Tuesday, January 3, 2012

இணையச்சுழலில் சுய(மற்ற) அடையாளங்கள் (பகுதி 2)

(காலச்சுவடு ஜனவரி 2012 இதழில் வெளியாகியிருக்கும் கட்டுரை இங்கே பகுதிகளாகப் பதியப்படுகிறது)

உருவகத்திலிருந்து பாவனைக்கு

பயணத்தை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுகிறது இணையமும். பரந்த உலகத்தை இணைத்தல் என்பது பயணத்தைப் போலவே இணையத்தின் செயல்கூறாகவும் இருக்கிறது. பயணத்தைப் போலவே இணையத்தின் மின்திரையும் உலகத்தைத் துழாவியாராய்வதற்கான கருவியாகவும் இடமாகவும் இருக்கிறது (மார்க் நியூன்ஸ்). புவியியல்பயணம்சார் பிரயோகங்கள் பலவும் இணையம் சார்ந்தும் உபயோகிக்கப்படுகின்றன (“site map,” “navigation,” “explorer,” “(internet) speed,” “user address” என்பவைபோல). அதே நேரத்தில் மின்திரைப் பயணம் (screen travel) மீ-யதார்த்தச் (hyperreal) சுழலொன்றுக்கு நம்மை நகர்த்திவிடுகிறது. உதாரணத்துக்கு: “visit this (web)site,” ”jump page,” “website jumping,” “kill this page” போன்ற சொல்லாடல்கள் பௌதீகத்தோடு சேர்ந்த பருண்மையான உடலியக்கம் என்பதை மின்திரை சார்ந்த பாவனைச் செயல்களாக (acts of simulation) மாற்றி விடுகின்றன. யதார்த்தத்திலிருந்து மீ-யதார்த்தத்துக்கான நகர்வை இந்தப் பாவனைச் செயல்கள் சுட்டிவிடுகின்றன.

மின்திரைப் பயணத்தோடு தொடர்புறுத்தி யதார்த்தத்திலிருந்து மீ-யதார்த்தத்துக்கான நகர்வை போத்ரியார் முன்வைக்கும்போது ஒரு முக்கியமான அழித்தல் செயலோடு இந்த நகர்வு தொடர்புகொண்டிருப்பதைக் குறிப்பிடுகிறார். இணையம் உலகின் வெவ்வேறு மூலைகளுக்கிடையிலான தூரத்தை அழிக்கிறது என்பது எளிதாகப் புரிவதுபோல் இருக்கிறது. ஆனால் மின்திரையில் இன்னொரு அழித்தலும் நடக்கிறது: உருவகத்துக்கும் யதார்த்தத்துக்குமான இடைவெளி என்பது அழிபடுவதே அது. இந்த அழித்தலைப் புரிந்துகொள்ள முயலும்போது இன்று தொழில்நுட்பத்தால் சாத்தியப்பட்டிருக்கிற ”தகவல் பெருநெடுஞ்சாலை” என்பதைப் பற்றிச் சொல்லவேண்டும். எப்படி உலகின் வெவ்வேறு பிராந்தியங்களிலும் நாடுகளிலும் கட்டப்பட்டிருக்கிற நெடுஞ்சாலைகள் மனிதர்களின் அக/புற வாழ்க்கையை ”நவீனமாக” மாற்றினவோ அதேபோல தகவல் பெருநெடுஞ்சாலைகளும் மனிதவாழ்க்கையில் வேறொரு மாற்றத்தைச் சாத்தியப்படுத்தியிருக்கின்றன. இந்த மாற்றத்தை (மோட்டார் வாகனத்தின்) முன்கண்ணாடியிலிருந்து (இணையத்தின்) மின் திரைக்கு என்பதாகக் குறிக்கிறார் போத்ரியார். ”நவீனவுலகின்” மோட்டார் வாகனத்தின் முன்கண்ணாடி, பொருண்மையான பௌதீகவுலகின் காட்சிகளை பிம்பங்களாக உருவகப்படுத்துகிறது. இந்த பிம்பங்களைக் கண்டும் கணித்தும் வாகனத்தை ஓட்டுபவருக்கு இயக்கமும் நகர்வும் தம்மைக் காட்சியனுபவங்களாகவே தருகின்றன.

பௌதீகப் புறவெளி என்கிற யதார்த்தத்தின் உருவகம் பிம்பமாகவேகூட இருக்கட்டும், ஆனாலும் “நவீன வாழ்க்கையில்” காட்சியனுபவம் என்பதற்கு ஒரு முக்கிய இடம் இருந்தது; அந்தக் காட்சியனுபவத்தைப் பெறுகிற, தன் உணர்வுகளை கனவுகளை எண்ணங்களையெல்லாம் அந்த அனுபவத்தில் இட்டுப்பார்க்கும் அடையாளப்படுத்திப்பார்க்கும் சுயம் அல்லது தன்னிலை என்பவற்றுக்கும் இடமிருந்தது. இந்தக்காட்சிகளெல்லாம் இன்றைக்கும் இருப்பதுபோலத் தோன்றினாலும், வேகமாக மறைந்துகொண்டிருக்கின்றன. இன்றைக்கு காட்சியின் கண்ணாடிப் பிரதிபலிப்பு என்பதை பிரதிபலிப்புத்தன்மையில்லாத மின் திரை பதிலீடுசெய்துகொண்டிருக்கிறது. ”காட்சியும் கண்ணாடியும் நகர்ந்து திரைக்கும் வலைப்பின்னல்களுக்கும் இடம்கொடுத்துவிட்டன,” எங்கும் இயல்பாக வியாபித்திருக்கும் மின்திரை-க்கு முன் யதார்த்தம் ஒரு சுட்டுப்பொருளேயில்லை, அதாவது யதார்த்தம் உருவகமாக, ஒரு காட்சிப்பிம்பமாகக்கூட இனிமேல் இல்லை; பிம்ப உருவகத்துக்கும் யதார்த்தத்துக்குமான இடைவெளியை அழித்துவிட்ட மின்திரையுலகில் நிகழ்த்தப்படுகிறது நம் வாழ்க்கை என்றும் போத்ரியார் குறிப்பிடுகிறார். இது எப்படி நடக்கிறதென்று கட்டுரையின் போக்கில் பார்ப்போம்.

காணல்போலும் வாழ்தல்

இணையம் தூரத்தை அழிப்பதுபோலத்தான் தெரிகிறது. அவரவர்களின் நேரத்தில் சான் பிரான்சிஸ்கோவிலும் திருத்துறைப்பூண்டியிலும் இருந்தபடி உலகின் பல இடங்களில் இருப்பவர்களோடு, இருப்பவைகளோடு இருபத்திநான்குமணி நேரமும் உடனடித்தொடர்பில் பேச்சாகவும் எழுத்தாகவும் பிம்பமாகவும் இருக்கமுடிகிறது. இடங்களின் மத்தியிலான தொலைவு என்பது அழிந்தேபோய்விட்டதுபோல. ஆனால், நேரச்செலவெடுக்காமல் பௌதீக ரீதியான பெருந்தொலைவுகளை இப்படி “உடனடி” என்கிற உள்வெடிப்பின் (implosion) மூலம் குலைத்துவிடுகிற மீ-யதார்த்தப் பரப்பின் மெய்நிகருலகம் (virtual world), தொலைவு என்பதை வேறுவகையில் உருவாக்குகிறது; முன்னெப்போதுமில்லாத வகையில், கடக்கக்கூடிய ஒன்றாகவும் அதே நேரத்தில் கடக்கவேமுடியாததாகவும் தொலைவு ஒன்றை அது வடிவமைக்கிறது. ஒருதளத்தில் இந்தத் தொலைவு எங்கெங்கிலும் ஊடுருவும் அண்மையையும் இன்னொருதளத்தில் இயலாமையையும் ஒருங்கே முன்வைக்கிறது. பௌதீக உலகின் யதார்த்த தூரங்களை தொலைத்துவிட்டாலும், மின்திரையை உடலால் கடந்துசெல்லவே முடியாது. ”மின்திரை மெய்நிகருலகம், ஆகவே இணைக்க-கடக்கமுடியாத ஒன்று” என்று இந்த நிலையை விவரிக்கிறார் போத்ரியார்.

திருவனந்தபுரத்தில் மூன்றுவருடங்களுக்கு முன்பாக வெப்காம் முன்னே நிகழ்த்தப்பட்ட தற்கொலை நினைவிருக்கலாம். டில்லியிலிருக்கும் தன் பெண்நண்பியோடு சாட்-டில் பேசிக்கொண்டிருக்கும்போதே, கணினியின் கேமராவை அறையின் கூரையை நோக்கிப் “பார்க்கும்படி” அமைத்துவிட்டு மின்விசிறியில் தூக்குமாட்டிக்கொண்டார். ஒரு இளைஞர். பிம்பமாக ”கடைசிவரையில்” தொடர்புறுத்தலில் இருக்கமுடிந்திருக்கிறது. ”கடைசிவரையில்” என்று சொல்வது தவறு; “கடைசி”க்கு மேலும், இறப்புக்குப்பிறகும் இளைஞரின் கணினி தொடர்புறுத்தலிலேயே பிணைந்திருக்கிறது. இறப்பையும் தாண்டி தொடர்புறுத்தலின் மின் திரையில் ததும்பிவழிகிற அவரது பிம்பத்தின் பிரசன்னம், இருப்பு; எதிர்முனையில், இளைஞரின் பிம்ப இருப்பை அப்படியே மறைவில்லாமல் ஊடுகாண்நிலையாக பெற்றபடியிருக்கும், ஆனால் போராடமுடியாத, செயல்படமுடியாத பெண்நண்பியின் உடல்.

மின்திரையில் முன்னால் இயலாமையோடிருக்கும் உடல் இன்றைய இணையத் தொழில்நுட்பத்தால் அந்நியப்படுத்தப்பட்ட உடல் என்று முடிவுகொள்வதுதான் எத்தனை எளிது? ஆனால் போத்ரியார் இந்நிலை அந்நியமாதல் அல்ல, பொழுதும் தொடர்புறுத்தலின் பரவசத்தில் இருக்கும் நிலை என்று அடையாளம் காண்கிறார். பொருட்களின் காட்சி வியாபித்திருந்த நுகர்வோர் சமுதாயம் என்பதில் இருந்த அந்நியமாதல் இன்று இல்லை; இன்றைக்கிருப்பது தொடர்புறுத்தலின் பெருக்கம் என்கிறார். நேரத்திலும் வெளியிலும் அந்தரங்கம்-பொது என்கிற வேறுபாட்டைக் களைந்துவிட்ட, ரகசியத்தின் வசீகரத்தைக் குலைத்துவிட்ட தொடர்புறுத்தலின் பரவசத்தை போத்ரியார் ”ஆபாசம்” என்றே தொடர்ந்து குறிப்பிடுகிறார். உடலால் மீறமுடியாத மின்திரை, ஆனாலும் இடையறாது மெய்நிகர் பரப்பில் உந்துதல்களோடும் உணர்வெழுச்சிகளோடும் மனிதர்களால் அலைய முடிகிறது, “தன்னைச் சுற்றுக்குவிட முடிகிறது” என்கிறபோது இப்படிச் சுற்றுக்குவிடப்படுவது என்ன என்கிற கேள்வி எழுகிறது. உடலைப் புறக்கணித்துவிட்ட, விலக்கிவிட்ட சுயம்தான் இப்படி பரவித் திரிகிறது என்று நாம் பதில் அளிக்கலாம். ஆனால் இப்படிச் சொல்லும்போது சுத்த சுயம்புவான மனித சுயம், இறையாண்மையோடு செயல்படும் சுயம் என்று ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டிவரும். ஆனால் இப்படி சாரமான, ”தன்” செயல்பாடுகளுக்கு முந்தைய சுயம் என்ற ஒன்றைக்கொள்வதில் அர்த்தம் இருக்கிறதா என்று கேட்கும்வகையில் அமைந்திருக்கிற மெய்நிகருலகம் சார்ந்த சில நிகழ்வுகளைப் பார்ப்போம்.


(தொடரும்)

தொடர்புடடைய முந்தைய பதிவு:

இணையச்சுழலில் சுய(மற்ற) அடையாளங்கள் (பகுதி 1)

No comments: