Monday, June 28, 2010

68வது பிரிவு (மீள்பதிவு)

(குறிப்பு: இக்கவிதையில் வருகிற ஒருவார்த்தை லும்பினி இணையத்தளத்தில் நடைபெறும் பார்ப்பனியம் பற்றிய விவாதத்துக்கு அடித்தளம் இட்டிருக்கிறது. ஆனால், கவிதை வாசிக்கப்பட்டிருக்கிறதா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. கவிதையை அதனால் மீள்பதிவு செய்கிறேன். நான் மிகவும் மதிக்கும் அ.மார்க்ஸ் அவர்களின் கருத்துகளுக்கும் எதிர்வினை செய்ய பிறகு முயற்சிக்கிறேன். நாளை கிளம்பி சென்னை வருகிறேன். பயணத்தின் இருநாட்களில் பின்னூட்டம் (ஏதும் வந்தால்) தாமதித்து வெளியாகும். கவிதையின் அதன் பின்னூட்டங்களோடான முந்தைய சுட்டி: http://innapira.blogspot.com/2010/02/68_20.html நன்றி.)


கந்தசாமிக்கும் லதாவுக்கும் இது
68வது பிரிவு.
முதல் 2 தடவை
இருவரும் தற்கொலைக்கு
முயல நினைத்தார்கள்
தனித்தனியாக;
அடுத்த 8 தடவை
வாழ்த்துகளோடு குட்பை சொல்லிக்கொண்டார்கள்.
1 முறை தன் உள்ளங்கையில்
அவன் பார்க்க பிளேடால் கீறிச்சென்றாள் லதா.
இருவருக்கும் சங்கேதமான
பாடல்காட்சி வந்த டிவியை
குத்தி உடைத்தான் கந்தசாமி 1 முறை.
கண்ணீர் நனைத்த கண்ணாடி
பிரிவின் தடயச் செல்வத்தை
லதா துடைக்கவில்லை 1 தரம்.
முதல்முத்தம் கொடுத்தபோது
அவள் ஈஷிய சட்டையை
எரித்துப்போட்டான் கந்தசாமி 1 தரம்.
4 தடவை லதாவும் 1 தடவை கந்தசாமியும்
தொலையுறவில் கதறியழுது அவரவர் முன்பிருந்த
லேப்டாப்களை நனைத்துக் கெடுத்ததும் உண்டு.
கந்தசாமி அவளைப் பார்க்காமல்
ஈமெயில் மட்டும் போட்டுக்கொண்டிருந்தான்
அது 1/2.
லதா அவனைப் பார்த்தபடியே
அவனைப் பார்க்கவேயில்லை, அது இன்னொரு 1/2.
3 முறை லதா கந்தசாமியையும்
3 முறை கந்தசாமி லதாவையும்
பரஸ்பர அன்பில் சந்தேகித்துப் பிரிந்தார்கள்.
(அவன் கனவில் அனுஷ்கா அரைகுறையாய் வந்ததும்
இவள் தன் கனவில் அதை முழுசாய்க் கண்டதும்
இதில் அடக்கம்)
சந்தேகத்தை மனதில் வைக்காமல்
லதா சொல்லித்தொலைத்ததால்
கந்தசாமிக்கு பிரிய 1 வாய்ப்பு.
அப்படி அவன் பிரிந்ததால்
லதாவுக்கும் சண்டைபோட 1 வாய்ப்பு.
சேர்ந்திருந்தபோதே லதாவோடு
7 தடவை
பிரிந்துதான் இருந்தான் கந்தசாமி.
அவ்வளவு மோசமில்லை லதா.
1 தடவை இன்னொருவன்
தன்னைக்கொஞ்சியதற்காய்
2 முறை தானாகவே பிரிந்து
கந்தசாமியைத் தண்டித்தாள் மாதர் சிரோமணி.
லதா ஒரு கவிதை எழுதியதற்காக
1,
கந்தசாமி அவள் கவிதைகளைப் படிக்காததற்காக
8,
மனதில் பிரிந்திருக்கிறார்கள்.
ஒரேவழியாக அவள் தொல்லை ஒழிய
சாமியிடம் நின்று புலம்பினான் கந்தசாமி 1 நாள்,
அன்றிரவே சாமியாடி
லதா அவனை மீட்டுக்கொண்டாள்.
ஸ்தூலத்திலிருந்து சூட்சுமமாய் உறவு பயணிக்க
யாஹூ கணக்கை (அவளுக்கென தொடங்கியது)
7 முறை கந்தசாமி மூடிப்போட்டான்
போட்டிக்கு லதாவும் 6 முறை லிஸ்டில்
அவனை டெலீட் செய்து முறித்துக்கொண்டாள்.
இன்னும் சில பிரிவுகள்
அவர்களுக்கே நினைவில்லை.
68 பிரிவுக்கு ராசியான இலக்கம்,
நவக்கிரக ராசிக்கல் சோசியர்
சொல் மட்டுமே நினைவில் இருத்தப்
பிரயத்தனப்படுகிறான் கந்தசாமி.
தூதுசெல்ல புழுபூச்சியைக்கூடத்
தேடுவதாக இல்லை லதா.

69, 77, 88
அவர்களுக்காகப்
பொறுமையாகக் காத்திருக்கின்றன.
90-ல்
நிற்கும் மரணம் மட்டும்
வரிசையில்
முந்தத்துடிக்காமல் இருக்கட்டும்.

Saturday, June 26, 2010

இன்னொரு படுக்கை: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (6)

(Another Bed: Charles Bukowski)

இன்னொரு படுக்கை
இன்னொரு பெண்

இன்னும் திரைச்சீலைகள்
இன்னொரு குளியலறை
இன்னொரு சமையலறை

வேறு கண்கள்
வேறு முடி
வேறு
பாதங்கள் மற்றும் கட்டைவிரல்கள்
ஒவ்வொருவரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
நிரந்தரத் தேடல்.

நீ படுக்கையில் இருக்கிறாய்
அவள் வேலைக்குச் செல்ல உடையணிகிறாள்
நீ யோசிக்கிறாய் என்ன ஆயிற்றென்று
கடைசியாகச் சென்றதற்கு, அதற்கு முன்னதற்கு
இதெல்லாமே ரொம்ப வசதிதான்—
இந்தப் புணர்வு
இந்த ஒன்றாகப் படுத்துக்கொள்ளல்
இந்த மென்மையான அன்பு…

அவள் போனபிறகு நீ எழுகிறாய், அவள்
குளியலறையை உபயோகிக்கிறாய்,

இதெல்லாமே ரொம்ப அந்நியோன்னியமாக, அந்நியமாக
திரும்ப படுக்கைக்குச் செல்கிறாய்
இன்னும் ஒருமணி நேரம் தூங்குகிறாய்.

போகும்பொழுது வருத்தத்துடன் போகிறாய்
ஆனாலும் மீண்டும் பார்ப்பாய் அவளை
நடந்தாலும் நடக்காவிட்டாலும்.
கடற்கரைக்கு ஓட்டிச் செல்கிறாய், அமர்ந்திருக்கிறாய்
காருக்குள். கிட்டத்தட்ட நண்பகல் இப்போது.
-இன்னொரு படுக்கை, வேறு காதுகள், வேறு
காதணிகள், வேறு வாய்கள், வேறு செருப்புகள், வேறு
உடைகள்

வண்ணங்கள், கதவுகள், தொலைபேசி எண்கள்

தன்னந்தனியாக இருக்க வலு உனக்கு இருந்தது ஒரு காலத்தில்.
அறுபதை நெருங்கிக்கொண்டிருக்கும் ஆண் என்பதால்
இன்னும் அறிவோடு இருக்கவேண்டும் நீ.

காரைத் துவக்குகிறாய், மாற்றுகிறாய்,
யோசித்தபடி, சென்றவுடன் ஜீனி-க்கு தொலைபேச வேண்டும்.
அவளை வெள்ளிக்கிழமையிலிருந்து பார்க்கவில்லை.


(மொழிபெயர்த்துச் செய்தவரின் குறிப்பு: இக்கவிதையில் ஆண் பெண்ணாக, பெண் ஆணாக இருந்தால் எப்படியிருக்கும்? அல்லது எல்லாமே ஆணாக அல்லது பெண்ணாக இருந்தால்.....? இருந்தாலும், “வேறு வேறுகள்” தருகிற அலுப்பு என்பதை எப்பாலினரும் எப்பாலிடத்தும் ஏதோவொரு நேரத்தில் உணரக்கூடிய யதார்த்தம் காரணமாக, இக்கவிதையைத் தேர்ந்தெடுத்தேன்)

Friday, June 25, 2010

ஹரியின் வாசிப்பும் என் கடிதமும்

ஹரி ”பெருந்தேவி: விடுதலையை மீண்டும் ஒருமுறை அனுபவித்தல்” என்கிற கட்டுரையின் சுட்டியை
http://langscape.wordpress.com/2010/06/23/on-perundavi-lgbtq/
உறுமீன் என்கிற என் கவிதையின் பின்னூட்டத்தில் கொடுத்திருக்கிறார். அதை இங்கே பகிர்கிறேன்.

அன்புள்ள ஹரி,

தகவல்கள் முதலில். “இக்கடல் இச்சுவை” (காலச்சுவடு) என் கவிதைத்தொகுப்புதான். 1999-2006 இடையே எழுதிய கவிதைகளின் தொகுப்பு அது. என் முதல் தொகுப்பு தீயுறைத்தூக்கம் 1998 விருட்சம்-சஹானா வெளியீடாக வந்தது. ஆனால், பலருக்குத் தெரியாது. இரண்டுக்கும் விமரிசனம் இதுவரை இல்லை. ”பெண்ணியக் கவிதைவெளியென அறியப்படும் ஒரு அரூபப் பரப்புக்கும், எனது அறிதலுக்கும் அப்பால்பட்டு பெருந்தேவி எழுதிக்கொண்டிருந்திருக்கிறார்” என்று எழுதியிருக்கிறீர்கள். சரிதான், இது எனக்கு மட்டுமல்ல, சென்ற மாதம் இலக்கியச்சூழலில் அக்கறை கொண்ட ஒரு நண்பர் ”ரிஷி கவிதை எழுதுவார் என்று எனக்கு இப்போதுதான் தெரியும்” என்று என்னிடம் சொன்னார். இத்தனைக்கும் ரிஷி 1980-களின் இறுதிகளிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறார். இவ்வாறு கூறியவரின் அறிதலில் நான் குறைகூற விரும்பவில்லை. பெண் எழுத்தாளர்களை விடுங்கள், பொதுவாகவே தமிழ் இலக்கியச்சூழலிலேயே எழுத்துமட்டுமே செய்துகொண்டிருப்பவர்கள் அறியப்படுவது அபூர்வம்தான். இலக்கியம் செய்பவர்கள்கூட தடாலடி செய்கிறபோதுதான் அவர்களின் பிரதிகள் கவனிக்கப்படுகின்றன என்பது கொடுமையான உண்மை. அல்லது, ”பெயர்களை” முன்னெடுத்துச்செல்ல சகோதர வலைப்பின்னல்களோ குழுமங்களோ இருக்கவேண்டும், இல்லாவிட்டால் அறியப்படுவது கடினம்தான். சரி, புகழுடம்பு :-)) பெற்று உய்ய வேண்டிய விதி நமக்கில்லை என்று எழுதும் கடமையை மட்டும் செய்யலாம். ஆனால், "புகழ்" மட்டுமே இந்த ஆட்டத்தில் இல்லை, எழுத்து வாசிப்புக் கவனமே பெறாத போது, விளைவாக, வாசிப்பவர்களோடு உரையாடல் இல்லாது போகும் நிலைமை ஏற்படுகிறபோது எழுத உற்சாகம் குறைகிறது என்பதே ஆற்றாமை. இரு வருடங்களாக இணையத்தில் நான் எழுத ஆரம்பித்தபிறகுதான் இத்தகைய உரையாடல்கள் கொஞ்சமாவது எனக்கு வாய்த்திருக்கின்றன.

ஜூடித் பட்லரை நீங்கள் வாசித்திருப்பது குறித்து மகிழ்ச்சி. ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலையில் ஒரு வருடத்தில் அவர் வகுப்பை நான் தவறவிட்டேன். அவரது ”பாலினச் சிக்கல்” என் வாழ்க்கையை, பார்வையை மாற்றியமைத்த நூல். அவர் புத்தகங்களே எனக்குப் பெண்ணியப்பன்மைகளையும் பெண்ணியக் கோட்பாட்டுச்சிக்கல்களையும் புரியவைத்தன. பால் அடையாளங்களை சமயோசித உபாயங்களாக மட்டுமாக அன்றி, சொல்லாடல்களில் அவற்றைச் சாராம்சப்படுத்தி உயர்த்தும்போது, அத்தகைய சாரம்சப்படுத்தல் இட்டுச்செல்லக்கூடிய பாசிஸத்தை பற்றி எச்சரித்தவை அவை. இதையொட்டியே நான்கு வருடங்கள் முன்பு காலச்சுவடில் பெண்ணெழுத்து குறித்த ஒரு சின்னக்கட்டுரையும் எழுதினேன்.

இந்தப்பின்னணி இருக்கட்டும், என்னை வாசிப்பவர் பட்லரின் சிந்தனை ஒளிச்சரடை ஒரு கண்ணியில் ஒரு இணைப்பில் என் பிரதியில் காணுகிறபோது, பட்லரின் நூல்களிலிருந்து எனக்குக்கிடைத்த மகிழ்வுணர்வு இன்னும் துலக்கம் பெறுகிறது. ஹரி, இதற்காக உங்களுக்கு நன்றி.

“உறுமீன்” பற்றிய உங்கள் வாசிப்பு பிரதியின் சாத்தியப்பாடுகளை ’இன்னும்’ என நினைவூட்டும் ஒரு செய்கை.

ஆத்மாநாம்-பெருந்தேவி கவிதையின் தொனியை இழுத்து வேறொரு இடையீட்டுப்பிரதியாகச் சமைத்திருக்கிறீர்கள். நீங்கள் அனுமதித்தால் என் பதிவில் அதை மீள்பதிவிட விருப்பம்.

அன்புடன்
பெருந்தேவி

Saturday, June 19, 2010

வேற்றவர்கள்: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (5)

நீங்கள் இதை நம்பாமலிருக்கலாம்
ஆனால் வெகுசொற்பத்
துன்ப உராய்வோடு
வாழ்க்கையைக் கடப்பவர்களும் இருக்கிறார்கள்.
அவர்கள் நன்றாக உடையுடுத்துவார்கள்
நன்கு தூங்குவார்கள்
அவர்கள் குடும்ப வாழ்க்கை குறித்து
அவர்களுக்கு நிம்மதியிருக்கும்.
தொந்தரவுற மாட்டார்கள்
மிகநன்றாக உணர்வார்கள் அவ்வப்போது.
அவர்கள் இறக்கும்போதும்
அது எளிய சாவாக இருக்கும், பொதுவாக அது நேரும்
தூக்கத்தில்.

நீங்கள் நம்பாமலிருக்கலாம்
இதை
ஆனால் இப்படியான மனிதர்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால்
அவர்களில் நான் ஒருவனில்லை.
ஆ! இல்லை, நான் அவர்களில் ஒருவனில்லை,
அவர்களில் ஒருவனாக
இருக்கமுடிவதற்கு
அருகில்கூட நானில்லை.
ஆனால் அவர்கள்
அங்கே இருக்கிறார்கள்.

நானும் இங்கே.


(விசனம் தூண்டிய கவிதை இது: பெருந்தேவி)

Friday, June 18, 2010

ஆமாமாம்: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (4)

காதலைக் கடவுள் உருவாக்கியபோது
அவர் உதவவில்லை நிறையபேருக்கு
நாயைக் கடவுள் உருவாக்கியபோது
அவர் உதவவில்லை நாய்களுக்கு
செடிகளைக் கடவுள் உருவாக்கியபோது அது சராசரியே
வெறுப்பைக் கடவுள் உருவாக்கியபோது
நமக்குக் கிடைத்தது ஒரு நிரந்தர பலன்
என்னைக் கடவுள் உருவாக்கியபோது என்னை அவர் உருவாக்கினார்
குரங்கைக் கடவுள் உருவாக்கியபோது அவர் தூக்கத்திலிருந்தார்
ஒட்டகச்சிவிங்கியை அவர் உருவாக்கியபோது அவர் குடித்திருந்தார்
போதைமருந்துகளை அவர் உருவாக்கியபோது அவர் உச்சத்திலிருந்தார்
தற்கொலையை அவர் உருவாக்கியபோது அவர் நீச்சத்திலிருந்தார்

படுக்கையில் படுத்தபடி உன்னை அவர் உருவாக்கியபோது
அவர் செய்துகொண்டிருந்தது அவருக்குத் தெரிந்தது
அவர் குடித்திருந்தார் அவர் உச்சத்திலிருந்தார்
மேலும் மலைகளையும் கடலையும் நெருப்பையும் அதேநேரத்தில் உருவாக்கினார்

சிலதவறுகளை அவர் செய்தார்
ஆனால் படுக்கையில் படுத்தபடி உன்னை அவர் உருவாக்கியபோது
அவரின் ஆசிர்வதிக்கப்பட்டப் பிரபஞ்சத்தின் மேலெல்லாம்
அவருக்கு வந்துவிட்டது.

Wednesday, June 16, 2010

கூட்டத்தின் மேதை: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (3)

ஒரு சராசரி மனிதப்பிறவியிடம் இருக்கும்
இரண்டகமும் வெறுப்பும் வன்முறையும் அபத்தமும்
எந்தவொரு நாளும் எந்த ராணுவத்துக்கும்
வழங்கப் போதுமானது


கொலைசெய்வதில் சிறந்தவர்கள் அதற்கெதிராக உபதேசிப்பவர்களே
வெறுப்பதில் சிறந்தவர்கள் அன்பை உபதேசிப்பவர்களே
போரில் சிறந்தவர்கள் கடைசியாக சமாதானத்தை உபதேசிப்பவர்களே
கடவுளை உபதேசிப்பவர்களுக்கே கடவுள் தேவைப்படுகிறார்
சமாதானத்தை உபதேசிப்பவர்களிடம் சமாதானம் இல்லை
சமாதானத்தை உபதேசிப்பவர்களிடம் அன்பு இல்லை


எச்சரிக்கையாக இரு உபதேசிகளிடம்
எச்சரிக்கையாக இரு அறிந்தவர்களிடம்
எச்சரிக்கையாக இரு எப்போதும் புத்தகம் படிப்பவர்களிடம்
எச்சரிக்கையாக இரு வறுமையை வெறுப்பவர்களிடம் வறுமைக்காகப் பெருமைப்படுபவர்களிடமும்
எச்சரிக்கையாக இரு உடனே புகழ்பவர்களிடம் ஏனெனில்
அவர்கள் பதிலுக்குப் புகழ்வதை எதிர்பார்ப்பார்கள்
எச்சரிக்கையாக இரு உடனே தணிக்கை செய்பவர்களிடம் ஏனெனில்
அவர்கள் தமக்குத் தெரியாததிடம் அஞ்சுபவர்கள்
எச்சரிக்கையாக இரு தொடர்ந்து கூட்டத்தைத் தேடுபவர்களிடம் ஏனெனில்
அவர்கள் ஒன்றுமேயில்லை தனியாக
எச்சரிக்கையாக இரு சராசரி ஆணிடம் சராசரி பெண்ணிடம்
எச்சரிக்கையாக இரு அவர்கள் அன்பில் ஏனெனில்
சராசரி சராசரியைத் தேடுவதே அவர்கள் அன்பு


ஆனால் அவர்களின் வெறுப்பில் மேதைமை இருக்கிறது
அவர்களின் வெறுப்பில் இருக்கும் மேதைமை
உன்னைக் கொல்லவும் போதுமானது
தனிமையை விரும்பமாட்டாதவர்களாக
தனிமையைப் புரிந்துகொள்ளவும் மாட்டாதவர்களாக
அவர்களிடமிருந்து வேறுபட்ட எதையும்
அழிக்க அவர்கள் முயல்வார்கள்
கலையை உருவாக்க முடியாதவர்களாதலால்
கலையைப் புரிந்துகொள்ள மாட்டார்கள் அவர்கள்
படைப்பாளிகளாகத் தங்கள் தோல்வியை
உலகத்தின் தோல்வியாகமட்டுமே பார்ப்பார்கள் அவர்கள்
முழுதாக நேசிக்க முடியாதவர்களாதலால்
உன் நேசத்தைக் குறைபட்டதாக நம்புவார்கள் அவர்கள்
மேலும் அப்போது அவர்கள் உன்னை வெறுப்பார்கள்
மேலும் அவர்களின் வெறுப்பு நேர்த்தியாக இருக்கும்

ஒரு மின்னும் வைரத்தைப்போல
ஒரு கத்தியைப்போல
ஒரு மலையைப்போல
ஒரு புலியைப்போல
விடமருந்தைப்போல

அவர்களின் ஆக அருமையான கலை.



(குறிப்பு: மொழிபெயர்த்து செய்யப்படும் கவிதைகளின் முதல்பிரதிகளே இவை, இன்னும் செம்மைசெய்ய வேண்டியிருக்கிறது)

Sunday, June 13, 2010

உன் இதயத்தை என்னோடு சுமந்து செல்கிறேன்: E.E. Cummings (9)

உன் இதயத்தை என்னோடு சுமந்து செல்கிறேன் (என் இதயத்தில்
அதைச் சுமந்து செல்கிறேன்) அது இல்லாமல் நானில்லை எப்போதும்
(எங்கே நான் சென்றாலும் நீயும் செல்கிறாய், என் அன்பே; எது
என்னால்மட்டும் செய்யப்படுகிறதோ அது உன் செயலே என் கண்ணே)
நான் அஞ்சுவதில்லை
விதிக்கு (ஏனெனில், நீ என் விதி, என் கற்கண்டே) வேண்டாமெனக்கு
எவ்வுலகமும் (ஏனெனில் அழகே நீயே என் உலகம், என் உண்மை)
ஒரு நிலவு எதையெல்லாம் எப்போதும் குறித்திருக்கிறதோ அது நீயே
ஒரு கதிர் எதையெல்லாம் எப்போதும் பாடுமோ அதுவும் நீயே

ஒருவருமறியாத ஆழ்ரகசியம் இங்குதான்
(வேரின் வேரும் இங்குதான், மொட்டின் மொட்டும்
ஆன்மா நம்பமுடிவதையும் மனம் மறைக்க முடிவதையும் தாண்டி வளரும்
வாழ்வென்று அழைக்கப்படும் மரத்துடைய வானின் வானும்)
இவ்வதிசயமே நட்சத்திரங்களைப் பிரித்துவைத்திருப்பதும்

உன் இதயத்தை நான் சுமந்துசெல்கிறேன் (என் இதயத்தில் அதைச் சுமந்து செல்கிறேன்)

Friday, June 11, 2010

2 சின்ன யார்கள்: E.E. Cummings (8)

2 சின்ன யார்கள்
(அவனும் அவளும்)
பிரமாதமான இந்த
மரத்தின் அடியில்.

சிரிக்கிறார்கள் நின்று
(எங்கே எப்போ தென்ற
ராச்சியங்களுக்கு அப்பால்)
இப்பொழுது இங்கு

(வளர்ந்துவிட்ட—நான் மற்றும் நீ—
நிறைந்த தெரிந்த
உலகங்களிலிருந்து தள்ளி)
யாரும் யாரும்

(2 சின்ன இருக்கிறேன்கள்
அவற்றின் மேலே
கனவுகளின் நம்பமுடியா
இத்தழல் இருக்க)


(குறிப்பு: கடைசிப்பத்தியில் 2 little ams என்கிற தொடரை இருக்கிறேன்கள் என்று மொழிபெயர்த்திருக்கிறேன், —கிறேன்கள் என்று போடலாமோ என்ற யோசனையோடு….)

Thursday, June 10, 2010

கற்பனை செய்வேன் வாழ்வை நான்: E.E. Cummings (7)

சாதலுக்குத் தகுதி யில்லாததென வாழ்வைக்

கற்பனை செய்வேன் நான்,

ரோஜாக்கள் அவற்றின் அழகுகள்

வீணெனப் புகார்செய்தால்(செய்யும்போது).


ஆனால் மனிதகுலம் ஒவ்வொரு களையையும்

ஒரு ரோஜாவென்று தன்னைத்தானே நயப்பிக்கும்போது

ரோஜாக்கள் புன்னகைக்கமட்டுமே செய்யும்

(நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்)

இவை தவறாயின் எதிர்ப்பதென் வேலை (2)

கவிஞர் லீனா மணிமேகலைக்கு,

முதலில் உங்கள் பதிவில் http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/2010/06/blog-post.html என்னைத் திட்டி என் வலைப்பூவுக்கு பப்ளிசிட்டி கொடுத்ததற்கு நன்றி. எனக்கும் உங்களோடு உரையாட விருப்பமில்லைதான், இருந்தாலும் நீங்கள் என்மேல் பல புகார்கள் வைத்திருப்பதால், இதை எழுதுகிறேன்.

உங்கள் கவிதைகளை முன்னிட்டு உங்களைப்பற்றி வந்த தனிப்பட்ட தாக்குதல்கள் (வினவுத்தளத்தில் வந்தவை உட்பட) மோசமான முன்னுதாரணங்கள் என்றுதான் நினைக்கிறேன். நானும் ஜமாலனும் உங்கள் கவிதைகளைப்பற்றி எழுதிய கட்டுரையில் இதைக்குறிப்பிட்டிருக்கிறோம். எங்களை விமரிசித்த வினவின் பின்னூட்டத்தையும் தொடர்புடைய பதிவில் நீங்கள் காணலாம். http://innapira.blogspot.com/2010/04/x.html
இனி உங்கள் மற்ற புகார்களுக்கான என் பதில்கள்:

//நர்சிம் வக்கிரம் என்பதை ஒரு கேடு கெட்ட வக்கிர கும்பலின் இணையதளத்தில் சென்று தான் நீங்கள் பதிவு செய்ய வேண்டுமா? இதில் உங்களுக்குத் தொடர் வண்டி போல பெண்ணியம், பின்நவீனத்துவம், உடலரசியல், கோட்பாடெல்லாம் பேசும் "என்னருமை" தோழர் ஜமாலன் வேறு. அவர் "யாரெ"ன்றே எனக்கு குழப்பம் வந்துவிட்டது.//

நர்சிம்மின் பிரச்சினையின் முதல் கட்டுரையில் அவர் பற்றி வினவு வைத்த விமரிசனம் சரியென்று எனக்குத்தோன்றியது. உடனே பின்னூட்டமும் இட்டேன். (ஜமாலனுடைய பின்னூட்டத்துக்குப் பிறகுதான் என் பின்னூட்டம் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது :-). நீங்கள் ஜமாலனை என் தொடர்வண்டி என்று சொன்னதற்கு அவர் வருத்தப்படுவார், பாவம்.) மேலும், எந்தத்தளத்தில் நான் பின்னூட்டமிட வேண்டும் என்று நீங்கள் எனக்கு அறிவுறுத்த வேண்டிய அவசியமில்லை. உங்கள் கவிதைகளைப் பற்றிய பதிவுகள் போன்ற சிலதில் சில அதீதமான தேவையற்ற சொற்பிரயோகங்களும் பின்னூட்டங்களும் வினவு தளத்தில் இருந்தன. ஆனால் அதற்காக அரசியல் களப்பணியைப் பொறுத்தவரை ம.க.இ.க தோழர்களின் பங்களிப்பையோ கமிட்மெண்ட்டையோ குறைத்து மதிப்பிடமுடியாது என்றே நான் கருதுகிறேன். இன்றைக்கும் ஆப்பரேஷன் க்ரீன்ஹண்ட்டை எதிர்ப்பது, சிதம்பரம் கோயில் நுழைவு உட்பட பலபோராட்டங்களில் அவர்களின் ஈடுபாட்டை, பங்களிப்பை நான் மதிக்கிறேன்.

//அறிவு மரபு பற்றிய உங்கள் பார்ப்பனீய வியாக்கியானங்களையெல்லாம் வேறு யாரிடமாவது வைத்துக் கொள்ளுங்கள். விளைவுகளை மட்டுமே நம்புபவள் நான். பாசாங்குகளிலிருந்து இலக்கியத்தை காப்பாற்றுவது முக்கியம் என்பது என் தீர்மானம்.//

இவை வேறு யாருக்கோ எழுதவேண்டியதை எனக்கு எழுதிவிட்டீர்கள்போல. அறிவு மரபை பற்றி யார் எப்போது எங்கே பார்ப்பனீய வியாக்கியானம் கொடுத்தது என்று நான் அறியேன்.

//பிறப்பால் பார்ப்பனியர் என்றால் நான் எழுதுவது பார்ப்பனியப் பிரதியா என்று நீங்கள் எடுக்கும் பால பாடங்கள் ரொம்ப உளுத்துப் போனவை. கொஞ்சமும் கூச்சம் நாச்சம் இல்லாமல் பார்ப்பனிய குழுவூக்குறிச் சொற்களை இலக்கியப் பிரதிகளில் பயன்படுத்தவும் செய்துவிட்டு, அதற்கு வக்காலத்தும் வாங்கும் உங்கள் சொந்த சாதி அபிமானங்களால், இழக்கப் போவது நீங்கள் தான். வேறு யாருமல்ல.//

பார்ப்பனியம் எது என்பதைப்பற்றி சில கேள்விகள் என் முந்தைய பதிவில் வைத்தேன், என் பதிவை வாசிப்பவர்களுக்காக. இலக்கியப் பிரதிகளில் பார்ப்பனியம் பற்றிய விசாரணைக்கு பதிவை முன்னிட்ட உரையாடல்கள் உதவும் என்பதால். உங்களிடம் பதில் இல்லை என்றால் ”உளுத்துப்போனவை,” ”கூச்சநாச்சமில்லை,” ”சாதி அபிமானம்” என்றெல்லாம் திட்டுவீர்கள்போலும். நல்லது. ”வக்கில்லையா?”, “கூச்சநாச்சமில்லை” என்ற வார்த்தைகளெல்லாம் ஏதோ அரசியல் கூட்டத்தில் நாலாந்தரப் பேச்சை கேட்கிற உணர்வையே தருகிறது. உடனே இப்படி நான் சொல்வது நாகரிகப்பேச்சை ஆதரிக்கும் பார்ப்பனியம் என்று நீங்கள் குரல் கொடுக்கலாம். ஆனால் அப்படிக் குரல் கொடுப்பது, நாகரிகத்தை பார்ப்பனியத்துக்குப் பட்டா போட்டு தந்ததாகிவிடும்.

//வினவு, கீற்று இன்னும் புற்றீசல் போல பதிவுலகில் பொறுக்கித் தின்றுக் கொழுத்துக் கொண்டிருக்கும் வைரஸ்களுக்கான உங்கள் விசுவாசத்திற்கு நீங்கள் விளக்கம் தந்தாக வேண்டும். பெண்கள் விசயத்தில் கொஞ்சம் அப்படி இப்படி, ஆனால் அவர்கள் மற்றவற்றில் நியாயமாகப் புரட்சி செய்துவிடுவார்கள் என்றெல்லாம் நியாயம் பேசினால் நீங்கள் பேசும் அரசியல், கோட்பாடு,நம்பும் எழுத்து எல்லாவற்றையும் கைவிட்டு விடுங்கள்.//

கீற்றில் இதுவரை நான் பின்னூட்டம் இட்டதில்லை. வினவைப் பொறுத்தவரை என் நிலைப்பாட்டை ஏற்கெனவே சொல்லிவிட்டேன். ஒருசில ஆதரிப்புப் பின்னூட்டம் “விசுவாசம்” என்று அறியப்படுமானால், எக்கச்சக்கமாய் இருக்கும் இத்தகைய “விசுவாசிகளால்” புரட்சி சீக்கிரமே சாத்தியப்பட்டுவிடும்.

மேலும், இதை செய்யுங்கள், அதை பண்ணுங்கள் என்கிற உங்கள் அதிகாரத்தொனியை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள்.

//உங்கள் புராதன வார்த்தைகளையெல்லாம் தாண்டி தமிழ் நவீனக் கவிதை வேறு இடத்திற்கு நகர்ந்துவிட்டது.நீங்கள் நலம் பேணும் சொற்களை வரிசைப்படுத்தினால் அதன் நுண்ணரசியல் உங்கள் அடையாள விடுபடலின் உண்மை நிலவரத்தை தோலுரிக்கும்.//

தாராளமாக வரிசைப்படுத்தலாம். நீங்கள் என் கவிதைகளைப் பாராட்டி எஸ். எம். எஸ் கொடுத்தபோது, முகப்புத்தகத்தில் கமெண்ட் போட்டபோது, பிறகு என், ஜமாலன் கட்டுரைக்கான உங்களின் பதிலில், ”பார்ப்பனியச் சொற்களையும்” தாண்டி என் “பெருவாரியான கவிதைகளை” நீங்கள் ”விரும்பி வாசித்ததாக” எழுதியபோது, என் கவிதைகளின் புராதன சொற்களும் நுண்ணரசியலும் உங்களுக்குத் தெரியவில்லைபோலும். நல்லது.

//தலித்திய அரசியல் எழுச்சிக்குப் பின்னால், எழுத வந்த பார்ப்பனரல்லாத பெண்ணெழுத்து மிகப் பெரிய ஒடுக்குமுறைக்கும், அதை மீறிய விவாதத்திற்கும் வழிவகுத்தது. இன்றளவும் அந்த கொந்தளிப்பு நீள்கிறது. தமிழ்க் கலாசார அசைவுகளில் இது மிக முக்கியமான சலனம். இதைப் புனைவு என்று நீங்கள் சொல்வதிலேயே உங்கள் ஆதிக்க கருத்தியல் நிலைப்பாடு வெட்ட வெளிச்சமாகிறது. என்னங்க ஒரு பத்து வருடமிருக்குமா? இதற்கே இப்படி காய்கிறீர்களே? ஆயிரமாயிரம் வருடமாக அறிவு மரபிலிருந்து ஒதுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, தலித் சமூகங்கள் எப்படி காய்ந்திருப்பார்கள்?//

நான் முந்தைய பதிவில் சொல்லியிருப்பது தமிழ் இலக்கியச்சூழலில் உடல்மொழி என்கிற ஒன்று (இது என்ன என்பதைத் தனியே ஆராய வேண்டியிருக்கிறது), கவிதைச்சூழலில் கொண்டிருக்கிற கருத்து மேலாண்மையைப்பற்றி. பார்ப்பனர்கள் மட்டுமல்ல, பார்ப்பனர்கள் அல்லாத பல பெண் கவிஞர்கள் (வெண்ணிலா, இளம்பிறை உட்பட) உடல்மொழி அற்ற பெண்ணியத்தளங்களில் எழுதியிருக்கிறார்கள். ஆனால், தமிழ் இலக்கியச்சூழலில் உடல்மொழி பெறுகின்ற கவனிப்பு, இக்கவிதைகள் பெறுகிறமாதிரி எனக்குத் தெரியவில்லை. கவிஞர் ரிஷி பார்ப்பனப் பெண் கவிஞர்கள் ஒதுக்கப்படுதலைச் சொல்லியிருக்கிறார். அதைவிட, பொதுவாகவே பெண்களின் உடல்மொழி சாராத கவிதைகள் கவனப்படுத்தப்படவில்லை என்று நான் அவதானிக்கிறேன். உடல்மொழிக் கவிதைகளின் வரலாறாக மட்டுமே தமிழ் பெண்ணிய வரலாறு இலக்கியத்தில் எழுதப்படுமானால் அத்தகைய வரலாறு புனைவு என்கிறேன். இதைத்தான் நான் எழுதியிருக்கிறேன். ஆனால் நான் பார்ப்பனர் அல்லாதோரின் எழுத்துக்கு எதிரி என்பதுபோல நீங்கள் பொய் சொல்கிறீர்கள், திரிக்கிறீர்கள்.

சரி, உங்கள் கட்டுரைக்கு வருகிறேன். http://www.lumpini.in/a_punaivu-005.html
மஹாஸ்வேதாதேவியின் திரௌபதி கதையின் வன்புணரப்படுத்தப்பட்ட திரௌபதிபோல பாதிக்கப்பட்டவள் என்பதாக உங்களை உங்கள் கட்டுரையில் முன்நிறுத்திக்கொள்கிறீர்கள் நீங்கள். அப்படி நிறுத்திக்கொள்ளும்போது, எதை நீக்கம் செய்கிறீர்கள் என்று பார்க்கலாம். திரௌபதி (அவளின் மறுபெயர் தோப்தி) ஒரு சந்தால் ”பழங்குடி”ப்பெண், நக்ஸல்பாரி போராட்டத்தில் ஈடுபட்டவள். தலைமை தாங்கியவள், நக்ஸல்களை ஒடுக்கும் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் பிராந்திய ராணுவத்தலைமை, அவளின் அரசியல்செயல்பாட்டுக்கான தண்டனையாகவே அவளைப்பிடித்தபின் ஆட்களைவிட்டு வன்புணரச்செய்கிறது. மகாபாரத, மரபுசார்ந்த திரௌபதியின் வேறொரு நவீனவடிவமாக வருகிறாள் தோப்தி, முக்கியமாக ஐவரை மணந்த திரௌபதிக்கு நேர்மாறாக ஒரே கணவனோடு. கணவனோடு ஒத்த புரட்சிச்சிந்தனை கொண்டவளாக இருக்கிறாள் தோப்தி. ராணுவத்தால் வன்புணர்ந்து நிர்வாணமாக்கப்பட்ட அவள் உடல் பாலியல் விடுதலையைக் கோருவது அல்ல. ஏற்றுக்கொண்ட ஆட்சி-அதிகார மறுப்பு அரசியலுக்காக குரூர வன்புணர்ச்சித் தண்டனையை ஏற்ற உடல் அது, அதுவே தன் குருதிபடிந்த நிர்வாணத்தால் ராணுவத்தலைமையை அச்சுறுத்தவும் செய்கிறது.

பாலியல் விடுதலையைப் பேசும் பெண்ணியத்தை ஒருவர் பேசலாம். அது அவரது தேர்வு. ஆனால் அதே நேரத்தில், அப்படிப்பேசும்போது வேறுபிரதிகளின் படிமங்களை உபயோகிக்கும்போது நேர்மை வேண்டும். மஹாஸ்வேதா தேவியின் இந்தக் குறிப்பிட்ட பிரதியிலிருந்து, தோப்தியின் “பழங்குடி” அடையாளத்தையும் ”போராளி” அடையாளத்தையும் நீக்கிவிட்டு, உங்களை வன்புணரப்பட்ட திரௌபதியின் வடிவமாதிரியாக கட்டுரையில் உங்களைக் காட்டிக்கொள்கிறீர்கள். மஹாஸ்வேதாதேவியின் கதை தமிழ்நாட்டில் யாருக்குத் தெரியும் என்கிற அலட்சியம்தானே.

உரையாடலைச் செய்யும்போது பொய்சொல்லாத நேர்மை மட்டுமல்ல, ஐயன் திருவள்ளுவர் குறிப்பிடும் பயனில சொல்லா பண்பும் வேண்டும்.

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லரகத்து.

இரண்டும் உங்களிடம் இல்லை. இனி உங்கள் பெயரோ, உங்கள் கவிதைகளோ என் எழுத்தில் வராது. நீங்கள் எழுதும் எதையும் நான் வாசிக்கவும் மாட்டேன். வேண்டுமானால் நீங்கள் தனிமொழியாக உங்கள் வசைபாடலைத் தொடரலாம்.

பெருந்தேவி

Tuesday, June 8, 2010

இவை தவறாயின் எதிர்ப்பதென் வேலை (1)

செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. இருந்தாலும் இணையமும் மின்மடல்களும் சிலநேரம் எழுத அழைத்துவிடுகின்றன. லும்பினி இணையதளத்தில் கவிஞர் லீனா மணிமேகலை சமீபத்தில் எழுதிய ”கட்டுரை”-க்கான கவிஞர் ரிஷியின் http://www.lumpini.in/ethiraadal-008.html எதிர்வினையை வாசிக்க நேர்ந்தது. (லீனா மணிமேகலையின் ”கட்டுரை”யில் கவிஞராக என் பெயர் குறிப்பிடப்படாததில் எனக்கு மகிழ்ச்சி, ஆனால் ரிஷி என் பெயரைக் குறிப்பிட்டு அவருக்கு எதிராடல் செய்திருப்பதால், அந்த மகிழ்ச்சியில் மண்விழுந்து இதை எழுதவேண்டியதாகிவிட்டது. அதற்காக ரிஷிக்கு என் அன்பார்ந்த கண்டனமும் நன்றியும் :-)இதை எழுதுகிற நேரத்தில் நண்பர் ராஜன்குறையின் உள்ளுமை-இருப்பு பற்றிய உருப்படியான கட்டுரைக்கு பொறுப்பான பதில் எழுதியிருக்கலாம் என்கிற குற்றவுணர்வோடு தொடர்கிறேன்.

ஒரு எழுத்தாளராக கவிஞராக என் கவிதையை, மொழியை “விளக்குவது” அல்லது நானே அவற்றைப் பேசுவது எனக்குத் துளியும் விருப்பமில்லாத செயல். எழுதத்தொடங்கி இந்தப் பதினாறு, பதினேழு ஆண்டுகளில் இதை நான் செய்வதைத் தவிர்த்தே வந்திருக்கிறேன். பத்திரிகைகளில் நேர்காணல்களைத் தவிர்த்ததற்கும் இது முக்கிய காரணம். “ஈஷிக்கொண்டு” என்கிற என்கிற என் கவிதையின் வார்த்தை இப்போது விவாதச்சுற்றில் வந்துவிட்டதால், சில எண்ணங்களைப் பகிர நினைக்கிறேன். (லதா கந்தசாமியின் சட்டையில் ஈஷியதைப் பார்த்த கவிதைசொல்லி ரகசியம்காக்காமல் கவிதை எழுதியதால் வந்த சிக்கல் இது :-))

முதலில் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். ஒரு பிரதியில் பார்ப்பனியமோ அல்லது சாதியாதிக்கக் கருத்தியலோ செயல்படுமானால் அது கண்டிப்பாக விமரிசிக்கப்பட வேண்டியதே. குறிப்பாக ஏற்றத்தாழ்வுகளின் வழி தொடர்ந்து நிறுவப்படும், இயங்கும் இந்தியச் சமுதாயக்கட்டமைப்பில் இத்தகைய விமரிசனங்களுக்கான தேவையும் இடமும் நிச்சயமுண்டு. அதே நேரத்தில் எது பார்ப்பனியம் என்பதை வரையறுக்க வேண்டியிருக்கிறது, பிறப்பால் பார்ப்பனர்களாக இருப்பவர்கள் எழுதினாலே அந்த எழுத்து பார்ப்பனியப் பிரதியா, அல்லது எழுதப்படும் பிரதி பார்ப்பனியக் கருத்தியலை விதந்தோதினால் அதைப் பார்ப்பனியம் என்று விமரிசிக்க வேண்டுமா என்பது முக்கியம். (ஈஷி என்கிற சொல் வருகிற என் 68-வது பிரிவு என்கிற கவிதையின் சுட்டி இது. http://innapira.blogspot.com/2010/02/68_20.html எந்தப் பார்ப்பன ஆதிக்கக் கருத்தியலையும் இந்தப் பிரதியோ பிரதியில் இச்சொல்லோ நிலைநிறுத்துவதாக எனக்குத் தெரியவில்லை.

இதுவன்றி, பார்ப்பனியப் பிறப்பால் நான் எழுதுவதை ஒருவர் பார்ப்பனியப் பிரதி என்று சொன்னால், எனக்கு பதில்கூற எதுவுமில்லை. பிறப்பின் அடிப்படையில் விடுபடமுடியாத அடையாளச்சிறையின் கதவுகளை நான்தட்டி திறந்துவிடமுடியாது என்று நன்றாகவே அறிவேன் (இந்த வாக்கியத்துக்கான கருத்து உபயம் நண்பர் ராஜன்குறை, நண்பர் நாகார்ஜுனன் பதிவில் ஒரு பின்னூட்டத்தில் அவர் இதைப் பேசியிருப்பதாக நினைவு).

மேலும் பார்ப்பனர்கள் உபயோகிக்கும் சொல்லாக ஒரு சொல் பிரதியில் இருப்பதாலேயே, பார்ப்பனக் கருத்தியல் என்று போகிறபோக்கில் சொல்லிவிடமுடியுமா? ஒரு பிரதியில் பார்ப்பனக் கருத்தியலைத் தலைகீழாக்கும்வகையில்கூட பார்ப்பன அல்லது சம்ஸ்கிருதத் சொல்லாடல்கள் இடம்பெறக்கூடும். என் சில கவிதைகளையே எடுத்துக்காட்டாகப் பார்க்கலாம். என் “சில ஆலோசனைகள்” கவிதை http://innapira.blogspot.com/2008/08/blog-post_08.html உதாரணத்துக்கு. பலஸ்ருதி என்கிற பார்ப்பனிய சுலோக வார்த்தை இடம்பெற்றிருக்கிறது இதில். பொதுவாக, பலஸ்ருதி என்பது இறையை நோக்கிப் பாடப்பெற்ற பாடல்களை, பாசுரங்களைப் பாடுவதால் கிடைக்கும் பலாபலன்களை (குழந்தை பிறக்கும், வேலை கிடைக்கும் என்பது போன்றவை) அட்டவணையிடுவது. பாசுரத்தொகுப்பின் அல்லது பாமாலையின் framing device அல்லது சட்டகக்கருவி இந்தப் பலஸ்ருதி. ஆனால் அதே சட்டகம் என் கவிதையில் ஒரு எள்ளலோடு அதன் மரபார்ந்த நோக்கத்தை அர்த்தத்தைக் கேள்விக்குள்ளாக்கும்வகையில் பயன்படுத்தப்படுகிறது. என்னுடைய ”கேசவா” என்று தலைப்பிடப்பட்ட கவிதையிலும் இதேபோன்ற உள்ளார்ந்த எள்ளல்தொனியை வாசிப்பவர்கள் கண்டுகொள்ளலாம். http://innapira.blogspot.com/2008/07/blog-post_14.html. என்னைப் பொறுத்தவரை, கவிதை என்கிற வடிவத்தின் மொழி ஆதிக்கக்கருத்தியலை அல்லது அதன் மாறுபட்ட வடிவங்களை அரிக்கும் திறன்வாய்ந்த நுண்ணுயிரியாக நோய்க்கூறாக செயல்படுவதையே நான் விரும்புவேனே அன்றி உரத்துப்பேசுவதை அல்ல. என் எழுத்து தேர்ந்தெடுத்திருக்கிற பாணி அது. உரத்த துண்டுப்பிரசுரம் நேரடியான கள அரசியலுக்கு உதவும், ஆனால் கவிதையில் அது சரிவராது என்று நான் நம்புகிறேன். அதேபோல இலக்கியவாதிகள் கவிதை என்கிற பெயரில் துண்டுப்பிரசுரத்தை எழுதுவதாலேயே அரசியல்களப்பணியாளர்களுக்கு ஈடான போராளிகளாக தம்மை முன்நிறுத்திக்கொள்ள முடியாது என்றும் நினைக்கிறேன்.

மூன்றாவதாக, ரிஷி குறிப்பிடும் பிறப்பால் பார்ப்பனர்களாக அமைந்துவிட்டிருக்கிற பெண் எழுத்தாளர்கள்/கவிஞர்களை ஒதுக்குவதுபற்றி: லீனா மணிமேகலைக்கு முன்பே லிஸ்ட் போடும் “விமரிசகர்கள்” என்று அறியப்படுவோரும், “விமரிசகர்கள்” அல்லாத எழுத்தாளர்களும் செய்திருப்பது இது. இந்த அரசியல் புதிதா என்ன? இந்த அரசியலைத் தெரிந்து செய்பவர்களும் இருக்கிறார்கள், பெண்ணியம் பற்றிய வாசிப்போ புரிதலோ இல்லாமல் அடுத்தவர் போடும் லிஸ்ட்டையே பிரதியெடுத்துப் போடுபவர்களும் இருக்கிறார்கள். இது தேர்ந்த வாசகர்களின் ஊரறிந்த ரகசியம்.

ஆனால், பார்ப்பனப்பிறப்பு மட்டுமே இத்தகைய ஒதுக்குதலுக்குக் காரணமா என்பது சந்தேகமே, தமிழ் இலக்கியச்சூழலில் இப்போது ஆதிக்கம் செலுத்தும் குறிப்பிட்ட சிந்தனைப் (?)போக்கும் இதற்குக்காரணம் என்று நினைக்கிறேன். பெண் தன்னிலையைப் பேசும், வெளிக்கொணரும் மொழியில், பெண்ணுடல்/உறுப்புகள் பற்றிப்பேசும் எழுத்து பெண்ணியமொழியின் ஒருவகை மட்டுமே. இவ்வுண்மையை மறுத்து அல்லது மறைத்து பெண்ணுடலை/உறுப்புகளைக் கூற்றுப்படுத்தும் கவிதைகளே பெண்ணியக் கவிதைகள் என்பதாக தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு “கருத்து“ வலிந்து நிறுவப்பட்டிருக்கிறது. இதனால், பெண் எழுத்தாளர்களின் மற்ற செயலூக்கமுள்ள பங்களிப்புகளும் இடையீடுகளும் பரிசோதனை முயற்சிகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. பெண்ணியம்சார் படைப்புகளிலும் பெண்ணுடல் அல்லது உறுப்புகளே அன்றி, பெண் இருப்பின் வேறுபல தளங்களின் பிரச்சனைகளைப் பேசக்கூடிய படைப்புகளோ அல்லது பெண்-ஆண் முரணைக் கேள்விக்குள்ளாக்கும் படைப்புகளோ தமிழ் இலக்கியச்சூழலில் கவனப்படுத்தப்படுவதில்லை. வலிந்து நிறுவப்பட்டிருக்கிற இந்த ஆதிக்கக் கருத்தின் மணல் அக்கருத்துக்கு இயைந்துவராத பெண் எழுத்துகள் தொடர்ந்து ஒதுக்கப்படுகிற அநியாயத்தை குழியிலிட்டு் மூடிவிட்டது.

இல்லாவிட்டால், பெண் தன்னிலையும் பெண்ணியமும் வேறுபல வகைகளில் செயல்படும் கவிதைகளோ, கவிஞர்களோ இங்கே கண்டுகொள்ளப்படாமல் இருப்பது எப்படி? இங்கே பெண்கவிஞர்கள் என்று போடப்போடுகிற லிஸ்ட்டில் குறிப்பிட்ட வகைமாதிரிகளில்—”உடல்மொழி” என்று தமிழ்நாட்டில் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிற வகைமாதிரிகளில்--எழுதும் பெண் கவிஞர்களே பெரும்பாலும் இருக்கிறார்களே, அது எப்படி? தமிழ் எழுத்துச்சூழலில் பெண் எழுத்தின் வரலாறு என்பது எவ்வித கோட்பாட்டு அடிப்படையுமற்றப் புனைவொன்றைத் திரும்பத் திரும்பச் சொல்லி உருவாக்கப்பட்டிருப்பதே. இது கவிஞர் ரிஷியும் அறிந்ததே.

யாருடைய எழுத்தாக இருந்தாலும், சில சொற்களில் அல்லது ஒருசில வாக்கியங்களில் அதைப் புறந்தள்ளுவது விமரிசனமாகாது. சமீபத்தில் இணையத்தில் விவாதத்துக்கு உட்பட்ட லீனா மணிமேகலையின் இரண்டு கவிதைகளைப் பற்றி ஜமாலனும் நானும் எழுதிய கட்டுரையில்கூட விரிவாகவே எங்கள் நிலைப்பாட்டை வைத்தோம். அதற்கு பதிலாக தன் ”ஒட்டுமொத்த படைப்புவெளியை” கணக்கிலெடுத்துக்கொள்ளாததற்காக ஜமாலனையும் என்னையும் குற்றஞ்சாட்டிய அவரோ, தன் கட்டுரையில் ரிஷி, வெண்ணிலா, உமாமகேஸ்வரி, சுகந்தி சுப்ரமணியன், இளம்பிறை போன்ற பல கவிஞர்களின் எழுத்துகளை ஒரே வாக்கியத்தில் புறந்தள்ளியிருக்கிறார். விந்தைதான் இது!







Thursday, June 3, 2010

தீயுறைத்தூக்கம் (2 & 3)

சப்தம்

குளம்புகள் மழலைகளின்

யார் வெகுதூரம் புவிகடக்க

சுற்றமும் உற்றாரும் சாரதிக்க

யாழினித்து மரிக்கும்

தேயும் அடிகளின்

செம்மையுறும்.


வளர்ந்தோம்.



******



நிலாப்பிரகாசம் போலொரு சொல்

ஒளிரு மென் நெஞ்சில்

தூண்டா மணிவிளக்கு

தேடிய தடங்கள் உன்

கரங்கள் மணக்க

சிரிப்பாடும் கள்ள மனமுகம்



பொத்தும் கை நிற்குமோ பௌர்ணமி?

தீயுறைத்தூக்கம் (1)

நிழல்கள் வெட்டுப்பட
பினதொடர்வாரில்லை
யென்றும்
உரையாடிப்போகும் காலடிகள்

முட்டுச்சந்தில்.

Wednesday, June 2, 2010

இருத்தல் நிமித்தம்

--கவிதை நீக்கப்படுகிறது--