Friday, April 23, 2010

மேற்குக்கரையின் சுவர்

ஈவ் இன்ஸ்லர்-ன் “நானொரு உணர்வுபூர்வமான பிறவி” I am an emotional creature (2010) என்கிற புத்தகத்திலிருந்து மொழிபெயர்த்துச் செய்யப்பட்ட ஒரு “தனிமொழி” (monologue) இது. அமெரிக்க பெண்ணிய எழுத்தாளரான அவரது “The Vagina Monologues” என்ற தலைப்பிடப்பட்ட நாடகம் புகழ்பெற்றது. உலகின் பல இடங்களில் அரங்கேற்றப்பட்டதும்கூட.

(சமீபத்தில் வாசித்ததில் என்னை மிகவும் பாதித்த கவிதை/மொழி இது, பகிர்ந்துகொள்வதில் ஆறுதலடைகிறேன்.)சுவர்

ஜெருசலம், இஸ்ரேல்


என் தோழி அதீனா என்னை மேற்குக்கரைச் (West Bank) சுவரின்

அந்தப்பக்கத்துக்கு அழைத்துச் செல்கிறாள்.

அங்கே அது இருக்கும்விதத்தைப் பார்த்து ஆச்சரியமடைகிறேன்.

உயரமாக இருக்கிறது அது இன்னும்.

தாண்ட உங்களுக்கு ஹெலிகாப்டர் வேண்டும்.

கடினமான சிறுமைகொண்ட சிமெண்ட்டின் பிரிவுச்சக்தி, வீடுகள்,

நிலம், மற்றும் நண்பர்கள்

திரும்பப் போகிறேன்

நிறைய கதைகளைக் கேட்கிறேன்.

இந்தப்பக்கத்தில் தண்ணீர் இல்லை

கிணறுகள் இல்லை

மாதுளையோ அத்தியோ இல்லை

வேலைகள் இல்லை

வெளியேபோக வழியுமில்லை.

வெள்ளிக்கிழமைகளில் பாலஸ்தீனியப் பையன்களோடு

போராட்டம் செய்கிறேன்.

ஒரு இஸ்ரேலியச் சிறுமி இங்கே என்ன செய்கிறாள்

என்பது புரியவில்லை அவர்களுக்கு.
ரகசியமாக அது.

வீட்டில் ஒருவருக்கும் தெரியாது.

மாதங்களாக தொடர்கிறது.சுவர் என்னை மாற்றுகிறது.

நான் என் கால்களைச் சவரம் செய்வதை நிறுத்துகிறேன்.

மாமிசம் உண்ணுவதை நிறுத்துகிறேன்.

அப்படியே ராணுவத்தில் சேர மறுக்கிறேன்.

என் பாட்டனாரின் வயதேறிய மென்முகத்தில்

அவரது உடைந்த இதயத்தைக் காண்கிறேன்.

திருப்பித்தரவில்லை நீ என்று சொல்லப்படுகிறது என்னிடம்.

உண்மையான இஸ்ரேலியள் இல்லை நீ என்று சொல்லப்படுகிறது என்னிடம்.

முன்பெல்லாம்போல என் தந்தை

என்னைப் பார்ப்பதில்லை.

அண்ணனோ உரத்துப் பேசுகிறான்

என்முகத்துக்கு முன்பாகப் பீற்றுகிறான்

இன்று ஒரு அரேபியனைக் கொன்றதாக.

இப்போதும் முடியாது என்கிறேன்.

எனக்கு உளச்சிக்கல்கள் இருக்கிறது என்று ஒத்துக்கொள்ள மறுக்கிறேன்.

துப்பாக்கிசுட நான் பழகமாட்டேன்.

சிறைக்குப் போகிறேன்.

ராணுவத்தின்/சிறையின் சீருடையை அணிய மறுக்கிறேன்.

தனிச்சிறையில் வைக்கப்படுகிறேன்

அது என்னை எந்த அளவுக்கு பயமுறுத்துகிறது என்பதைச் சொல்லவில்லை.

ஒவ்வொரு இரவும்

என் வயதொத்த ஒரு இளம்பெண், பதினெட்டுபோல வயதிருக்கும்,

என் செல்லில் உலாவுகிறாள்.

அவள்தலை மொட்டையடிக்கப்பட்டிருக்கிறது.

அவள் நிர்வாணமாக இருக்கிறாள். பசியோடு இருக்கிறாள்.

எனக்கு எதையோ தெரியப்படுத்த நினைக்கிறாள்.

அவளுக்குத் தொண்டை அடைக்கிறது.

எலும்பின் அவள் கைகள்

சுவரைப் பிறாண்டுகின்றன.

அவள் ஒரு கனவா, இல்லை ஒரு நினைவா,

சொல்லத் தெரியவில்லை எனக்கு.

என்னை அவள் பீடிக்கிறாள்

அல்லது

விடுவிக்கிறாள்.

3 comments:

தமிழ்நதி said...

என்ன சொல்வது? ஏதேதோ நினைவுகள்... எல்லாவற்றையும் பொருத்திப் பார்க்கிறேன்.

வினவு said...

இசுரேலின் ஒரு மென்னமையான குற்ற உணர்வு வல்லமையான உணர்ச்சியாக, ஒரு வரலாறாக.........

நன்றி, பெருந்தேவி

Vino Satchi said...

உங்கள் மொழிபெயர்ப்பு நன்று. ஈவ் இன்ஸ்லரை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி.

வினோதினி