Saturday, August 2, 2008

"தாமரை இலைமீது ததும்பும் சொற்களை" முன்வைத்து கொஞ்சம் ஜெயகாந்தன்

(ஜனவரி 2006 சென்னை புத்தக விழாவில் அரவிந்தனின் "தாமரை இலைமீது ததும்பும் சொற்கள்" நூலை வெளியிட்டுப் பேசியது.)

தாமரை இலை மீது ததும்பும் சொற்கள்--நண்பர் அரவிந்தன் அவர்களின் நான்காவது நூல் இது. அவரது இரண்டு சிறுகதை தொகுப்புகளுக்குப் பிறகு, சிறாருக்கான மகாபாரதம் நூலுக்குப் பிறகு வெளிவந்திருக்கிறது. தொகுப்பில் பதினான்கு கட்டுரைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. 90-களின் இறுதிகளிலிருந்து சென்றவருடம் வரை காலச்சுவடு, இந்தியா டுடே, தமிழ்க்கொடி 2006 இலக்கியத் தொகுப்பு நூல், திண்ணை.com போன்றவற்றில் பிரசுரமாகியிருக்கும் அரவிந்தனின் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடம், க.நா.சுவின் பொய்த்தேவு, சுந்தர ராமசாமியின் ஜே.ஜே, ஜெயமோகனின் காடு, ஏழாம் உலகம், நாஞ்சில் நாடனின் எட்டுத்திக்கும் மதயானை, போன்ற குறிப்பிட்ட நாவல்பரப்புகளில் மையம் கொள்ளூம் கட்டுரைகள், விழி. பா. இதயவேந்தனின் வதைபடும் வாழ்வு, அ. முத்துலிங்கத்தின் வம்சவிருத்தி, கதா-காலச்சுவடு நிகழ்த்திய போட்டியில் வெற்றிபெற்ற சிறுகதைகள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு ஆகியன பற்றி மூன்று கட்டுரைகள், அசோகமித்திரன், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி ஆகியோரது சிறுகதைகளின் உலகத்தை எட்டிப்பார்க்கும் நான்கு கட்டுரைகள், ஜெயகாந்தனின் சிறுகதைகள் குறித்த அரவிந்தனின் எழுத்துக்கு வந்த எதிர்வினைகள் பற்றிய விவாதம், இளம்படைப்பாளிகள் என்று அரவிந்தன் வகைமைப்படுத்துகிற படைப்பாளிகளுக்கு முன்நிற்கும் சவால்கள், அவர்களின் பலங்கள் பலவீனங்கள் குறித்த அவதானிப்பு என்பதாகத் தன்னை விரிக்கிறது இந்நூல்.

சிலநாட்களுக்கு முன் என் கையில் கிடைத்த இத்தொகுப்பில் சில கட்டுரைகளை என்னால் கவனத்தோடு வாசிக்கமுடிந்தது. சிலவற்றைப் புரட்டிப்பார்க்க மாத்திரமே எனக்கு நேரம் கிடைத்தது என்று சொல்லவேண்டும். என்றாலும் வாசித்தவரையில் என் கவனத்தை ஈர்த்தது அரவிந்தனின் உரைநடையின் தெளிவு. ambiguity இல்லாமல் முன்வைக்கப்படுகிற கருத்துகள். கட்டுரைக்கு இது முக்கியம் என்றும் ambiguity இருந்தால் கூட அது உத்தேசித்த நோக்கத்தோடு அமையப்பெற்றதாக இருக்கவேண்டும் என்றும் நினைக்கிறேன். தன்னுடைய கருத்துகளை தன் அபிப்பிராயம் என்று அரவிந்தன் வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறார் தன் முன்னுரையில். தான் எந்தத் தளத்தில் இயங்குகிறோம் என்பதையும் அதன் போதாமைகளையும் அறிந்திருப்பது, போதாமைகளை நியாயப்படுத்தாமல் அறிவிக்கவும் செய்வது, இவை தன் செயல்பாட்டை தானே அலசக்கூடிய மனத்தின் அடையாளங்கள். இந்த மனப்பாங்கு பெற்றிருப்பதற்காக அரவிந்தனுக்கு என் வாழ்த்துகள்.

அரவிந்தனின் கருத்துகள் பலவற்றிலிருந்து என் வாசிப்பு வேறுபடுகிறது. உதாரணத்துக்கு, ஜெயகாந்தன் எழுத்துகளில் காணக்கிடைக்கும் 'மிகை வெளிப்பாடுகள்' பற்றி அரவிந்தனின் விமரிசனம். ஜெயகாந்தன் எழுத்துகளில் மிகையுணர்ச்சியுடைய பங்கை நான் வேறுவிதமாக, அவர் எழுத்துக்கு அது வலிமை சேர்ப்பதாக நான் பார்க்கிறேன். ஜெயகாந்தனின் பல கதைகளில் இந்த மிகையுணர்ச்சி வெளிப்பாடு நாடகீயமாக மாறுகிறது. கதைகளில் வரும் உரையாடல்களுக்கு stylized பாணி ஒன்றை இந்த நாடகீயம் தருகிறது. ஜெயகாந்தன் கதைகளில்--குறிப்பாக, குருபீடம், எங்கே யாரோ யாருக்காகவோ, போன்ற கதைகள்-- நிறைய இடங்களில் உரையாடல்கள் வலிமை பெற்றிருப்பதற்கு மிகை சேர்ந்திருப்பதுதான் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது.

புதுமைப்பித்தனின் 'சாப விமோசனத்தையும்' ஜெயகாந்தனின் 'அக்னிப்பிரவேசத்தையும்' அரவிந்தன் ஒப்பிட்டு ஆராய்வது முக்கியமானது. (94). ராவணன் இடத்திலிருந்து வந்த சீதையின் தூய்மையைச் சந்தேகித்த ராமன் சீதையைத் தீக்குளிக்கச் செய்ததை அறிந்து, கல்லாகிப் போன அகலிகை புதுமைப்பித்தனில். ஜெயகாந்தனிலோ, கற்பு என்று காலங்காலமாக கட்டப்பட்டிருக்குமொன்று கலைந்துவிட்டதால் தன் மகளை நீரில் குளிப்பாட்டி உள்ளே சேர்த்த தாய். அரவிந்தன் புதுமைப்பித்தன் எழுப்பும் கேள்விகள் சலனங்கள் ஆழமானவை என்றும் ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் கதை எழுப்பும் சலனமோ புரட்சித்தாயின் கையிலிருக்கும் குடத்தின் அடிமட்டத்தைத் தாண்டாதவை என்று வாதிடுகிறார் (94). அரவிந்தனுடைய இந்த விமரிசனம் யோசிக்கச் செய்தது. இந்த இரு கதையாடல்களையும் பார்க்கலாம்: புதுமைப்பித்தனின் கதையில், கல்லாவதற்கு முன் அகலிகை சீதையிடம் தீக்குளிக்கச்சொல்லி ராமன் கேட்டானா என்று வினவுகிறாள். அதற்கு சீதை "உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா?" என்று சொல்லிச் சிரிக்கிறாள். "நிரூபித்துவிட்டால் மட்டும் அது உண்மையாகிவிடப்போகிறதா? உள்ளத்தைத் தொடவில்லையென்றால்? நிற்கட்டும்; உலகம் எது?" என்று பதில் தருகிறாள் அகலிகை. ஆனால், புதுமைப்பித்தனின் இக்கதைமாந்தரைப் போலன்றி ஜெயகாந்தன் கதைமாந்தருக்கு சுற்றியிருக்கும் உலகம், அதன் மதிப்பீடுகள் எல்லாமே முக்கியமாகப் படுகின்றன. ஆனால், கூடவே அந்த மதிப்பீடுகளுடைய உள்ளீடற்ற தன்மை கூடவே சுட்டப்படுகிறது. உடலுக்கும் உள்ளத்துக்குமான, உள்ளத்தூய்மைக்கும் உடல் தூய்மைக்குமான வித்தியாசப்புள்ளிகள் காட்டப்பட்டு, 'கெட்டுப்போனது உடல் தானே, குளிச்சாச் சரியாகிப் போயிடும்,' என்று வேறொரு சொல்லாடலாகக் கற்பெனும் சுத்தம் விரிகிறது. புனித நீரில் குளிப்பது, அல்லது சில விசேஷ காலங்களில் நம் வீட்டிலிருக்கும் நீரையே புனித நீராகப் பாவித்துக் குளிப்பது போன்றவை நிலவும் நம் கலாச்சாரச் சூழலில், ஜெயகாந்தனின் கதையாடலில் மீள்புனையப்படுகிற 'நீரில் குளிக்கும் சடங்கு' கற்பெனும் கலாச்சார விகாரத்தை எடுத்துப்பார்த்து 'இவ்வளவுதானே இது' என்று விசிறி அடிக்கிறது. இதன்மூலமாகக் கதையாடல் கற்பை ஸ்தூலமான உடலுக்கு மட்டுமானதாக மாற்றிவிடுகிறது. அந்த விதத்தில் ஜெயகாந்தனின் இக்கதையின் நவீனம் தனித்து நிற்கிறது.

நிறைய உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறது. ஆனால், இன்றைக்கு இந்தக் களம் புத்தக அறிமுகத்துக்கானது. விமரிசனத்துக்கானது அல்ல. காலை மாலை போன்ற பொழுதுகளுடைய அழகெல்லாம் நாம் அப்பொழுதுகளை அவ்வாறு உணர்வதே. இந்த மாலையை நான் ரம்மியமாக உணர்கிறேன். புத்தகத்தை வெளியிட என்னை அழைத்த அரவிந்தனுக்கும் காலச்சுவடு பதிப்பகத்துக்கும் என் நன்றி.

3 comments:

ராஜ நடராஜன் said...

ஜெயகாந்தன் பெயர் கேட்டு வந்தேன்.மீண்டும் வருகிறேன்.

ஜீவி said...

//இதன்மூலமாகக் கதையாடல் கற்பை ஸ்தூலமான உடலுக்கு மட்டுமானதாக மாற்றிவிடுகிறது//

உள்ளத்தின் சம்மதமின்றி, அந்த உறவே ஏதென்று அறியாத, புரியாத ஒரு பருவத்தில், இழுத்த இழுப்புக்கு உடல் மட்டுமே வதைபட்ட ஒரு விபத்தை 'கற்பு கசடடைந்தது' என்று ஊர்கூட்டி ஓலமிட்டு புலம்பாத ஒரு புரட்சித் தாயை நமக்கு அறிமுகப்படுத்திய கதை, ஜே.கே.யின் "அக்னிப் பிரவேசம்".
'கற்பை உடலுக்கு மட்டுமான' என்று
மாற்றிய கதையல்ல.
இதைப் புரிந்து கொள்ள இன்னும் ஈடுபாட்டுடன் கூடிய வாசிப்பு தேவை.

Perundevi said...

நன்றி ராஜ நடராஜன், ஜீவி.

//உள்ளத்தின் சம்மதமின்றி, அந்த உறவே ஏதென்று அறியாத, புரியாத ஒரு பருவத்தில், இழுத்த இழுப்புக்கு உடல் மட்டுமே வதைபட்ட ஒரு விபத்தை 'கற்பு கசடடைந்தது' என்று ஊர்கூட்டி ஓலமிட்டு புலம்பாத ஒரு புரட்சித் தாயை நமக்கு அறிமுகப்படுத்திய கதை, ஜே.கே.யின் "அக்னிப் பிரவேசம்".
'கற்பை உடலுக்கு மட்டுமான' என்று
மாற்றிய கதையல்ல.
இதைப் புரிந்து கொள்ள இன்னும் ஈடுபாட்டுடன் கூடிய வாசிப்பு தேவை.//

ஜீவி, நீங்கள் விவரிப்பது தாய் என்கிற கதாபாத்திரத்தின் செயலை. நான் பேசுவது கதையின் பிரதி “கற்பு” என்ற சொல்லாடலை வேறொரு அர்த்தத்தளத்துக்கு எப்படி நகர்த்துகிறது என்பதைப் பற்றி. ஒருவருடைய வாசிப்போடு இன்னொருவர் ஒத்துப்போக வேண்டிய தேவை இல்லை.