Tuesday, January 3, 2012

இணையச்சுழலில் சுய(மற்ற) அடையாளங்கள் (பகுதி 3)

(காலச்சுவடு ஜனவரி 2012 இதழில் வெளியாகியிருக்கும் கட்டுரை இங்கே பகுதிகளாகப் பதியப்படுகிறது)

முதலில் இரண்டாம் வாழ்க்கை

WorldsAway, Alphaworld என்று சென்ற பத்தாண்டுகளில் தொடங்கிய மெய்நிகர் சமூக உலகங்களில் ஒன்று, 2003-ல் துவங்கப்பட்ட Second Life என்கிற முப்பரிமாண மெய்நிகருலகம். இவ்வுலகங்கள் வெற்றி/தோல்விக்கான வெறும் கணினி விளையாட்டல்ல. “இரண்டாம் வாழ்க்கை”-யின் முக்கியமான அம்சங்கள்: சில இங்கே உங்களின் அவதாரம் ஒன்றை உருவாக்கிக்கொண்டு பிற அவதாரங்களுடன் நட்பு கொள்ளலாம்; உறவு கொள்ளலாம்; திருமணம் செய்துகொள்ளலாம்; பார்ட்டிகள் நடத்தலாம். வீடுகட்டி, கார்வாங்கிக்கொள்ளலாம். சுற்றுலா செல்லலாம். நூலகம், கல்விக்கூடங்கள், கடைகள், ஓவியக்கண்காட்சிகள் போன்றவற்றுக்குச் செல்லலாம். குழந்தை பெற்றுக்கொள்ளலாம் (பய்லர் பல்கலைக்கழகம் ஒரு மெய்நிகர் மகப்பேறு அறையை இரண்டாம் வாழ்க்கையில் நிறுவியிருக்கிறது) பிற(ர்) அவதாரங்களோடு தனிப்பட்ட/குழு அரட்டை, உடனடிச்செய்தி போன்றவற்றால் தொடர்பிலிருக்கலாம். அடிப்படை உறுப்பினராவதற்கு பணம் வேண்டியதில்லை. ஆனால் இந்தவுலகத்தில் செயல்பட, உதாரணமாக சந்தித்த ஒருத்தரோடு (அவதாரத்தோடு) காப்பிக்கடைக்கு செல்ல, உங்களின் (அவதாரத்தின்) காரைச் சரிசெய்ய, வீடு வாங்க, தோட்டத்தை அழகுபடுத்த போன்றவற்றுக்கெல்லாம் பணம்வேண்டும். அதற்கு லிண்டன் டாலர் (L$) என்கிற நாணயம் புழக்கத்திலிருக்கிறது. இந்த நாணயத்தை நீங்கள் அமெரிக்க டாலர் கொண்டு வாங்கவேண்டும். அவற்றை மெய்நிகருலகத்தில் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

இங்கே நிலங்களை வீடுகளை ரியல் எஸ்டேட் மூலம் விற்கலாம். பொருட்களை, சேவைகளை வியாபாரம் செய்யலாம். லாபம் வந்தால் அதை அமெரிக்க டாலர்களுக்கு மாற்றியும்கொள்ளலாம். ஆத்திகர்கள், நாத்திகர்கள், லிபரல்கள், பெண்ணியவாதிகள் போன்ற பல குழுக்கள் உண்டு. சர்ச்சுகள், மசூதிகள் போன்றவை உண்டு. வெயிலில் வதங்காமல் வாடாமல் 7000 பேர் (இஸ்லாமியர்களும் மற்றவர்களும்) பங்குபெற்ற மெய்நிகர் ஹஜ் தலத்துக்கு மெய்நிகர் யாத்திரைகூட “இரண்டாம் வாழ்க்கையில்” நடந்தது. இஸ்லாத்தை எதிர்ப்பவர்கள் கட்டப்பட்ட புனிதத்தலத்தில் போர்னோக்ராபி போஸ்டர்கள் ஒட்டி, இஸ்லாமியர்களை வெளியேறச்சொன்னதும் பதிலுக்கு ஹஜ் ஆதரவாளர்கள் (இஸ்லாம் ஆன்லைன் குழு) ஆக்கிரமிப்பாளர்களைத் துரத்தியதும்கூட நடந்தது. (பார்க்க: http://news.sky.com/home/technology/article/1297721). இதுவரை இங்கே அரசாங்கம் இல்லை; ஆனால், மிலிட்டரிக்குழுக்கள், அரசியல் சங்கங்கள் உண்டு. வார்னர் ப்ரதர்ஸ், டெல், அமெரிக்கன் அப்பரல், அடிடாஸ், சிஸ்கோ போன்ற நிறுவனங்களின் மெய்நிகர் இருப்பும் பங்குபெறுதலும் கடைவிரிப்புகளும் இங்கே உண்டு. ஒரு மெய்நிகர்த்தீவை வாடகைக்கு எடுத்து கருத்தரங்குகள் நடத்துகிற ஐ.பி.எம் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் உண்டு. ”இரண்டாம் வாழ்க்கை உலகம்” என்பதைப்பற்றி மட்டுமே தனியாக ஒரு புத்தகம் எழுதுகிற அளவுக்கு விஷயங்கள் இருக்கின்றன. இணையத்தில் எக்கச்சக்கமான தகவல்கள் கிடைக்கின்றன. இரண்டாம் வாழ்க்கைக்குப் பரிச்சயமில்லாத வாசகரை மனதில்கொண்டு விரிவாக இங்கே அறிமுகம் செய்யவேண்டியதாயிற்று.

அவதார் என்கிற சொல் வடமொழி அவதாரத்திலிருந்து எடுத்தாளப்பட்டிருப்பது. கடந்து இருக்கும் இறை ஒரு நோக்கத்தோடு அவதாரத்தின்மூலம் உலகத்துக்கு வந்து அண்மிப்பதாகச் சொல்லப்படுகிறது. “எல்லாம் வல்ல,” “தன்னிச்சை” என்கிற அர்த்தச்சுட்டுதல்களை ”அவதாரம்” தனக்குள் கொண்டிருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது, இறையைப் போலவே மின்திரையில் இயங்கும் ஒருவர் தன் அவதாரத்தை அலகிலாவுலகில் விளையாட்டாக (லீலையாக) உருவாக்குகிறார், கட்டுக்குள் வைத்திருக்கிறார் என்று தோன்றும். ஆனால் வாழ்க்கை என்பதே மெய்நிகருலக அவதாரத்தின் ஆட்டங்களின், உணர்வுகளின் ததும்புகிற பரப்பாக மாறிவிடுவது சாதாரணமாக நடக்கிறது.

ஒரு ஜூலை சனிக்கிழமை மதியம் மிஸ்டர். ஹூக்ஸ்ட்ராட் கடற்கரைக்குப்போக முடிவெடுக்கிறார். ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தபடி டச் என்கிற அவதாரமாக இரண்டாம் வாழ்க்கைக்குள் நுழைகிறார். அப்போது 40,000-க்கும் மேல் மக்கள் லாக்-இன் செய்திருக்கிறார்கள். அவர் உள்ளே நுழைந்தவுடனேயே அவரது இரண்டாம் வாழ்க்கையின் மனைவி தனஜ் (ஜெனத் என்பவரின் பெண் அவதாரம்) தகவல் அனுப்புகிறாள் தான் உடனே வருவதாக. அவர்களிருவரும் தங்கள் அடுக்குவீட்டில்—புல்வெளிமீது கடலை நோக்கியமைந்த நவீன மூன்றுமாடிக்கட்டடம் அது—சந்திக்கிறார்கள். கடற்கரையிலிருக்கும் கிளப்புக்கு இருவரும் தொலைப்பொருட்பெயர்வு (teleport) செய்துகொள்கிறார்கள். அங்கே ஏற்கெனவே இடுப்புகளை ஆட்டியபடியும் உடைகளைப் பாதியும் முழுதுமாகக் களைந்தும் நடனமாடிக்கொண்டிருக்கும் ஒரு டஜனுக்கும்மேலானவர்களோடு இவர்களும் இணைந்துகொள்கிறார்கள்….

ஒருமுறை கடைக்குப் போன இடத்தில் டச் தனஜைச் சந்தித்தார் இரண்டாம் வாழ்க்கையில். பின்னர் இருவரும் ”மாயத்தோற்றத் தீவு” என்ற பெயர்கொண்ட தீவில் ஒரு அடுக்குவீட்டை வாடகைக்கு எடுத்து சேர்ந்துவாழ ஆரம்பித்தார்கள். விரைவிலேயே முப்பது நண்பர்கள் வருகைதர குளமமைந்த ஒரு தோட்டத்தில் இருவருக்கும் “சம்பிரதாயமான” திருமணமும் நடந்தது. டச்-சும் தனஜும் அந்நியோன்னியமான தம்பதியென்றும் தங்களுக்குள் எந்த ஒளிவுமறைவுமில்லையென்றும் சொல்கிறார்கள். …

டச்-சுக்கு 1.5 மில்லியன் லிண்டன் டாலர் மதிப்பில் சொத்துக்களுண்டு: பீச் கிளப், நடன கிளப், ஸ்ட்ரிப் கிளப், ஒரு பெரிய கடைத்தொகுதி (mall) போன்றவையுட்பட. அவரிடத்தில் இணைய இணைவிலிருக்கும் 25 பேர் (அவதாரங்கள்) நிர்வாகி, உதவி நிர்வாகி, காவலாளி, நடனப்பெண்மணிகள் என்று வேலை செய்கிறார்கள். … ஒரு ஞாயிற்றுக்கிழமை, சட்டையணியாமல், டெனிம் ஷார்ட்-டை அணிந்துகொண்டு தனது கடைத்தொகுதியின் கீழ்த்தளத்தில் உலாத்திக்கொண்டிருந்த டச், அன்றுகாலைதான் வாடகை கொடுக்கத் தவறியதற்காக பத்து கடைக்காரர்களை துரத்திவிட்டிருந்தார். மேலும் நான்கு புதிய வியாபாரிகளோடு இட ஒப்பந்தத்தில் கையெழுத்துமிட்டார் அன்று. அதில் ஒருத்தி பெண்களுக்கான மெய்நிகர் கழுத்தணிகளையும் சப்பாத்துகளையும் விற்பவள்….

ஹூக்ஸ்ட்ராட்டும் ஜெனத்தும் நேரில் சந்தித்ததில்லை; பேசிக்கொள்வதுமில்லை. ஹூக்ஸ்ட்ராட்டின் மனைவி மிஸஸ். ஹூக்ஸ்ட்ராட் கணினியின்முன் அமர்ந்திருக்கும் அவரரருகில் காலைவுணவை வைக்கிறார். அதை ஹூக்ஸ்ட்ராட் கவனிப்பதுகூட இல்லை. மின்திரையில் கடைத்தொகுதியில் குடிவந்திருக்கும் வியாபாரியோடு பேசிக்கொண்டிருக்கிறார்; தனது (அவதார) ஆண்நண்பனைப் பிரிந்திருக்கும் (அவதாரப்) பெண்நண்பிக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிறார்; தன் கடைத்தொகுதியில் தான் கட்டியிருக்கும் புதிய காப்பிக்கடையை மனைவி தனஜ்-க்கு சுற்றிக்காட்டிக்கொண்டிருக்கிறார். …

பத்துமணி நேரமாக மின் திரையைவிட்டு ஹூக்ஸ்ட்ராட் நகரவில்லை. ”இந்த மற்ற வாழ்க்கை பிரமாதம்தான்; யாருக்கும் நரைவிழாது, யாரும் உடல்பெருத்துவிட மாட்டார்கள்; இத்தகையவர்களோடு விடப்பட்ட மனிதர்களால் போட்டிபோடவே முடியாது” என்று மிஸஸ். ஹூக்ஸ்ட்ராட் சொல்கிறார். http://online.wsj.com/public/article/SB118670164592393622.html?mod=dist_smartbrief

மற்றவரும் நானாகி


இரண்டாம் வாழ்க்கை ”முதல்” என்பதாக கருதப்படுகிற வாழ்க்கையில் பொருண்மையான பாதிப்பு செலுத்துவது பற்றி ஆய்வுக்கட்டுரைகளும் செய்தித்தொகுப்புகளும் வெளியாகியிருக்கின்றன. இங்கிலாந்தில், மின்திரையில் ஒரு ஆணின் ஆண் அவதாரம் ஒரு வேசி அவதாரத்தோடு கொஞ்சியதில் தொடங்கி, பின்னர் அந்த ஆண் அவதாரம் இன்னொரு பெண் அவதாரத்தோடு அன்புகாட்டிப் பழகியதால் ”முதல்” வாழ்க்கையில் அந்த ஆணின் மனைவி மணவிலக்குக்கு முறையிட்டார். இரண்டாம் வாழ்க்கையில், குறிப்பிட்ட அந்த ஆணின் அவதாரம் அவர் மனைவியின் அவதாரத்தையே மணந்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது மணவிலக்கு குறித்த நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டிருந்தபோது, அந்த ஆண் ”புதிதாகப்” பழகிய பெண் அவதாரத்தின் ”சொந்தக்காரரான” பெண்ணைச் சந்தித்து திருமண நிச்சயமும் செய்துகொண்டார் (பார்க்க: http://www.time.com/time/world/article/0,8599,1859231,00.html) இதற்கு நகைமுரணென்று கொள்ளத்தக்கதொரு நிகழ்ச்சி ஜப்பானில் நடந்தது: மேப்பிள் ஸ்டோரி என்கிற மெய்நிகருலகத்தில் சொல்லாமல் கொள்ளாமல் (தன் பெண் அவதாரத்தை) மணவிலக்குசெய்துவிட்ட ஆண் அவதாரத்தை ஒரு பெண் அந்த ஆணின் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்திரையில் நுழைந்து கொன்றுவிட்டார். இதற்காக “முதல்” வாழ்க்கையில் அந்தப்பெண் தண்டனை தரத்தக்க கோர்ட் வழக்கைச் சந்திக்கவேண்டி வந்தது. (பார்க்க: http://www.switched.com/2008/10/24/online-divorce-leads-to-avatar-murder-real-jail-time/ ; http://www.huffingtonpost.com/2008/10/23/online-divorcee-jailed-af_n_137211.html)

”முதல்” வாழ்க்கையெனும் பிரதேசத்தில் மெய்நிகருலகச் செயல்பாடுகளின் சில அத்துமீறிய விதிவிலக்குகள் என்று இவற்றைத் தள்ளிவிடமுடியாது. அப்படிக்கருதுவது மெய்நிகருலகத்தின் ஆற்றலையும் வசீகரத்தையும் குறைத்து மதிப்பிடுவதாகிவிடும். அதேபோல “முதல்” வாழ்க்கையில் திருப்தியடையாதவர்களின் வடிகால் மெய்நிகருலக வாழ்க்கையென்கிற கருத்தும் போதாமையுடையதே. அவ்வாறு நினைக்கும்போது “முதல்” வாழ்க்கையின் குறையை ஈடுகட்டும் அல்லது அத்தோடு சமன்படுத்திக்கொள்ள உதவும் தடுப்புநடவடிக்கை ஏற்பாடாக மட்டுமே மெய்நிகருலகம் புரிந்துகொள்ளப்படும். டச் என்கிற ஹூக்ஸ்ட்ராட்-டின் அவதாரம் தசைவலுவோடு கட்டமைக்கப்பட்டது; மலைவளைவுகளிலும் வேகமாக மோட்டார் பைக் ஓட்டுகிற அவதாரம் அது. நீரிழிவு மற்றும் கணைய நோயால் வீட்டில் ஹூக்ஸ்ட்ராட் ஓய்வெடுத்துக்கொண்டபோதுதான் இரண்டாம் வாழ்க்கையில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக்கொண்டார் என்கிற தகவல், வடிகால் கருதுகோளுக்கு ஒரு நியாயத்தைத் தரலாம். ஆனால் அவரது மின்திரை வாழ்க்கை அந்தக் குறிப்பிட்ட காலச்சூழ்நிலையின் பழக்கமாக மட்டுமே தொடங்கவில்லை அல்லது நின்றுபோய்விடவில்லை என்பதை கவனத்திலெடுக்க வேண்டும்.

இந்த இடத்தில்தான் போத்ரியார் குறிப்பிடுகிற யதார்த்தத்துக்கும் பிம்பக்காட்சிக்குமான இடைவெளியழிவு முக்கியமான அவதானமாக இருக்கிறது. வாகன முன்கண்ணாடியிலிருந்து மின்திரைக்கு நகர்ந்த மாற்றத்தோடுகூட யதார்த்தவாழ்வுக்கும் அதைப் பிரதிபலிக்கும் கண்ணாடிப்பரப்புக்குமான இடைவெளியும் காணாமல் போய்விட்டது. யதார்த்தவாழ்வை பிரதிநிதித்துவப்படுத்துகிற நாடகம், திரைப்படம் போன்ற நிகழ்ச்சிகளின் களனாக இருக்கும் தொலைக்காட்சியைவிட இணையத்தின் மின்திரை ஏன் இளைஞர்களை இன்றைக்கு அதிகமாக வசீகரிக்கிறது என்பதை இங்கே யோசித்துப்பார்க்கலாம். மேலும், தொலைக்காட்சியிலும் மெய்-யதார்த்தக்காட்சிகள் (reality shows) வேகமாக இடம்பிடித்து வருவதை இத்தோடு இணைத்துப்பார்க்கலாம். இடைவெளி அழிந்திருப்பது உருவாக்கியிருக்கிற பதற்றம்தான் காயசண்டிகையின் பெருவயிறுபோல, போதாது போதாது இன்னும் கொடு யதார்த்தம் என்று மெய்-யதார்த்தக்காட்சிகளைக் கேட்கிறதோ? ஒருவேளை அவ்வாறாக இருந்தால், காயசண்டிகையின் வயிறு இனிமேல் நிறையப்போவதில்லை. அவளின் வயிறு அடிப்பகுதியற்ற ஒரு சுழல்; மின்திரையும் உருக்கொண்டிருக்கிறது அந்தச் சுழலைப்போலவே, ஆகவே ஆழம் என்கிற பரிமாணத்தை மீறியிருக்கிறது அது: எப்பேர்ப்பட்ட மெய்-யதார்த்தக்காட்சியும் இனி ஆழத்தின் பரிமாணத்தை, அதாவது யதார்த்தத்துக்கும் பிம்பக்காட்சிக்குமான இடைவெளியை மீட்டெடுக்கப்போவதில்லை என்று கூறுவது அதீதமான அவநம்பிக்கையின்பாற்படாது.

பயணத்தில் வாகன முன்கண்ணாடியின் பிம்பக்காட்சியை அனுபவிக்க, உள்வாங்க மனித சுயம் அல்லது தன்னிலை என்ற ஒன்றுக்கு இடமிருந்தது. இன்றைக்கு மின்திரையில் அனுபவத்தைப் பெறுகிற இடத்தில் தன்னிலை என்ற ஒன்று இல்லை; மாறாக மின்திரையின் ஒரு அங்கமாக, மின்திரை சாத்தியமாக்கியிருக்கும் வலைப்பின்னலின் ஒரு கண்ணியாக மாறிவிட்டிருக்கிறோம். இயைந்துப் பங்கேற்கக் கோரும் இணையத்தின் மின்திரை உடனடி நடவடிக்கைகளைக் (பின்னூட்டம், லைக் போடுதல், பதில் ட்வீட் அனுப்புதல், உடனுக்குடனே நிலைத்தகவல்களைப் பகிர்தல் போன்றவை) பொழுதும் கேட்டபடியிருக்கிறது. கைத்தொலைபேசியிலும் இணையம்வந்துவிட்டபிறகு, இந்தக் கோருதல் இன்னமும் எளிமையாகவும் இயல்பாகவும் இயக்கம்கொண்டிருக்கிறது. எங்கும் எப்போதும் நம்மோடு கூடவரும் மின்திரைக்குமுன் வீடு/பொதுவெளி, அந்தரங்கம்/விளம்பரம், தனித்திருக்கும் நேரம்/கலந்திருக்கும் நேரம் போன்ற வகைமைகள் இறந்தகாலத்தினுடையவையாகிவிட்டன.

