Friday, July 17, 2020

ஒரு எழுத்தாளரின் கதை


அவர் எழுத்து என்றால் அவனுக்கு சோறு, தண்ணீர் கூட வேண்டாம். அவ்வளவு பிடிக்கும். தேங்கிக் கிடக்கும் சமுதாயம் மொத்தத்தையும் இலக்கியம் வழிநடத்தி மாற்றிவிடும் என்பதெல்லாம் புரட்டு என்று அவனுக்குத் தெரியும். ஆனால் அவரைப் போல பத்து பேர், இல்லை நான்கு பேர் எழுதினால்கூடப் போதும், சிலரேனும் உருப்பட ஓரிரு பாதைகள் கண்ணுக்குத் தெரியும் என்ற சின்ன நம்பிக்கை அவனுக்கு இருந்தது.

அவருடைய ஊர் அவன் ஊருக்கு அருகே இருந்தது. ஆள் பெயரைச் சொன்னாலும் ஊர் பெயரைச் சொன்னால் வாசகர்கள் யூகித்துவிடலாம் என்பதால் பெயர்கள் வேண்டாம். சில வாரங்களுக்கு ஒரு முறையாவது எழுத்தாளரைப் போய்ப் பார்த்து அளவளாவிவிட்டு வருவது அவன் கல்லூரி வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாக இருந்தது. பதின்பருவத்தைக் கடக்கும் நிலையிலிருந்து அவன் சில சமயம் தன் குழப்பங்களை, அனுபவங்களை அவரிடம் பகிர்ந்துகொள்வான். அவரும் காது கொடுத்துக் கேட்பார். தேவைப்பட்டாலன்றி ஆலோசனையோ அறிவுரையோ கூறமாட்டார். சில சமயம் அவனுடைய அனுபவங்கள் செறிவோடு அவர் கைப்பக்குவத்தில் இலக்கியப் பிரதியாக மாறியும்விட்டிருக்கின்றன. அதில் அவனுக்குப் பெருமையும் உண்டு.

சென்ற மாதம் அவரைப் பார்க்கப்போயிருந்தபோது தான் பத்து வயதுச் சிறுவனாக இருந்தபோது சந்தித்த ஒரு சம்பவத்தின் கொடும் நினைவைப் பகிர்ந்துகொண்டிருந்தான். அவன் ஊரில், ஆள்நடமாட்டம் அதிகமில்லாத இரயில் நிலையத்தில் நடந்த சம்பவம் அது. ஒரு வார விடுமுறைக்கு மாமா வீட்டுக்குப் போய்விட்டு, அந்த இரயில் நிலையத்தில் வந்திறங்கினான். எப்போதும் செய்வதைப்போல மாமா வீட்டில் அவனுக்கு இரயிலுக்கு டிக்கட் வாங்கிக்கொடுத்து ஏற்றிவிட்டிருந்தார்கள். வந்து இறங்கியவன் வழக்கம்போல அவன் அப்பா பைக்கில் வந்து அவனை அழைத்துக்கொண்டு போவதற்காகக் காத்துக்கொண்டிருந்தான். அலைபேசி வசதியெல்லாம் சிறுவர்களிடம் இல்லாத காலம் அது.

அப்போது அந்தி வேளை. தூறல் மழையாக உருவெடுத்திருந்தது. ரயில் நிலையத்துக்கு வெளியே வண்டிகள் எதுவும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கவில்லை. ரயில் நிலையத்துக்கு முகப்பாக இருந்த ஒரு பழைய கட்டிடத்தின் வாசலில் நின்றுகொண்டு அப்பா வருகிறாரா என்று சாலையை எட்டியெட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான். சடசடத்த மழையின் வேகம் அதிகரித்து காட்சியெதுவும் கண்ணுக்குத் தெரியாத அளவு நீர்த்தாரைகள் விண்ணை மண்ணோடு இணைக்கத் தொடங்கியிருந்தன.

கூர்ந்து நோக்க முயன்றதில் கண்கள் சோர்வுற முகப்புக் கட்டிடத்துக்குள் கண்ணை ஓட்டினான். அப்போதுதான் அதைக் கண்டான். ஒரு தூணோரத்தில் பழுப்பில் வெள்ளைத்திட்டுகள் இருந்த ஒரு நோஞ்சான் நாய்க்குட்டி. அதைத் தூக்கிப்போட்டும் இறுக்கியும் தன்னுடலின் மேல் உரசவைத்தும்கொண்டிருந்த ஒரு பிச்சைக்காரன். இளைஞன். நாய்க்குட்டியை அவன் கொஞ்சுகிறானோ என்று சிறுவன் முதலில் நினைத்தான். ஆனால் அப்படியில்லை என்று ஓரிரு நிமிடங்களில் தெரிந்துவிட்டது. நாய்க்குட்டி பீதியில் முதலில் கத்திக்கொண்டிருந்தது. பிறகு கத்தல் முனகலாகித் தேய்ந்து நிராதரவின் ஒரு கடைசி ஓலம். கட்டிடத்திலிருந்து காற்று பின்வாங்கி ஓடிப்போய்விட்டதைப் போல சிறுவனுக்கு மூச்சுத் திணறத் தொடங்கியது. பிச்சைக்கார இளைஞன் சிறுவனைப் பார்த்து இளித்ததைப் போல் மங்கிய நினைவு.

சிறுவன் மூர்ச்சையடைந்து விழுந்ததற்கும் அவன் அப்பா உள்ளே வந்ததற்கும் நேரம் சரியாக இருந்திருக்க வேண்டும். அவன் கண் விழித்தபோது அம்மாவும் அவனுடைய அண்ணனும் தங்கையும் படுக்கையைச் சுற்றி நிற்றுகொண்டிருந்தார்கள். கையில் ட்ரிப்ஸ் இறங்கிக்கொண்டிருந்தது. ”மாமா வீட்ல சரியா சாப்பிடாம கிளம்பிட்டியாடா?” என்று கேட்ட அம்மாவின் குரல் தழதழத்தது. அம்மாவின் பக்கமாக மெதுவாக உடலை நகர்த்திக்கொண்டான். அவள் புடவையின் வாசனை அவனுக்கு அத்தனை பாதுகாப்பாக அப்போது இருந்தது. ஒரு கோட்டையைப் போல அது அவனைச் சூழ்ந்தது.

பின்னர், மயங்கி விழப்போன அவனை ஸ்டேஷன் மாஸ்டர் துணையோடு அப்பா வீட்டுக்குக் கொண்டுவந்ததையும், எதிர்வீட்டில் வசித்த அவர்களது குடும்ப மருத்துவர் அவனைப் பரிசோதித்தபின் அபாயமில்லை என்று சொல்லிவிட்டு ட்ரிப்ஸ் போட்டுவிட்டுப் போனதையும் அண்ணனிடமிருந்து தெரிந்துகொண்டான்.

எழுத்தாளரிடம் இதை நினைவுகூர்ந்து சொல்லிக்கொண்டிருந்தபோதே அவனுக்குத் தன் நினைவுகூரல் பதற்றம் தந்தது. எழுத்தாளர் இடையீடு செய்யாமல் கேட்டுக்கொண்டிருந்தார். அவன் சொல்லி முடித்தபின் “டீ கொண்டா,” என்று மனைவியை அழைத்தார். இருவரும் தேநீர் குடித்த பின் அவனோடு பஸ் நிறுத்தம் வரை நடந்து வந்துவிட்டு விடைபெற்றுக்கொண்டார்.

இந்த மாதம் ஒரு காத்திரமான இலக்கிய இதழில் எழுத்தாளரின் ஒரு கதை வந்திருந்தது. கதையின் நாயகன் ஒரு பெருநகரத்தில் அபார்ட்மெண்டில் தனியாக வசிக்கும் ஒரு உயர்நடுவர்க்க இளைஞன். அவன் தான் வளர்த்துவரும் அழகான ஒரு நாய்க்குட்டிக்குத் தினம்தினம் பாலியல் தொல்லை தருகிறான். அவன் வீட்டில் பணி செய்யும் சிறுமி ஒரு மாலை நேரத்தில் எதிர்பாராதபடிக்கு கதவைத் தட்டாமல் வீட்டுக்குள் நுழைந்துவிடுகிறாள். அவன் செய்த செயலைப் பார்த்துப் பதறிப்போய் நிற்கின்ற அவளை அவன் கண்ணாலேயே மிரட்டி அருகே அழைக்கிறான். அவர் நல்ல எழுத்தாளர் என்பதால் கதையில் பணம் இளைஞர்களைச் சீரழிக்கும் விதம் பற்றிய நீதிபோதனையை ஒரு வாக்கியத்துக்கு மேல் முழங்கவில்லை.

(பதிவில் வெளிவரும் கவிதைகளையோ கதைகளையோ கட்டுரைகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.)

No comments: