Saturday, July 12, 2008

இன்பம்: ஓரம் போ திரைப்படம் அல்லது பிரியாணியா, குஸ்காவா?

(இது விமரிசனம் அல்ல)

ஓரம் போ என்கிற நகர உதிரிகள் பற்றிய திரைப்படம் எனக்குப் பிடித்ததற்கான ஏழெட்டு காரணங்கள்:

0. நமக்கு இதுவரை தமிழ்த்திரைப்படங்களில் காணக்கிடைத்திருக்கிற பல விஷயங்கள் பகடி செய்யப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, 'போட்டி' என்பதை எடுத்துக்கொள்வோம். ஆட்டோ ஓட்டுகிற கதாநாயகன் சந்துருவுக்கும் அவன் போட்டியாளனுக்கும் நடைபெறுகிற ஆட்டோ 'இரவு ரேஸ்' உறுதிசெய்யப்படுகிற இடம். குத்துவெறி கொலைவெறி பாவனைகளில் முகத்தை வைத்துக்கொள்கிற இருவரிடமும் (படத்தில், படத்தைப்) பார்ப்பவர்கள் வேறெதையோ எதிர்பார்க்க, அவர்களோ பொதுவாக இப்படியான காட்சிகளில் காட்டப்படும் சண்டை உறுமலைப் பகடிசெய்கிற விதத்தில் போட்டிபோட்டுக்கொண்டு இட்லிகளையும் தோசைகளையும் ஆர்டர் செய்துசாப்பிட்டுவிட்டு ரேஸ் செய்யப்புறப்படுவது. இன்னொரு இடத்தில் “அறியாப்பெண்” என்கிற புனைவு பகடிசெய்யப்படுகிறது. "ஒன்றும் தெரியாத சின்னப்பொண்ணு" என்று அப்பாக்காரர் மகளைப்பற்றி தன் மச்சானிடம் பேசிக்கொண்டிருக்கையில், ஆட்டோவில் அந்தப் பொண்ணு தன் காதலனிடம் "நான் சொல்வதை நீ செய்" என்று அவள் விரும்புகிற உடலுறவு மஜாவுக்கு உத்தரவு பிறப்பிக்கிறாள். ("பிரியாணியா, குஸ்காவா?")

1. ஆண் தொடங்குகிற உறவை இன்புற்று வலியத் தொடர்கிற பெண்ணாக கதாநாயகி ராணி. பின்னால் வாழ்க்கை போகிறபோக்கில் திருமணத்தை அவள் கேட்கிறாளே தவிர, இன்பத்துக்கு ஆண் தருகிற விலையாக திருமணத்தை அவள் முன்வைப்பதில்லை. அதேபோல, திருமணத்தை ஆண் மறுக்கிற போது, கோபத்தில் சாபம் கொடுத்தாலும் அவள் தற்கொலையை நோக்கியோ ஏன் அழுதுகொண்டோகூட இருப்பதில்லை. எப்போதும்போல பிரியாணி விற்கிறாள். இன்பம் துய்த்ததற்காக கண்ணீர் வார்க்காத பெண் எத்தனை புதிது நமக்கு.

2. திரைப்பட வளாகத்தில் இடுப்பைத்தொடுகிற ஆணை எத்தி உதைக்கிறாள் ராணி. ஆனால், காதலன் டிக்கெட் வாங்கிக்கொண்டு திரும்பிவந்து "என்ன நடந்தது?" என்று கேட்கும்போது ஒன்றும் இல்லை என்று சொல்கிறாள். தன் பலத்தை அறிந்துகொண்டால் ஆண் பயந்து ஒதுங்கி விடுவான் என்பதை அறிந்து வைத்துக்கொண்டிருக்கிற புத்திசாலிப்பெண். அவனிடம் அவள் "பெண்ணாக" நடப்பது கூட ஒரு பாவனை தான் போல.

3. உடல் கொண்டாடப்படுகிற படத்தில் காதலின் ஞாபகங்களாகவும் பாலுறவுத் தருணங்களே இருக்கின்றன. ஆட்டோ ரேஸ்களில் வென்று கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வரும் சந்துருவை, அவனும் ராணியும் அதே ஆட்டோவில் கொண்ட உறவு ஞாபகபிம்பங்களாக தொடர்ந்து அலைக்கழிக்கிறது, கவனம் சிதறடிக்கப்பட்ட அவனின் ஆட்டோ போலீஸ் வண்டியோடு மோதி விபத்துக்குள்ளாகிறது.

4. படத்தில் கதாநாயகனும் சரி 'வில்லனும்' சரி இருவருமே வெற்றி பெறுகிறார்கள். இதில் முக்கியமான விஷயம், 'வில்லனின்' வெற்றி அவன் ஆளுக்கும் கதாநாயகனுக்கும் நடக்கும் போட்டியில். முதல் முறை ரேஸில் ஜெயிக்கும் கதாநாயகன் அடுத்து நடக்கும் ரேஸில் பங்குபெறுவதில்லை. மூன்றாவதில் தோற்றுவிடுகிறான். பால் விற்றும் தரிசுநிலங்களைத் தோண்டியும் சட்டென்று கோடீஸ்வரராகும் முயற்சி திருவினையாக்கும் கதாநாயகன்கள் நிரம்பிய தமிழ் சினிமாவில் தொடர்ந்து முயற்சியில் தோற்கும் கதாநாயகனை இதில் காண்கிறோம். கடைசியில் அவன் பணக்காரனாவது யதேச்சையால் தானே தவிர உழைப்பால் அல்ல. ("விதி யதேச்சையென்னும் வடிவெடுத்து வரும்" என்று சொன்னது மிலன் குந்தேரா என்று நினைக்கிறேன்.).

5. நல்லவன்/கெட்டவன் வித்தியாசங்களும் குழம்பியபடிதான் இருக்கின்றன படத்தில். சந்துருவும் ராணியும் இன்பம் துய்க்கும்போது இடர் தராதவன் 'வில்லன் - காமெடியன்' சன் ஆப் கன். கதாநாயகியின் மீது கண்வைக்காதவனும் கூட.

6. ரேஸின் வேகத்துக்கு தம்மை, தம் வாழ்க்கையை தந்துவிடுபவர்கள் கதாபாத்திரங்கள். சந்துருவின் தோஸ்து பிகிலிடம் எல்லாவற்றையும் பந்தயத்தில் பறித்துவிட்டு, டிவி (ரோஜா போல ஒரு மெகாசீரியலின் வசனங்கள் பின்னணியில்) பார்த்துக்கொண்டிருக்கும் 'வில்லன்,' மிகவேகமாகச் செல்ல கட்டமைக்கப்பட்ட "சீட்டா" எனப்படும் பிகிலின் ஆட்டோவைப்பார்த்துவிட்டு ("நம்ம ஆத்தா சிலுக்கு ஸ்மித்தா மாதிரியில்ல இருக்கு"), மீண்டும் பந்தயத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கிறான். பிகிலையும் சந்துருவையும் தோற்கடிப்பதைவிட வேகம்செல்லும் ஆட்டோவின் மீதான அவன் காதல் படத்தைப் பின்னர் வழிநடத்துகிறது.
(தொடரும்)

No comments: