Tuesday, June 8, 2010

இவை தவறாயின் எதிர்ப்பதென் வேலை (1)

செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. இருந்தாலும் இணையமும் மின்மடல்களும் சிலநேரம் எழுத அழைத்துவிடுகின்றன. லும்பினி இணையதளத்தில் கவிஞர் லீனா மணிமேகலை சமீபத்தில் எழுதிய ”கட்டுரை”-க்கான கவிஞர் ரிஷியின் http://www.lumpini.in/ethiraadal-008.html எதிர்வினையை வாசிக்க நேர்ந்தது. (லீனா மணிமேகலையின் ”கட்டுரை”யில் கவிஞராக என் பெயர் குறிப்பிடப்படாததில் எனக்கு மகிழ்ச்சி, ஆனால் ரிஷி என் பெயரைக் குறிப்பிட்டு அவருக்கு எதிராடல் செய்திருப்பதால், அந்த மகிழ்ச்சியில் மண்விழுந்து இதை எழுதவேண்டியதாகிவிட்டது. அதற்காக ரிஷிக்கு என் அன்பார்ந்த கண்டனமும் நன்றியும் :-)இதை எழுதுகிற நேரத்தில் நண்பர் ராஜன்குறையின் உள்ளுமை-இருப்பு பற்றிய உருப்படியான கட்டுரைக்கு பொறுப்பான பதில் எழுதியிருக்கலாம் என்கிற குற்றவுணர்வோடு தொடர்கிறேன்.

ஒரு எழுத்தாளராக கவிஞராக என் கவிதையை, மொழியை “விளக்குவது” அல்லது நானே அவற்றைப் பேசுவது எனக்குத் துளியும் விருப்பமில்லாத செயல். எழுதத்தொடங்கி இந்தப் பதினாறு, பதினேழு ஆண்டுகளில் இதை நான் செய்வதைத் தவிர்த்தே வந்திருக்கிறேன். பத்திரிகைகளில் நேர்காணல்களைத் தவிர்த்ததற்கும் இது முக்கிய காரணம். “ஈஷிக்கொண்டு” என்கிற என்கிற என் கவிதையின் வார்த்தை இப்போது விவாதச்சுற்றில் வந்துவிட்டதால், சில எண்ணங்களைப் பகிர நினைக்கிறேன். (லதா கந்தசாமியின் சட்டையில் ஈஷியதைப் பார்த்த கவிதைசொல்லி ரகசியம்காக்காமல் கவிதை எழுதியதால் வந்த சிக்கல் இது :-))

முதலில் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். ஒரு பிரதியில் பார்ப்பனியமோ அல்லது சாதியாதிக்கக் கருத்தியலோ செயல்படுமானால் அது கண்டிப்பாக விமரிசிக்கப்பட வேண்டியதே. குறிப்பாக ஏற்றத்தாழ்வுகளின் வழி தொடர்ந்து நிறுவப்படும், இயங்கும் இந்தியச் சமுதாயக்கட்டமைப்பில் இத்தகைய விமரிசனங்களுக்கான தேவையும் இடமும் நிச்சயமுண்டு. அதே நேரத்தில் எது பார்ப்பனியம் என்பதை வரையறுக்க வேண்டியிருக்கிறது, பிறப்பால் பார்ப்பனர்களாக இருப்பவர்கள் எழுதினாலே அந்த எழுத்து பார்ப்பனியப் பிரதியா, அல்லது எழுதப்படும் பிரதி பார்ப்பனியக் கருத்தியலை விதந்தோதினால் அதைப் பார்ப்பனியம் என்று விமரிசிக்க வேண்டுமா என்பது முக்கியம். (ஈஷி என்கிற சொல் வருகிற என் 68-வது பிரிவு என்கிற கவிதையின் சுட்டி இது. http://innapira.blogspot.com/2010/02/68_20.html எந்தப் பார்ப்பன ஆதிக்கக் கருத்தியலையும் இந்தப் பிரதியோ பிரதியில் இச்சொல்லோ நிலைநிறுத்துவதாக எனக்குத் தெரியவில்லை.

இதுவன்றி, பார்ப்பனியப் பிறப்பால் நான் எழுதுவதை ஒருவர் பார்ப்பனியப் பிரதி என்று சொன்னால், எனக்கு பதில்கூற எதுவுமில்லை. பிறப்பின் அடிப்படையில் விடுபடமுடியாத அடையாளச்சிறையின் கதவுகளை நான்தட்டி திறந்துவிடமுடியாது என்று நன்றாகவே அறிவேன் (இந்த வாக்கியத்துக்கான கருத்து உபயம் நண்பர் ராஜன்குறை, நண்பர் நாகார்ஜுனன் பதிவில் ஒரு பின்னூட்டத்தில் அவர் இதைப் பேசியிருப்பதாக நினைவு).

மேலும் பார்ப்பனர்கள் உபயோகிக்கும் சொல்லாக ஒரு சொல் பிரதியில் இருப்பதாலேயே, பார்ப்பனக் கருத்தியல் என்று போகிறபோக்கில் சொல்லிவிடமுடியுமா? ஒரு பிரதியில் பார்ப்பனக் கருத்தியலைத் தலைகீழாக்கும்வகையில்கூட பார்ப்பன அல்லது சம்ஸ்கிருதத் சொல்லாடல்கள் இடம்பெறக்கூடும். என் சில கவிதைகளையே எடுத்துக்காட்டாகப் பார்க்கலாம். என் “சில ஆலோசனைகள்” கவிதை http://innapira.blogspot.com/2008/08/blog-post_08.html உதாரணத்துக்கு. பலஸ்ருதி என்கிற பார்ப்பனிய சுலோக வார்த்தை இடம்பெற்றிருக்கிறது இதில். பொதுவாக, பலஸ்ருதி என்பது இறையை நோக்கிப் பாடப்பெற்ற பாடல்களை, பாசுரங்களைப் பாடுவதால் கிடைக்கும் பலாபலன்களை (குழந்தை பிறக்கும், வேலை கிடைக்கும் என்பது போன்றவை) அட்டவணையிடுவது. பாசுரத்தொகுப்பின் அல்லது பாமாலையின் framing device அல்லது சட்டகக்கருவி இந்தப் பலஸ்ருதி. ஆனால் அதே சட்டகம் என் கவிதையில் ஒரு எள்ளலோடு அதன் மரபார்ந்த நோக்கத்தை அர்த்தத்தைக் கேள்விக்குள்ளாக்கும்வகையில் பயன்படுத்தப்படுகிறது. என்னுடைய ”கேசவா” என்று தலைப்பிடப்பட்ட கவிதையிலும் இதேபோன்ற உள்ளார்ந்த எள்ளல்தொனியை வாசிப்பவர்கள் கண்டுகொள்ளலாம். http://innapira.blogspot.com/2008/07/blog-post_14.html. என்னைப் பொறுத்தவரை, கவிதை என்கிற வடிவத்தின் மொழி ஆதிக்கக்கருத்தியலை அல்லது அதன் மாறுபட்ட வடிவங்களை அரிக்கும் திறன்வாய்ந்த நுண்ணுயிரியாக நோய்க்கூறாக செயல்படுவதையே நான் விரும்புவேனே அன்றி உரத்துப்பேசுவதை அல்ல. என் எழுத்து தேர்ந்தெடுத்திருக்கிற பாணி அது. உரத்த துண்டுப்பிரசுரம் நேரடியான கள அரசியலுக்கு உதவும், ஆனால் கவிதையில் அது சரிவராது என்று நான் நம்புகிறேன். அதேபோல இலக்கியவாதிகள் கவிதை என்கிற பெயரில் துண்டுப்பிரசுரத்தை எழுதுவதாலேயே அரசியல்களப்பணியாளர்களுக்கு ஈடான போராளிகளாக தம்மை முன்நிறுத்திக்கொள்ள முடியாது என்றும் நினைக்கிறேன்.

மூன்றாவதாக, ரிஷி குறிப்பிடும் பிறப்பால் பார்ப்பனர்களாக அமைந்துவிட்டிருக்கிற பெண் எழுத்தாளர்கள்/கவிஞர்களை ஒதுக்குவதுபற்றி: லீனா மணிமேகலைக்கு முன்பே லிஸ்ட் போடும் “விமரிசகர்கள்” என்று அறியப்படுவோரும், “விமரிசகர்கள்” அல்லாத எழுத்தாளர்களும் செய்திருப்பது இது. இந்த அரசியல் புதிதா என்ன? இந்த அரசியலைத் தெரிந்து செய்பவர்களும் இருக்கிறார்கள், பெண்ணியம் பற்றிய வாசிப்போ புரிதலோ இல்லாமல் அடுத்தவர் போடும் லிஸ்ட்டையே பிரதியெடுத்துப் போடுபவர்களும் இருக்கிறார்கள். இது தேர்ந்த வாசகர்களின் ஊரறிந்த ரகசியம்.

ஆனால், பார்ப்பனப்பிறப்பு மட்டுமே இத்தகைய ஒதுக்குதலுக்குக் காரணமா என்பது சந்தேகமே, தமிழ் இலக்கியச்சூழலில் இப்போது ஆதிக்கம் செலுத்தும் குறிப்பிட்ட சிந்தனைப் (?)போக்கும் இதற்குக்காரணம் என்று நினைக்கிறேன். பெண் தன்னிலையைப் பேசும், வெளிக்கொணரும் மொழியில், பெண்ணுடல்/உறுப்புகள் பற்றிப்பேசும் எழுத்து பெண்ணியமொழியின் ஒருவகை மட்டுமே. இவ்வுண்மையை மறுத்து அல்லது மறைத்து பெண்ணுடலை/உறுப்புகளைக் கூற்றுப்படுத்தும் கவிதைகளே பெண்ணியக் கவிதைகள் என்பதாக தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு “கருத்து“ வலிந்து நிறுவப்பட்டிருக்கிறது. இதனால், பெண் எழுத்தாளர்களின் மற்ற செயலூக்கமுள்ள பங்களிப்புகளும் இடையீடுகளும் பரிசோதனை முயற்சிகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. பெண்ணியம்சார் படைப்புகளிலும் பெண்ணுடல் அல்லது உறுப்புகளே அன்றி, பெண் இருப்பின் வேறுபல தளங்களின் பிரச்சனைகளைப் பேசக்கூடிய படைப்புகளோ அல்லது பெண்-ஆண் முரணைக் கேள்விக்குள்ளாக்கும் படைப்புகளோ தமிழ் இலக்கியச்சூழலில் கவனப்படுத்தப்படுவதில்லை. வலிந்து நிறுவப்பட்டிருக்கிற இந்த ஆதிக்கக் கருத்தின் மணல் அக்கருத்துக்கு இயைந்துவராத பெண் எழுத்துகள் தொடர்ந்து ஒதுக்கப்படுகிற அநியாயத்தை குழியிலிட்டு் மூடிவிட்டது.

இல்லாவிட்டால், பெண் தன்னிலையும் பெண்ணியமும் வேறுபல வகைகளில் செயல்படும் கவிதைகளோ, கவிஞர்களோ இங்கே கண்டுகொள்ளப்படாமல் இருப்பது எப்படி? இங்கே பெண்கவிஞர்கள் என்று போடப்போடுகிற லிஸ்ட்டில் குறிப்பிட்ட வகைமாதிரிகளில்—”உடல்மொழி” என்று தமிழ்நாட்டில் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிற வகைமாதிரிகளில்--எழுதும் பெண் கவிஞர்களே பெரும்பாலும் இருக்கிறார்களே, அது எப்படி? தமிழ் எழுத்துச்சூழலில் பெண் எழுத்தின் வரலாறு என்பது எவ்வித கோட்பாட்டு அடிப்படையுமற்றப் புனைவொன்றைத் திரும்பத் திரும்பச் சொல்லி உருவாக்கப்பட்டிருப்பதே. இது கவிஞர் ரிஷியும் அறிந்ததே.

யாருடைய எழுத்தாக இருந்தாலும், சில சொற்களில் அல்லது ஒருசில வாக்கியங்களில் அதைப் புறந்தள்ளுவது விமரிசனமாகாது. சமீபத்தில் இணையத்தில் விவாதத்துக்கு உட்பட்ட லீனா மணிமேகலையின் இரண்டு கவிதைகளைப் பற்றி ஜமாலனும் நானும் எழுதிய கட்டுரையில்கூட விரிவாகவே எங்கள் நிலைப்பாட்டை வைத்தோம். அதற்கு பதிலாக தன் ”ஒட்டுமொத்த படைப்புவெளியை” கணக்கிலெடுத்துக்கொள்ளாததற்காக ஜமாலனையும் என்னையும் குற்றஞ்சாட்டிய அவரோ, தன் கட்டுரையில் ரிஷி, வெண்ணிலா, உமாமகேஸ்வரி, சுகந்தி சுப்ரமணியன், இளம்பிறை போன்ற பல கவிஞர்களின் எழுத்துகளை ஒரே வாக்கியத்தில் புறந்தள்ளியிருக்கிறார். விந்தைதான் இது!3 comments:

Perundevi said...

தொடர்புடைய என் கவிதைகளின், ரிஷியின் எதிர்வினையின் சுட்டிகளை லிங்க்-களாக இணைக்க முடியவில்லை. வாசிப்பவர் யாரும் உதவினால் நன்றி.

Rajan Kurai Krishnan said...

மிக நிதானமாகவும், பொறுமையுடனும் எழுதியுள்ளீர்கள். ஒரு கவிஞராக உங்கள் மேல் உங்களுக்குள்ள நம்பிக்கை வீண் போகாது. லீனாவின் வார்த்தைக்கும் சாதிக்குமான, சாதிக்கும் பார்ப்பனீய கருத்தியலுக்குமான தொடர்பு பற்றிய வாதம் மிகவும் பிழையானது, ஆபத்தானது. நானும் பொறுமையாகவும், விரிவாகவும் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம். கொஞ்சம் ஆயாசமாகத்தான் இருக்கிறது.

? said...

ஒரு படைப்பு மற்றும் படைப்பாளி பற்றி மொத்த நோக்கில்தான் இன்று பெரும்பாலான இலக்கியவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் செயல்படுகின்றனர். ஒரு வார்த்தை அல்லது ஒரு குறியீடு உங்களைப் பற்றி மதிப்பிடுவதற்கு அவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது. அல்லது எந்த வேளையிலாவது நீங்கள் கடந்து செல்லும் ஒயின் ஷாப்பில் இருந்து வீசும் முடைநாற்றம் கூட உங்கள் மீதிருந்தே வீசுவதாக அவர்கள் கற்பிதம் பண்ணவும் தவறுவதில்லை.

அடையாள அரசியல், நுண்ணரசியல் என்ற புதுமொந்தைகளில் ஊற்றப்படும் இந்த பழைய கள்ளைப் பற்றி தெரியாமல் மா.லெ அமைப்புகள் இவர்களைப் பற்றிய விமர்சனங்களை வைக்கவில்லை. வார்த்தைகளைப் பிடித்து தொங்கும் இவர்களால் பார்ப்பன சாதியில் பிறந்து விட்டதாலேயே யாரும் பார்ப்பனீயத்தை எதிர்த்த போதிலும் பார்ப்பனீயவாதியே என்று பிடிவாதம் பிடிக்கவும் முடியும். வைதிக இந்திய மரபில் வைணவம் இட்டுச் சென்ற தர்க்கமற்ற இத்தன்மையை தாங்களும் பின்பற்றுவது அறிவாளிகளுக்கு உகந்த ஒன்றாக மாத்திரமே உள்ளது. கவலைப் படாதீர்கள். சமூக வெளியில் இவர்கள் சருகுகளாக பறக்க ஆரம்பித்து விட்டார்கள் தமது கருத்துக்களின் உள்முரண்பாடுகளால்.