங்கள் இந்தியச் சமூகத்திலும் சரி, அரசியலிலும் சரி நடந்திருக்கின்றன என்பது வேதனையான ஒன்று. இந்து appeasement இல்லாமல் இனி தேர்தல் அரசியல் செய்யமுடியாது என்ற நிலைக்கு பிற கட்சிகளை பாஜக தள்ளிவிட்டிருக்கிறது. சட்டென களைய முடியாத பாஜகவின் விஷப் பங்களிப்பு இது. தேர்தல் அரசியலை விடுங்கள், நாளையக் குடிமகள்/ன்களை உருவாக்கும் வகுப்பறைகளில்கூட இந்து appeasement செய்யவேண்டிய சூழல் வந்திருக்கிறது. தற்போது, தில்லி கலவரத்துக்காக மோதியைச் சாடி முகநூலில் எழுதிய அஸ்ஸாம் குருசரண் கல்லூரியில் பணியாற்றும் இயற்பியல் துறை பேராசிரியர் சௌரதீப் சென்குப்தாவின் மீது அந்தக் கல்லூரி மாணவர்கள் காவல்துறையில் புகார் செய்திருக்கிறார்கள். அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இத்தகைய அச்சுறுத்தல் நிலையில் தில்லி என்ற இடம் பெரியதொரு குறியீட்டு முக்கியத்துவம் பெறுகிறது. நாட்டின், குடியரசின் தலைநகரம் என்ற அளவில். தலைநகரத்திலிருந்து இஸ்லாமியர்கள் சாரி சாரியாக வெளியேறுகிறார்கள். தற்காலிகமோ, நிரந்தரமோ இந்த வெளியேற்றம் பதைப்பைத் தருகிறது. இந்தியக் குடியரசின் உத்திரவாதமளித்த சமத்துவத்தில் அடிமடியில் கைவைத்துவிட்டது மட்டுமல்ல,, அதைப் பெருமையாகக் கருதுபவர்களாக இன்றைய ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். இதிலிருந்து மீட்சி என்பதையும் சமத்துவம் என்பதையும் நோக்கி நடப்பதற்கான பாதை மிகச் சிரமமானதாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை, பல்வேறு குழுவினருக்கும் தரப்புகளுக்கும் காந்தி குறித்து விலக்கம், விமர்சனம் இருந்தாலும், இன்றைய நிலையில் காந்தியே அந்தப் பாதையில் வழிகாட்டும் விளக்காகக் காட்சியளிக்கிறார். காந்தி இருந்திருந்தால் கலவரம் நடந்த இடங்களில் நேரில் சென்று நின்றிருப்பார், தலைநகரத்தைவிட்டு இஸ்லாமியர்கள் நகர்ந்துசெல்ல விட்டிருக்கமாட்டார் என்பதே என் எண்ணமாக இருக்கிறது.
(இக்கட்டுரையை எழுத Arthur Bonner எழுதிய ”Averting the Apocalypse: Social Movements in India Today” என்ற நூலில் தரப்பட்ட தகவல்கள் உதவின.)