Tuesday, July 7, 2009

நிலைக்கண்ணாடி (ஸில்வியா ப்ளாத்)

நான் வெள்ளியும் துல்லியமும். முன்முடிவுகள் எனக்கில்லை.
விழுங்குவேன் உடனே காண்பது எதையும்.
அவ்வப்படியே, அன்பின் பிடித்தமின்மையின் படலமின்றி.
கொடூரசாலி அல்ல நான், வாய்மையோடு மட்டுமே—
ஒரு சிறுதெய்வத்தின் கண், மூலைகள் நான்குடன்.
எதிர்சுவரை தியானிப்பேன் பொழுதுபெரும்பாலும்.
அது இளஞ்சிகப்பாய், புள்ளிகளோடு. நெடுங்காலமாய் பார்த்திருப்பதாலேயே
இதயத்தின் ஒரு பகுதியாய் அதை நினைக்கிறேன். எனினும் படபடக்கிறது.
முகங்களும் இருளும் பிரிக்கின்றன எங்களை மீண்டும் மீண்டும்.
இப்போது நான் ஓர் ஏரி. மங்கையொருத்தி சாய்கிறாள் என்மேலே,
நிஜத்தில் அவள் யாரென என் எட்டுந்தொலைவுகளில் தேடியவண்ணம்.
பின்னர் அந்தப் பொய்யர்களை, மெழுகுவர்த்திகளை, நிலவை நோக்கித் திரும்புகிறாள்.
அவளின் பின்பக்கத்தைக் காண்கிறேன். பிரதிபலிக்கிறேன் விசுவாசத்துடன்.
தன் கண்ணீரை, கரங்களில் ஒரு கலவரத்தை எனக்கு வெகுமானமாக அளிக்கிறாள்.
அவளுக்கு முக்கியம் நான். வருகிறாள், போகிறாள்.
புலரும் ஒவ்வொரு பொழுதிலும் அவள் முகமே இருளுக்குப் பதிலியாகிறது.
என்னில் ஒரு சிறுமியை அவள் மூழ்கடித்தாள், என்னில் முதியவள் ஒருத்தி
அவளை நோக்கி எழும்புகிறாள் நாள் பின் நாளாய், பயங்கர மீன் ஒன்றைப்போல.

5 comments:

Asadha said...

ஒரு கண்ணாடியின் யோசனைகள் எவ்விதம் அமையும்,அதுவும் பெண்ணை மையமாக்கி, பெண்ணைப் பற்றி யோசிக்கும் கண்ணாடியினுடையவை?(இப்போது நான் ஓர் ஏரி. மங்கையொருத்தி சாய்கிறாள் என்மேலே,
நிஜத்தில் அவள் யாரென என் எட்டுந்தொலைவுகளில் தேடியவண்ணம்...பின்னர் அந்தப் பொய்யர்களை, மெழுகுவர்த்திகளை, நிலவை நோக்கித் திரும்புகிறாள்...)நேரடியான புரிதலைக் கொண்டிராவிட்டாலும் ப்ளாத்தின் கவிதை திரும்பத் திரும்ப வாசிக்க வைப்பதாய் உள்ளது.

-அசதா

பி.கு: உங்கள் வலையின் புதிய வடிவமைப்பில் எழுத்துருக்கள் சற்றே கண்ணை உறுத்துவனவாக உள்ளன.

நான் வெள்ளியும் துல்லியமும். முன்முடிவுகள் எனக்கில்லை.
விழுங்குவேன் உடனே காண்பது எதையும்.
அவ்வப்படியே, அன்பின் பிடித்தமின்மையின் படலமின்றி.
கொடூரசாலி அல்ல நான், வாய்மையோடு மட்டுமே—
ஒரு சிறுதெய்வத்தின் கண், மூலைகள் நான்குடன்.
எதிர்சுவரை தியானிப்பேன் பொழுதுபெரும்பாலும்.
அது இளஞ்சிகப்பாய், புள்ளிகளோடு. நெடுங்காலமாய் பார்த்திருப்பதாலேயே
இதயத்தின் ஒரு பகுதியாய் அதை நினைக்கிறேன். எனினும் படபடக்கிறது.
முகங்களும் இருளும் பிரிக்கின்றன எங்களை மீண்டும் மீண்டும்.

.
.
அவளுக்கு முக்கியம் நான். வருகிறாள், போகிறாள்.
புலரும் ஒவ்வொரு பொழுதிலும் அவள் முகமே இருளுக்குப் பதிலியாகிறது.
என்னில் ஒரு சிறுமியை அவள் மூழ்கடித்தாள், என்னில் முதியவள் ஒருத்தி
அவளை நோக்கி எழும்புகிறாள் நாள் பின் நாளாய், பயங்கர மீன் ஒன்றைப்போல

Vidhoosh said...

http://vidhoosh.blogspot.com/2009/07/blog-post_3187.html

please visit here. There is a small gift for you:)

-vidhya

தமிழ்நதி said...

பெருந்தேவி,

சில்வியா பிளாத்தின் கவிதைகளைப் படிக்கச்சொல்லி அண்மையில் ஒரு நண்பர் பரிந்துரைத்தார். சில வலைப்பூக்களிலுள்ள மொழிபெயர்ப்புகள் நவீன கவிதைக்கு நெருக்கமில்லாத மொழியுடன் அமைந்திருக்கக் கண்டேன். உங்களது மொழியாக்கம் நன்றாக இருக்கிறது. நான் இப்போது சென்னையில் இல்லை. கனடாவில். உங்களைச் சந்திக்க நினைத்திருந்தேன். ம்... நிறையப் பேசவேண்டும். பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்த ஆண்மைய உலகின் அவமதிப்புகளைக் குறித்து கொஞ்சம் அரற்றவேண்டுமென்றும் சொல்லலாம்.

Perundevi said...

தமிழ்நதி,
ஜூலையில் சென்னை வந்திருந்தபோது உங்களுடன் பேச நினைத்தேன். ஆனால் உங்கள் தொலைபேசி எண் என்னிடம் இல்லை. நவம்பரில் கனடா (Montreal) நான் வரவேண்டியிருக்கிறது. முடிந்தால் தொலைபேசி மூலமாகவாவது பேசலாம்.
பெருந்தேவி

Unknown said...
This comment has been removed by the author.