குறிப்பாக, மெய்நிகருலக வாழ்க்கையை “முதல்” என்று கருதப்படுகிற வாழ்க்கையின் பிரதிபலிப்பென்று குறைத்து மதிப்பிடமுடியாது. மெய்நிகருலகத்தின் அவதாரத்தின் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள் (மேலே விவரித்ததுபோல) ”முதல்” வாழ்க்கையை நடத்திச்செல்வதாக, அதன் வரைபடத்தைத் தீர்மானிக்கக்கூடியவையாக, உறவுகளின் எல்லைக்கோடுகளை நெறிப்படுத்தக்கூடியவையாக இருக்கின்றன. ஆகவே மெய்நிகருலக அவதாரத்தை ”முதல் வாழ்க்கை” என்ற ஒன்றில் பங்குபெறும் தன்னிலையின் பிரதிநிதியாக அல்லது உருவகமாக நாம் நினைத்துக்கொள்ளமுடியாது. மேலும் அவதாரம் என்பது எண்ணிக்கையில் ஒன்றாக இருக்கவேண்டிய அவசியமில்லை, அது பலவாகவும் பலமாதிரியில் இயங்கமுடியும், இயங்குகிறது என்கிறபோது தன்னிலை x மற்றமை என்கிற வேறுபாட்டை நிறுவும் சட்டகம் காணாமல்போய்விடுகிறது. “உடனடியான” பிரசன்னத்தில், மின்திரைப்பரப்பில் பலப்பலவாகப் பெருகமுடியும் நிலையை ”ஒத்த சிற்றுருக்களான நான்கள் பல்கிப்பெருகும்” ஒரு வினோதச் சுயமோகநிலை என்று விவரிக்கிறார் போத்ரியார். துளி ரத்தம் நிலத்தில் விழுந்தவுடன் ஆயிரமாயிரமாகப் பெருகும் ரக்தபீஜனைப்போலப் ஒன்றேபோல் பல்கிப்பெருகும் நான்களின் களமாக, காளியின் நாக்குக்கு எட்டாத வனப்பாக மின்திரை; காலமும் வெளியுமோ எனில் கர்ஸரின் அசைவில் கட்டுண்டிருப்பவையாக.


”கடற்கரைக்குச் சென்ற டச்-சும் தனஜ்-ம் சலிப்படைகிறார்கள்…. இருவரும் டச்-சின் அலுவலகத்துக்குத் தம்மை தொலைப்பொருட்பெயர்வு செய்துகொள்கிறார்கள். … தனஜ் தன் நாய்க்குட்டியோடு விளையாடத் தொடங்குகிறாள்….டச் ஒரு கரோனா பியரைக் குடித்தபடி—நிஜவாழ்க்கையிலும் அவர் தேர்ந்தெடுக்கும் பியர் அது—தன் மேசைமுன்னால் அமர்கிறார். கணினியின் முன் அமர்ந்திருக்கும் மிஸ்டர் ஹூக்ஸ்ட்ராட் கணினியின் முன் அமர்ந்திருக்கும் தன் அவதாரத்தை சிறிதுநேரம் வெறித்துப் பார்க்கிறார்.” (http://online.wsj.com/public/article/SB118670164592393622.html?mod=dist_smartbrief)

கணினிமுன் அமர்ந்திருக்கும் நான்களில் ஒன்று கணினிமுன் அமர்ந்திருக்கும் நான்களில் ஒன்றை வெறித்துப்பார்த்தலன்றி நான் என்கிற இருப்பை உறுதிசெய்துகொள்ள வேறென்னதான் வழி?

உதவிய ஆக்கங்கள்:

Baudrillard, Jean. “The Ecstasy of Communication.” Trans. Bernard & Caroline Schutze. Ed. Sylvere Lotringer. New York: Semiotext(e), 1988.
Nunes, Mark. “Baudrillard in Cyberspace: Internet, Virtuality, and Postmodernity.” Style 29 (1995): 314-327.
மற்றும் கட்டுரைக்குள் சுட்டப்பட்டிருக்கிற பத்திரிகை / செய்தி இணையதளங்கள்.

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

இணையச்சுழலில் சுய(மற்ற) அடையாளங்கள் (பகுதி 2)

இணையச்சுழலில் சுய(மற்ற) அடையாளங்கள் (பகுதி 1)

No comments: