Tuesday, July 7, 2009

நிலைக்கண்ணாடி (ஸில்வியா ப்ளாத்)

நான் வெள்ளியும் துல்லியமும். முன்முடிவுகள் எனக்கில்லை.
விழுங்குவேன் உடனே காண்பது எதையும்.
அவ்வப்படியே, அன்பின் பிடித்தமின்மையின் படலமின்றி.
கொடூரசாலி அல்ல நான், வாய்மையோடு மட்டுமே—
ஒரு சிறுதெய்வத்தின் கண், மூலைகள் நான்குடன்.
எதிர்சுவரை தியானிப்பேன் பொழுதுபெரும்பாலும்.
அது இளஞ்சிகப்பாய், புள்ளிகளோடு. நெடுங்காலமாய் பார்த்திருப்பதாலேயே
இதயத்தின் ஒரு பகுதியாய் அதை நினைக்கிறேன். எனினும் படபடக்கிறது.
முகங்களும் இருளும் பிரிக்கின்றன எங்களை மீண்டும் மீண்டும்.
இப்போது நான் ஓர் ஏரி. மங்கையொருத்தி சாய்கிறாள் என்மேலே,
நிஜத்தில் அவள் யாரென என் எட்டுந்தொலைவுகளில் தேடியவண்ணம்.
பின்னர் அந்தப் பொய்யர்களை, மெழுகுவர்த்திகளை, நிலவை நோக்கித் திரும்புகிறாள்.
அவளின் பின்பக்கத்தைக் காண்கிறேன். பிரதிபலிக்கிறேன் விசுவாசத்துடன்.
தன் கண்ணீரை, கரங்களில் ஒரு கலவரத்தை எனக்கு வெகுமானமாக அளிக்கிறாள்.
அவளுக்கு முக்கியம் நான். வருகிறாள், போகிறாள்.
புலரும் ஒவ்வொரு பொழுதிலும் அவள் முகமே இருளுக்குப் பதிலியாகிறது.
என்னில் ஒரு சிறுமியை அவள் மூழ்கடித்தாள், என்னில் முதியவள் ஒருத்தி
அவளை நோக்கி எழும்புகிறாள் நாள் பின் நாளாய், பயங்கர மீன் ஒன்றைப்போல.

Thursday, July 2, 2009

விண்ணப்பம்

--கவிதை நீக்கப்படுகிறது--