Tuesday, January 3, 2012

இணையச்சுழலில் சுய(மற்ற) அடையாளங்கள் (பகுதி 1)

(காலச்சுவடு ஜனவரி 2012 இதழில் வெளியாகியிருக்கும் கட்டுரை இங்கே பகுதிகளாகப் பதியப்படுகிறது)

”அந்நியமாதலின் நாடகத்தின் அங்கமாய் இனி நாம் ஒருபோதுமில்லை: நாம் தொடர்புறுத்தலின் பரவசத்தில் வாழ்கிறோம்” (ழான் போத்ரியார்)

காலமென்றே ஒரு புனைவும்
காட்சியென்றே சில நினைவும்

காலங்காலமாய் நேசிப்பதை அல்லது வேண்டியதை நோக்கிய பயணம் பேச்சிலும் எழுத்திலும் உலகம்முழுதும் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒன்று. தமிழிலக்கியத்தை எடுத்துக்கொண்டால் வீடுநோக்கித் தேரை வேகமாகச் செலுத்தும் தலைவியைப் பிரிந்திருந்த தலைவன்; மெய்யெனத் தாம் கொள்ளும் பரம்பொருளைத் தேடி, காண தலம் தலமாக யாத்திரிகர்களாக அலையும் பக்திக்கவிஞர்கள்; நவீன இலக்கியப்புனைவுகளில் ஞானம்/காதல்/உண்மை/பொருள் போன்றவை நாடி புவியியல் பரப்புகளில் பயணிப்பவர்கள்; முடிவிலா இந்த வரிசையின் பலவகைப் பயணிகளையும் பயணங்களையும் நம்மால் சந்திக்க முடியும். அதேபோல இந்தியாவின் பலபகுதிகளிலும் வழங்கிவருகிற மகாபாரத, ராமாயணக் கதைகளிலும் கதையோட்டத்தோடு கலந்திருக்கும் முக்கியமான கூறு யாத்திரை அல்லது பயணம். இலக்கியத்திலும் இலக்கியம்தாண்டியும், நோக்கம் எதுவாக இருந்தாலும் பயணத்தின் அடிப்படை உடலியக்கம், நகர்வு; இந்த உடலியக்கமும் நகர்வும் காலத்தினூடாகக் களம்கொள்ளுகிறது புறவெளியில். (கனவு அல்லது மனோரதப் பயணங்கள், சூஃபிக்களும் சித்தர்களும் முன்வைத்த அக-யாத்திரைகள் போன்றவற்றை இங்கே சற்றுத் தள்ளிவைக்கலாம்; அதேபோல யாத்திரைக்கும் பயணத்துக்குமான பொருண்மையான வேறுபாடுகளையும்கூட.) இன்று இணையத்தின் வாயிலாக மனிதர்கள் உடனடித் தொடர்பிலிருக்கக்கூடிய நிலையில் உடலியக்கப் பயணத்தின் முக்கியத்துவமும் பரிமாணமும் மாறிவிட்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் உறவுகளின் பின்னணியில் மனிதசுயத்தின் அடையாளம் என்ன என்பதைப் பார்ப்போம்.

சென்றவாரம் புத்தமரபுகள் குறித்த என் வகுப்பில் சம்ஸ்கிருத நூலான திவ்யாவதனா-விலிருந்து அசோகருக்கும் பெரியவர் உபகுப்தருக்குமான பௌத்தத்தலங்களைப் பற்றிய உரையாடலை வாசித்துக்கொண்டிருந்தோம். அசோகரின் விருப்பப்படி உபகுப்தர் அவருக்கு புத்தர் வாழ்ந்த இடங்களைக் காட்டிக்கொண்டிருக்கிறார்: லும்பினிக் காடு: இங்கேதான் ஆசிர்வதிக்கப்பட்ட புத்தர் போதிசத்துவராகப் பிறந்தார்; கபிலவஸ்து மாளிகை; இங்கேதான் பிறந்தவுடன் போதிசத்துவர் கொண்டுவரப்பட்டார்; இக்கோயில் சாக்கியகுலத்தின் புராதனக் கோயில்: குழந்தை போதிசத்துவரைக் கண்டவுடன் சிலையான கடவுளர்கள் அவர் காலில் விழுந்தனர்; பெண்களின் இடமிது; இங்கேதான் மகாபிரஜாபதியால் அவர் வளர்க்கப்பட்டார்; அந்தக் வாயிலைப்பாருங்கள்; இதன் வழியாகத்தான் அவர் நள்ளிரவில் கபிலவஸ்துவைப் பிரிந்து தம்மத்தின்வழி ஏகினார். இப்படி ஒவ்வொரு இடமாகக் அறிமுகப்படுத்துகிறார் உபகுப்தர். போதிசத்துவர், ஞானத்தின் விழிப்பைப் பெற்ற இடமான கயாவின் போதிமரத்தையும் தம்மத்தைப்பற்றிய முதலுரை நிகழ்த்திய சாரநாத் ரிஷிபடானத்தையும் பிம்பிசாரருக்குத் தம்மம் போதித்த இடத்தையும் ஒன்றொன்றாகக் காட்டிக்கொண்டுவரும் உபகுப்தர் கடைசியாகக் குஷிநகரியைக் காட்டுகிறார், புத்தர் பரிநிர்வாணநிலை (உலகைப் பிரிதல்) அடைந்த இடம் இதுதான் என்று. அதுவரை ஒவ்வொரு இடத்தையும் கண்டு பிரமிப்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியிருந்த அசோகர் கடைசி விவரணையைக் கேட்டவுடனேயே துக்கம்தாளாமல் மயங்கிச்சாய்கிறார்.

இப்பகுதியை வகுப்பறையில் வாசித்துக் கொண்டிருந்தபோது பல்வேறு இடங்களை பயணத்தில் காணும்போது உருவாகும் மனஎழுச்சிகள் பற்றிய உரையாடலுக்கு நகர்ந்தோம். ”பாருங்கள், இதுதானே சாரநாத். இருந்த இடத்திலிருந்து நகராமல் உபகுப்தர் துணையில்லாமல் சென்றுவிட்டேன் நான்.” என்றார் ஒரு மாணவர், தன் ஐ-போட் திரையைக் காட்டியபடி. “நீ மட்டுமா? நானும் போகிறேன், ஆனால் நான் புத்தகயாவுக்கு” என்று இன்னொரு மாணவர் தன் கணினியில் புத்தகயா பற்றிய யூ-ட்யூப் காணொளிக்குச் சென்றார். ”அதெல்லாம் இருக்கட்டும், அசோகர் குஷிநகரியில் மூர்ச்சையடைந்ததைப்போல உங்களின் எந்தப் பயணத்திலாவது எந்த இடத்திலாவது உணர்ச்சிவயப்பட்டிருக்கிறீர்களா?” என்று கேட்டேன். என் மாணவர்கள் பலரும் கோடைவிடுமுறைகளில் குடும்பத்தோடோ, நண்பர்களோடோ, வெளிநாட்டுக் கல்விச்சுற்றுலாவுக்காகவோ ஆசியாவுக்கு ஐரோப்பாவுக்கும் சென்று வந்தவர்கள். ஆனாலும், என் கேள்விக்கு எதிர்மறையான பதிலே அவர்களிடமிருந்து கிடைத்தது. உரையாடலில் ஒரு மாணவர் சொன்னது கவனத்துக்குரியது: “வசந்தகாலத்தில் என் பெண்நண்பியோடு கிறீஸ் சென்றிருந்தேன். ஏதென்ஸ், டெல்பி, கொரிந்த், பல இடங்கள் பார்க்கத் திட்டம் போட்டிருந்தோம். சென்றோம். ஆனால் எனக்கும் நண்பிக்கும் மனஸ்தாபம் வந்துவிட்டது. எங்கே போனாலும் காட்சிகளை படமெடுத்து உடனுக்குடனே தன் முகநூல்பக்கத்தில் பகிர்ந்துகொள்வதற்கும் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதற்குமே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. உண்மையில் நாங்கள் இருவரும் “ஒன்றாக” எதையும் நாங்கள் பார்த்து அனுபவிக்கவில்லை. போன இடங்களில் எல்லாவற்றிலும் நான் பார்த்தது எப்போதுமே திறந்திருக்கும்-முகநூல்-பக்கத்துடனான-அவளைத்தான். அதன்பின் பிரிந்துவிட்டோம்.”

மறதி--நினைவு என்ற இருமையில், காலப்போக்கின் இயல்பான மறதியை எதிர்த்து நினைவின் பக்கம் விசுவாசத்தோடு நிற்பதற்காக என்று சொல்லி நம்மால் உள்வாங்கப்பட்ட புகைப்படம், காணொளி போன்றவை இன்று இணையத்தின் ”உடனடித்தன்மை” என்பதோடு நீரும் பாலுமாக கலந்து நிற்கின்றன. ”நினைவு கொள்ளுதல்” என்கிற செயல்பாட்டின் ஆக அடிப்படையான கால அவகாசம் அர்த்தம் திரிந்துவிட்டது. ஒரு காட்சியைக் காணும்போதே புகைப்படமாக, காணொளியாக அது பகிரப்படும்போது, சொல்லப்போனால் பகிர்வது என்னும் உந்துதலே காட்சியையும் காண்பவரையும் பிணைக்கும்போது, அனுபவம்--நினைவு என்ற வகைகளின் எல்லைகள் கலைந்துவிடுகின்றன; இந்த வகைகளே செல்லாமலாகிவிடுகின்றன. கூடவே இனிமேல் நாம் பெறுப்போகிற அனுபவம் என்பதே நாம் கொள்ளப்போகின்ற நினைவாக, ஆகவே “ஏற்கெனவேயானவையாக” இருந்துவிடுமென்கிற உணர்வு மேலோங்குகிறது.

பழைய தமிழ்ப்படங்களில் மூர்ச்சை தெளிந்தபின் கதாநாயகிகள் கேட்கும் “நான் எங்கே இருக்கிறேன்?” என்ற கேள்வி இன்று இணையதளத்தில் இணைவிலிருக்கையில் (online) வேறொரு தத்துவார்த்தப் பரிமாணத்தைப் பெறுகிறது. ”இடம்” இந்தக்கேள்வியில் ”நான்” என்கிற தன்னிலையின் இடமும்கூட. வேற்றுநாட்டு அனுபவத்துக்காக தன் ஆண்நண்பனுடன் கிறீஸ் சென்ற பெண் உண்மையில் எங்கே இருந்தாள் என்று வினவினால், இந்த “எங்கே” புவியியல் பரப்பில் என்பதுமட்டுமன்றி தன்னிலையின் இடத்தையும் இருப்பையும் தன்மையையும் பற்றிக் கேட்பதாகவும் மாறுகிறது.


(இன்னும் இருக்கிறது)

1 comment:

rvelkannan said...

முழுமையாக படிக்க வேண்டும் நிதானமாகவும்
படித்த பின் பின்னுட்டம் இடுகிறேன்