Sunday, April 19, 2009

விருந்து: ஆனந்த்-தின் கவிதை

வித்யாசமான கவிதை. நன்றி: சாரு ஆன்லைன்.

இக்கவிதையில் அப்பாக்களும் மனைவிகளும் பிள்ளைகளும் தனித்தனியாகப் பேசிக்கொள்கையில், அலைந்து திரிபவர்களாகவும் பைத்தியக்காரர்களாகவும் சிறைக்காவலர்களாகவும் மற்றவர்கள் இருப்பது நிஜத்திலா, இல்லை பேச்சிலா? இந்த ஊடாட்டத்தில் கவிதை சிறக்கிறது.

சாரு-வுக்கு (மலாவி) ஆனந்த் எழுதியிருக்கிற ஒரு கடிதம் "சப்பாத்துகளும் ஒரு கோப்பை சாராயமும்” வாசித்தேன். கொஞ்சம் எடிட் செய்திருந்தால் நல்ல கதையாக இருந்திருக்கும். காப்காவை நினைவூட்டியது அக்கடிதம்.


விருந்து


இரண்டு அப்பாக்கள்

பேசிக் கொண்டனர்

இரண்டு மனைவிகள்

இரண்டு பிள்ளைகள்

பிசாசுகளாய் அலைந்து திரிந்தனர்


இரண்டு அம்மாக்கள்

பேசிக் கொண்டனர்

இரண்டு கணவர்கள்

இரண்டு பிள்ளைகள்

பைத்தியக்காரர்களாய் நின்றிருந்தனர்


இரண்டு பிள்ளைகள்

பேசிக் கொண்டனர்

இரண்டு அப்பாக்கள்

இரண்டு அம்மாக்கள்

சிறைக் காவலராய் ரோந்து வந்தனர்


பின்

ஒரு அப்பா ஒரு அம்மா ஒரு பிள்ளை

கிளம்பிச் சென்றனர்

ஒரு அப்பா ஒரு அம்மா ஒரு பிள்ளை

உறங்கச் சென்றனர்


நான்கு பிசாசுகள், நான்கு பைத்தியக்காரர்கள்

நான்கு காவலர்கள்

ஒருவருடன் ஒருவர் பேச விருப்பமின்றி

அமர்ந்திருக்கின்றனர்