Monday, April 28, 2008

கிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவலை முன்வைத்து (பகுதி ஒன்று), (பகுதி இரண்டு)

(காலச்சுவடு செவ்விய நாவல்கள் வரிசையில் வெளிவந்திருக்கும் கிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவலுக்கு எழுதிய முன்னுரை)

வாஸவேச்வரம்: பெண்பால் தன்னிலையின் முதல் புள்ளிகள்

கிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவலின் முதல்பதிப்பு 1966-ல் டால்டன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. நாவலின் இரண்டாம் பதிப்பு 1991-ல் நூல் அகம் வெளியீடாக வந்தது. காலச்சுவடு கொண்டு வரும் 2007 வருடத்தின் க்ளாசிக் வரிசையின் நாவலின் இந்தப் பதிப்பு மூன்றாவது. முதல் பதிப்புக்கும் மூன்றாம் பதிப்புக்குமான இடைபட்ட நாற்பது வருடங்களின் நவீனத் தமிழின் விவாதக்களம் மார்க்ஸியம், அமைப்பியல், பின்-நவீனத்துவம், பெண்ணியம் போன்ற பல்வேறு இலக்கியப்போக்குகளின், கோட்பாடுகளின், பயிற்சிகளின் தூண்டுதல்களாலும் மோதல்களாலும் இடையறாது உருவாகியவண்ணம் இருந்திருக்கிறது. இந்த விவாதக்களத்தில் கிருத்திகாவின் நாவல், பின்வந்த நாட்களின் மறதியால் அல்லது கருத்தியல்களின் மோதலால் அழிபட்டிருக்கக்கூடிய ஒரு கோடாகக் கூட இடம்பெறவில்லை. ஆச்சரியம் தரும் இப்பின்னணியில் நவீன இலக்கிய விவாதக்களத்தில் வாஸவேச்வரம் குறித்த சிறு கீறலொன்றை இந்த முன்னுரையின் நகம்பற்றித் தீட்ட நினைக்கிறேன்.


வாஸவேச்வரம் ஒரு கற்பனைப்புவியியல். கிருத்திகாவின் வார்த்தைகளில், "இந்தியாவின் தென்கோடியில்" அவர் "சென்றுகண்ட கிராமங்கள் பற்றிய நினைவுகளிலிருந்து உருவாக்கப்பட்ட கற்பனைக் கிராமம்." அவர் கண்ட மூன்று கிராமங்கள் நாவலின் கச்சாப்பொருள். நாவலின் காலகட்டம் 1930-கள். இக்கிராமங்களில் சுதந்திரப்போராட்டம், பொதுவுடைமைப் புரட்சிக் கருத்தியல் போன்றவற்றின் வீச்சு கிருத்திகா சுட்டிச்செல்வதுபோல திண்ணைப்பேச்சுகளில் ஆரம்பித்து அங்கேயே முடிந்துவிடுவன. நாவல் கிராமங்கள் தந்த ஞாபகங்களிலிருந்து வடிவமைக்கப்பட்டிருப்பதால், திண்ணைப்பேச்சுகளின் பிரதிபலிப்பே போல நாவலின் கதையாடலும் காலட்சேப உரைப்புள்ளியில் தொடங்கி காலட்சேப உரைப்புள்ளியில் முடிகிறது. பிராமணக் குழுமம் பற்றி கவனம் குவிக்கத் தோதான துவக்கமும் முத்தாய்ப்பும் கொண்ட வட்டவடிவம் இது. ஆனாலும் கதையாடலில் பிராமணக்குழுமம் தனக்கு முற்றூட்டாகக் கருதிக்கொள்கிற இவ்வட்டத்தைக் கலைப்பதற்கான சிலபல முயற்சிகளும் நடைபெறுகின்றன. கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்ற நிலவுடைமைச் சமூகமுறைகளுக்கு எதிரான சில கேள்விகளும் மறுப்புகளூம் கோஷங்களும் தூண்டப்படுகின்றன, அடங்குகின்றன.


நாவல் இம்முயற்சிகளை கைகொள்ளத்துடிக்கும் கனவுகளின் நிறங்களோடு தன்னை வரைகிறது. "தூங்குமூஞ்சி ஊரை" எழுப்பி, சம்பிரதாய முறைகள் என்கிற பெயரில் நடக்கும் "புளுகுகளை" புரட்டிப்போட்டு, பொதுவுடைமைச்சமூகம் மற்றும் வாழ்க்கை நவீனத்தைக் சுவீகரிக்க விரும்பும் கனவுகள் அவை. கெட்டித்துப்போன கலாச்சார முறைகளுக்கு எதிரான திசைவேகமும் ஆற்றலும் கொண்டவை. இந்த திசைவேகத்தையும் ஆற்றலையும் கனவுகள் கதையாடலில் எப்படி பெறுகின்றன? கதையில் கனவுகள் உத்வேகத்தோடு பேசப்பட்டாலும், அவற்றிலிருந்து எழும்பும், உருக்கொள்ளூம் கேள்விகளும் மறுப்புகளும் கோஷங்களும் எழும்பியகணமே கதைப்போக்கில் அடங்கிவிடுவதை எப்படி புரிந்துகொள்ளலாம்? வாஸவேச்வரக் கோயில் தேர் இழுப்பில் சாதீய மேலாண்மைக்கு எதிராகச் சாத்தியப்பட்டிருக்கும் கலகம் கூட ஏன் ஒரு மந்தித்த தேநீர்க்கோப்பைப் புயலாக, கலகத்தின் கேலிச்சித்திரமாக, சிறு சண்டையாக மட்டுமே வடிந்து துருத்திக்கொண்டு நிற்கிறது? சமூகக்கனவுகளின் வண்ணங்கள் நிதரிசன ஓவியங்களாக உருப்பெறாது நின்றுபோவது எதனால்?


கனவுகளைப்பற்றிப் பேசும் போது நாவலின் இரண்டாம் பதிப்பில் நாகார்ஜுனனின் உயிரோட்டமான பின்னுரை பற்றிச் சொல்லவேண்டும். "கனவைக் கதைசொல்லி கட்டவிழ்க்கும்" நாவலின் பாணியைச் சுட்டும் அவர் பின்னுரை, கட்டவிழ்த்தலை "விழிப்புடன்" தொழிற்படுத்தும் சூத்ரதாரியின் குரலை அடையாளம் காட்டுகிறது. நாவலின் சூத்ரதாரிக் குரலுக்கும் கிருத்திகா என்கிற மனிதஜீவிக்குமான உறவை, "கலாச்சார ரீதியாகவும்" "அரசியல் ரீதியாகவும்" அலசுகின்ற அவர் எழுத்து, "கனவுகளைப் பாதுகாத்துக்கொண்டே" வட்டத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டிருப்பவர்களுக்காகவும் சூத்ரதாரி பேசியாக வேண்டிய கட்டாயத்தை முன்நிறுத்துகிறது, கேள்விக்குட்படுத்துகிறது.

இதற்கு மாறாக நாவலின் பரப்புள்ளேயே கனவுகளை வைத்து, முன்னர் நான் எழுப்பிய கேள்விகளின் சரடுகளைத் தொடர நான் நினைக்கிறேன். இவ்வாறு செய்வதால், வாஸவேச்வரத்தில் கனவுகளுக்கு இணையாக பங்கெடுக்கும் இன்னொன்று நமக்குப் புலப்படுகிறது. அது ஈசன் கோயிலை மையமாகவும் மாண்டவர் சாபத்தை புராண வேராகவும் கொண்டு இயங்கும் பால்விழைவு (sexual desire). நாவலின் சொல்லாடலில் பால்விழைவின் பரிமாணங்களும் பாய்ச்சலும் வலிமையானவை. வாஸவேச்வரத்தின் வாழ்வியல் சம்பிரதாயங்களை, "முறைகளை" எளிதாகக் கவிழ்த்துவிடுவனவாக, பொதுவுடைமை மற்றும் சமத்துவ சமுதாய நவீனத்தை இலக்காகக் கொண்ட கனவுகளை புரட்டிப்போடக் கூடியனவாக, கனவுகாண்பவரையும் அடக்கிவைப்பனவாக காட்டப்படுகின்றன அவை. மிக முக்கியமாக, வாஸவேச்வரக் கதைவிளையாட்டின் போக்குகளை தீர்மானிக்கக்கூடிய பெண்-பாலியல்களை வாசகர்முன் நிறுத்தவும் செய்கின்றன. பால்விழைவின் த்வனி இந்நாவலின் சிறப்பு. அதுவே இங்கு என் எழுத்தின் பொருளாகவும் அமைகிறது.

