Showing posts with label E.E. Cummings. Show all posts
Showing posts with label E.E. Cummings. Show all posts

Friday, June 11, 2010

2 சின்ன யார்கள்: E.E. Cummings (8)

2 சின்ன யார்கள்
(அவனும் அவளும்)
பிரமாதமான இந்த
மரத்தின் அடியில்.

சிரிக்கிறார்கள் நின்று
(எங்கே எப்போ தென்ற
ராச்சியங்களுக்கு அப்பால்)
இப்பொழுது இங்கு

(வளர்ந்துவிட்ட—நான் மற்றும் நீ—
நிறைந்த தெரிந்த
உலகங்களிலிருந்து தள்ளி)
யாரும் யாரும்

(2 சின்ன இருக்கிறேன்கள்
அவற்றின் மேலே
கனவுகளின் நம்பமுடியா
இத்தழல் இருக்க)


(குறிப்பு: கடைசிப்பத்தியில் 2 little ams என்கிற தொடரை இருக்கிறேன்கள் என்று மொழிபெயர்த்திருக்கிறேன், —கிறேன்கள் என்று போடலாமோ என்ற யோசனையோடு….)

Thursday, June 10, 2010

கற்பனை செய்வேன் வாழ்வை நான்: E.E. Cummings (7)

சாதலுக்குத் தகுதி யில்லாததென வாழ்வைக்

கற்பனை செய்வேன் நான்,

ரோஜாக்கள் அவற்றின் அழகுகள்

வீணெனப் புகார்செய்தால்(செய்யும்போது).


ஆனால் மனிதகுலம் ஒவ்வொரு களையையும்

ஒரு ரோஜாவென்று தன்னைத்தானே நயப்பிக்கும்போது

ரோஜாக்கள் புன்னகைக்கமட்டுமே செய்யும்

(நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்)

Friday, September 19, 2008

E.E. Cummings (5) எப்பொதும் அப்படி இல்லாதிருக்கலாம் அது; மேலும் சொல்கிறேன்

எப்பொதும் அப்படி இல்லாதிருக்கலாம் அது; மேலும் சொல்கிறேன்,
உன் உதடுகள், நான் நேசித்திருப்பவை, இன்னொருவருடையதைத்
தொடுமானால், உன் அரும் வலிய விரல்கள் அவர் இதயத்தைப்
பற்றுமானால், நேரத்தில் வெகுதொலைவில் இல்லாத என்னுடையதைப்போலவே;
இன்னொருவரின் முகத்தின்மேல் நான் அறிந்ததுபோல் மௌனத்தில்
இனிய முடியுனது படியுமானால், அல்லது அதேபோல் மேன்மையாய்
சுருளும் வார்த்தைகள், அதீதமாய்ப் பேசிக்கொண்டு
மடக்கப்பட்ட ஆன்மாவின்முன் கையறுநிலையில் நிற்குமானால்;

இப்படி நேரவேண்டுமென்றால், சொல்கிறேன் இப்படி நேரவேண்டுமென்றால்--
என் இதயத்தின் நீ எனக்கொரு சிறுவார்த்தை அனுப்பு,
அவரிடம் நான் சென்று அவர் கரங்களைப் பற்றி
என்னிடமிருந்து எல்லா சந்தோஷத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்ல.
பிறகு என்முகத்தை நான் திருப்பிக்கொள்வேன், தொலைந்த நிலங்களில்
தூரத்தே பறவையொன்று பயங்கரமாய்ப் பாடுவதைக் கேட்பேன்.


(குறிப்பு: கவிதையில் ஆண்பால் படர்க்கைகளை பொதுப்பாலாக மாற்றியிருக்கிறேன்.)

Monday, July 21, 2008

E.E. Cummings (4) மேகியும் மில்லியும் மோலியும் மேயும்

மேகியும் மில்லியும் மோலியும் மேயும்
கடற்கரைக்குச் சென்றார்கள் (ஒருநாள் விளையாட)

தொல்லைகளையே நினைக்க இயலாமல் செய்த
அத்தனை இனிதாகப் பாடும் கிளிஞ்சல் ஒன்றை மேகியும் கண்டாள்

சோம்பலுற்ற ஐந்து விரல்கள் கதிர்களாக இருந்த
வழிதட்டிப் போன நட்சத்திரம் ஒன்றை நட்பாக மில்லியும் கொண்டாள்

குமிழிகளை ஊதியபடி பக்கவாட்டில் விரைந்தோடிவந்த
பயங்கரம் ஒன்றால் மோலியும் துரத்தப்பட்டாள்

வீட்டுக்கு வந்தாள் மேயும்
இந்த உலகத்தைப் போல அத்தனை சிறிதான
தனிமையைப் போல அத்தனை பெரிதான
வழவழத்த உருண்டைக் கல் ஒன்றோடு

ஏனென்றால் எதை நாம் இழந்தாலும் (ஒரு உன்னை அல்லது ஒரு என்னைப்போல)
எப்போதும் நம்மையே நாம் கண்டுபிடிக்கிறோம் கடலில்.

Tuesday, July 15, 2008

E.E. Cummings (3): யாருக்குத் தெரியும், நிலாவோ

வானத்தில் அழகிய மாந்தர் நிரம்பிய
ஆர்வமிக்க தொரு நகரத்திலிருந்து
வெளியேவரும் பலூன்
நிலாவோ,
யாருக்குத் தெரியும்?
(மேலும்
நீயும் நானும் அதில் நுழைந்தால்,
அவர்கள் உன்னையும் என்னையும்
அந்தப் பலூனில் ஏற்றிக்கொண்டால்,
அழகிய மாந்தரோடெல்லாம் நாம்
வீடுகள் சிகரங்கள் மேகங்களுக்கும்
உயரே
ஏன் செல்லமாட்டோம்:
மிதந்தபடி தொலைவில் தொலைவில்
மிதந்தபடி
ஒருவரும் வருகைதந்திராத
ஆர்வமிக்க நகரத்துக்குள்,
எப்போதும்
அங்கே
வசந்தம்) மேலும் அங்கே
ஒவ்வொருவரும் காதலில்,
தாமே பறித்துக்கொள்ளும் பூக்களும்.

(பதிவில் வெளிவரும் கவிதைகளையோ கருத்துகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.)

Tuesday, April 29, 2008

E.E. Cummings in Tamil (poem 1)

உணரட்டுமா என்றான் அவன்


(உணரட்டுமா என்றான் அவன்
எவ்வளவு என்றாள் அவள்
நிறைய என்றான் அவன்)
ஏன் கூடாது என்றாள் அவள்

(வாயேன் என்றான் அவன்
ரொம்ப தூரம் வேண்டாம் என்றாள் அவள்
எது ரொம்ப என்றான் அவன்
நீ இருக்குமிடம் என்றாள் அவள்)

இருக்கட்டுமா என்றான் அவன்
(எப்படி என்றாள் அவள்
இதைப்போலத்தான் என்றான் அவன்
நீ முத்தமிட்டால் என்றாள் அவள்

நகரட்டுமா என்றான் அவன்
இது காதலேதான் என்றாள் அவள்)
நீ விரும்பினால்தான் என்றான் அவன்
(ஆனால் என்னைக் கொல்கிறாய் என்றாள் அவள்

என்றாலும் இது வாழ்க்கை என்றான் அவன்
ஆனாலும் உன் மனைவி என்றாள் அவள்
இப்போதே என்றான் அவன்)
ஒ..ஓ என்றாள் அவள்

(டிப்...டாப்...இது அவன்
நின்றுவிடாதே இது அவள்
இல்லை இது அவன்)
மெதுவாக இது அவள்

(வர...வா? என்றான் அவன்
உம்...ம் என்றாள் அவள்
அருமையடி நீ என்றான் அவன்
என்னுடையவன் நீ என்றாள் அவள்)