Friday, September 19, 2008

E.E. Cummings (5) எப்பொதும் அப்படி இல்லாதிருக்கலாம் அது; மேலும் சொல்கிறேன்

எப்பொதும் அப்படி இல்லாதிருக்கலாம் அது; மேலும் சொல்கிறேன்,
உன் உதடுகள், நான் நேசித்திருப்பவை, இன்னொருவருடையதைத்
தொடுமானால், உன் அரும் வலிய விரல்கள் அவர் இதயத்தைப்
பற்றுமானால், நேரத்தில் வெகுதொலைவில் இல்லாத என்னுடையதைப்போலவே;
இன்னொருவரின் முகத்தின்மேல் நான் அறிந்ததுபோல் மௌனத்தில்
இனிய முடியுனது படியுமானால், அல்லது அதேபோல் மேன்மையாய்
சுருளும் வார்த்தைகள், அதீதமாய்ப் பேசிக்கொண்டு
மடக்கப்பட்ட ஆன்மாவின்முன் கையறுநிலையில் நிற்குமானால்;

இப்படி நேரவேண்டுமென்றால், சொல்கிறேன் இப்படி நேரவேண்டுமென்றால்--
என் இதயத்தின் நீ எனக்கொரு சிறுவார்த்தை அனுப்பு,
அவரிடம் நான் சென்று அவர் கரங்களைப் பற்றி
என்னிடமிருந்து எல்லா சந்தோஷத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்ல.
பிறகு என்முகத்தை நான் திருப்பிக்கொள்வேன், தொலைந்த நிலங்களில்
தூரத்தே பறவையொன்று பயங்கரமாய்ப் பாடுவதைக் கேட்பேன்.


(குறிப்பு: கவிதையில் ஆண்பால் படர்க்கைகளை பொதுப்பாலாக மாற்றியிருக்கிறேன்.)

No comments: