Tuesday, April 20, 2010

கவிதையின் ‘நான்’ = கவிஞரின் ‘நான்’: கடிதமும் பதிலும்

எங்களின் “கவிதையின் ‘நான்’ = கவிஞரின் ‘நான்’” பதிவுக்குப் பதிலாக கவிஞர் லீனா மணிமேகலை ஏற்கெனவே ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதை அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் பகுதிகளாக பிரசுரித்து பதில் எழுதினோம். இப்போது அவரிடமிருந்து ஏப்ரல் 17ம் தேதியிட்ட இன்னொரு கடிதம் வந்திருக்கிறது. அதை இப்போது தனியாகவே பிரசுரிக்கிறோம், எங்கள் பதிலையும் எழுதியிருக்கிறோம்.இதற்குமேல் அவரது கவிதைகள் பற்றி எங்களுக்குக் கூற ஒன்றுமில்லை.


லீனா மணிமேகலையிடமிருந்து வந்த கடிதம் இதோ:

ஜமாலன் தோழரின் மெயில் படித்தேன்.

"பின்னாளில் நீரோவாக பிடில் வாசித்தோம் என்று எழுதி இந்த பிரச்சினையை சாம்ராஜ்யம் எரிந்த பிரச்சினையாக ஆக்கி, நம்மை விமர்சித்துவிடக்கூடாது பாருங்கள் அதுவும்தான். இருந்தாலும், “வரலாறு முக்கியம் அமைச்சரே“- என்கிற இம்சை அரசனின் குரல் கேட்கத்தான் செய்கிறது நமது ஆழ்மனதில். என்ன செய்ய?"

உங்கள் கட்டுரையின் இந்த கடைசி பாராவுக்கும் நம் உரையாடலுக்கான உங்கள் விழைவுக்குமான மன அமைப்பில் கடுமையான முரண் இருக்கிறது. அய்யய்யோ, வருங்காலத்தில் நம்மை விமர்சித்துவிடுவார்களே என்றெல்லாமா ஒரு பிரதியை அணுகமுடியும்? அப்புறம் ஒரு பிரதியை ஏன் எதிர்ப்பு வருகிறது என்ற கேள்வியின் வழி அணுகி விமர்சிக்கும் பாணி ஒருபுதுவித துப்பறியும் விமர்சன பாணியா என்ன?

பிரதியை யார் எதிர்த்தார்கள், ம.க.இ.கவும், இந்து மக்கள் கட்சியும்! சமூக ஒழுங்கை கட்டிக்காத்து படைப்பாளிகளை அரசாங்கத்துக்கு காட்டிக் கொடுப்பதில் ஒன்று சேர்ந்திருக்கும் இந்த அடிப்படைவாதிகள் ஏன் இந்தப் பிரதியை எதிர்க்கிறார்கள் என்பதை துப்பறிந்து புரிந்துக் கொள்ளும் மட்டத்திலா ஜமாலனும் பெருந்தேவியும் இருக்கிறீர்கள்.

ஒரு கவிதையை கவிதையே இல்லை என்று விமர்சனம் செய்வது உங்கள் உரிமை.ஆனால் அந்த புள்ளிக்கு நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் வழி என்னை தொந்தரவு செய்கிறது.

எங்கள் ஊரில் ஒரு வழக்கம் உண்டு. எனக்கு திருவில்லிபுத்தூர் அருகில், [ஊரின் பெயரை எடிட் செய்திருக்கிறோம்: ஜமாலன், பெருந்தேவி) என்ற கிராமம் தான் பூர்வீகம். கடுங்கோபம் வந்து எதிராளியை சபிக்கும் உணர்வுநிலைக்கு வரும்போது பெண்கள் தங்கள் பாவாடையைத் தூக்கி காட்டி பழிப்பார்கள். அப்படி ஒரு பழிப்பாகக் கூட இந்த கவிதையை நான் எழுதிப் பார்த்திருக்கலாம். ஒரு ஓலமாக கூட கவிதையை எழுதிப் பார்த்திருக்கலாம். வாசிப்பு ஒழுங்கு, பிரதி ஒழுங்கு, ஆசிரிய ஒழுங்கு, சொல்லுக்கான அமைதி, வடிவ அமைதி என்று கவிதைக்கான ஒழுங்கையெல்லாம் பின் பற்றுவதற்கு பெண்ணுக்கு மொழியா இருக்கிறது? இல்லை வரலாறு இருக்கிறதா? கச்சாவாகவும், துறுத்தலாகவும் மொழியை வைப்பதை அரசியலாகவே வைக்கிறேன். அதிர்ச்சி மதிப்பீடு, ஆபாசம் என்ற வார்த்தைகளெல்லாம் மதவாத வார்த்தைகள். அதை முற்றிலும் நிராகரிக்க விரும்புகிறேன்.

ஞானக்கூத்தன், ஆடுகளை உரித்து சைக்கிளில் இப்படி அப்பட்டமாக எடுத்து செல்ல வேண்டுமா? மறைத்துவைத்து செல்லலாமே? என்று சொன்னாராம். எங்களுக்கு ஆடு ஓடும்போது, அழகு, அடிபட்டால் வருத்தம், கண்ணீர் சிந்தி கட்டுக் கூட போடுவோம். ஆடுக்கு ஆபத்து வராமல் காவலுக்கு மூன்று நாய்களையும் வைப்போம். ஆனால் வெட்டினால் இறைச்சி தான்.
நான் இமோஷனல் இன்டெலிஜன்ஸில் நம்பிக்கை வைத்திருக்குமொரு முட்டாள் கவிஞர் தான். அப்படியிருக்கவே விரும்புகிறேன்.

அப்புறம் கூட்டத்தில், ம.க.இ.க கூலிப்படைத் தாக்குதலெல்லாம் முடித்து வெளியேறியபின், கே.ஏ.ஜி தோழர் ஒரு அருமையான விசயம் சொன்னார்.

"மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ணகத்து திருவாலவாய் அருள்
பெண்ணகத்து எழில் பேயமன் சாக்கியத்
தென்னர்க் கற்பழிக்கத் திருவுளமே"
தேவாரம், மூன்றாம் பதிகம், திருஞானசம்பந்தர், "திருவாலவாய்".
சமணப்பெண்களை பாலியல் வல்லுறவு கொள்ள சிவனின் அருளை வேண்டுகிறார்கள் நம்ம சைவர்கள்.

அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில சலனங்களைச் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.

எனது பன்னிரெண்டு வயதில் சோவியத் யூனியனுக்கு யங் பயணியராக சர்வதேச குழந்தைகள் முகாமிற்கு சென்றபோது சாஷா என்ற குழந்தை கம்யூனிஸ்ட் தோழனோடு நெருக்கமான தோழியானேன். புரட்சி மட்டும் தான் அவனின் கனவு, மூச்சு எல்லாம். அப்புறம் பிரஸ்திரோய்கா வந்தது, கிளாஸ்நாஸ்ட் வந்தது, கோர்பசேவ் கதவுகளை திறந்தார், சோவியத் உடைந்தது, அவனை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. பல வருடங்களுக்குப் பிறகு அவன் அமெரிக்காவில் ஏதோ பார்மேன் வேலையில் இருப்பதாக அறிந்தேன்.தொடர்பு கொண்டேன். புரட்சியைப் பற்றி அவனிடம் கேட்க வில்லை.

பெர்லின் திரைப்பட விழாவுக்கு என் தேவதைகள் ஆவணப்படத்தை திரையிட சென்றபோது ஒரு தோழி கிடைத்தாள்., கிழக்கிலிருந்து மேற்குக்கு சுவர் தாண்டி தன் உறவுகளைப் பார்க்க வருவதற்கு தன் கன்னிமையை ஒரு அதிகாரிக்கு பலியிட்டுவிட்டு வந்த கதையை எனக்கு சொன்ன போது உறைந்துபோனேன்.

என் தோழிகளில், 80 சதவிகிதம் பேர் தன் சொந்த குடும்பத்து ஆண்களின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், எனக்கும் அந்த அனுபவம் உண்டு.

இந்தியாவில் 90 சதவிகிதத்திற்கு மேலான குழந்தைகள் திருமணத்தின் பெயரால் நடக்கும் எஸ்டாபிளிஷ்டு வல்லுறவுகளால் பிறந்தவை தான் என்று புள்ளிவிபரம் சொல்கிறது.

குழந்தை தொழிலாளி ஆவண நாவலின் நாயகி சீனா போராளிக்குழுவின் பெண்கள் பற்றிய என் எல்லா பிம்பத்தையும் உடைத்தவள்.

எவன் எதற்காக வல்லுறவு கொண்டால் தான் என்ன, வல்லுறவுக்குப் பிறகான பெண்ணுடலின் சிதைவு ஒன்றுதானே? ஒன்றை ஓங்கி சொல்லும் விருப்புறுதியில் அதீதத்திற்கு கவிதை இடம்கொடுக்க வில்லையென்றால் கவிதையை கைவிட வேண்டியது தான்.

இதெல்லாமும் உங்கள் மொழியும் நிலமும் நூலைப் படித்த காரணத்தினால் மட்டுமே எழுதுகிறேன். பெருந்தேவியின் கவிதைகளில் வரும் சமஸ்கிருதத்தையும், ஈஷிக்கொண்டு போன்ற பார்ப்பனியத்தை நிலைநிறுத்தும் சொற்களையும் தாண்டி அவரது பெருவாரியான கவிதைகளை நான் விரும்பி வாசித்திருப்பதாலும் கூட இதை நான் எழுதியிருக்கக் கூடும்.

ஜமாலன் தோழருக்கு, ஒரு குறிப்பிட்ட கவிதைகளை எடுத்துக் கொண்டு விமர்சிக்க முயலும்போது, ஒரு படைப்பாளியின் முழு படைப்பு வெளியையும் கணக்கிலெடுத்துக் கொண்டு தான் சொல்லாடலை முன் வைக்க வேண்டும் என்பதை நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா என்ன?

*******

எங்கள் பதில்:

அன்புள்ள லீனா மணிமேகலை,

நீரோ மற்றும் புலிகேசி பாணி இறுதி வரிகள் ஒரு நெகிழ்வான எழுத்துமுறையாக இந்த விமர்சனத்தை மாற்றும் நோக்கில் எழுதப்பட்டதே. அல்லது, வரலாறு என்கிற ரயிலை தவறவிடாமல் தொற்றிக் கொள்ளலாம் என்கிற ஆதங்கம் என்றும் நீங்கள் வைத்துக்கொள்ளலாம். என்ன கடைசிப்பெட்டியில் ஏறிக் கொள்ளும்படி ஆகிவிட்டது. :-) எங்களை யாரும் விமர்சித்து விடுவார்கள் என்பதற்காக பிரதியை அணுகவில்லை. பிரதியை யாரும் விமர்சிக்கவில்லையே என்பதால்தான் பதிவை எழுதினோம்.

//எங்கள் ஊரில் ஒரு வழக்கம் உண்டு. எனக்கு திருவில்லிபுத்தூர் அருகில், [ஊரின் பெயரை எடிட் செய்திருக்கிறோம்: ஜமாலன், பெருந்தேவி) என்ற கிராமம் தான் பூர்வீகம். கடுங்கோபம் வந்து எதிராளியை சபிக்கும் உணர்வுநிலைக்கு வரும்போது பெண்கள் தங்கள் பாவாடையைத் தூக்கி காட்டி பழிப்பார்கள். அப்படி ஒரு பழிப்பாகக் கூட இந்த கவிதையை நான் எழுதிப் பார்த்திருக்கலாம். ஒரு ஓலமாக கூட கவிதையை எழுதிப் பார்த்திருக்கலாம்.//

இதைப் படித்தபின் வருந்தினோம். ஊரின் பெயரைப்போட்டு இதை நீங்கள் எழுதியிருக்கவேண்டிய தேவையில்லை.

பெண்கள் தங்கள் பாவாடையைத் தூக்கிக் காட்டுவது குறிப்பிட்ட சூழலில் வரும் அதீத கோபத்தில், ஆத்திரத்தில், எதிர்ப்பு உணர்ச்சியில் நடந்திருக்கலாம். அத்தகைய செயலில் அதிகாரத்தை subvert செய்கிற ஒரு தன்மை உள்ளது. அந்தச்செயலை decontexualize செய்து, உங்கள் கவிதைகளுக்கான “நியாயமாக” ஒரு குறிப்பிட்ட ஊர்ப்பெண்களின் “நடப்பாக,” அதை இணையப் பொதுவெளியில் நீங்கள் பேசியிருக்க வேண்டாம். உண்மையில், இந்த உங்களின் கருத்துக்காகவே இந்தக் கடிதத்தை எங்கள் பதிவில் வெளியிட நாங்கள் மிகவும் யோசித்தோம்.

நீங்கள் சொல்லியிருக்கிற பெண்களின் அப்படியொரு செயல் அந்தச்செயலுக்குச் சம்பந்தமான சூழலில் ஒரு உடனடித்தன்மை கொண்டது. மோசமான அனுபவத்தை (அதாவது அவள் மீதான வன்முறையை, அடக்குமுறையை) அவள் எதிர்கொள்ளும் விதமாக, எதிராளியை விரட்டுவதற்கான ஆயுதம் போன்றது. குறிப்பிட்ட சமூகச்சூழலில், அதைப் பற்றிய நேரடியான பதிவில்தான் அதைப் புரிந்துகொள்ளமுடியும். ஆனால், உங்கள் முதல் கவிதை பொதுப்படையாக எல்லாப்பெண்களையும் யோனி என்கிற ஒருவார்த்தையில் அடக்கிவிடுகிறது. உங்கள் இரண்டாவது கவிதையிலோ, ”பழிப்பு காட்டுவதன், ஓலமிடுவதன்” சூழல் என்பது மார்க்சியர்களைப் பற்றி பொதுப்படையான சித்தரிப்பாக மட்டுமே எஞ்சி நிற்கிறது.

தவிர, அந்தப்பெண்களைப் போலன்றி, உங்கள் கவிதைகளில் ”யோனி,” வன்முறையை passive ஆகவே எதிர்கொள்ளுகிறது. எதிர்ப்புணர்ச்சியின் தளங்கள் உங்கள் கவிதையின் பிரதியில் தென்படவில்லை என்பது பிரச்சினை. இதை ஏற்கெனவே எழுதியிருக்கிறோம்.

//வாசிப்பு ஒழுங்கு, பிரதி ஒழுங்கு, ஆசிரிய ஒழுங்கு, சொல்லுக்கான அமைதி, வடிவ அமைதி என்று கவிதைக்கான ஒழுங்கையெல்லாம் பின் பற்றுவதற்கு பெண்ணுக்கு மொழியா இருக்கிறது? இல்லை வரலாறு இருக்கிறதா? கச்சாவாகவும், துறுத்தலாகவும் மொழியை வைப்பதை அரசியலாகவே வைக்கிறேன். அதிர்ச்சி மதிப்பீடு, ஆபாசம் என்ற வார்த்தைகளெல்லாம் மதவாத வார்த்தைகள். அதை முற்றிலும் நிராகரிக்க விரும்புகிறேன்.//

பெண்ணுக்கு மொழியில்லை, வரலாறு இல்லை என்றால், சங்ககால பெண் கவிஞர்கள், ஔவையார், காரைக்கால் அம்மையார் துவங்கி ஆண்டாள், ஆவுடையக்காள் என உள்ள குரல்களை அவர்களது மொழியை என்னவென்று சொல்வது? Hermeneutics of recovery என்கிற சாத்தியங்களோடுதான் இருக்கின்றன பெண்களால் எழுதப்பட்டிருக்கிற எழுத்துகள்.

மேலும் “கச்சாவாகவும், துறுத்தலாகவும்” மொழியை முன்வைப்பது பற்றி நாங்கள் எங்குமே பேசவில்லை. உங்கள் கவிதைகளுக்கு விமரிசன வாசிப்புகளை எல்லாம் “இவர்கள் கச்சாவான வார்த்தைகளுக்கு எதிரிகள்” என்று ஒற்றைப்புள்ளியில் நீங்கள் சுருக்கி எளிமைப்படுத்துகிறீர்கள் என்றே கருதுகிறோம்.


//ஞானக்கூத்தன், ஆடுகளை உரித்து சைக்கிளில் இப்படி அப்பட்டமாக எடுத்து செல்ல வேண்டுமா? மறைத்துவைத்து செல்லலாமே? என்று சொன்னாராம். எங்களுக்கு ஆடு ஓடும்போது, அழகு, அடிபட்டால் வருத்தம், கண்ணீர் சிந்தி கட்டுக் கூட போடுவோம். ஆடுக்கு ஆபத்து வராமல் காவலுக்கு மூன்று நாய்களையும் வைப்போம். ஆனால் வெட்டினால் இறைச்சி தான்.
நான் இமோஷனல் இன்டெலிஜன்ஸில் நம்பிக்கை வைத்திருக்குமொரு முட்டாள் கவிஞர் தான். அப்படியிருக்கவே விரும்புகிறேன்.//

எதற்காக ஞானக்கூத்தனைப் பற்றிய இந்தச் ”செய்தி” இங்கே? மேலும், உங்களின் ”உணர்ச்சிவசப்பட்ட அறிவு” என்பதைப் பேசும்போது மற்றவர்களுக்கும் அதேபோன்ற “உணர்ச்சிவசப்பட்ட அறிவை” நீங்கள் மறுக்கமுடியாது.

//அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில சலனங்களைச் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.//

நீங்கள் முன்வைத்திருக்கிற, சோவியத் கம்யுனிஸ்ட் தோழன், பெர்லின் தோழி சம்பந்தமான நிகழ்வுகள்...என்ன சொல்ல வருகிறீர்கள், சோவியத் கிளாஸ்நாஸ்ட், கோர்பச்சேவ் இவற்றுக்கும் ”புரட்சியாளர்கள்” ஒரு பெண் உடலை ஆணாதிக்க நிலையில் மட்டுமே அணுகி உங்கள் பாணியில் சொன்னால் “வல்லுறவு” கொள்வதற்கும் என்ன தொடர்பு, சோவியத்தின் சரிவிற்கும் ஒடுக்கப்பட்ட பெண்ணிய பாலியலுக்கும் என்ன தொடர்பு, இதெல்லாம் புரிபடவில்லை. இந்நிகழ்வுகளிலிருந்து நீங்கள் புரட்சிக்கான சித்தாத்தங்கள் தோற்றுவிட்டதாக எழுதினால்கூட ஒருவகையில் புரிந்துகொள்ளலாம். ஆனால் சோவியத்தின் வீழ்ச்சி, மார்க்சியம் இன்னபிற கோட்பாட்டு பிரச்சனைகளைப் பற்றியதல்ல உங்கள் கவிதைத்தளம். உடனே நான் கட்டுரை எழுதவில்லை என்று சொல்லமாட்டீர்கள் என நம்புகிறோம்.

எல்லைதாண்டும் ஒரு பெண் தனது கன்னிமையை அதிகாரியிடம் பலியிடுகிறாள் என்பது உறைந்து போகச் செய்யும் நிகழ்வுதான். இது போன்ற எண்ணற்ற கொடுமையான நிகழ்வுகள் நடந்துவருகின்றன இன்றைய உலகில். சரி, ஆனால், ஒரு பிரதியை வாசிக்கும்போது, கவிதைகளை ”எதற்காக” கவிஞர் எழுதியிருக்கிறார், அவரின் தனிப்பட்ட வாழ்க்கைப் ”பின்னணி” என்பதெல்லாம் பிரதியை வாசிப்பவருக்கு தெரிய எந்த சாத்தியமும் இல்லை. (நீங்கள் இதைப்பற்றி கட்டுரை எழுதினாலேயொழிய அல்லது துண்டறிக்கை கொடுத்தாலேயொழிய).

//என் தோழிகளில், 80 சதவிகிதம் பேர் தன் சொந்த குடும்பத்து ஆண்களின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், எனக்கும் அந்த அனுபவம் உண்டு.

இந்தியாவில் 90 சதவிகிதத்திற்கு மேலான குழந்தைகள் திருமணத்தின் பெயரால் நடக்கும் எஸ்டாபிளிஷ்டு வல்லுறவுகளால் பிறந்தவை தான் என்று புள்ளிவிபரம் சொல்கிறது.//

இதை எல்லாம் எதற்காக சொல்கிறீர்கள்? இதற்கும் இந்த உரையாடலுக்கும் என்ன பொறுத்தப்பாடு உள்ளது? எங்கள் விமர்சனத்தை உணர்ச்சி வசப்படாமல் வாசித்துப் பாருங்கள். பாலியல், வல்லுறவு, ஆணாதிக்கம் இவை எல்லாம் நாங்கள் எங்கும் மறுக்கவுமில்லை. அதை மறுப்பது எங்கள் அரசியலும் இல்லை. நாங்கள் ”ஒழுக்கம்” பேணும் தூய்மைவாதிகளும் இல்லை.

//இதெல்லாமும் உங்கள் மொழியும் நிலமும் நூலைப் படித்த காரணத்தினால் மட்டுமே எழுதுகிறேன். பெருந்தேவியின் கவிதைகளில் வரும் சமஸ்கிருதத்தையும், ஈஷிக்கொண்டு போன்ற பார்ப்பனியத்தை நிலைநிறுத்தும் சொற்களையும் தாண்டி அவரது பெருவாரியான கவிதைகளை நான் விரும்பி வாசித்திருப்பதாலும் கூட இதை நான் எழுதியிருக்கக் கூடும்.//

ஞானக்கூத்தனை முன்பு சுட்டிக்காட்டியதிலும், பார்ப்பனியம் என்று இங்கு நீங்கள் எழுதுவதிலும், உரையாடலுக்குரிய பிரச்சனைகளை திசைதிருப்ப முயற்சிக்கிறீர்கள் என்றே நினைக்கத்தோன்றுகிறது. உங்கள் கவிதைகள் ஆண் பெண் என்று வலிந்து இருக்கும் இருமைக்கட்டமைப்புகளைத் தாண்டியதாக இல்லை என்றோம். இப்போதோ நீங்கள் அதன் தொடர்ச்சியாக பார்ப்பனியம்-பார்ப்பனிய எதிர்ப்பு என்பதாக வழக்கமாக சொல்லப்படும் பொதுபுத்தி சார்ந்த இருமைகளை முன்வைக்கிறீர்கள். பார்ப்பனியத்தின் கருத்தாடல்களை கேள்விக்குட்படுத்தும், எதிர்க்கும் சம்ஸ்கிருதத்தில் இருக்கும் புத்த, சமண, தாந்திரீக நூல்கள் ஒருபுறம் இருக்கட்டும். கவிதைப் பிரதியில் சமஸ்கிருத வார்த்தைகள் பார்ப்பனியத்தை நிலைநிறுத்தும் என்றால், நீங்கள் உங்கள் கவிதைகளில் பயன்படுத்தும் காமம் துவங்கி கிரஹணம் போன்ற வார்த்தைகளை என்னவென்று சொல்வது? முக்கியமாக, உங்கள் கவிதைகளில் வருகிற “யோனி,” இது சம்ஸ்கிருத வார்த்தைதானே.

ஒரு கவிஞரின் (அவர் பெருந்தேவியாக இருக்கட்டும் அல்லது ஞானக்கூத்தனாக இருக்கட்டும்) கவிதையை, பிரதியில் கிடைக்கும், பின்னிப்பிணைந்த இன, மொழி, பால் என்கிற அடையாளக் கட்டமைப்புகளை அகழ்ந்து எடுத்து பேசுவதை ஒரு வாசிப்புப்பாணியாகக் கொள்ளலாம். ஆனால், அதற்கு முன்பு நீங்கள் பார்ப்பனியம், தமிழன், பெண், ஆண் என்கிற அடையாளங்களை வரையறுக்க வேண்டும். அந்த வரையறைகளைச் செய்தபின்பு தான் பிரதி, அர்த்தம், அதன் செயல்பாடுகள் இவற்றைப் பேச முடியும். அதைவிட்டுவிட்டு, போகிற போக்கில் வசதி கருதி, ஓரிரு வார்த்தைகளை எடுத்துவிடுவது, விமரிசனங்களை சரியான விதத்தில் எதிர்கொள்ள உங்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை என்பதையே காட்டுகிறது.


பெருந்தேவி
ஜமாலன்

//ஜமாலன் தோழருக்கு, ஒரு குறிப்பிட்ட கவிதைகளை எடுத்துக் கொண்டு விமர்சிக்க முயலும்போது, ஒரு படைப்பாளியின் முழு படைப்பு வெளியையும் கணக்கிலெடுத்துக் கொண்டு தான் சொல்லாடலை முன் வைக்க வேண்டும் என்பதை நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா என்ன? //

இந்தக்கட்டுரை, உங்களின் இந்த இரு கவிதைகளுக்கான இந்துமக்கள் கட்சியின் புகார், அதற்காக உங்கள்சார்பில் நடத்தப்பட்ட கூட்டம் சம்பந்தமானது. ஆகவே, இவை தொடர்பாக விவாதத்தில் இருந்த உங்கள் இரு கவிதைகளையும் பற்றி எழுதினோம். மேலும், ஒருவர் பல படைப்புகளை படைக்கிறார். அவரது முதல் படைப்பும் அடுத்த படைப்பும் ஒன்றுபோலவே இருக்க வேண்டியது எப்படி சாத்தியம், படைப்பாளிக்கு என்று ஒரு சாராம்சம் இருக்கிறதா என்ன, இந்த படைப்பாளி என்றால் இதைதான் படைப்பார் என்று. அப்படி ஒரே மாதிரி படைத்தால் அது படைப்பு அல்ல, சரக்கு.

அன்புடன்
ஜமாலன்

5 comments:

yamuna rajendran said...

ஜமாலன், பெருந்தேவி. அறுபதுகளில் வெளியான கேட் மில்லட்டின் ‘த லாங்கஸ்ட் ரெவல்யூஸன்’ கட்டுரையை நீங்கள் வாசித்திருக்கக் கூடும். பெண்கள் விடுதலையும் மார்க்சிய பிதாமகர்களும் குறித்த அதியற்புதமான கட்டுரை அது. யுவன்னா காப் எழுதிய எலியனார் மார்க்ஸ் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலில்தான்(1968) மார்க்சின் முறைசாரா மகன் எனக் கருதப்படுகிற பிரெட்டி டெமூத் பற்றிய விவரங்கள் மிக விரிவாக முன்வைக்கப்பட்டன. ஷீலா ரோபாத்தம் மார்க்ஸ் பற்றி விமர்சனபூர்வமான ஒரு நூல் எழுதியிருக்கிறார். அவர்கள் மார்க்சியத்தின் எதிர்முகாமுக்குப் போய் இதனைச் செய்யவில்லை. தனிமனித வாழ்வுக்கும் மார்க்சியப் பிதாமகர்களது கோட்பாட்டுப் பங்களிப்புக்கும் இருக்கும் முரணையும் அவர்கள் முன்வைக்கவே செய்தார்கள். எனினும், முழு மானுட விடுதலை குறித்த அந்த மேதைகளின் தேட்டத்தை எள்ளளவும் இந்தப் பெண்கள் கொச்சைப்படுத்தவில்லை. லீனா மணிமேகலை மார்க்சியர்கள் குறித்த நிலைபாட்டில் தன்னை எங்கு நிறுத்திக் கொண்டிருக்கிறார் என்பதில் அவருக்கு நிச்சயமில்லை என்பதனை அவரது வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் தமுஎகச அறிக்கையையும் அவரது என்டிடிவி நேர்காணலையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் புரிந்துகொள்ள முடியும். மார்க்சியப் பிதாமகர்கள் குறித்துத் தான் எழுதியிருப்பது கவிதை, அபத்தக் கட்டுரை அல்ல என அவர் கருதுவாரானால் அது பற்றி வருத்தப்படுவது தவிர வேறு என்ன செய்ய முடியும்? யமுனா ராஜேந்திரன்.

Unknown said...

தோழரே,

இந்தப் பதிவைப் பகிர்ந்ததற்கு நன்றி.

என்னுடைய பதிவிலேயே சொல்லியிருந்தேன் - சரியாக வெளிப்படவில்லையென்றால் அது என் தவறு - எனக்கு லீனாவின் கவிதைச் சொல்லாடலிலோ, இல்லை அதன் கருத்திலோ கிஞ்சித்தும் உடன்பாடில்லை. தமுஎகச அந்தக் கூட்டத்தை நடத்தியதன் நோக்கம் லீனாவின் கவிதைகளுக்குக் கொடிபிடிப்பதற்காக இல்லை என்பது என் எண்ணம். “உன் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அதை நீ
வெளியிடுவதற்கான
உன் சுதந்திரத்திற்காக என் உயிரையும் கொடுப்பேன்” என்ற வால்டேரின்
வார்த்தைகளை மதிப்பவன், பின்பற்றுபவன் நான்.

Perundevi said...

இரண்டு பின்னூட்டங்களைப் மட்டுறுத்தியிருக்கிறேன். ஒன்று வன்மையான சொற்களோடு வந்திருந்தது. இன்னொன்று கவிதைமொழியில் ஆனால் தெளிவில்லாமல் இருந்தது. மன்னிக்கவும்.

Unknown said...

//ஒரு கவிதையை கவிதையே இல்லை என்று விமர்சனம் செய்வது உங்கள் உரிமை.ஆனால் அந்த புள்ளிக்கு நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் வழி என்னை தொந்தரவு செய்கிறது.// ஜமாலனும் பெருந்தேவியும் அதே வழியாக அந்தப் புள்ளிக்கு வந்து சேர்ந்து கவிதைகள் நன்றாக இருக்கின்றன என்று சொல்லியிருந்தால் இதே எதிர்வினைதான் வந்திருக்குமா என்று தெரியவில்லை. பிறகு ஜமாலன்-பெருந்தேவி பதில் வழக்கம் போல நிதானம் தவறாத ஒன்று. உங்கள் கட்டூரையில் குறிப்பிட்டிருப்பது போல கவிதைகளுக்கு அதன் உருவாக்கத்தில் பங்கெடுத்த சலனங்களுக்கும் பல முரண்பாடுகள். எளிய பதற்றங்களை கையாள்வது எப்படி என்று ஜமாலனுக்கும் பெருந்தேவிக்கும் தெரிந்திருக்கிறது :).

லீனா முன்வைக்கும் அரசியல், பெண்ணிய பிம்பங்களை கலைத்து போடுகிறது அவருடைய இந்த எதிர்வினை.

Perundevi said...

யமுனா ராஜேந்திரன், முகிலன், மதி:
பின்னூட்டங்களுக்கு நன்றி.