Sunday, September 4, 2016

நான் யார் நான் யார் நீ யார்


என் கவிதையில் வருகிற
நானை நானென்று
நினைத்துவிட்டீர்கள் பாவம்
அது சும்மா
நான் ஒரு கவித்துவ வசதி
அல்லது உயர் சித்தப்பிரமை
உண்மையில்
நான்
காற்று தள்ளிவிட்ட
ஒரு சுரைக்காய்க் குடுவை
இல்லையில்லை
சுரைக்காய்க் குடுவையின்
தொன்ம ஆச்சார
மதிப்பெல்லாம் எனக்கில்லை
இப்போது சரியாகச் சொல்கிறேன்
கேளுங்கள்
நான்
ஒரு வழிப்போக்கன்
விசிறியடித்த
காலி கோகோகோலா டின்
ஆமாம் டின்
இப்படியே உருண்டோடுவேன்
சொச்சநாளும்
மிச்ச மீதியாய்
ஆமாம், நீங்கள்?
காலி பெப்சி டின் என்றால்
தள்ளிப் போங்கள்
முள்புதர் நோக்கிச் சரிந்து
மண்ணில் மட்காமல்
புதையுண்டு கிடப்பதிலும்
போட்டிக்கு வந்துவிடாதீர்கள்(பதிவில் வெளிவரும் கவிதைகளையோ கருத்துகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.)

ஞானக்கூத்தன் கவிதைகள்: எழுத்தின் கலகமும் தத்துவ அடித்தளமும்

உயிர்மை, செப்டம்பர் 2016-இல் வெளிவந்திருக்கும் கட்டுரை
(ஞானக்கூத்தன் கவிதைகளின் பகடி, நவீனத்துவ, பின்நவீனத்துவ செயற்பாடுகள், தனிமனித சுயம் பற்றிய எள்ளல், மற்றமை குறித்த நோக்கு ஆகியவற்றினூடே அவரது கவிதை உலகின் தத்துவ அடிப்படையைக் காணும் முயற்சி)
மறைந்த கவிஞர் ஞானக்கூத்தனுக்கு நினைவஞ்சலி எழுதுகிற இந்தச் சந்தர்ப்பத்தை அவர் கவிதைகளின் சில இன்றியமையாத அம்சங்களை எடுத்துக் கூறப் பயன்படுத்த நினைக்கிறேன். ஞானக்கூத்தனின் வாழ்க்கை வரலாறு, அவர் கவிதைகள் பதிப்பிக்கப்பட்ட வரலாறு, அவரது இலக்கிய வட்டாரம் உருவான வரலாறு போன்றவற்றைப் பற்றி அவரோடு தொடர்பிலிருந்த பல நண்பர்கள் அஞ்சலிக் கட்டுரைகளில் எழுதியிருக்கிறார்கள். இந்தப் பாணியிலிருந்து சற்று நகர்ந்து என் கட்டுரை ஞானக்கூத்தனின் கவிதைகளில் இயங்கும் நவீன உலகம், வாழ்க்கை சார்ந்த கரிசனைகளையும் தத்துவ அடிப்படையையும் தொட்டுச் செல்ல விழைகிறது. படைப்புகளின் பரிமாணங்களைப் பேச விரும்புவதும் அஞ்சலி கூறுதலின் தவிர்க்கவியலாத ஒரு பகுதிதானே!
ஞானக்கூத்தன் கவிதைகளில் நவீன வாழ்க்கை குறித்த கரிசனைகள் பொதுவாக இரண்டு தளங்களில் செயல்படுகின்றன. ஒன்று, சமூக வாழ்வு சார்ந்தது. சமூகத் திரளாக நாம் கொள்கிற பெருமிதங்களுக்கும் கள எதார்த்தத்துக்குமான, நம் சொல்லுக்கும் செயலுக்குமான பொருண்மையான இடைவெளிகளைச் சுட்டிக்காட்டுவதாக அவர் கவிதை மொழி இயங்குகிறது. இன்னொரு தளத்தில், தன்னுறுதியும் இறையாண்மையும் (sovereign autonomous self) கொண்டதான நவீன மனித சுயம் கவிதைகளில் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ”கீழ்வெண்மணி” என்கிற கவிதையிலிருந்து தொடங்குவோம். இந்தக் கவிதையில், நாம் நாகரீகமானவர்கள் என்று கொண்டிருக்கும் பெருமிதத்துக்கும், சூழலில் நிகழும் சாதி வெறுப்புச் செயல்களுக்குமான இடைவெளி, இந்த இடைவெளியில் நழுவி மரித்த உயிர்கள் பாடுபொருள்களாகின்றன. “மல்லாந்த மண்ணின் கர்ப்ப / வயிறெனத் தெரிந்த கீற்றுக் / குடிசைகள் சாம்பற் காடாய்ப் / போயின” என்று தொடங்குகிறது கவிதை. கீழ்வெண்மணி ஊர்க்காரர்கள் திரண்டு வந்து சாம்பல் குவியலைப் பார்ப்பதைக் கூறுகிறது: ”குருவிகள் இவைகள் என்றார் / குழந்தைகள் இவைகள் என்றார் / பெண்களோ இவைகள்? காலி / கன்றுகள் இவைகள் என்றார்.” குருவிகளுக்கும் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் கன்றுகளுக்கும் வேறுபாடு காண முடியாத கருகிய நிலை. ஒடுக்கப்பட்டவர்களுக்கு மானுடத் தன்மை என்பதே மறுக்கப்பட்டிருக்கிற நிலையைக் கவிதை விவரிக்கிறது. சாதி வெறுப்பின் தீயில் மனித நாகரிகம் என்பது மதிப்பிழந்து, உள்ளீடற்று எஞ்சி நிற்கிறது எனும் விமர்சனத்தைக் கவிதை வைக்கிறது.
அதேபோல அவரது “மஹ்ஹான் காந்தி மஹ்ஹான்” கவிதை சமகால மேடைப் பேச்சை முன்னிறுத்தி நம் பாசாங்கை எடுத்துரைப்பது. சொல்லும் செயலும் மாறுபட்டிருப்பதை இதனால் கைவிட்டுப்போன மதிப்பீடுகளைப் பேசுகிறது இக்கவிதை. கவிதையில் “வழுக்கையை சொறிந்தவாறு வாழ்க நீ எம்மான்,” என்கிற அரசியல்வாதி “பெண்களை நோட்டம் விட்டு பாழ்பட்டு நின்ற” என்கிறார். “‘வாழ்விக்க வந்த’” என்னும் எஞ்சிய பாட்டைத்” தெருவில் வீசுகிறார். காந்தி போன்ற பெருந்தலைவர்கள் முன்வைத்த தேசியவாதம், பெண்ணைச் சகஜீவியாகக் கருதுதல் போன்ற விழுமியங்கள் மட்டும் வீழ்ச்சியுறவில்லை, அந்தத் தலைவர்களே இன்று வெறும் மேடைப் பேச்சுப் பொருள்களாக மாறியிருப்பதை, தெருக் குப்பையாக எஞ்சிவிட்டிருப்பதைக் கவிதை காட்டுகிறது.
ஞானக்கூத்தனின் கவிதைகளின் ஒரு முக்கிய நவீனத்துவ எழுத்து உத்தியெனப் பகடியை நாம் கருதமுடியும். இலக்கிய விமர்சகர்கள் நவீனக் கவிதைமொழியில் பகடியைக் கொண்டுவந்த முன்னோடியாக அவரைச் சரியாகவே அடையாளம் கண்டிருக்கிறார்கள். சமூகத்தில் மேலாண்மை பெற்றிருக்கும் அழகியல், பண்பாட்டு, அரசியல் போக்குகளை விமர்சிக்க இந்த உத்தி அவருக்குப் பெரிதும் பயன் தந்தது. பகடி என்பதற்கு நவீன ஐரோப்பியக் கலையில் ஓர் எளிய உதாரணமாக மார்சல் தூஷாம்-இன் ”L.H.O.O.Q” (1919) என்கிற ஓவியத்தைச் சிந்தனையாளர்கள் குறிப்பிடுவதுண்டு. தூஷாம்-இன் தாதாயிச ஓவியம் பதினாறாம் நூற்றாண்டு ஓவியரான லியனர்டோ டாவின்ஸியின் மோனாலிசா ஓவியத்தின் பகடியாக உருவாக்கப்பட்டது. அழகு என்பதற்கு இலக்கணமாக, ஆதரிசமாக ஐரோப்பியச் செவ்வியல் கலையில் முன்வைக்கப்பட்ட மோனாலிசா-வை மீசையோடும் ஆட்டுத்தாடியோடும் ’போலச்செய்து’ பகடி என்கிற வரையறைக்குள் கொண்டுவந்தது நவீன ஓவியம். மேலும், ”L.H.O.O.Q” என்கிற பிரெஞ்சு வழக்காற்றின் பொருள் ”கவரும் குண்டியைக் கொண்டவள்” என்பது. புன்னகைக்குப் பெயர்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் சமூக-பண்பாட்டு மதிப்பை, அதன் அழகியலைத் தகர்த்த நவீனத்துவக் கலகச்செயல்பாடு தூஷாம்-இன் ஓவியம் எனலாம். இத்தகைய வகையில் சமூக, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் மேன்மையாகவும் புனிதமாகவும் கருதப்படுவனவற்றைக் கலைத்துப்போடும் பகடியை ஞானக்கூத்தனின் கவிதைகளில் நாம் காண முடியும். பகடி எழுத்து தமிழ் அல்லது சம்ஸ்கிருத மரபார்ந்து அவரிடம் செயல்பட்டது என்பதைவிட ஐரோப்பிய நவீனத்துவப் பாணிகளிலிருந்து அவர் பெற்றுக்கொண்டது என்பதே பொருந்தும். பகடி அவரின் பல கவிதைகளில் விமர்சனத் தனித்துவத்தோடும் அமைகிறது. எடுத்துக்காட்டாக, ஏற்கெனவே பலரும் குறிப்பிட்டிருக்கிறபடி, “காலவழுவமைதி” கவிதை திராவிட அரசியல் மேடைப் பேச்சைப் பகடி செய்கிறது. தமிழ் மொழிப்பற்றை முன்னிறுத்தி எவ்வாறு திராவிட இயக்க அரசியல்வாதி கௌரவம் பெறுகிறார் (“வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ”) என்பது ஒருபுறம்; புறநானூற்றைச் சுட்டிப் பேசுகிற அவர் மேடைப் பேச்சு என்கிற பெயரில் தமிழ் எவ்வாறு உருக்குலைக்கப்படுகிறது என்பது மற்றொரு புறம் (“பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமோ? / தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக் கெடுப்பவர்கள் பொணக்குவ்யல் காண்போ மின்றே”) தமிழ்மொழிப் பற்று, அக்கறை இவையெல்லாம் அர்த்தமிழந்த வெற்றுப் பேச்சாய்த் தமிழகத்தில் எஞ்சிவிட்ட நிலை விமர்சனமாகக் கவிதையில் மேலெழுகிறது.
திராவிட, தேசிய இயக்கங்கள் போன்ற அரசியல் விசைகள் என்றில்லை, அவர் பகடி சமூக-பண்பாட்டுத் தளத்தில் நவீன கல்வி, இன்றைக்கும் மக்களிடையே செல்வாக்கோடு திகழும் புராணங்கள், வழிபாடுகள் போன்றவற்றையும் விட்டுவைப்பதில்லை. “வகுப்புக்கு வரும் எலும்புக் கூடு” கவிதையில் நவீன வகுப்பறை விவரிக்கப்படுகிறது. மாணவர்கள் கண்டு பயில வருடாவருடம் தவறாமல் வகுப்பறைக்கு வருகிறது ஒரே எலும்புக்கூடு. மாணவர்கள் அதைக் கண்டு சிரிக்கிறார்கள் விலா வெடிக்க. பல வருடங்கள் கழிந்தாலும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளாத கல்விமுறை விமர்சிக்கப்படுகிறது.
ஞானக்கூத்தனின் இன்னொரு புகழ்பெற்ற கவிதை நரியைப் பரியாக்கிய சிவனின் திருவிளையாடற் புராணத்தை நினைவுகூர்கிறது. பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், தூஷாம்-இன் மோனாலிசா ஓவியத்தில் திடீரென முளைத்த மீசையையும் தாடியையும் போல, ஞானக்கூத்தனின் இந்தத் திருவிளையாடற் புராண மறுவாசிப்பில், திடீரென ஒரு பரியாக மாறாத நரி முளைக்கிறது. சிவனைப் பார்த்து தான் விடுபட்டதைக் குறைசொல்லி நீதியோ இது என முறையிடுகிறது. திருவிளையாடல் முடிந்துவிட்டது போய்வா என்று அதை அனுப்பிவிடுகிறார் சிவன். “திருவருட் திட்டம் பொய்த்ததற்கு ஊளைச் சான்றாம் நரி” என்று இறைவனின் திருவிளையாடலின் புனிதத்தைக் கவிழ்த்துப்போடுகிறது கவிதை. “நஷ்டக் கணக்கு” என்கிற இன்னொரு சிறு கவிதையைப் பார்ப்போம்: “வாகனம் தூக்கிக்கொண்டு / தீவட்டி பிடித்துக்கொண்டு / வாத்தியம் இசைத்துக்கொண்டு / பலூன்கள் விற்றுக்கொண்டு / தெருக்காரர் ஊர்வலத்தில் / இருப்பதால் நஷ்டப்பட்டார் / எங்களூர் அரங்கநாதர்” என்கிறது கவிதை. அச்சு அசலாக சாமி ஊர்வல விவரணை. ஆனால் ஊர்வலத்தில் இவ்வாறு வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டிருந்த ஊர்க்காரர்கள் தெய்வத்தை மறந்ததால் எதையும் இழக்கவில்லை. மாறாக அவர்களின் ஈடுபாடு மாறிவிட்டதால் நஷ்டப்பட்டார் அரங்கநாதர் என்கிறது. உண்மையில் யாருக்கு யார் அவசியம்? பக்தர்களுக்குக் கடவுளா, கடவுளுக்குப் பக்தர்களா என்றால் கடவுளுக்குத்தான் பக்தர்கள் தேவைப்படுகிறது என்று கடவுளின் முக்கியத்துவம் காணாமல் போயிருப்பதைக் கூறுகிறது கவிதை.
ஞானக்கூத்தனின் வேறு சில கவிதைகளில் பின்நவீனத்துவக் கதம்ப நடையும்கூட பகடி எள்ளலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. கதம்பநடை என்பது பல்வேறு இலக்கிய வகைமைகளை (genre), பாணிகளை (style), அல்லது புராணம், அறிவியல், செவ்வியல் இலக்கியம் போன்ற பல்வேறு புலங்களின் (fields) சொல்லாடல்களைக் கலந்துகட்டி வைக்கப்படுகிற நடை எனலாம். கதம்ப நடைக்கு ஓர் எடுத்துக்காட்டாக முன்னர் குறிப்பிட்ட “மஹ்ஹான் காந்தி மஹ்ஹான்” கவிதையைச் சொல்லலாம். அந்தக் கவிதையில் மேடைப்பேச்சும் பாரதியாரின் தேசியகீதமான மகாத்மா காந்தி பஞ்சகம் “வாழ்க நீ எம்மான்” பாடலிலிருந்து சில சொற்றொடர்களும் கலந்துகட்டி வருகின்றன. இந்தக் கதம்பப் பாணி கவிதைகூறு முறையில் மட்டுமன்றி சில கவிதையின் பாடுபொருள்களிலேயே இருப்பதையும் காண்கிறோம். “மேசை நடராசர்” கவிதையில் எழுதாத பேனா, மூக்கூடைந்த கோணூசி, பூணூல் உருண்டை, மெழுகு, கவிழ்த்துவைக்கப்பட்ட நாவல், செய்தித்தாள், கழுத்து நீண்ட எண்ணெய்ப்புட்டி முதலியவற்றோடு மேசை மீது நின்று ஆடிக்கொண்டிருக்கிறார் நடராசர். இப்படி ஒன்றோடொன்று தொடர்பின்றி, பொருத்தமற்றுக் குவிக்கப்பட்ட பொருள்களில் கடவுளும் ஒரு பொருளாகக் காட்சியளிக்கும்போது, கடவுளுக்கும் உலகத்துக்குமான, கடவுளுக்கும் மனிதருக்குமான உறவுப் படிநிலையின் சட்டகமே மாறிவிடுகிறது. கூத்தாடுகிற இறைவனின் அதிகாரம் கேலிக்கூத்தாகிவிடுகிறது.
ஞானக்கூத்தன் கவிதைகளில் இயங்கும் ஓர் இன்றியமையாத அம்சம் ஓர்மையெனக் (coherent) கருதப்படுகிற மனித சுயத்துக்கு அவை விடுகிற சவால். இறை அதிகாரத்தின் நீக்கத்தைக் கூறுவது மட்டுமல்ல, ஓர்மையான சுயத்தைக் கவிதைச் சொல்லாடலில் மையத்திலிருந்து நகர்த்துகிற, கலைக்கிற தத்துவச் செயல்பாட்டையும் அவர் கவிதைகளில் நாம் பார்க்க முடியும். ஞானக்கூத்தனின் பல கவிதைகளில் மனித சுயம் உடலை மையமாகக் கொண்டிருப்பதாக இருக்கிறது; ஆனால் துண்டுண்டதாக, உருச் சிதைந்ததாக அல்லது சப்பட்டையாக இருக்கிறது. சில கவிதைவரிகளைப் பார்ப்போம்: “விழிக்கிறான் / முழங்காலொன்று / காணலை / பொசுக்கப்பட்டு / சதைகளும் எலும்புமாகக் / கிடைப்பதைத் தெரிந்து கொண்டான், வைக்கின் கூறுகட்டி” (“எட்டுக் கவிதைகள்”); “என் தலையை திறந்து / பார்த்தேன் / திறந்த இஸ்திரிப் பெட்டியில் போல் மின் / சாரம் பாய்ந்திருக்கக் கண்டேன்” (“மண்டையைத் திறந்தால்”); “தலைமேல் விழுந்தலை தோளில் விழும் தலை / இடுப்பில் விழும்தலை / காலிடுக்கில் தலை” (“அழிவுப் பாதை”); “வள்ளிக் கிழங்கின் / பதமாக / வெந்துபோன / அவள் உடம்பைப் / பிட்டுத் தின்னத் / தொடங்கிற்று / ஒவ்வொன்றாக / அவையெல்லாம்” (“எட்டுக் கவிதைகள்”); “கண்டதுண்டா நீ முன்பு / என்னைப் போல் சப்பட்டை / யான மனிதன்” (“எனக்குக் கொஞ்சம் சோற்றைப் போடேன்”).
அந்நியமாதலும், இயந்திரமைய உலகப்பார்வையும் (mechanistic worldview), உலகப்போர்களும், அறிவியல், கல்வி முதலியவற்றை வளர்ச்சிக்கான, முன்னேற்றத்துக்கான கருவிகளாக மட்டுமே பார்க்கிற பார்வையும் கூடிச் சேர்ந்து நம் நவீன வாழ்வைக் கட்டமைத்திருக்கின்றன. இவ்வாழ்வில், மனித சுயம் சிக்கல்களையும் வாழ்நிலை மாற்றங்களையுமே தொடர்ந்து சந்திக்கிறது; அதனால் அதன் ஓர்மை (coherence) குலைந்து அது பிளவுற்று துண்டங்களாகி விடுவதை சார்லஸ் டைலர் உள்ளிட்ட நவீனம் பற்றிச் சிந்தித்த அறிஞர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்தப் பிளவுற்ற அல்லது துண்டான சுயம் ஐரோப்பிய நவீனத்துவ எழுத்துவெளியிலும் காணப்படுகிறது. ஞானக்கூத்தனின் கவிதைகளின் விரிந்த பரப்பில், திராவிட இயக்க, தேசிய இயக்க அரசியல்களின் மதிப்பீடுகளின் வீழ்ச்சி, அரசாங்கம், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் தோல்வி, சாதிய சக்திகளின் வெறுப்பரசியல், கேளிக்கையாகிவிட்ட பக்தி, அந்நியமாகிவிட்ட உழைப்பு (“வேலையெனும் பூதம்”) போன்ற பலவும் வெவ்வேறு வகைகளில் நவீன மனிதருக்கு அக, புறச் சிக்கல்களைத் தருபவை. எனவே பிளவுபட்ட, உருக்குலைந்த உடல்மைய மனித சுயம் அவர் கவிதைகளில் நமக்குக் கிட்டுவது எதிர்பார்க்கக்கூடியதே. அதே நேரத்தில், அவர் கவிதைகளில் இப்படிப் பகுதி பகுதிகளாக பிளவுண்டு கிடக்கிற உடல்கள் மீண்டும் ஒருமை ஒன்றை நோக்கி நகர்வதில்லை, சிதைந்த, பிளவுபட்ட பகுதிகள் மட்டுமாகவே அவை விடப்படுகின்றன, அவற்றின் ஒருமை மீட்கப்படுவதில்லை. ஞானக்கூத்தனின் கவிதைகளின் பின்நவீனத்துவப் பண்பை இத்தகைய துண்டுபட்ட சிதைந்த கருகிய உருக்குலைந்த உடல்களும், இந்த உடல்மைய, ஓர்மையற்ற சுயங்களுமே கட்டமைக்கின்றன.
ஐரோப்பியப் புத்தொளிக் காலத்திலிருந்தே உருவாகிவந்த நவீன தனி மனித சுயம் என்கிற புனைவைச் சந்தேகிப்பது, அந்தப் புனைவைக் கலைப்பது ஆகியவற்றை ஞானக்கூத்தனின் கவிதைகள் பின்நவீனத்துவக் கலகச் செயற்பாடுகளாக முன்வைக்கின்றன. ஆனால் சந்தேகம் அல்லது கலைத்தல் ஆகியவற்றோடு கவிதைகள் நின்றுவிடுவதில்லை. மனித உடல்சார் சுயத்துக்கான முனைப்பை அவர் கவிதைகள் மறுக்கிறபோது, மனிதர்களைத் தாண்டிய அமனித மற்றமைக்கு (non-human Other) முக்கியத்துவம் தருவனவாக அவை உள்ளன. நத்தை, மரவட்டை, கம்பிளிப்பூச்சி, நாய், மீன்கொத்தி, காக்கை, பன்றி, குதிரை எனப் பல உயிர்களை அவர் கவிதைகளில் நாம் எதிர்கொள்கிறோம். மனிதர்களுக்கும் அமனித உயிர்களுக்கும் இடையிலான படிநிலையற்ற சரிசமமான தொடர்பையும், உறவுத் தொடர்புறுத்தல்களையும் அவருடைய பல கவிதைகளில் காண்கிறோம். உதாரணமாக, “மரவட்டை” கவிதையில் “துக்குணிக் கால்களோடு” செல்கிறது ஒரு மரவட்டை “பரபரப்பாய்.” அதைத் தொடாதே, தொட்டால் சுருண்டு நீளும்போது அது தன் வழியை மறந்துவிடக்கூடும் என அதன் வழியிலிருந்து அதைத் தொந்தரவுபடுத்தாமல் நிற்க மனிதருக்குப் போதிக்கிறது கவிதை. இன்னொரு கவிதையில், தன்பாட்டுக்குப் புல்லைத் தின்றுகொண்டிருந்த குதிரையை குதிரை குதிரை என்று சீண்டுகிறான் ஒருவன். குதிரை அவனுக்கு ஒரு உதை விடுகிறது. “காக்கை” கவிதையில், கவிதைசொல்லியோடு “பேசவந்தாற் போலப் பரபரப்பில்” இருக்கும் ஒரு காக்கை காட்டப்படுகிறது. அவர் குடும்பத்தோடு பழக்கம் கொண்டதாக, ஒரு நண்பனைப் போல அது கவிதையில் வருகிறது. அந்தக் குடும்பத்துக்கு நன்மை செய்வதுபோல அவர்கள் வீட்டில் சின்னக் கரண்டியை எங்கேயோ எடுத்துக்கொண்டு போட்டுவிட்டு, வேறு எங்கிருந்தோ பெரிய கரண்டியொன்றை எடுத்துக்கொண்டு வந்து இங்கே போடுகிறது. ஆனால் கவிதைசொல்லிக்கு அந்தக் காக்கையை முழுக்கத் தெரிந்துகொள்ள முடிந்ததா? கவிதை வரிகள் இவை: “இந்தக் காக்கை / எனக்கு நேரே வந்தமர்ந்தால் / தெரிந்துகொள்ள முடியுமா என்னால்? / முடியும் என்பது சந்தேகந்தான் / ஏனெனில் காக்கையை யாரும் / முழுதாய்ப் பார்த்து முடிப்பதில்லையே.” உலகத்தை முழுக்க அறிந்துவிட முடியும், அறிவால் ஆள முடியும் என்கிற நவீன மனிதரின் நம்பிக்கைகளில் சம்மட்டியால் அடிக்கிறது கவிதை. காக்கையை முழுக்க மனிதரால் பார்க்க முடிவதில்லை என்பதற்கு அர்த்தமென்ன?
அதைப் பேசுவதற்குமுன், ’பார்வை’ என்பது முக்கியத்துவம் பெறுகிற ஞானக்கூத்தனின் ஒரு கவிதையைப் பார்ப்போம். “யார் யார் என்னை பார்க்கிறார்கள்? பார்க்கிறார்கள் என்கிற உயர்திணை முடிவு கூடத் தவறுதான் எது எவரால் பார்க்கப்படுகிறேன் என்பதே சரி” என்று தொடங்குகிறது ”பார்க்கப்படுதலன்றி வாழ்க்கை பிறிதென்ன?” என்றொரு கவிதை. கல்லாப்பெட்டியில் அமர்ந்திருக்கும் கடைக்காரரிலிருந்து நாய்கள், சிறுவன், சிறுமி, பெருமாள் மாடு, பெருமாள் மாட்டுக்காரர், ஆடுகள், தபால்காரர், பன்றிக்கூட்டத்திலிருந்து காக்கை வரை பலரும் பலதும் கவிதை சொல்லியைப் பார்க்கின்றன பார்க்கிறது. தன்னை எல்லோரும் பார்ப்பதாகக் கருதுவது பிரமை போலவும் கவிதைசொல்லிக்குத் தோன்றுகிறது கடவுளைப் பதிலீடு செய்து தன்னையே இறையாகப் பாவித்துக்கொண்ட நவீன மனிதனின் ஒரு முக்கியமான அதிகாரம் செலுத்தும் புலன், கட்புலன். நோக்கல் (gaze) என்பதற்கும் இயற்கை உலகின் மேல்நிலையில், பிறவற்றின் மேல்நிலையில் இருப்பதாக மனிதர்கள் தம்மைக் கருதிக்கொண்டு செலுத்தும் அதிகாரத்துக்கும் பெரும் சம்பந்தம் உண்டு. சமயச் சொல்லாடல்களில் கிடைக்கும் கடவுள் உலகத்தைப் பார்த்தல், அதன் மூலமாக கடாட்சித்தல், அதன் ஒழுங்கைத் தீர்மானித்தல், அதை ஆளுதல் இவையெல்லாம் நவீன உலகில் கடவுளைப் பதிலீடு செய்திருக்கும் மனிதருடையதாக இருக்கின்றன. நவீனத்தின் இந்த மனித அதிகாரப் போக்குக்கு எதிராக இந்தக் கவிதை, மற்றவற்றின் மீதான மனித நோக்கல் என்பதை மாற்றிவிடுகிறது. மனிதர்கள் நோக்குபவர்கள் மட்டுமல்லர், அப்படி எண்ணிக்கொள்கிற உயர்திணை முடிவு தவறு என்று அறிவிக்கிறது கவிதை. காக்கை கவிதையில் காக்கையை முழுக்கப் பார்க்க முடிவதில்லை என்று கூறுவது, மனிதர்கள் ‘நோக்கல்’ என்பதே குறைபாடுடையது என்பதை எடுத்துக்காட்டுவது. மற்றமையை மனிதர்களால் பார்க்கக்கூட முடியாதபோது, அதைப் புரிந்துகொண்டதாகக் கருதுவது, அல்லது அதைவிட உயர்ந்ததாகத் தன்னை எண்ணிக்கொள்வது இவையெல்லாம் கற்பிதங்களன்றி வேறென்ன?
தற்கால உலகில் அறம் சார்ந்து வாழ்தல் என்பது மற்றமையை அங்கீகரித்து, மற்றமையால் அங்கீகரிக்கப்பட்டு வாழ்தல், அத்தகையதொரு வாழ்தலுக்கு நம் பங்குக்கு நாம் பொறுப்பேற்றல். இங்கே மற்றமை என்பது மனிதர்கள் மட்டுமல்லாத மற்ற உயிர்களையும் இருப்புகளையும் உள்ளடக்கிய சொல். அமனித மற்றமையோடு கூட சேர்ந்து, அவற்றைச் சமமாகக் கருதி வாழும் அறத்தை, தத்துவ அறிஞர் இமானுவல் லெவினாஸ் சொல்வது போல intersubjective responsibility-யை (மற்றமை தொடர்பான மனிதரின் பொறுப்புணர்வு) முன்வைக்கின்றன ஞானக்கூத்தன் கவிதைகள். உலகில் மனித மையத்தை மறுத்து, மற்றமையின் இருப்பை மதித்து, அங்கீகரிக்கிற பரந்த அறமே ஞானக்கூத்தனின் கவிதைகளின் இன்றியமையாத ஒரு தத்துவ அடிப்படை. எந்த மனிதனும் தத்துவவாதியாக இல்லாதபோது மகா கவிஞனாக இருக்க முடியாது என்று சாமுவேல் டைலர் கோலரிஜ் கூறியிருப்பது மனதிலாடுகிறது. ஞானக்கூத்தன் பெருங் கவிஞராகத் திகழ்வதில் அவர் கவிதைகளில் தத்துவ விசாரணைகளுக்கு, தத்துவ அடித்தளங்களுக்கு இருக்கும் பங்கைப் புரிந்துகொள்ள முயல்வது அவர் எழுத்துக்கு வாசகர்கள் செய்கிற நியாயமாகவும் நவீனக் கவிதைகளின் வாசிப்புக்கு வளம் சேர்ப்பதாகவும் இருக்கும்.
உதவிய நூல்கள் / கட்டுரைகள்
தமிழ் ஞானக்கூத்தன். ஞானக்கூத்தன் கவிதைகள். சென்னை: விருட்சம், 1998. ஞானக்கூத்தன். பென்சில் படங்கள். சென்னை: விருட்சம், 2002. ஆங்கிலம் Davy, Barbara Jane. “An Other Face of Ethics in Levinas.” Ethics & The Environment, 12(1): 2007. Taylor, Charles. Sources of the Self: The Making of the Modern Identity. Cambridge: Harvard University Press, 1989. (பதிவில் வெளிவரும் கவிதைகளையோ கருத்துகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.)