நாவலின் சிலகட்டங்களைப் பார்ப்போம். சமூகமாற்றத்தைக் கனாக்காணும் முக்கிய நாயகன் பிச்சாண்டி. டாக்டர் சுந்தாவின் பாரம்பரிய நலவாழ்வுப் பிரச்சாரத்தை எள்ளி அக்காலகட்டத்தில் புரட்சியாக அர்த்தப்படுத்தப்பட்ட புதிய குடும்பக்கட்டுப்பாட்டு முறையை முன்வைப்பவன். கண்ணியமிக்க சமதர்ம சமவாழ்வை யாவரும் பெற துடிப்பவன். சம்பிரதாய முறைகளை குலுக்கிப்போட்டுவிட பஞ்சாயத்துத் தேர்தலில் குதிப்பவன். ஆனால், கதாநாயகி ரோகிணியின் முகத்தைக் கண்டவுடன், அவன் கனவுகள் அவனுக்கே பொருட்டாவதில்லை. "உன் மனசு நோக ஒண்ணும் செய்யமாட்டேன். வேண்டாமுன்னு சொல்லு. தேர்தல் சீட்டை இப்பொவே வாபீஸ் பண்ணிப்பிட்டு எங்கேயாவது மறைஞ்சு போயிடறேன்" என்றுதான் கூறமுடிகிறது. பிடித்த பெண்ணின் ஒரு முகக்குறிப்பில் அல்லது கண்ணசைப்பில் மறைந்துபோகிறதாக நாவலின் சமுதாயக்கனவு கோடிகாட்டப்படும்போது, அக்கனவின் ஆற்றுப்போக்குகளையும் (orientations) அக்கறைகளையும் என்னவென்று நாம் மனதில்கொள்வது? பிச்சாண்டிக்கு நேரெதிர்ப்புள்ளியில், ரோகிணியின் அழகைக் கண்டு அஞ்சி, தற்காக்கும் முயற்சியில் தொடர்ந்து அவளைச் சொற்துன்புறுத்துகிறார் அவள் கணவர் சந்திரசேகரய்யர். ரோகிணியின் ஆணவம் என அவர் அர்த்தப்படுத்தும் அவள் அழகுதான், தேர்தலில் போட்டியிடுதல் உட்பட பிடிவாதங்களுக்குச் சொந்தக்காரராக, அவளோடு இணங்க மறுப்பவராக அவரை ஆக்குகிறது. கடைசியில், சந்திரசேகரய்யர் கொலைபட பிச்சாண்டி கொலைகாரனாக புரிந்துகொள்ளப்படுவதும் பெரியபாட்டா போன்ற பெரியமனிதர்களின் 'பெருந்தன்மை,' 'தீரம்', 'சமூகக்கடமை' போன்றவை கதையில் மொழியப்படுவதும்கூட, ரோகிணியின் ஆகர்ஷணத்தில் ஊரைவிட்டுப்போகுமுன் அவளைச் சந்திக்கப் பிச்சாண்டி வருவதால் நேர்பவை. கதைப்போக்கைத் தீர்மானிப்பது கனவுகளைக் காட்டிலும் பெண்ணுடல்சார் பால்விழைவு என்பதற்கு இக்காட்சிகள் சான்று.

No comments: