Saturday, July 18, 2020

பிரதி மாறாட்டம்சில சாயங்காலங்களில் மனம் வெறிச்சோடிப் போயிருக்கும்போது புனைவுகளுக்குள் போய் மட்டுமே மனம் தங்குவதுண்டு.  அப்படியொரு சாயங்காலத்தில் எதிரே திறந்துவைத்திருந்த மின் திரையில், சிறுகதை ஒன்றில், முன்னறிமுகமில்லாத இரு கதாபாத்திரங்கள் ஒரு மதுக் கூடத்தில் சுவரை ஒட்டிய ஒரு மேசையின் எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தன.

”டிப்ரெஷனுக்குக் குடிக்கறேன்னு சுருண்டு கிடக்கறது, சந்தோஷத்துக்குக் குடிக்கறேன்னு வண்டியக் கொண்டுபோய் மோதறது, இதெல்லாம் என்னப் பொறுத்தவரைக்கும் குடிய அசிங்கப்படுத்தறது. குடிக்குக் காரணமே தேவையில்ல, காரணம் இருக்கக்கூடாதுனு சொல்வேன். இது ஒரு மாதிரி, நம்ம ரொடீன்ல ஒரு பார்ட்.”

ஆண் கதாபாத்திரம் தன் பேச்சை நிற்காமல் தொடர்ந்தது. கொண்டாட்டத்துக்குக் குடிக்கிறேன் என்று சொல்லக் கூடாது, குடிதான் கொண்டாட்டத்தை உருவாக்கவேண்டும் என்று ஒரு ஆலோசனையை வைத்தது. அதன் எதிரில் பெண் கதாபாத்திரம் உன்னித்துக் கேட்டபடி உட்கார்ந்திருந்தது.  அது கையை மட்டும்தான்  கட்டிக்கொண்டிருக்கவில்லை.

ஒருவேளை, முந்தைய ஜன்மத்தில் வேறொரு கதையில் இருவரும் குருவும் சிஷ்யையுமாக இருந்திருக்கலாம். விட்ட குறை தொட்ட குறையாக இருக்கலாம்.  தனியாக உட்கார்ந்து குடித்துக்கொண்டிருந்த பெண் கதாபாத்திரத்துக்கு எதிரே,  அந்த ஆண் கதாபாத்திரம் வம்படியாக வந்து உட்கார்ந்திராவிட்டால் அது இன்னும் சுதந்திரமாகக் குடித்துக்கொண்டிருக்குமோ என்னவோ, பாவம்.

பெண் கதாபாத்திரம் ஒரு சிவப்பு நிற ஃபாஸினோவை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே வந்திருக்கிறது என்று கதாசிரியர் ஒரு உபரித் தகவலைக் கொடுத்திருந்தார்.  நினைத்தால் இப்போதே இந்த முடியாத பேச்சிலிருந்து பெண் கதாபாத்திரம் தப்பித்து ஓடிப்போய்விடலாம்.  இந்தக் கதாசிரியரும் பொதுவாகக் கதையில் வளவளப்பவரில்லை.  அது ஓடிப்போயிருந்தால் அவர் ஒன்றும் சொல்லியிருக்கப் போவதில்லை.

ஆண் கதாபாத்திரத்துக்கு வினோதமான தன் முற்போக்கு எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டு மாளவில்லை. அது சுகப்படப்போவதில்லை என்பதற்கான எல்லா அறிகுறிகளும் பேச்சில் தெரிந்தன. குளிர்சாதனப்பெட்டியிலிருந்து ஒரு பியர் பாட்டிலை எடுத்துக்கொண்டு மீண்டும் மின் திரையின் முன் வந்தமர்ந்தேன்.  

கதையில் குடிபோதை மீறியதால் பெண் கதாபாத்திரம் வாந்தி எடுக்க ரெஸ்ட் ரூமூக்குச் செல்ல வேண்டியிருந்தது.   ஆண் கதாபாத்திரம் துணைக்குக் கூடவே போய் தன்னை ஒரு கண்ணியவானாக நிகழ்த்திக் காட்டியது. மீண்டும் சற்று நேரம் கதாபாத்திரங்கள் வளவளாவென்று பேசிக்கொண்டிருந்தார்கள். என் பியர் முடிந்துவிட்டிருந்தது.

தன் வாழ்க்கைப் பிரச்சினையால் இறுகிப்போயிருந்த பெண் கதாபாத்திரத்தின் மனம் ஒரு கட்டத்தில் உடைந்தது. அது  ரெஸ்ட் ரூமுக்கு அழுவதற்காகச் சென்றது. அங்கேதான் எழுத்தாளர் ஆண் கதாபாத்திரத்துக்கு ஒரு tight slap கொடுத்திருந்தார். அந்தச் சூட்சுமமான பெண் கதாபாத்திரம் அப்படியே தப்பித்து, ஆண் கதாபாத்திரத்தை அம்போவென்று விட்டுவிட்டு, வெளியே நிறுத்தியிருந்த அதன் வண்டியிலேறி ஓடிப்போய்விட்டது. ஆண் கதாபாத்திரம் மனம் வெறுத்து தொலைக்காட்சியைப் பார்த்தபடி விதியே என உட்கார்ந்திருந்தது.

முடிவு சிறப்பு என்று பெண் கதாபாத்திரத்துக்குக் கைதட்டிவிட்டு, அடுத்த பியர் பாட்டிலை எடுத்துவர கதையிலிருந்து பார்வையை எடுத்தபோது மின் திரை சட்டென ஆழ்பழுப்பு வண்ணமானது. கதையின் எழுத்துகள் அதில் பச்சை நிறத்தில் தெரிந்தன.

என்ன ஆயிற்றோ என்று அவசரமாக மின் திரையில் கண்ணை ஓட்டியபோது, கதையில் அதே வாக்கியங்கள் சில தெரிந்தன. ஆனால் இப்போது அவற்றைக் கூறியதோ பெண் கதாபாத்திரம்.
”டிப்ரெஷனுக்குக் குடிக்கறேன்னு சுருண்டு கிடக்கறது, சந்தோஷத்துக்குக் குடிக்கறேன்னு வண்டியக் கொண்டுபோய் மோதறது, இதெல்லாம் என்னப் பொறுத்தவரைக்கும் குடிய அசிங்கப்படுத்தறது. குடிக்குக் காரணமே தேவையில்ல, காரணம் இருக்கக்கூடாதுனு சொல்வேன். இது ஒரு மாதிரி, நம்ம ரொடீன்ல ஒரு பார்ட்.”

பெண் கதாபாத்திரம் மேலும் தொடர்ந்தது. கொண்டாட்டத்துக்குக் குடிக்கிறேன் என்று சொல்லக் கூடாது, குடிதான் கொண்டாட்டத்தை உருவாக்கவேண்டும் என்று  ஆரம்பித்தது.

ஒரு பத்திக்குள் அதன் எதிரில் உட்கார்ந்திருந்த ஆண் கதாபாத்திரம்  பொறுக்க முடியாமல் எழுந்துவிட்டது. மதுக் கூடத்தின் மத்தியில் வட்ட வடிவமான குறுகிய மேசையின் உயரமான பார் ஸ்டூல்களில் ஒன்றை இழுத்துப்போட்டு உட்கார்ந்துகொண்டது. “என்ன வேணும் சார்” என்று புன்னகைத்தபடி கேட்ட பார் பணியாளர் கதாபாத்திரத்திடம் “அந்த டேபிளிலேர்ந்து என் ட்ரிங்கை எடுத்துட்டு வந்துருங்க” என்று தான் அமர்ந்திருந்த மேஜையை நோக்கிக் கைகாட்டியது. “அந்த அம்மாக்கு பைத்தியமா, அது பாட்டுக்கு வந்து உக்காந்துட்டு முன்னபின்ன தெரியாதவன்ட்ட ஏதோ பேசிகிட்டே போவுது?” என்று சிரித்தது. பார் பணியாளர் கதாபாத்திரமும் கூடச் சேர்ந்து அரைகுறையாகச் சிரித்தது.

சுவரருகே இருந்த மேசையில், ஒரு மூலைக்குள் அரை இருட்டை நோக்கியபடி பெண் கதாபாத்திரம் உம்மென்று உட்கார்ந்திருந்தது. ஆண் கதாபாத்திரத்தோடு உரையாடியபோது தான் என்ன தவறு செய்தோம் என்று எத்தனை யோசித்தும் அதற்குப் புரிபடவேயில்லை.


Friday, July 17, 2020

ஒரு எழுத்தாளரின் கதை


அவர் எழுத்து என்றால் அவனுக்கு சோறு, தண்ணீர் கூட வேண்டாம். அவ்வளவு பிடிக்கும். தேங்கிக் கிடக்கும் சமுதாயம் மொத்தத்தையும் இலக்கியம் வழிநடத்தி மாற்றிவிடும் என்பதெல்லாம் புரட்டு என்று அவனுக்குத் தெரியும். ஆனால் அவரைப் போல பத்து பேர், இல்லை நான்கு பேர் எழுதினால்கூடப் போதும், சிலரேனும் உருப்பட ஓரிரு பாதைகள் கண்ணுக்குத் தெரியும் என்ற சின்ன நம்பிக்கை அவனுக்கு இருந்தது.

அவருடைய ஊர் அவன் ஊருக்கு அருகே இருந்தது. ஆள் பெயரைச் சொன்னாலும் ஊர் பெயரைச் சொன்னால் வாசகர்கள் யூகித்துவிடலாம் என்பதால் பெயர்கள் வேண்டாம். சில வாரங்களுக்கு ஒரு முறையாவது எழுத்தாளரைப் போய்ப் பார்த்து அளவளாவிவிட்டு வருவது அவன் கல்லூரி வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாக இருந்தது. பதின்பருவத்தைக் கடக்கும் நிலையிலிருந்து அவன் சில சமயம் தன் குழப்பங்களை, அனுபவங்களை அவரிடம் பகிர்ந்துகொள்வான். அவரும் காது கொடுத்துக் கேட்பார். தேவைப்பட்டாலன்றி ஆலோசனையோ அறிவுரையோ கூறமாட்டார். சில சமயம் அவனுடைய அனுபவங்கள் செறிவோடு அவர் கைப்பக்குவத்தில் இலக்கியப் பிரதியாக மாறியும்விட்டிருக்கின்றன. அதில் அவனுக்குப் பெருமையும் உண்டு.

சென்ற மாதம் அவரைப் பார்க்கப்போயிருந்தபோது தான் பத்து வயதுச் சிறுவனாக இருந்தபோது சந்தித்த ஒரு சம்பவத்தின் கொடும் நினைவைப் பகிர்ந்துகொண்டிருந்தான். அவன் ஊரில், ஆள்நடமாட்டம் அதிகமில்லாத இரயில் நிலையத்தில் நடந்த சம்பவம் அது. ஒரு வார விடுமுறைக்கு மாமா வீட்டுக்குப் போய்விட்டு, அந்த இரயில் நிலையத்தில் வந்திறங்கினான். எப்போதும் செய்வதைப்போல மாமா வீட்டில் அவனுக்கு இரயிலுக்கு டிக்கட் வாங்கிக்கொடுத்து ஏற்றிவிட்டிருந்தார்கள். வந்து இறங்கியவன் வழக்கம்போல அவன் அப்பா பைக்கில் வந்து அவனை அழைத்துக்கொண்டு போவதற்காகக் காத்துக்கொண்டிருந்தான். அலைபேசி வசதியெல்லாம் சிறுவர்களிடம் இல்லாத காலம் அது.

அப்போது அந்தி வேளை. தூறல் மழையாக உருவெடுத்திருந்தது. ரயில் நிலையத்துக்கு வெளியே வண்டிகள் எதுவும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கவில்லை. ரயில் நிலையத்துக்கு முகப்பாக இருந்த ஒரு பழைய கட்டிடத்தின் வாசலில் நின்றுகொண்டு அப்பா வருகிறாரா என்று சாலையை எட்டியெட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான். சடசடத்த மழையின் வேகம் அதிகரித்து காட்சியெதுவும் கண்ணுக்குத் தெரியாத அளவு நீர்த்தாரைகள் விண்ணை மண்ணோடு இணைக்கத் தொடங்கியிருந்தன.

கூர்ந்து நோக்க முயன்றதில் கண்கள் சோர்வுற முகப்புக் கட்டிடத்துக்குள் கண்ணை ஓட்டினான். அப்போதுதான் அதைக் கண்டான். ஒரு தூணோரத்தில் பழுப்பில் வெள்ளைத்திட்டுகள் இருந்த ஒரு நோஞ்சான் நாய்க்குட்டி. அதைத் தூக்கிப்போட்டும் இறுக்கியும் தன்னுடலின் மேல் உரசவைத்தும்கொண்டிருந்த ஒரு பிச்சைக்காரன். இளைஞன். நாய்க்குட்டியை அவன் கொஞ்சுகிறானோ என்று சிறுவன் முதலில் நினைத்தான். ஆனால் அப்படியில்லை என்று ஓரிரு நிமிடங்களில் தெரிந்துவிட்டது. நாய்க்குட்டி பீதியில் முதலில் கத்திக்கொண்டிருந்தது. பிறகு கத்தல் முனகலாகித் தேய்ந்து நிராதரவின் ஒரு கடைசி ஓலம். கட்டிடத்திலிருந்து காற்று பின்வாங்கி ஓடிப்போய்விட்டதைப் போல சிறுவனுக்கு மூச்சுத் திணறத் தொடங்கியது. பிச்சைக்கார இளைஞன் சிறுவனைப் பார்த்து இளித்ததைப் போல் மங்கிய நினைவு.

சிறுவன் மூர்ச்சையடைந்து விழுந்ததற்கும் அவன் அப்பா உள்ளே வந்ததற்கும் நேரம் சரியாக இருந்திருக்க வேண்டும். அவன் கண் விழித்தபோது அம்மாவும் அவனுடைய அண்ணனும் தங்கையும் படுக்கையைச் சுற்றி நிற்றுகொண்டிருந்தார்கள். கையில் ட்ரிப்ஸ் இறங்கிக்கொண்டிருந்தது. ”மாமா வீட்ல சரியா சாப்பிடாம கிளம்பிட்டியாடா?” என்று கேட்ட அம்மாவின் குரல் தழதழத்தது. அம்மாவின் பக்கமாக மெதுவாக உடலை நகர்த்திக்கொண்டான். அவள் புடவையின் வாசனை அவனுக்கு அத்தனை பாதுகாப்பாக அப்போது இருந்தது. ஒரு கோட்டையைப் போல அது அவனைச் சூழ்ந்தது.

பின்னர், மயங்கி விழப்போன அவனை ஸ்டேஷன் மாஸ்டர் துணையோடு அப்பா வீட்டுக்குக் கொண்டுவந்ததையும், எதிர்வீட்டில் வசித்த அவர்களது குடும்ப மருத்துவர் அவனைப் பரிசோதித்தபின் அபாயமில்லை என்று சொல்லிவிட்டு ட்ரிப்ஸ் போட்டுவிட்டுப் போனதையும் அண்ணனிடமிருந்து தெரிந்துகொண்டான்.

எழுத்தாளரிடம் இதை நினைவுகூர்ந்து சொல்லிக்கொண்டிருந்தபோதே அவனுக்குத் தன் நினைவுகூரல் பதற்றம் தந்தது. எழுத்தாளர் இடையீடு செய்யாமல் கேட்டுக்கொண்டிருந்தார். அவன் சொல்லி முடித்தபின் “டீ கொண்டா,” என்று மனைவியை அழைத்தார். இருவரும் தேநீர் குடித்த பின் அவனோடு பஸ் நிறுத்தம் வரை நடந்து வந்துவிட்டு விடைபெற்றுக்கொண்டார்.

இந்த மாதம் ஒரு காத்திரமான இலக்கிய இதழில் எழுத்தாளரின் ஒரு கதை வந்திருந்தது. கதையின் நாயகன் ஒரு பெருநகரத்தில் அபார்ட்மெண்டில் தனியாக வசிக்கும் ஒரு உயர்நடுவர்க்க இளைஞன். அவன் தான் வளர்த்துவரும் அழகான ஒரு நாய்க்குட்டிக்குத் தினம்தினம் பாலியல் தொல்லை தருகிறான். அவன் வீட்டில் பணி செய்யும் சிறுமி ஒரு மாலை நேரத்தில் எதிர்பாராதபடிக்கு கதவைத் தட்டாமல் வீட்டுக்குள் நுழைந்துவிடுகிறாள். அவன் செய்த செயலைப் பார்த்துப் பதறிப்போய் நிற்கின்ற அவளை அவன் கண்ணாலேயே மிரட்டி அருகே அழைக்கிறான். அவர் நல்ல எழுத்தாளர் என்பதால் கதையில் பணம் இளைஞர்களைச் சீரழிக்கும் விதம் பற்றிய நீதிபோதனையை ஒரு வாக்கியத்துக்கு மேல் முழங்கவில்லை.

(பதிவில் வெளிவரும் கவிதைகளையோ கதைகளையோ கட்டுரைகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.)

Saturday, July 11, 2020

ஆசிர்வாதம்

பச்சைக் கண் விளக்குஅவளுக்கு அவன் மேல் கிறுக்கு என்று தெரியும், ஆனால் இந்த அளவுக்கா? மின்திரையில் அவன் பெயருக்குப் பக்கத்தில் மின்னும் பச்சை விளக்கைப் பார்க்கும்போது அவன் கண்களை அல்லவா அவள் பார்க்கிறாள்?  நிஜமான ஒருவருக்கு இரண்டு கண்கள், ஆனால் இங்கே அவன் பெயருக்கு அருகில் மின்னுவதோ ஒன்று என்ற அடிப்படையான வித்யாசம் கூடவா  அவளுக்கு உறுத்துவதில்லை? ஆனால் நிஜம் என்பது ஒரு ஆளின் ஸ்தூல உருவம் மட்டுமா என்ன, ஒருவரை நேசிக்கும்போது அவரது பெயரும் பசுமரத்தாணி போல அல்லவா பதிந்துவிடுகிறது? ஒருவேளை ஆணி அடிக்கும்போது மரத்துக்கு வலிக்காமல் இருக்கலாம், ஆனால் காதலிப்பவர்களுக்கு ஒருவரை நேசிக்கத் தொடங்கும் கணத்திலிருந்து நேசிப்பவரின் பெயர் இதயத்தில் ஆணியைப் போல் அறையப்படுகிறது. வலி இல்லாமல் எந்தக் காதல்தான் லபிக்கிறது? அதன் பின் ஒருவேளை காதல்  மறைந்துவிட்டாலும், அந்தப் பெயர் ஒரு கோரத் தழும்பாக மேடிட்டுவிடுகிறது. இதயத்தின் வழுவழுப்பைக் காணாமலடிக்க ஒரு பெயரைத் தவிர வேறெதற்குச் சக்தி இருக்கிறது?

அவள் சற்று நேரம் பச்சை விளக்கையே உற்றுப் பார்த்தாள். அவன் கூரிய கண்கள் எப்போதும் போல தயங்காமல், திசைமாற்றம் கொள்ளாமல் அவள் கண்களையே பார்த்தன.  பார்க்கையில் பச்சை விளக்கு கண்களாகும்போது அந்த விளக்கருகே பெயர் மாத்திரம் உடலாகாதா என்ன? எல்லாம்  எடுத்துக்கொள்வதைப்  பொறுத்தது என்று நினைத்துக்கொண்டாள்.

அவனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பலாமா என்று யோசித்தாள். அவன் பதில் அனுப்புவான் என்று தெரியும். ஆனால் அவள் அனுப்புவதற்கும் அவன் பதில் அனுப்புவதற்கும் இடையிலான நேர இடைவெளியை எப்போதுமே அவளால் கணிக்க முடிந்ததில்லை. ஒருவேளை அவன் பதிலனுப்பத் தாமதமானால், அவன் கண்கள் அவளைப் பார்க்காமல் வேறு யார் யாரையோ பார்ப்பது அவளுக்கு உறுதிப்பட்டுவிடும்.  அதுவே அவன்மேல் கொண்டிருக்கும் சந்தேகங்களுக்கான நியாயத்தைத் தந்துவிடும். அதை அவள் விரும்பவில்லை. மாறாக, அவன் உடனடியாக பதிலனுப்பினாலோ அதன் பிறகு அவள் அவனோடு சாட் செய்ய வேண்டியிருக்கும். பரஸ்பர நலம் விசாரித்தல்கள், சில  வார்த்தைகள், சில வழக்கமான எமோஜிகள்.  ஆனால், அப்போது பச்சை விளக்காக மின்னும் அவனது கண்களை இப்போது  பார்ப்பது போல  கவனம் சிதறாமல் அவளால் பார்க்க முடியாது.  மேலும், பிரியம் வாடிப்போனதற்குப் பிறகு அவர்கள் இரண்டு நிமிடங்களுக்கு மேல் சாட் செய்வதில்லை. சொற்ப சம்பாஷணைக்குப் பிறகு அவன் லாக் அவுட் செய்துவிட்டால் அவள் பார்வையிலிருந்து அகன்று போய்விடும் அவன் கண்கள்.

அவள் பச்சை விளக்கின் மீது தன் சுண்டுவிரலை மென்மையாக, மிக மென்மையாக வைத்தாள். மெதுவாக அவன் கண்களை நீவினாள். இருவரும் ஒரே அடர்த்தியோடான பிரியத்தோடிருந்த காலத்தில் சேர்ந்து கேட்ட ஒரு பாடலை அவனுக்காக மெல்லப் பாடினாள்:
“A distant ship’s smoke on the horizon / You are only coming through in waves / Your lips move but I can’t hear what you’re sayin….. / out of the corner of my eye / I turned to look but it was gone / I cannot put my finger on it now…”

சட்டெனப் பச்சை விளக்கு கண் மூடியது. அவள் கை விரலின் இதத்தில் அவன் கண் செருகித் தூங்கிப் போனதாக அவளுக்குத் தோன்றியது.  அன்றிரவு அவளும் சற்று நிம்மதியாகத் தூங்கச் சென்றாள்.