Friday, June 25, 2010

ஹரியின் வாசிப்பும் என் கடிதமும்

ஹரி ”பெருந்தேவி: விடுதலையை மீண்டும் ஒருமுறை அனுபவித்தல்” என்கிற கட்டுரையின் சுட்டியை
http://langscape.wordpress.com/2010/06/23/on-perundavi-lgbtq/
உறுமீன் என்கிற என் கவிதையின் பின்னூட்டத்தில் கொடுத்திருக்கிறார். அதை இங்கே பகிர்கிறேன்.

அன்புள்ள ஹரி,

தகவல்கள் முதலில். “இக்கடல் இச்சுவை” (காலச்சுவடு) என் கவிதைத்தொகுப்புதான். 1999-2006 இடையே எழுதிய கவிதைகளின் தொகுப்பு அது. என் முதல் தொகுப்பு தீயுறைத்தூக்கம் 1998 விருட்சம்-சஹானா வெளியீடாக வந்தது. ஆனால், பலருக்குத் தெரியாது. இரண்டுக்கும் விமரிசனம் இதுவரை இல்லை. ”பெண்ணியக் கவிதைவெளியென அறியப்படும் ஒரு அரூபப் பரப்புக்கும், எனது அறிதலுக்கும் அப்பால்பட்டு பெருந்தேவி எழுதிக்கொண்டிருந்திருக்கிறார்” என்று எழுதியிருக்கிறீர்கள். சரிதான், இது எனக்கு மட்டுமல்ல, சென்ற மாதம் இலக்கியச்சூழலில் அக்கறை கொண்ட ஒரு நண்பர் ”ரிஷி கவிதை எழுதுவார் என்று எனக்கு இப்போதுதான் தெரியும்” என்று என்னிடம் சொன்னார். இத்தனைக்கும் ரிஷி 1980-களின் இறுதிகளிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறார். இவ்வாறு கூறியவரின் அறிதலில் நான் குறைகூற விரும்பவில்லை. பெண் எழுத்தாளர்களை விடுங்கள், பொதுவாகவே தமிழ் இலக்கியச்சூழலிலேயே எழுத்துமட்டுமே செய்துகொண்டிருப்பவர்கள் அறியப்படுவது அபூர்வம்தான். இலக்கியம் செய்பவர்கள்கூட தடாலடி செய்கிறபோதுதான் அவர்களின் பிரதிகள் கவனிக்கப்படுகின்றன என்பது கொடுமையான உண்மை. அல்லது, ”பெயர்களை” முன்னெடுத்துச்செல்ல சகோதர வலைப்பின்னல்களோ குழுமங்களோ இருக்கவேண்டும், இல்லாவிட்டால் அறியப்படுவது கடினம்தான். சரி, புகழுடம்பு :-)) பெற்று உய்ய வேண்டிய விதி நமக்கில்லை என்று எழுதும் கடமையை மட்டும் செய்யலாம். ஆனால், "புகழ்" மட்டுமே இந்த ஆட்டத்தில் இல்லை, எழுத்து வாசிப்புக் கவனமே பெறாத போது, விளைவாக, வாசிப்பவர்களோடு உரையாடல் இல்லாது போகும் நிலைமை ஏற்படுகிறபோது எழுத உற்சாகம் குறைகிறது என்பதே ஆற்றாமை. இரு வருடங்களாக இணையத்தில் நான் எழுத ஆரம்பித்தபிறகுதான் இத்தகைய உரையாடல்கள் கொஞ்சமாவது எனக்கு வாய்த்திருக்கின்றன.

ஜூடித் பட்லரை நீங்கள் வாசித்திருப்பது குறித்து மகிழ்ச்சி. ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலையில் ஒரு வருடத்தில் அவர் வகுப்பை நான் தவறவிட்டேன். அவரது ”பாலினச் சிக்கல்” என் வாழ்க்கையை, பார்வையை மாற்றியமைத்த நூல். அவர் புத்தகங்களே எனக்குப் பெண்ணியப்பன்மைகளையும் பெண்ணியக் கோட்பாட்டுச்சிக்கல்களையும் புரியவைத்தன. பால் அடையாளங்களை சமயோசித உபாயங்களாக மட்டுமாக அன்றி, சொல்லாடல்களில் அவற்றைச் சாராம்சப்படுத்தி உயர்த்தும்போது, அத்தகைய சாரம்சப்படுத்தல் இட்டுச்செல்லக்கூடிய பாசிஸத்தை பற்றி எச்சரித்தவை அவை. இதையொட்டியே நான்கு வருடங்கள் முன்பு காலச்சுவடில் பெண்ணெழுத்து குறித்த ஒரு சின்னக்கட்டுரையும் எழுதினேன்.

இந்தப்பின்னணி இருக்கட்டும், என்னை வாசிப்பவர் பட்லரின் சிந்தனை ஒளிச்சரடை ஒரு கண்ணியில் ஒரு இணைப்பில் என் பிரதியில் காணுகிறபோது, பட்லரின் நூல்களிலிருந்து எனக்குக்கிடைத்த மகிழ்வுணர்வு இன்னும் துலக்கம் பெறுகிறது. ஹரி, இதற்காக உங்களுக்கு நன்றி.

“உறுமீன்” பற்றிய உங்கள் வாசிப்பு பிரதியின் சாத்தியப்பாடுகளை ’இன்னும்’ என நினைவூட்டும் ஒரு செய்கை.

ஆத்மாநாம்-பெருந்தேவி கவிதையின் தொனியை இழுத்து வேறொரு இடையீட்டுப்பிரதியாகச் சமைத்திருக்கிறீர்கள். நீங்கள் அனுமதித்தால் என் பதிவில் அதை மீள்பதிவிட விருப்பம்.

அன்புடன்
பெருந்தேவி

1 comment:

Unknown said...

தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன்.
லதா ராமகிருஷ்ணனை ஒரு மொழி பெயர்ப்பாளராக மட்டுமே நானும் இதுவரை கண்டு வந்திருக்கிறேன்.
நாங்கள் இயங்கிகிற இந்த சூழல் மிக வெறுமையானது தான்.
சலனங்களுக்கு அப்பால் பட்டு ஆழமான ஒரு எழுத்தை சாத்தியப்படுத்தலாம் என்பதற்கு உதாரணமாய் உங்கள் கவிதைகள் இருக்கின்றன. இணையம் ஏற்படுத்தித் தரும் வெளி ஒரு ஆறுதல் தான் எனினும் கூட அச்சில் இக்கவிதைகளைப் பயிலும் அனுபவத்தையே மனம் நாடுகிறது. இணையத்தில் எப்போதும் ஒரு அவசத் தன்மை இருந்து கொண்டே இருக்கிறது.
எனது வலைத்தளத்தில் இருந்து நீங்கள் மீள்பதிவு செய்வீர்களாயின் அது எனக்கு பேருவகை தரும் செயல் அல்லவோ (ரசிக மனோபாவம் தான் ;) )
பட்லர் எனக்குப் பிடித்தமான ஒருவர் தான். ஆனால் அவரது கோட்பாடுகள் தாராளவாதத்தின் எல்லைகளுக்குள் மட்டும் நின்று விடுவதை சிசெக் மீள மீளச் சொல்லி வருவது என்னை தொந்தரவு செய்யாமலில்லை. (Slovaj Zizek ) பட்லர் இன்னும் கொஞ்சம் இடது பக்கம் சாய்ந்தால் எனக்கு இன்னும் பிடித்துப் போகலாம். ;)

அன்புடன்
ஹரி