Monday, January 9, 2012

தோற்கடிக்கப்படும் பெண் (பெரும்பாலும்)

தீயுறைத்தூக்கம் (விருட்சம்: 1998)தொகுப்பிலிருக்கும் தலைப்பிடப்படாத ஒரு கவிதையைப்பற்றி பத்துவருடங்களுக்குமுன்னர் எழுத்தாளர்-நாவலாசிரியர் பா.வெங்கடேசன் எழுதியிருப்பது சமீபத்தில் காணக்கிடைத்தது. (அவ்வை மண்ணில் பெண் எழுத்தாளர்கள், தொகுப்பு: பிரம்மராஜன், ஆர். சிவகுமார். மருதா: 2001), தீயுறைத்தூக்கத்துக்கு விமரிசனம் இதுவரை வரவில்லை என்று நினைக்கிறேன். ஒரு கவிதையை முன்னிறுத்தி வெங்கடேசன் செய்திருக்கும் அணுக்கவாசிப்பை பிரதி குறித்த அவரது அணுகுமுறைக்காக இங்கே பதிவுசெய்கிறேன். முதலில் கவிதை:


தாழம்பூ வசிக்கும்
விதிதின்ற தோட்டம்
ஈடன்
முன்றிலில்
பொழுதற்ற பொழுதும்
உலரா நீர்விழிச்
செம்முகம்
புதைந்தே விழைவும்
இழந்தா போயிற்று மாட்சிமை
யுன் ஜதியென
குற்றஞ்சுட்டும்
ரகசியம் தோற்ற
தது சர்ப்பம்.

தேற்ற தூக்கிய பாதம்
பணிவபிநயித்து
அலையும் முத்துச்சுடர்
நடனம் த்வனிக்கும்
அசுரக்கால்கள்
திருச்சிற்றம்பலவொலி
பிரவகித்தோட
மிஞ்சிக்கூசும் கனி
புசித்த திருவிழி
தரித்ததே உயி
ரென்றும்
துணுக்குறுவாள்
உமாமஹேஸ்வரி.இனி கட்டுரையில் பா. வெங்கடேசன்:

"இந்தக்கவிதை இருவேறு புராணிகங்களைச் சில ஒத்த அம்சங்களை முன்னிறுத்தி இணைப்பதன்மூலம் கவிதையில் பேசும் பெண்மொழியின் பிரதேச அடையாளங்களை அழித்து அதைப் பிரபஞ்ச அளவினதாக்குகிறது. கவிதை ஞாபகப்படுத்தும் பிரதான கதையாடல்கள்: 1. ஈடன் தோட்டத்து விலக்கப்பட்ட கனியை ஆதாமுக்குமுன் ஏவாள் பாம்பின் தூண்டுதலால் தின்றது 2. நடனப்போட்டியில் சிவனுக்கு நிகராக அடவுகளை நிகழ்த்திக்காட்ட முடியாமல் உமாமஹேஸ்வரி தோற்றுப்போனது. இரண்டு கதைகளிலுமே பெண் தோற்றுப்போகிறாள்.

விவிலியக் கதையில் சிவபுராணத்தில் காட்டப்படுவதுபோல ஆணுக்கும் பெண்ணுக்குமான நேரடி மோதல் காட்டப்படுவதில்லை. மாறாக, ஆண், பெண் இரு எதிர்வுகளுக்கு வெளியே பொதுவாகச் சுட்டப்படும் கனியை உண்டு, பாவம் செய்து, தான் தோற்பதன் மூலமாகப் பெண் ஆணின் தோல்விக்கும் காரணமாகிறாள். சிவபுராணத்தில் நடனம் என்கிற பொதுக் குறியீட்டைக்கொண்டு ஆண் பெண்ணை ஜெயிக்கிறான். அதாவது கனி ஆண், பெண் இருவருக்குமே விலக்கப்பட்டது. ஆனால் சிவன்முத்திரை பெண்ணுக்கு மட்டுமே விலக்கப்பட்டது.

இந்த வேறுபாட்டைத்தான் பெருந்தேவியின் கவிதை அழிக்கிறது. கவிதையில் கனி-நடனம் ஆகியவை ஒத்த அர்த்தத்திலும், ஏவாள்-உமாமஹேஸ்வரி இருவரும் ஒத்த அர்த்தத்திலும் பாம்பிடம் ஏமாறுவதும் நடனத்தில் தோற்பதும் ஒத்த பொருளிலும் சுட்டப்படுகின்றன. ஆனால் கவிதையின் மேல்தளத்தில் நேரடியாகத் தோன்றும் சிவன் (திருச்சிற்றம்பல வொலி) ஆண் என்ற வகையில் ஆதாமுடன் இணைக்கப்படுவதில்லை. மாறாக பாம்பு அலைகிற மற்றும் தாழம்பூ விலக்கப்பட்ட வெளி என்கிற பொதுப்பண்பை முன்னிறுத்தி (சிவனுக்கு தாழம்பூ அர்ச்சனைப் பொருளல்ல, அதுபோல ஈடன் தோட்டத்தில் தாழை வளர்வதும் கவிதைப்படி இயல்பல்ல, விதி.) ஈடன் தோட்டமும் சிவனின் உடலும் கவிதைத்தளத்தில் இணைக்கப்படுகின்றன. ஜடப்பொருளுக்கும் – உயர்திணைக்குமிடையிலான இந்த எதிர்பார்க்கமுடியாத இணைவு புராணிகக் கதையாடல்களில் ஆண்மொழியைக் கட்டும் கதையொழுங்கைச் சிதறடித்துவிடுகிறது. இப்போது ஈடன் தோட்டம் ஆண் பெண் இருவருக்குமான பொதுவெளி அல்ல, மாறாக ஈடன் தோட்டம் என்பதே ஆணுடல்தான் (சிவனுடல்) என்பதும் அதில் விலக்கப்பட்ட கனி கதைசொல்ல ஒரு சாக்கு என்பதும், அதுபோல நடனம் என்பது ஒரு சாக்கல்ல மாறாக அது பெண் தோற்பதற்கென்றே உருவாக்கப்பட்ட ஈடன் தோட்டவெளிதான் என்பதும் கவிதையின் செய்தியாக நமக்கு அர்த்தப்படுகிறது. உமாமஹேஸ்வரி துணுக்குறுதல் அவளது விழிப்பைச் சுட்டும் குறியீடாக நின்று கவிதையில் பெண்மொழியை இயக்குகிறது."

புராணிகத்தை எதிர்கொள்ளும் இன்னொரு கவிதை இங்கே “இக்கடல் இச்சுவை” தொகுப்பிலிருந்து:

அழுகுணி

பகடையாட்டத்தில் தோற்கும் நிலை
தெரிந்தவுடனேயே
பதறி ஆட்டத்தைக் காலால்
கலைத்துவிடும் சிவன்
சாபமிட்டு விடுவான் உடனுக்குடன்
உமையொரு பாகத்துக்கு
அவ்விடம் நீங்கி
இவ்விடம் சேர.
ஈசன் அருள் பெற்ற
அசுரரைக் கொல்லும் முனைப்பில்
ஆயிரமாயிரம் ஆண்டுகளின் தபசு
அவளது
ஆயுத நீட்சிகளையும்
குருதி குடிக்கக் கன்னிப்பெண்களையும்
அடிமைத்தலைதாங்கிகளையும்
இச்செகக்
கோயில்களின் கலாகுழுமங்களாகப்
பிறப்பிக்க
அங்கே விளையாட்டுத்துணை அகன்ற துக்கத்தில்
எதிராளி மறைந்த களிப்பில்
தானே ஆடிக்கொள்வான் பித்தன்
இப்பக்கத்திலிருந்தும்
அப்பக்கத்திலிருந்தும்.

தெறித்த எண் இணைவுகள்
புழங்க வரம் பெற்ற சொற்றொடர்களாக
அவதரிக்க
இறை தாயத்தின் முதல் ஒழுங்காக
உலகம் நிறைக்க
தாயுமாகிய
விளையாட்டின்
தந்தையாட்டம் ஜெயிக்கும்
எப்பக்கம் நின்று ஆடினாலும்.

No comments: