Saturday, April 24, 2010

நான் ஆடுகிறேன்

(ஈவ் இன்ஸ்லர்)


ஆடுகிறேன் நான் இங்கே இருப்பதற்காக
ஆடுகிறேன் நான் மறைவதற்காக
ஆடுகிறேன் என்னால் முடியும் என்பதால்
ஆடுவேன் என்பதால்

ஆடுகிறேன் ஜிப்ஸிக்களோடு
சர்ச்சுகளில் இருக்கும் அவர்களோடும்
ஆடுகிறேன் சூனியக்காரிகளோடும் தேவதைகளோடும்
நிலைபுத்தி அற்றவர்களோடும்
ஆடுகிறேன் பூமியின் பச்சைவண்ண அடைவுகளுக்குள்ளே
ஆடுகிறேன் சாலையில் விட்டுச்செல்லப்பட்டவர்களோடே
ஆடுகிறேன் மேசைகள்மேலே
கூரைகள் மேலே
படிக்கட்டுகளிலே
ஆடுகிறேன் நான் அலற விரும்பும்போது
பிறாண்ட கீற குத்த விரும்பும்போது
ஆடுகிறேன் நான் கட்டுக்கடங்காதவரை கிறுக்காகும்வரை
ஆடுகிறேன் நான் தைரியமாகும்வரை முடிக்காதிருக்கும்வரை
ஆடுகிறேன் உன்மத்தத்தை
ஆடுகிறேன் அபாயத்தை
ஆடுகிறேன் சின்னப்பெண்ணை
ஆடுகிறேன் ஏனென்றால் என்னால் நிறுத்தமுடியவில்லை
ஆடுகிறேன் ஏனென்றால் அந்த அளவுக்கு உணருகிறேன்
ஆடுகிறேன் ஏனென்றால் நான் உன்னை நேசிக்கிறேன்
உன்னை நேசிக்கிறேன் உன்னை நேசிக்கிறேன்
சரி கைகளைக் கட்டிக்கொண்டு
சும்மா நிற்காதே அங்கே
என் தோல் ஒரு வரைபடம்
என் தொப்பிளோ நெருப்பில்
என்னோடு வா
என்னோடு ஆடு
உன்னுடையதெல்லாமே
இன்னும் உயரத்தில்
உயரே

(இன்ஸ்லர்-ன் “தனிமொழி” ஒன்றை முந்தைய பதிவில் மொழிபெயர்த்துச் செய்திருந்தேன். இது அவருடைய இன்னொரு கவிதை/மொழி)

Friday, April 23, 2010

மேற்குக்கரையின் சுவர்

ஈவ் இன்ஸ்லர்-ன் “நானொரு உணர்வுபூர்வமான பிறவி” I am an emotional creature (2010) என்கிற புத்தகத்திலிருந்து மொழிபெயர்த்துச் செய்யப்பட்ட ஒரு “தனிமொழி” (monologue) இது. அமெரிக்க பெண்ணிய எழுத்தாளரான அவரது “The Vagina Monologues” என்ற தலைப்பிடப்பட்ட நாடகம் புகழ்பெற்றது. உலகின் பல இடங்களில் அரங்கேற்றப்பட்டதும்கூட.

(சமீபத்தில் வாசித்ததில் என்னை மிகவும் பாதித்த கவிதை/மொழி இது, பகிர்ந்துகொள்வதில் ஆறுதலடைகிறேன்.)



சுவர்

ஜெருசலம், இஸ்ரேல்


என் தோழி அதீனா என்னை மேற்குக்கரைச் (West Bank) சுவரின்

அந்தப்பக்கத்துக்கு அழைத்துச் செல்கிறாள்.

அங்கே அது இருக்கும்விதத்தைப் பார்த்து ஆச்சரியமடைகிறேன்.

உயரமாக இருக்கிறது அது இன்னும்.

தாண்ட உங்களுக்கு ஹெலிகாப்டர் வேண்டும்.

கடினமான சிறுமைகொண்ட சிமெண்ட்டின் பிரிவுச்சக்தி, வீடுகள்,

நிலம், மற்றும் நண்பர்கள்

திரும்பப் போகிறேன்

நிறைய கதைகளைக் கேட்கிறேன்.

இந்தப்பக்கத்தில் தண்ணீர் இல்லை

கிணறுகள் இல்லை

மாதுளையோ அத்தியோ இல்லை

வேலைகள் இல்லை

வெளியேபோக வழியுமில்லை.

வெள்ளிக்கிழமைகளில் பாலஸ்தீனியப் பையன்களோடு

போராட்டம் செய்கிறேன்.

ஒரு இஸ்ரேலியச் சிறுமி இங்கே என்ன செய்கிறாள்

என்பது புரியவில்லை அவர்களுக்கு.




ரகசியமாக அது.

வீட்டில் ஒருவருக்கும் தெரியாது.

மாதங்களாக தொடர்கிறது.



சுவர் என்னை மாற்றுகிறது.

நான் என் கால்களைச் சவரம் செய்வதை நிறுத்துகிறேன்.

மாமிசம் உண்ணுவதை நிறுத்துகிறேன்.

அப்படியே ராணுவத்தில் சேர மறுக்கிறேன்.

என் பாட்டனாரின் வயதேறிய மென்முகத்தில்

அவரது உடைந்த இதயத்தைக் காண்கிறேன்.

திருப்பித்தரவில்லை நீ என்று சொல்லப்படுகிறது என்னிடம்.

உண்மையான இஸ்ரேலியள் இல்லை நீ என்று சொல்லப்படுகிறது என்னிடம்.

முன்பெல்லாம்போல என் தந்தை

என்னைப் பார்ப்பதில்லை.

அண்ணனோ உரத்துப் பேசுகிறான்

என்முகத்துக்கு முன்பாகப் பீற்றுகிறான்

இன்று ஒரு அரேபியனைக் கொன்றதாக.

இப்போதும் முடியாது என்கிறேன்.

எனக்கு உளச்சிக்கல்கள் இருக்கிறது என்று ஒத்துக்கொள்ள மறுக்கிறேன்.

துப்பாக்கிசுட நான் பழகமாட்டேன்.

சிறைக்குப் போகிறேன்.

ராணுவத்தின்/சிறையின் சீருடையை அணிய மறுக்கிறேன்.

தனிச்சிறையில் வைக்கப்படுகிறேன்

அது என்னை எந்த அளவுக்கு பயமுறுத்துகிறது என்பதைச் சொல்லவில்லை.

ஒவ்வொரு இரவும்

என் வயதொத்த ஒரு இளம்பெண், பதினெட்டுபோல வயதிருக்கும்,

என் செல்லில் உலாவுகிறாள்.

அவள்தலை மொட்டையடிக்கப்பட்டிருக்கிறது.

அவள் நிர்வாணமாக இருக்கிறாள். பசியோடு இருக்கிறாள்.

எனக்கு எதையோ தெரியப்படுத்த நினைக்கிறாள்.

அவளுக்குத் தொண்டை அடைக்கிறது.

எலும்பின் அவள் கைகள்

சுவரைப் பிறாண்டுகின்றன.

அவள் ஒரு கனவா, இல்லை ஒரு நினைவா,

சொல்லத் தெரியவில்லை எனக்கு.

என்னை அவள் பீடிக்கிறாள்

அல்லது

விடுவிக்கிறாள்.

Tuesday, April 20, 2010

கவிதையின் ‘நான்’ = கவிஞரின் ‘நான்’: கடிதமும் பதிலும்

எங்களின் “கவிதையின் ‘நான்’ = கவிஞரின் ‘நான்’” பதிவுக்குப் பதிலாக கவிஞர் லீனா மணிமேகலை ஏற்கெனவே ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதை அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் பகுதிகளாக பிரசுரித்து பதில் எழுதினோம். இப்போது அவரிடமிருந்து ஏப்ரல் 17ம் தேதியிட்ட இன்னொரு கடிதம் வந்திருக்கிறது. அதை இப்போது தனியாகவே பிரசுரிக்கிறோம், எங்கள் பதிலையும் எழுதியிருக்கிறோம்.இதற்குமேல் அவரது கவிதைகள் பற்றி எங்களுக்குக் கூற ஒன்றுமில்லை.


லீனா மணிமேகலையிடமிருந்து வந்த கடிதம் இதோ:

ஜமாலன் தோழரின் மெயில் படித்தேன்.

"பின்னாளில் நீரோவாக பிடில் வாசித்தோம் என்று எழுதி இந்த பிரச்சினையை சாம்ராஜ்யம் எரிந்த பிரச்சினையாக ஆக்கி, நம்மை விமர்சித்துவிடக்கூடாது பாருங்கள் அதுவும்தான். இருந்தாலும், “வரலாறு முக்கியம் அமைச்சரே“- என்கிற இம்சை அரசனின் குரல் கேட்கத்தான் செய்கிறது நமது ஆழ்மனதில். என்ன செய்ய?"

உங்கள் கட்டுரையின் இந்த கடைசி பாராவுக்கும் நம் உரையாடலுக்கான உங்கள் விழைவுக்குமான மன அமைப்பில் கடுமையான முரண் இருக்கிறது. அய்யய்யோ, வருங்காலத்தில் நம்மை விமர்சித்துவிடுவார்களே என்றெல்லாமா ஒரு பிரதியை அணுகமுடியும்? அப்புறம் ஒரு பிரதியை ஏன் எதிர்ப்பு வருகிறது என்ற கேள்வியின் வழி அணுகி விமர்சிக்கும் பாணி ஒருபுதுவித துப்பறியும் விமர்சன பாணியா என்ன?

பிரதியை யார் எதிர்த்தார்கள், ம.க.இ.கவும், இந்து மக்கள் கட்சியும்! சமூக ஒழுங்கை கட்டிக்காத்து படைப்பாளிகளை அரசாங்கத்துக்கு காட்டிக் கொடுப்பதில் ஒன்று சேர்ந்திருக்கும் இந்த அடிப்படைவாதிகள் ஏன் இந்தப் பிரதியை எதிர்க்கிறார்கள் என்பதை துப்பறிந்து புரிந்துக் கொள்ளும் மட்டத்திலா ஜமாலனும் பெருந்தேவியும் இருக்கிறீர்கள்.

ஒரு கவிதையை கவிதையே இல்லை என்று விமர்சனம் செய்வது உங்கள் உரிமை.ஆனால் அந்த புள்ளிக்கு நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் வழி என்னை தொந்தரவு செய்கிறது.

எங்கள் ஊரில் ஒரு வழக்கம் உண்டு. எனக்கு திருவில்லிபுத்தூர் அருகில், [ஊரின் பெயரை எடிட் செய்திருக்கிறோம்: ஜமாலன், பெருந்தேவி) என்ற கிராமம் தான் பூர்வீகம். கடுங்கோபம் வந்து எதிராளியை சபிக்கும் உணர்வுநிலைக்கு வரும்போது பெண்கள் தங்கள் பாவாடையைத் தூக்கி காட்டி பழிப்பார்கள். அப்படி ஒரு பழிப்பாகக் கூட இந்த கவிதையை நான் எழுதிப் பார்த்திருக்கலாம். ஒரு ஓலமாக கூட கவிதையை எழுதிப் பார்த்திருக்கலாம். வாசிப்பு ஒழுங்கு, பிரதி ஒழுங்கு, ஆசிரிய ஒழுங்கு, சொல்லுக்கான அமைதி, வடிவ அமைதி என்று கவிதைக்கான ஒழுங்கையெல்லாம் பின் பற்றுவதற்கு பெண்ணுக்கு மொழியா இருக்கிறது? இல்லை வரலாறு இருக்கிறதா? கச்சாவாகவும், துறுத்தலாகவும் மொழியை வைப்பதை அரசியலாகவே வைக்கிறேன். அதிர்ச்சி மதிப்பீடு, ஆபாசம் என்ற வார்த்தைகளெல்லாம் மதவாத வார்த்தைகள். அதை முற்றிலும் நிராகரிக்க விரும்புகிறேன்.

ஞானக்கூத்தன், ஆடுகளை உரித்து சைக்கிளில் இப்படி அப்பட்டமாக எடுத்து செல்ல வேண்டுமா? மறைத்துவைத்து செல்லலாமே? என்று சொன்னாராம். எங்களுக்கு ஆடு ஓடும்போது, அழகு, அடிபட்டால் வருத்தம், கண்ணீர் சிந்தி கட்டுக் கூட போடுவோம். ஆடுக்கு ஆபத்து வராமல் காவலுக்கு மூன்று நாய்களையும் வைப்போம். ஆனால் வெட்டினால் இறைச்சி தான்.
நான் இமோஷனல் இன்டெலிஜன்ஸில் நம்பிக்கை வைத்திருக்குமொரு முட்டாள் கவிஞர் தான். அப்படியிருக்கவே விரும்புகிறேன்.

அப்புறம் கூட்டத்தில், ம.க.இ.க கூலிப்படைத் தாக்குதலெல்லாம் முடித்து வெளியேறியபின், கே.ஏ.ஜி தோழர் ஒரு அருமையான விசயம் சொன்னார்.

"மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ணகத்து திருவாலவாய் அருள்
பெண்ணகத்து எழில் பேயமன் சாக்கியத்
தென்னர்க் கற்பழிக்கத் திருவுளமே"
தேவாரம், மூன்றாம் பதிகம், திருஞானசம்பந்தர், "திருவாலவாய்".
சமணப்பெண்களை பாலியல் வல்லுறவு கொள்ள சிவனின் அருளை வேண்டுகிறார்கள் நம்ம சைவர்கள்.

அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில சலனங்களைச் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.

எனது பன்னிரெண்டு வயதில் சோவியத் யூனியனுக்கு யங் பயணியராக சர்வதேச குழந்தைகள் முகாமிற்கு சென்றபோது சாஷா என்ற குழந்தை கம்யூனிஸ்ட் தோழனோடு நெருக்கமான தோழியானேன். புரட்சி மட்டும் தான் அவனின் கனவு, மூச்சு எல்லாம். அப்புறம் பிரஸ்திரோய்கா வந்தது, கிளாஸ்நாஸ்ட் வந்தது, கோர்பசேவ் கதவுகளை திறந்தார், சோவியத் உடைந்தது, அவனை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. பல வருடங்களுக்குப் பிறகு அவன் அமெரிக்காவில் ஏதோ பார்மேன் வேலையில் இருப்பதாக அறிந்தேன்.தொடர்பு கொண்டேன். புரட்சியைப் பற்றி அவனிடம் கேட்க வில்லை.

பெர்லின் திரைப்பட விழாவுக்கு என் தேவதைகள் ஆவணப்படத்தை திரையிட சென்றபோது ஒரு தோழி கிடைத்தாள்., கிழக்கிலிருந்து மேற்குக்கு சுவர் தாண்டி தன் உறவுகளைப் பார்க்க வருவதற்கு தன் கன்னிமையை ஒரு அதிகாரிக்கு பலியிட்டுவிட்டு வந்த கதையை எனக்கு சொன்ன போது உறைந்துபோனேன்.

என் தோழிகளில், 80 சதவிகிதம் பேர் தன் சொந்த குடும்பத்து ஆண்களின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், எனக்கும் அந்த அனுபவம் உண்டு.

இந்தியாவில் 90 சதவிகிதத்திற்கு மேலான குழந்தைகள் திருமணத்தின் பெயரால் நடக்கும் எஸ்டாபிளிஷ்டு வல்லுறவுகளால் பிறந்தவை தான் என்று புள்ளிவிபரம் சொல்கிறது.

குழந்தை தொழிலாளி ஆவண நாவலின் நாயகி சீனா போராளிக்குழுவின் பெண்கள் பற்றிய என் எல்லா பிம்பத்தையும் உடைத்தவள்.

எவன் எதற்காக வல்லுறவு கொண்டால் தான் என்ன, வல்லுறவுக்குப் பிறகான பெண்ணுடலின் சிதைவு ஒன்றுதானே? ஒன்றை ஓங்கி சொல்லும் விருப்புறுதியில் அதீதத்திற்கு கவிதை இடம்கொடுக்க வில்லையென்றால் கவிதையை கைவிட வேண்டியது தான்.

இதெல்லாமும் உங்கள் மொழியும் நிலமும் நூலைப் படித்த காரணத்தினால் மட்டுமே எழுதுகிறேன். பெருந்தேவியின் கவிதைகளில் வரும் சமஸ்கிருதத்தையும், ஈஷிக்கொண்டு போன்ற பார்ப்பனியத்தை நிலைநிறுத்தும் சொற்களையும் தாண்டி அவரது பெருவாரியான கவிதைகளை நான் விரும்பி வாசித்திருப்பதாலும் கூட இதை நான் எழுதியிருக்கக் கூடும்.

ஜமாலன் தோழருக்கு, ஒரு குறிப்பிட்ட கவிதைகளை எடுத்துக் கொண்டு விமர்சிக்க முயலும்போது, ஒரு படைப்பாளியின் முழு படைப்பு வெளியையும் கணக்கிலெடுத்துக் கொண்டு தான் சொல்லாடலை முன் வைக்க வேண்டும் என்பதை நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா என்ன?

*******

எங்கள் பதில்:

அன்புள்ள லீனா மணிமேகலை,

நீரோ மற்றும் புலிகேசி பாணி இறுதி வரிகள் ஒரு நெகிழ்வான எழுத்துமுறையாக இந்த விமர்சனத்தை மாற்றும் நோக்கில் எழுதப்பட்டதே. அல்லது, வரலாறு என்கிற ரயிலை தவறவிடாமல் தொற்றிக் கொள்ளலாம் என்கிற ஆதங்கம் என்றும் நீங்கள் வைத்துக்கொள்ளலாம். என்ன கடைசிப்பெட்டியில் ஏறிக் கொள்ளும்படி ஆகிவிட்டது. :-) எங்களை யாரும் விமர்சித்து விடுவார்கள் என்பதற்காக பிரதியை அணுகவில்லை. பிரதியை யாரும் விமர்சிக்கவில்லையே என்பதால்தான் பதிவை எழுதினோம்.

//எங்கள் ஊரில் ஒரு வழக்கம் உண்டு. எனக்கு திருவில்லிபுத்தூர் அருகில், [ஊரின் பெயரை எடிட் செய்திருக்கிறோம்: ஜமாலன், பெருந்தேவி) என்ற கிராமம் தான் பூர்வீகம். கடுங்கோபம் வந்து எதிராளியை சபிக்கும் உணர்வுநிலைக்கு வரும்போது பெண்கள் தங்கள் பாவாடையைத் தூக்கி காட்டி பழிப்பார்கள். அப்படி ஒரு பழிப்பாகக் கூட இந்த கவிதையை நான் எழுதிப் பார்த்திருக்கலாம். ஒரு ஓலமாக கூட கவிதையை எழுதிப் பார்த்திருக்கலாம்.//

இதைப் படித்தபின் வருந்தினோம். ஊரின் பெயரைப்போட்டு இதை நீங்கள் எழுதியிருக்கவேண்டிய தேவையில்லை.

பெண்கள் தங்கள் பாவாடையைத் தூக்கிக் காட்டுவது குறிப்பிட்ட சூழலில் வரும் அதீத கோபத்தில், ஆத்திரத்தில், எதிர்ப்பு உணர்ச்சியில் நடந்திருக்கலாம். அத்தகைய செயலில் அதிகாரத்தை subvert செய்கிற ஒரு தன்மை உள்ளது. அந்தச்செயலை decontexualize செய்து, உங்கள் கவிதைகளுக்கான “நியாயமாக” ஒரு குறிப்பிட்ட ஊர்ப்பெண்களின் “நடப்பாக,” அதை இணையப் பொதுவெளியில் நீங்கள் பேசியிருக்க வேண்டாம். உண்மையில், இந்த உங்களின் கருத்துக்காகவே இந்தக் கடிதத்தை எங்கள் பதிவில் வெளியிட நாங்கள் மிகவும் யோசித்தோம்.

நீங்கள் சொல்லியிருக்கிற பெண்களின் அப்படியொரு செயல் அந்தச்செயலுக்குச் சம்பந்தமான சூழலில் ஒரு உடனடித்தன்மை கொண்டது. மோசமான அனுபவத்தை (அதாவது அவள் மீதான வன்முறையை, அடக்குமுறையை) அவள் எதிர்கொள்ளும் விதமாக, எதிராளியை விரட்டுவதற்கான ஆயுதம் போன்றது. குறிப்பிட்ட சமூகச்சூழலில், அதைப் பற்றிய நேரடியான பதிவில்தான் அதைப் புரிந்துகொள்ளமுடியும். ஆனால், உங்கள் முதல் கவிதை பொதுப்படையாக எல்லாப்பெண்களையும் யோனி என்கிற ஒருவார்த்தையில் அடக்கிவிடுகிறது. உங்கள் இரண்டாவது கவிதையிலோ, ”பழிப்பு காட்டுவதன், ஓலமிடுவதன்” சூழல் என்பது மார்க்சியர்களைப் பற்றி பொதுப்படையான சித்தரிப்பாக மட்டுமே எஞ்சி நிற்கிறது.

தவிர, அந்தப்பெண்களைப் போலன்றி, உங்கள் கவிதைகளில் ”யோனி,” வன்முறையை passive ஆகவே எதிர்கொள்ளுகிறது. எதிர்ப்புணர்ச்சியின் தளங்கள் உங்கள் கவிதையின் பிரதியில் தென்படவில்லை என்பது பிரச்சினை. இதை ஏற்கெனவே எழுதியிருக்கிறோம்.

//வாசிப்பு ஒழுங்கு, பிரதி ஒழுங்கு, ஆசிரிய ஒழுங்கு, சொல்லுக்கான அமைதி, வடிவ அமைதி என்று கவிதைக்கான ஒழுங்கையெல்லாம் பின் பற்றுவதற்கு பெண்ணுக்கு மொழியா இருக்கிறது? இல்லை வரலாறு இருக்கிறதா? கச்சாவாகவும், துறுத்தலாகவும் மொழியை வைப்பதை அரசியலாகவே வைக்கிறேன். அதிர்ச்சி மதிப்பீடு, ஆபாசம் என்ற வார்த்தைகளெல்லாம் மதவாத வார்த்தைகள். அதை முற்றிலும் நிராகரிக்க விரும்புகிறேன்.//

பெண்ணுக்கு மொழியில்லை, வரலாறு இல்லை என்றால், சங்ககால பெண் கவிஞர்கள், ஔவையார், காரைக்கால் அம்மையார் துவங்கி ஆண்டாள், ஆவுடையக்காள் என உள்ள குரல்களை அவர்களது மொழியை என்னவென்று சொல்வது? Hermeneutics of recovery என்கிற சாத்தியங்களோடுதான் இருக்கின்றன பெண்களால் எழுதப்பட்டிருக்கிற எழுத்துகள்.

மேலும் “கச்சாவாகவும், துறுத்தலாகவும்” மொழியை முன்வைப்பது பற்றி நாங்கள் எங்குமே பேசவில்லை. உங்கள் கவிதைகளுக்கு விமரிசன வாசிப்புகளை எல்லாம் “இவர்கள் கச்சாவான வார்த்தைகளுக்கு எதிரிகள்” என்று ஒற்றைப்புள்ளியில் நீங்கள் சுருக்கி எளிமைப்படுத்துகிறீர்கள் என்றே கருதுகிறோம்.


//ஞானக்கூத்தன், ஆடுகளை உரித்து சைக்கிளில் இப்படி அப்பட்டமாக எடுத்து செல்ல வேண்டுமா? மறைத்துவைத்து செல்லலாமே? என்று சொன்னாராம். எங்களுக்கு ஆடு ஓடும்போது, அழகு, அடிபட்டால் வருத்தம், கண்ணீர் சிந்தி கட்டுக் கூட போடுவோம். ஆடுக்கு ஆபத்து வராமல் காவலுக்கு மூன்று நாய்களையும் வைப்போம். ஆனால் வெட்டினால் இறைச்சி தான்.
நான் இமோஷனல் இன்டெலிஜன்ஸில் நம்பிக்கை வைத்திருக்குமொரு முட்டாள் கவிஞர் தான். அப்படியிருக்கவே விரும்புகிறேன்.//

எதற்காக ஞானக்கூத்தனைப் பற்றிய இந்தச் ”செய்தி” இங்கே? மேலும், உங்களின் ”உணர்ச்சிவசப்பட்ட அறிவு” என்பதைப் பேசும்போது மற்றவர்களுக்கும் அதேபோன்ற “உணர்ச்சிவசப்பட்ட அறிவை” நீங்கள் மறுக்கமுடியாது.

//அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில சலனங்களைச் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.//

நீங்கள் முன்வைத்திருக்கிற, சோவியத் கம்யுனிஸ்ட் தோழன், பெர்லின் தோழி சம்பந்தமான நிகழ்வுகள்...என்ன சொல்ல வருகிறீர்கள், சோவியத் கிளாஸ்நாஸ்ட், கோர்பச்சேவ் இவற்றுக்கும் ”புரட்சியாளர்கள்” ஒரு பெண் உடலை ஆணாதிக்க நிலையில் மட்டுமே அணுகி உங்கள் பாணியில் சொன்னால் “வல்லுறவு” கொள்வதற்கும் என்ன தொடர்பு, சோவியத்தின் சரிவிற்கும் ஒடுக்கப்பட்ட பெண்ணிய பாலியலுக்கும் என்ன தொடர்பு, இதெல்லாம் புரிபடவில்லை. இந்நிகழ்வுகளிலிருந்து நீங்கள் புரட்சிக்கான சித்தாத்தங்கள் தோற்றுவிட்டதாக எழுதினால்கூட ஒருவகையில் புரிந்துகொள்ளலாம். ஆனால் சோவியத்தின் வீழ்ச்சி, மார்க்சியம் இன்னபிற கோட்பாட்டு பிரச்சனைகளைப் பற்றியதல்ல உங்கள் கவிதைத்தளம். உடனே நான் கட்டுரை எழுதவில்லை என்று சொல்லமாட்டீர்கள் என நம்புகிறோம்.

எல்லைதாண்டும் ஒரு பெண் தனது கன்னிமையை அதிகாரியிடம் பலியிடுகிறாள் என்பது உறைந்து போகச் செய்யும் நிகழ்வுதான். இது போன்ற எண்ணற்ற கொடுமையான நிகழ்வுகள் நடந்துவருகின்றன இன்றைய உலகில். சரி, ஆனால், ஒரு பிரதியை வாசிக்கும்போது, கவிதைகளை ”எதற்காக” கவிஞர் எழுதியிருக்கிறார், அவரின் தனிப்பட்ட வாழ்க்கைப் ”பின்னணி” என்பதெல்லாம் பிரதியை வாசிப்பவருக்கு தெரிய எந்த சாத்தியமும் இல்லை. (நீங்கள் இதைப்பற்றி கட்டுரை எழுதினாலேயொழிய அல்லது துண்டறிக்கை கொடுத்தாலேயொழிய).

//என் தோழிகளில், 80 சதவிகிதம் பேர் தன் சொந்த குடும்பத்து ஆண்களின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், எனக்கும் அந்த அனுபவம் உண்டு.

இந்தியாவில் 90 சதவிகிதத்திற்கு மேலான குழந்தைகள் திருமணத்தின் பெயரால் நடக்கும் எஸ்டாபிளிஷ்டு வல்லுறவுகளால் பிறந்தவை தான் என்று புள்ளிவிபரம் சொல்கிறது.//

இதை எல்லாம் எதற்காக சொல்கிறீர்கள்? இதற்கும் இந்த உரையாடலுக்கும் என்ன பொறுத்தப்பாடு உள்ளது? எங்கள் விமர்சனத்தை உணர்ச்சி வசப்படாமல் வாசித்துப் பாருங்கள். பாலியல், வல்லுறவு, ஆணாதிக்கம் இவை எல்லாம் நாங்கள் எங்கும் மறுக்கவுமில்லை. அதை மறுப்பது எங்கள் அரசியலும் இல்லை. நாங்கள் ”ஒழுக்கம்” பேணும் தூய்மைவாதிகளும் இல்லை.

//இதெல்லாமும் உங்கள் மொழியும் நிலமும் நூலைப் படித்த காரணத்தினால் மட்டுமே எழுதுகிறேன். பெருந்தேவியின் கவிதைகளில் வரும் சமஸ்கிருதத்தையும், ஈஷிக்கொண்டு போன்ற பார்ப்பனியத்தை நிலைநிறுத்தும் சொற்களையும் தாண்டி அவரது பெருவாரியான கவிதைகளை நான் விரும்பி வாசித்திருப்பதாலும் கூட இதை நான் எழுதியிருக்கக் கூடும்.//

ஞானக்கூத்தனை முன்பு சுட்டிக்காட்டியதிலும், பார்ப்பனியம் என்று இங்கு நீங்கள் எழுதுவதிலும், உரையாடலுக்குரிய பிரச்சனைகளை திசைதிருப்ப முயற்சிக்கிறீர்கள் என்றே நினைக்கத்தோன்றுகிறது. உங்கள் கவிதைகள் ஆண் பெண் என்று வலிந்து இருக்கும் இருமைக்கட்டமைப்புகளைத் தாண்டியதாக இல்லை என்றோம். இப்போதோ நீங்கள் அதன் தொடர்ச்சியாக பார்ப்பனியம்-பார்ப்பனிய எதிர்ப்பு என்பதாக வழக்கமாக சொல்லப்படும் பொதுபுத்தி சார்ந்த இருமைகளை முன்வைக்கிறீர்கள். பார்ப்பனியத்தின் கருத்தாடல்களை கேள்விக்குட்படுத்தும், எதிர்க்கும் சம்ஸ்கிருதத்தில் இருக்கும் புத்த, சமண, தாந்திரீக நூல்கள் ஒருபுறம் இருக்கட்டும். கவிதைப் பிரதியில் சமஸ்கிருத வார்த்தைகள் பார்ப்பனியத்தை நிலைநிறுத்தும் என்றால், நீங்கள் உங்கள் கவிதைகளில் பயன்படுத்தும் காமம் துவங்கி கிரஹணம் போன்ற வார்த்தைகளை என்னவென்று சொல்வது? முக்கியமாக, உங்கள் கவிதைகளில் வருகிற “யோனி,” இது சம்ஸ்கிருத வார்த்தைதானே.

ஒரு கவிஞரின் (அவர் பெருந்தேவியாக இருக்கட்டும் அல்லது ஞானக்கூத்தனாக இருக்கட்டும்) கவிதையை, பிரதியில் கிடைக்கும், பின்னிப்பிணைந்த இன, மொழி, பால் என்கிற அடையாளக் கட்டமைப்புகளை அகழ்ந்து எடுத்து பேசுவதை ஒரு வாசிப்புப்பாணியாகக் கொள்ளலாம். ஆனால், அதற்கு முன்பு நீங்கள் பார்ப்பனியம், தமிழன், பெண், ஆண் என்கிற அடையாளங்களை வரையறுக்க வேண்டும். அந்த வரையறைகளைச் செய்தபின்பு தான் பிரதி, அர்த்தம், அதன் செயல்பாடுகள் இவற்றைப் பேச முடியும். அதைவிட்டுவிட்டு, போகிற போக்கில் வசதி கருதி, ஓரிரு வார்த்தைகளை எடுத்துவிடுவது, விமரிசனங்களை சரியான விதத்தில் எதிர்கொள்ள உங்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை என்பதையே காட்டுகிறது.


பெருந்தேவி
ஜமாலன்

//ஜமாலன் தோழருக்கு, ஒரு குறிப்பிட்ட கவிதைகளை எடுத்துக் கொண்டு விமர்சிக்க முயலும்போது, ஒரு படைப்பாளியின் முழு படைப்பு வெளியையும் கணக்கிலெடுத்துக் கொண்டு தான் சொல்லாடலை முன் வைக்க வேண்டும் என்பதை நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா என்ன? //

இந்தக்கட்டுரை, உங்களின் இந்த இரு கவிதைகளுக்கான இந்துமக்கள் கட்சியின் புகார், அதற்காக உங்கள்சார்பில் நடத்தப்பட்ட கூட்டம் சம்பந்தமானது. ஆகவே, இவை தொடர்பாக விவாதத்தில் இருந்த உங்கள் இரு கவிதைகளையும் பற்றி எழுதினோம். மேலும், ஒருவர் பல படைப்புகளை படைக்கிறார். அவரது முதல் படைப்பும் அடுத்த படைப்பும் ஒன்றுபோலவே இருக்க வேண்டியது எப்படி சாத்தியம், படைப்பாளிக்கு என்று ஒரு சாராம்சம் இருக்கிறதா என்ன, இந்த படைப்பாளி என்றால் இதைதான் படைப்பார் என்று. அப்படி ஒரே மாதிரி படைத்தால் அது படைப்பு அல்ல, சரக்கு.

அன்புடன்
ஜமாலன்

Friday, April 16, 2010

கேத்தே ஏகர்

புலனற்றவர்(வை)களின் சாம்ராச்சியம் (Empire of the Senseless)

V அல்ஜீரியர்கள் பாரிஸை எடுத்துக்கொள்ளட்டும்

(அபோர் பேசுகிறாள்)

என் அம்மா------------------------------------------------------------------

நான் ஓடிப்போனேன். திவை-யிடமிருந்து (திவை அபோரின் நண்பர்) மட்டுமல்ல, ஓடிப்போவதற்கு எந்த ஒரு இடமேனும் இருக்குமானால் அங்கே ஓடிப்போயிருப்பேன். ஆனால் அப்படியெதுவுமில்லை. வீடு என்ற ஒன்று எங்குமில்லை என்பது எனக்குத் தெரியும் என்பதும் எனக்குத் தெரிந்தது. எங்கேயுமில்லை;

புகலிடம் என்பது ஒரு நிரந்தரமான நிலைமை. ஒரு நிரந்தரமான சமூகம். உறவுகளிலும் சரி, மொழியிலும் சரி.

அடையாளத்தின் அடிப்படையில். ஆனால் எதிலிருந்து அடையாளம் புறம்தள்ளப்பட்டது?

ஒருவேளை இந்தச் சமுதாயம் தன் அழிவுகளிலிருந்து தன் சாதலை வாழ்கிறது போலும், ஆனால் எனக்கு இதைப்பற்றி அறிய எந்த வழியும் இருந்திருக்கவில்லை.

எனக்குத் தெரியாத, நான் அன்னியளாக இல்லாத இடமொன்றில் என்னை நான் கண்டேன். பாரிஸின் ஒரு பழைய பகுதி, பிற பகுதிகளைப்போல, எப்போதுமே எதுவுமே நடக்காத லண்டனைப் போலில்லாமல், ஏதாவது நடந்துகொண்டிருக்கும் இடம், மற்ற எல்லா இடங்களையும்போல.

பாரிஸில் ஏழையாக வாழ்தல் எளிது, பணம் இருந்தால். ஒரு புகைப்படக்காரரின் மாடலாக இருந்து என் ஆடம்பரத்தேவைகளுக்கான போதுமான பணத்தை சம்பாதித்தேன். என் உடலை வைத்து ஈட்டிய பணத்தில் வாங்கிய விலையுயர்ந்த உடைகளை, ஆண்கள் புகைப்படம் எடுப்பதற்காகக் கழற்றினேன்.

ஒரு நாள், யூதர்களின் குடியிருப்புக்கு அருகே ஒரு குறுகிய வளைந்த சந்தில், செங்கல்களால் கட்டப்பட்ட வீடொன்றின் அடித்தளத்தின் தொழில்நிமித்தமாக நான் இருக்கக் கண்டேன். எடைகளைத் தூக்கிக்கொண்டிருந்த ஒரு கருப்பு மனிதன் எனக்காகக் கதவைத் திறந்தான். அவனது ஸ்டூடியோ தேவையான கருவிகளோடு இருந்தது. புகைப்பட விளக்குகள், மற்ற உபகரணங்கள். சீட்டுக்கட்டு விளையாட்டின் சீட்டுகளின் பின்பக்கத்துப் படங்களுக்காக போஸ் கொடுக்க என்னை வேலைக்கு அமர்த்தியிருப்பதாகச் சொன்னான். ராசி மண்டலத்தில் இருக்கும் பன்னிரெண்டு ராசிகள் ஒவ்வொன்றுக்குமாக பன்னிரெண்டு புணர்ச்சி நிலைகளில் நான் போஸ் கொடுக்க வேண்டும். என்ன போஸ்களோ அவை.

“பொதுவாக என் ஆண் நண்பனோடுதான் வேலையைச் செய்வது வழக்கம்.” எனக்கு ஆண் நண்பன் எவனும் இல்லை என்பது வேறு.

”இல்லை, உன்னுடைய யோனி, என்னுடைய குறி.” முன் கதவை மூடுவதற்காக அவன் குறியை என்னிடமிருந்து அகற்றியபடி சென்றான். ”உன் உடைகளைக் கழற்று.” கேமராவுக்காக நீண்டது அவன் கை.

என் உடைகளைக் கழற்றிவிட்டுப் படுத்தேன். “இது சரியாக நடக்கப்போவதில்லை.” அவன் தன் ஒளிர்சாம்பல் நிறக் காலாடையை ஒருகையால் கழட்டியபடி இன்னொருகையால் கேமராவைப் பிடித்துக்கொண்டிருந்தான்.

“எனக்கு கொனோரியா இருக்கிறது.”

“நான் காண்டம் உபயோகிக்கிறேன்.”

சடுதியில், செத்த அல்லது சிதைக்கப்பட்ட உடலைவிடவும் ஒரு வன்புணரப்பட்ட உடலை நான் தேர்ந்தெடுத்தேன்.

பயனற்ற, அதை விடவும், வீரியமான, அழிவுசக்தியான எதிர்பாலியல் புணர்ச்சி என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த நோயை நான் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. எப்போதுமே அது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

அதன்பின்பு நான் துறவுபற்றி யோசித்தேன். பெரும்பாலான பாலியல் செயல்பாடு உடல்நோயையும் ஏன் மரணத்தையும் கூட இப்பொழுதெல்லாம் தந்ததால், பாரிஸில் என் சில நண்பர்கள் புணர்வதை நிறுத்தியிருந்தார்கள். எதிர்பாலியல் செயல்பாட்டிலிருந்த என் ஒரே நண்பன் இப்போது துறவியாக இருந்தான். ஐந்து வருடங்களுக்கு முன்பு, சமூகத்தின் ஏணிப்படியில் வெகுவேகமாக ஏறிக்கொண்டிருந்த மாடல் ஒருத்தியோடு அவன் உறவில் இருந்தான். அவளோ அவனுக்குத் தெரியாமல் ஆண்களோடும் பெண்களோடும் படுத்துக்கொண்டிருந்தாள். அவனை அவள் பொதுவெளியில் அவமானப்படுத்தியதை அவன் அறிவான். அவன் முகம் பலநேரங்களில் மிதிக்கப்பட்டது. சாவின் தாங்கொணாத வலி அந்த வலிக்கான காரணத்தை, அவன் பாலியலை, துறக்கச் செய்தது. அவன் ரொமாண்டிக் ஆன ஆளாக இருந்ததால், தன்னுடைய பாலின்ப உச்சம் அல்லது தன்னுடைய பாலியல் அடையாளத்தைத் துறப்பது—இந்த இரண்டில் ஒன்றுக்கு உண்மையாக இருப்பதைத் தேர்ந்தெடுத்தான்.

ஆனால் அன்றைய நாட்களில், வலதுசாரிகள் அரசியல் திருப்புமுனை கண்ட, சாவின் அன்றைய நாட்களில், வெள்ளையாக இல்லாத ஒன்றோ ஒருவனோ தான் ரட்சகனாக இருக்கமுடியும் என்று தோன்றிய அந்த நாட்களில்……. உடல், பொருண்மை, அதுவே பொருட்படவேண்டும் என்று தோன்றியது. எனக்கு என் உடல் பொருட்படுவதாக வேண்டும். என் உடல் எனக்குப் பொருட்பட்டால், பிறகு எதுவும் எந்தப் பிரதியாகவும் இருக்கும். துறவை என்னால் தேர்ந்தெடுக்க முடியவில்லை.

....



(ஏகர்-இன் எழுத்திலிருந்து இரு பக்கங்கள் இவை)

Wednesday, April 14, 2010

கவிதையின் “நான்” = கவிஞரின் “நான்” அல்லது ஆண் X பெண்

”அரசியல்சரி” நிலைப்பாட்டுக்கும் கவிதையாக அறிவிக்கப்பட்டிருக்கிற பிரதிக்கும் இடையே சில வார்த்தைகள்

கவிஞர் லீனா மணிமேகலையின் கவிதைத்தொகுப்பை, வலைத்தளத்தை தடைசெய்யக்கூறி இந்து மக்கள் கட்சியினர் காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்ததற்கு எதிராக சென்னையில் ஏப்ரல் 15-ல் ஒரு கண்டனக்கூட்டம் நடக்க இருப்பதாக அறிகிறோம். தமிழ் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களால் நடத்தப்பட இருக்கிறது இக்கூட்டம். இது சம்பந்தமாக எங்கள் கருத்துகளை இங்கே பதிவிடுகிறோம்.

லீனா மணிமேகலை இலக்கியம், கவிதை என்று ஒரு பிரதியை தமிழ் இலக்கியச்சூழலின் வாசிப்புக்கு முன்வைக்கும்போது, அப்பிரதியின் சொற்பிரயோகங்கள் பாடுபொருள்கள் ஆகியவற்றை இலக்கியம் என்கிற வகைமையில்தான் நாம் அணுகவேண்டும் என்று நம்புகிறோம். இதில் எழுத்தாளரின் நோக்கம் (அதிர்ச்சி மதிப்பீட்டை முன்வைத்து புகழ்பெற நினைப்பது என்று கருதப்படுபவை உட்பட) இலக்கியத்தைப் படைப்பதுதானா என்பதை மதிப்பிட அளவுகோல் எதுவும் கிடையாது. ஒரு படைப்பாளி எதற்காக இலக்கியம் படைக்கிறார் என்பது நுட்பமான வாசிப்பாளனுக்கும், விமர்சகனுக்கும் அசட்டுத்தனமான கேள்விகளாக மட்டுமே இருக்கமுடியும். தனது உள்நோக்கங்கள் வழி உருவாக்கப்படும் சில வலைப்பின்னல்கள் வழியாக ஒரு எழுத்தாளர் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முடியும். ஒரு சமூக அமைப்பு ஒரு எழுத்தாளாரை மேலாக வைத்து கொண்டாடுவதும், நிராகரிப்பதும் இந்த வலைப்பின்னல் விளையாட்டில் புரிந்துகொள்ளக் கூடியதே. ஆனால், காலம் அந்த இடத்தை கேள்விக்கு உட்படுத்தும்போது, பின்னர் ஒரு நாள் வரலாறுகளின் ஆற்றங்கரையில் படைப்பின் ஆதார ”சுருதி” கண்டடையப்படும் என்று வேண்டுமானால் நாம் ஆறுதல் அடையலாம்.

இலக்கியம், கவிதை என்கிற முகாந்தரத்தில் ஒரு பிரதி வாசிக்கக் கிடைக்கும்போது, அதை அப்படித்தான் வாசிக்கவேண்டுமே தவிர எழுத்தாளரின் தனிப்பட்ட, சொந்த மற்றும் தொழில்ரீதியான வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்களைக் கணக்கிலெடுத்து அப்பிரதியை நிராகரிப்பது தவறு. இதற்கு அர்த்தம், எழுத்தாளரின் வாழ்க்கையில் அவர் செய்ததாகக் கூறப்படும் அநீதிகள், ஏமாற்றல்கள் (அவை நடந்திருந்தால்) போன்றவை முக்கியமில்லை என்பதோ, அவரது பிரதியின் மேல்விழும் இலக்கிய முத்திரை இவற்றையெல்லாம் புனிதப்படுத்திவிடும் என்பதோ இல்லை. அந்த சம்பவங்களை அதற்குத் தகுந்த நடைமுறைத் தீர்வு தருகிற தளங்களில், சம்பந்தப்பட்டவர்கள் அணுகித் தீர்வுகாணுதல் நன்மை பயக்கும் என்பது எங்கள் கருத்து.

இதன்பொருள் இலக்கியமும், எழுத்தும் கண்டனத்துக்கு அப்பாற்பட்டவை என்பது அல்ல. கண்டிப்பதற்காக எழுத்தைக் குறிவைத்து காவல்துறையில் புகார் கொடுப்பது, எழுத்தாளரை தனிப்பட்ட முறையில் தாக்குவது போன்றவை மோசமான முன்னுதாரணங்கள் ஆகிவிடும். மேலும் கண்டனத்தை எதிர்கொள்வதாக செய்யப்படும் செயல்களிலும் (இக்கூட்டம் உட்பட) வேறுபிரச்சனைகள் உள்ளன என்பதையும் நாம் மறுக்கவியலாது. இச்சூழலில், இலக்கியத்துக்கு வெளியே செயல்படும் அரசியல் மதக் கட்சிகளுக்கோ நிறுவனங்களுக்கோ, இலக்கியம் என்று எழுதப்பட்டிருக்கும் பிரதியைக் குறித்து புகார் கொடுக்க தார்மீக உரிமை இல்லை என்பதைமட்டும் இங்கே பதிவு செய்கிறோம்.

நிற்க.

இந்த நேரத்தில், இணையத்தில் சர்ச்சைக்குள்ளான லீனா மணிமேகலையின் கவிதைகள் (பார்க்க, http://www.penniyam.com/2010/01/blog-post_5280.html) பற்றி சிலவார்த்தைகள்:

நான் லீனா என்று தொடங்குகிறது முதல் கவிதை, இலங்கையில், இந்தியாவில் ஆரம்பித்து துருக்கியில் ஈராக்கில் வியட்நாமில் என்றெல்லாம் வன்கொடுமைப்படுத்தப்படுகிற பெண்கள் “நான் லீனா” என்கிற சுயம்-சுட்டும் (self-referential) பெயருக்கு கீழே கொண்டுவரப்படுகிறார்கள். இதன்மூலமாக இப்படி கொடுமைக்கு ஆளாகிற பெண்கள் எல்லாருக்குமான பிரதிநிதியாக லீனா என்கிற பெண் காட்டப்படுகிறார். முதல் கேள்வி, ஏன் லீனா என்கிற பெயர் மீனா என்றோ வேறொன்றாகவோ இருக்கக்கூடாது? எழுத்தாளர் தன் பெயரை கவிதைசொல்லியின் ’நானாக’ இப்படி கொண்டுவரும்போது, உலகத்தின் எல்லாக் கொடுமைப்படுத்தப்படும் பெண்களின் பிரதிநிதியாக தன்னைக் காட்டிக்கொள்ளும் ஆசையை வெளிப்படுத்துகிறார் என்றே தோன்றுகிறது. கவிதைசொல்லியின் ‘நானுக்கும்’ எழுத்தாளரின் ‘நானுக்குமான’ வித்யாசத்தை கவிதை அழித்துவிட்டது. இந்த இரு நான்கள் ஒன்றா இரண்டா என்று தெரியாத அளவுக்கு—--பின்னிப்பிணைந்து கிடக்கும் இரண்டு பாம்புகள் ஒன்றா இரண்டா என்பது போல--தோற்றம் தருகிறபோது, எந்தத் தளத்திலிருந்து ‘எழுத்தைப் பாருங்கள், எழுத்தாளரைப் பார்க்காதீர்கள்’ என்று நாம் சொல்லமுடியும்? பிரதிநிதித்துவ அரசியலில் (representational politics), “நான்“ என்கிற எழுத்தாளரின் சுயம் அப்படியே தன்னடையாளத்துடன் நிற்கிறது இக்கவிதையில்.

கவிதை வன்புணர்ச்சி விஷயத்தில் அறிவாளி ரோகியிலிருந்து தொடங்கி புரட்சிவேண்டுபவன் வணிகம் செய்பவன் மாலுமி விவசாயி ஈறாக இழுத்துப் பேசுகிறது. எழுதப்பட்டிருக்கிற விதம் இவர்கள் எல்லாருமே இப்படித்தான் என்பதாக. “எவனா இருந்தா என்ன, ஆம்பிளை தானே” என்கிற தொனியே கவிதையின் தொனி. வன்புணர்ச்சி என்கிற அபாயத்தையும் நிகழ்வையும் தொடர்ந்து பெண்கள் எதிர்கொள்ளும் சூழல்கள், கட்டாயங்கள், உலகளாவிய முதலீட்டிய நுண் அதிகாரங்கள், அரசியல்கள் பற்றி எந்தப்புரிதலும் இல்லாமல், இவை அனைத்தையும் ’ஆம்பிளை’ என்கிற ஒரு பதத்துக்குள் இந்தத்தொனி இட்டுநிரப்புகிறது. வன்புணர்ச்சி என்பது ஆண்களின் விழைவால், விழைவு தருகிற குறிவிரைப்பால் மட்டுமே நடப்பதில்லை என்பதுதான் பாரிய உண்மை. எண்ணற்ற கொடுமைகளுக்கு பெண்களை ஆளாக்கின பல்வேறு அரசியல்களையும் போர்களையும் ஆணின் பாலியல்-விழைச்சில் அடக்கிவிட முடியுமா என்ன?

ஈழம், போஸ்னியா இன்னும் எண்ணற்ற நாடுகளில் பாலியல் வன்புணர்ச்சி என்பது போரின், அரசின், இறையாண்மை அரசியல்களின் அதிகார ஆயுதமாகவே உள்ளது. மேலும், போரில் ஆண்-பெண் உடல்கள் இரண்டும் கருவிகளாக மாற்றப்படுகின்றன. அதை ஒரு பெண் ஒடுக்கு முறையாக மட்டுமே சுருக்கிப் பார்த்து விட முடியாது. ஆண்-பெண் உடல்களை போர்-எந்திரத்தின் விழைச்சாக, அதிகார விறுப்புறுதிக்கான கருவிகளாக ஆக்கப்பட்ட உடல்களாகவே பார்க்க முடியும். இத்தகைய பல்வேறு சூழ்நிலைகளின் பாலியல் வன்முறைகளை குடும்ப பாலியல் வன்புணர்ச்சிகளுக்கு சமனாக அல்லது அவை போல ஒன்றாக பார்த்துவிடமுடியாது. இக்கவிதையில் வன்புணர்ச்சி என்கிற புள்ளியில் இவ்வித்யாசங்கள் பிரித்தறியப்படவில்லை.

மேலும் கவிதையில் பெண்கள் அனைவரும் தொடைகளின் இடைவழிக்காகவே, அதை ஆக்கிரமிப்பதன் மூலம் அச்சுறுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. அரசதிகாரம் பெண்ணுடலை கையாளும் அதே முறைகளைத்தான் புரட்சியாளர்களும், கலகக்காரர்களும் கையாளுகிறார்கள் என்பதும் பொதுபுத்தியின் “அறம்“ சார்ந்த பார்வைதான். அதாவது ஒரு உடலின் பாலியல் சார்ந்த இச்சை என்பது கீழானதாக, அதை செய்யும் உடல் புரட்சிபேசத் தகுதியற்றதாக சொல்லப்படுவதாகவும் இதை வாசிக்கலாம். தவிர, அரசு, எதிர்ப்பு, கலகம் இவை எல்லாவற்றிலும் அதிகாரம் செயல்படும் என்றாலும், இவற்றைச் சமன்படுத்துவதிலும் பிரச்சினைகள் உள்ளன.

வன்புணர்ச்சிக்கான ஒரு களமாக பெண்ணுடல் கட்டப்பட்டுள்ளது என்றால், களத்தில் ”விளையாடுவதற்கான” ஆணுடலும் தயாரிக்கப்பட வேண்டும் அல்லவா. அப்படி தயாரிக்கப்பட்ட ஆணுடல்கள் மட்டும் என்னவித நெகிழ்வை இச்சமூகத்தில் அனுபவித்துவிடப் போகிறது? ஆண்மை, பெண்மை என்கிற முரண்களின் அடிப்படையிலான சமூக, கலாச்சார ஒழுங்குவிதிகள் ஒட்டுமொத்த உடல்களில் பதிவுறுத்தப்படுகின்றன, இருமைக்கட்டமைப்பில் உடல்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த விதிகள்தான் இன்று எதிர்க்கப்படவேண்டியவை, வெளிப்படுத்தி அம்பலப்படுத்த வேண்டியவை. ஆனால் கவிதை விதிகளை நோகாமல் மேலோட்டமாக விளைவுகளை நோகிறது.

வன்புணர்ந்து அதிகாரத்தைச் செலுத்தும் “ஆம்பிளை(களு)க்கு” எதிராக வன்புணர்த்தப் படுகிற எல்லாப் “பொம்பிளைகளின்” சார்பிலும் “நான் லீனா” நிற்கிறார் (கவிதையில், நிற்கிறது). ஆக, இந்தப் பெண்கள் எல்லாரும் அம்மா, அம்மம்மா, அத்தை சொல்லிக்கொடுத்தபடி யோனியை விரித்து வன்புணர்ச்சிக்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற புரிதலைக் கவிதை தருகிறது. பாதிக்கப்பட்ட, படுகிற பெண்களின் எதிர்ப்புணர்வுக்கோ குறைந்தபட்சமாக அவர்களின் உடன்பாடின்மை என்பதற்கோ இடமே கவிதையில் இல்லை. உலகெங்கும் துயருறும் வன்புணரப்படுபவர்களின் பிரதிநிதியாக “நான் லீனா” Vs. உலகின் எல்லாவகை ஆண்களும் என்பதே கவிதையின் ஒன்லைனர். பல்வாசிப்புத் தளங்களைத் தராத, தக்கையான முரணை விதந்தோதுவதாலேயே இது கவிதையா என்று கேள்வி எழுகிறது.

லீனாவின் இரண்டாவது கவிதை, சே, பிடல், பெர்லின் சுவர், சோவியத், அமெரிக்கா போன்றவை, புணருகிற ’நான்’ உடலின் மார்பகம், அல்குல் போன்ற அங்கங்களின் பெயர்கள் அல்லது உருவகங்களாகின்றன. பல இடங்களில் அங்கம், பெயர்-உருவகத்துக்கு தொடர்புறவு இல்லை அல்லது வெறும் மோனை வலிந்து துருத்திக்கொண்டு நிற்கிறது (உதாரணம், ”மனம்பிறழ்ந்த குழந்தைபோல மம்மு குடித்தாய்” ) கவிதையில் சொல்லப்படும் “நீ“ அல்லது எதிர் உடல், வெறும் பாலியல் புணர்ச்சி எந்திரமே. குறிப்பாய் மார்க்சிய புரட்சியாளனை இங்கு எதிர் உடலாக முதன்மைப்படுத்துவதன் வழியாக பாலியலில் “தூய்மைவாத” கருத்துகள் கொண்ட மார்க்சியர்களை (மார்க்சியர்களின் இத்தகைய பார்வைகளில் நமக்கு விமர்சனம் உண்டு என்றாலும்), பாலுறவுக்காகவே அலைபவர்களாகச் சித்தரிக்கிறது.

எத்தகைய ஆண் புரட்சியாளன் அல்லது மார்க்சியவாதியாக இருந்தாலும், பாலியலில் அல்லது சக பெண்ணுடலை அணுகும்போது அவனும் சராசரி மனிதனாக மாறிவிடுகிறான் என்பதை இக்கவிதை வழக்கமான அறக்க்கண்ணோட்ட சட்டகத்துக்குள் வைக்கிறது. கவிதைவரிகளை மேலோட்டமாகப் பார்த்தால் புரட்சி பற்றிய “புனித கவிழ்ப்பு“ “அறக்கவிழ்ப்பு“ போன்ற கவிழ்ப்புச் சொல்லாடல்களால் ஆளப்பட்டிருப்பதைப்போல தோன்றும். உண்மையில், கவிதையின் உள்தர்க்கம் என்பது என்ன புரட்சி பேசுகிறாய், ஒரு அதி-யோனியின் புணர்ச்சிக்கு முன் இதெல்லாம் உலர்ந்து உதிர்ந்துவிடும் என்பதுதான். இப்படிச் சொல்வதன் வழியாக, பாலியல் செயல்பாட்டைப் பற்றி பொதுவாக சமூகமனம் கொண்டுள்ள கீழ்மை மதீப்பீடே உள்ளுரையாக உள்ளது. பாலியல் அல்லது புணர்ச்சி குறித்த இந்தக் ”கீழ்மை” மதிப்பீடு கடவுள் துவங்கி இன்னபிற பிம்பங்களின் மீது சுமத்தப்படும்போது இவற்றைத் தாங்கிப்பிடிப்பவர்களின் எரிச்சலுக்கும் காரணமாக அமைகிறது என்பதைச் சொல்ல அவசியமே இல்லை.

சரி, இந்த பிரச்சினைகள் குறித்து பெரும் பத்திரிக்கைகள் துவங்கி பதிவுலகம் வரை பல மாதங்களாகப் பேசப்பட்டுவரும் நிலையில் இப்பொழுது இதனை முன்வைப்பதன் தேவை என்ன என்கிற கேள்வி உங்களைப்போலவே எங்களுக்கும் தோன்றியதுதான். நாங்கள் அவதானித்தவரை இப்பிரச்சனையில் பேசப்பட்டவை எல்லாம் கவிஞர் லீனா மணிமேகலையை தனிப்பட்ட முறையில் தாக்குவது அல்லது போற்றுவது என்ற அளவிலேயே நின்றுபோனதே தவிர மொழி அர்த்தமாதல் குறித்த விவாதம் நடக்கவில்லை. இலக்கியம் சார்ந்த உரையாடலை முன்வைத்து இவ்வரிகளை அணுகவேண்டும். அதேநேரத்தில் ஒரு கவிஞருக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தலுக்கு எதிராக நமது குரலை பதியவைப்பதும் அவசியம் என்று கருதியே இதனை எழுதினோம்.

பின்னாளில் நீரோவாக பிடில் வாசித்தோம் என்று எழுதி இந்த பிரச்சினையை சாம்ராஜ்யம் எரிந்த பிரச்சினையாக ஆக்கி, நம்மை விமர்சித்துவிடக்கூடாது பாருங்கள் அதுவும்தான். இருந்தாலும், “வரலாறு முக்கியம் அமைச்சரே“- என்கிற இம்சை அரசனின் குரல் கேட்கத்தான் செய்கிறது நமது ஆழ்மனதில். என்ன செய்ய?

அன்புடன்

பெருந்தேவி

ஜமாலன்

Monday, April 12, 2010

கண் அல்லது கரம்

--கவிதை நீக்கப்படுகிறது--

Saturday, April 10, 2010

பெண்-உடல்-மொழி: சிரிப்பும் கண்காணிப்பும் (1)

பெண் உடல்மொழி என்றால் என்ன? அதன் தத்துவ, வரலாற்றுப் பின்னணிகள் என்ன? பெண்ணுடலை விவரிக்கும் விரிக்கும் மொழி பெண்ணுடல் மொழியா? அல்லது பெண் உடலின் சைகைகள் சமிக்ஞைகள் நடவடிக்கைகள் செயல்பாடுகள் போன்றவை மூலம் அவள் சொல்வதாக புரிந்துகொள்ளப்படுவது பெண்ணுடல் மொழியா? உடலும் மொழியும் ஒன்றா, வெவ்வேறா? உடலை மொழி பிரச்சினையில்லாமல் அப்படியே பிரதிநிதித்துவப்படுத்துமா? அப்படி பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? புரட்சி என்று உச்சரித்தால் புரட்சியாகி நடந்துவிடுமா? இட்லி என்று எழுதிய காகிதத்தை உண்டால் பசி தீர்ந்துவிடுமா?

நிறைய கேள்விகள் முன்னே நிற்கின்றன. சிலவற்றை கேட்டு எழுதி புரிந்துகொள்ள முயற்சிக்கலாம் என்பதே (செம்மைசெய்யப்படாத) இப்பதிவின் நோக்கம்.

”உடலை எழுதுதல்” என்பது பெண்ணியங்களின் முன்னெடுப்பில் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுத்தருணத்தில் நிகழ்கிறது. இவ்வரலாற்றுத்தருணத்துக்கும் “புத்துலகை உருவாக்குதல்” என்கிற கருத்தாக்கத்துக்கும் கனவுக்குமான தொடர்பை பெண்ணியல் ஆராய்ச்சியாளர்கள், குறிப்பாக செசிலி லிண்ட்சே போன்றவர்கள் விவரிக்கிறார்கள். ”மாற்று உலகங்கள்,” “கடந்து முன்செல்லல்,” ”பெண்ணிய எதிர்காலங்கள்” போன்ற கற்பனைகளும் கனவுகளும் பெண்ணியப் பேச்சுகளில் எழுத்துகளில் உருவானதையும், இதில் ஒரு முக்கியமான அங்கமாக ”உடல் எழுத்து” தொடங்கியதையும் பேசுகிறார்கள். குறிப்பாக ப்ரெஞ்ச் பெண்ணியத் தத்துவச் சிந்தனைப்போக்கில் ஹெலன் சிக்ஸு, மோனிக் விட்டிக் போன்றவர்களால் எடுத்தாளப்பட்ட கருத்தாக்கம் “உடல் எழுத்து.” “உடல் எழுத்து” என்பதற்கும் புத்துலகை உருவாக்கும் கருத்தியலுக்கும் இருக்கிற தொடர்பு யோசிக்க வேண்டிய ஒன்று.

பெண்ணியப் புத்துலகம் எப்படி இருக்கவேண்டுமென்பதைப் பற்றிக் கருத்துவேறுபாடுகள் கொண்ட, விவாதித்த விட்டிக், சிக்ஸு இருவருமே ஒருவிஷயத்தில் ஒரேநிலைப்பாடு கொண்டவர்கள். அது மொழிபற்றிய அவர்கள் பார்வை. “கடந்த காலத்தைப் பெற்று அல்லது கடத்தித்தருகிற மொழியே, கலாச்சாரச் செயல்பாடுகள், கருத்தியல் வடிவங்களுக்கான அடிப்படையாக இருக்கிறது” என்று அவர்கள் நினைத்தார்கள். ஆகவே, மொழியும் எழுத்துமே நிகழ்காலத்தைக் கேள்விகேட்கும், புத்துலகை உருவாக்குவதில் முதன்மைப்பட வேண்டும் என்றும் நம்பினார்கள்.

குறிப்பாக இங்கே ஹெலன் சிக்ஸு-வின் கோட்பாட்டை அதன் பிரச்சினைகளைப் பார்க்கலாம். பெண்தன்மையும் ஆண் தன்மையும் உடல் அடிப்படையிலிருந்து பெறப்படுவதாக சிக்ஸு வாதாடினார்: “பெண்மை சந்தேகத்துக்கிடமின்றி, உடலிலிருந்துதான் வருகிறது. உடற்கூற்றியல், உயிரியல் வித்யாசங்களிலிருந்து, பெண்களை ஆண்களிலிருந்து பெரிதாக வேறுபடுத்தும் உந்துதல்களின் கட்டமைப்புகளிலிருந்து அது பெறப்படுகிறது.” ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான உறுதியான வித்யாசங்கள் என்று அவர் நம்பியதை அவருடைய Castration or Decapitation? (1981) என்ற கட்டுரையில் சீனக்கதை ஒன்றைச்சொல்லி நிறுவுகிறார். போர்வீரருக்கான உபாயங்களைக் கற்றுத்தரும் சுன் ட்ஸே (Sun Tse) கையெட்டிலிருந்து எடுத்தாளப்படுகிறது இந்தக்கதை. முன்னொருகாலத்தில் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.

சீன அரசன் ஒருவன் தனது ஜெனரல் சுன் ட்ஸேக்கு ஒரு கட்டளையிடுகிறான். ”போர் உபாயங்கள் தெரிந்தவன் நீ, யாருக்கும் பயிற்சி கொடுத்து சிறந்த வீரனாக மாற்றத் தெரிந்தவனும் நீ, என் மனைவிகளை (நூற்றி எண்பது) போர்வீரர்களாக மாற்றிக்காட்டு” என்கிறான். ஆணையை ஏற்ற சுன் ட்ஸே அரசனின் மனைவிகளை இருவரிசைகளாக நிறுத்துகிறான். இருவரிசைகளிலும் அரசனுக்கு மிகவும்பிடித்த இரு ராணிகளை முதலில் நிறுத்துகிறான். பின் அவர்களுக்கு முரசடிப்பதைச் சொல்லித்தருகிறான். இரண்டு அடிகள்—வலது பக்கம், மூன்று அடிகள்—இடது பக்கம், நான்கு அடிகள்—திரும்பி பின்பக்கம் முன்னேற வேண்டும். ஆனால் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்வதற்கு பதிலாக பெண்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள். ஜெனரல் சொல்லிக்கொடுத்தபடி இருக்கிறான். பெண்களோ சிரித்தபடி இருக்கிறார்கள். பலமுறைகள் அவன் முயன்றும் பலனில்லை.

கடைசியாக தான் சொல்லிக்கொடுத்தவற்றில் ஜெனரல் தேர்வு வைக்கிறான். நியமவிதிகளின்படி, தேர்வில், போர்வீரர்களாக பயிற்சியெடுக்கும் பெண்கள் போர்வீர்ர்களாக ஆகாமல் சிரித்துக்கொண்டிருந்தால், அது கலகமாக அறியப்படும், பெண்களுக்கு அப்போது மரணதண்டனைதான் விதிக்கப்படவேண்டியிருக்கும். சிரித்துக்கொண்டிருந்த பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அரசன் உள்ளுக்குள் கொஞ்சம் கலங்குகிறான். ஒன்றா, இரண்டா, நூற்றி எண்பது ஆயிற்றே. எத்தனை இழப்பு? அரசன் இதை விரும்பவில்லை. என்றாலும் சுன் ட்ஸே கொள்கையில் குறியாய் நிற்பவன். அரசனை விடவும் அவன் ஆணை அரசமயமானது என்று தெரிந்தவன். சட்டம், முழுமொத்தமானது சட்டம். ஆணையை திருப்பிவாங்க முடியாது. அவன் மன உறுதியுடன் முன்னணியில் நிற்கும் இரண்டு ராணிகளின் கழுத்தையும் சீவுகிறான். எதுவுமே நடக்காதது போல, அடுத்த இரு பெண்கள் அவர்கள் இடங்களில் பதிலிடப் படுகிறார்கள். திரும்ப தேர்வு நடக்கிறது. இம்முறை பெண்கள் சிரிக்கவில்லை, சின்ன சப்தமும் இல்லை. சோதனை மிகச்சரியாக நடந்தேறுகிறது.

ஆண்மைக்கும் பெண்மைக்குமான சமன்பாட்டை இக்கதையிலிருந்து சிக்ஸு வடிவமைக்கிறார். ஆண்மை அல்லது ஆண்மைப் பொருளியல் என்பது நேரத்தைக் கண்காணிக்கும் விதியால்--இரண்டு அடிகள், மூன்று அடிகள், நான்கு அடிகள் என முரசால், எது எப்படி இருக்கவேண்டுமோ அப்படியிருக்க, ஒழுங்குபடுத்தப்படுகிறது. அதற்கேற்ப ஆணைகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன; கற்றுக்கொடுக்கப்பட்டு பட்டு உருவேற்றப்படுகின்றன. பெண்மை அல்லது பெண்மைப் பொருளியலோ பெண்ணிலிருந்து போர்வீரனை உருவாக்கும் வலிமையால் வரலாற்றில் நிறுவப்படுகிறது. தலையைச் சீவக்கூடிய ஒட்டுமொத்த வலிமை அது. பெண்ணுக்கு வேறு தேர்வு இல்லை. வாளுக்குத் தலையைக் கொடுக்கவேண்டும். அல்லது அவள் தலை கழுத்தின் மேல் இருக்க, அவள் அவளாக இல்லாமல் இருக்கவேண்டும். முரசடிகளை கவனமாகக் கேட்காவிட்டால் தலையைக் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.

சிக்ஸு-வின் சிந்தனைகளில் ஒன்றைக் கவனிக்கவேண்டும் நாம். ஒருபோதும் அவர் சதிசெய்கிற ஆண் (குழு) X பாதிக்கப்படுகிற பெண் (குழு) என்று ஒரு எளிய வாதத்தை ஆதரிக்கவில்லை. நேரத்தை ஆகவே ஒருவிதத்தில் வரலாற்றைக் கண்காணிக்கிற ஆண்களாகட்டும், தலையைக் காப்பாற்ற ஒழுங்குவிதிகளுக்குக் கட்டுப்படுகிற பெண்களாகட்டும்….இவர்கள் அனைவரையுமே சமுதாயத்தின் நியமவிதிகள் கட்டுப்படுத்துகின்றன. Code, கலாச்சாரத்திலும் சமுதாயத்திலும் நிறுவப்பட்டிருக்கிற code அவையே இங்கே முக்கியம். அவற்றுக்கே இங்கே அதிகாரம்.

(தொடரும்…)

நிஜம்

--கவிதை நீக்கப்படுகிறது--

Friday, April 9, 2010

எட்டு மறுப்புகள் பல இருக்கலாம்கள்

கவிதையை வாசிக்க வரும் நண்பர்களுக்கு,

ஒரு சின்ன மனக்கணக்குடன் தான் இக்கவிதையைப் பதிவேற்றினேன். நூறு பேர் படித்தால் போதும் என்பதே அந்தக் கணக்கு. மற்றபடிக்கு மாஸ் லெவலில் இக்கவிதையைக் கொண்டு செல்லுகிற நற்செய்தி நோக்கமோ இதனால் கவிதை சுட்டிய பெண்—நிலம்—காடு--இயற்கை—உடலிச்சை Vs. ஆண்—மழை—ஆக்கிரமிப்பு--கலாச்சாரம்--அதிகாரம் போன்ற இணைமுரண்களோ மாறிவிடும் என்கிற நம்பிக்கையோ எனக்கு இல்லை. என்னைப் பொறுத்தவரை இந்தக்கவிதை தமிழ்க் கவிதைச்சூழலில் ”பெண்மொழி” என்று நிலவும் சிலபோக்குகளைக் குறித்த ஒரு commentarial gesture. முக்கியமாக பெண் உடல், உறுப்புகளைக் குறிக்கும் சொற்கள் தேய்ந்துபோகிற அளவுக்கு—யோனி என்ற சொல்லில் யோ என்ற எழுத்தின் கால் பாதி காணோமாம்—பயன்படுத்தப்பட்டிருக்கிற ஒரு சூழலில் இந்த gesture, அந்த அளவிலேயே முக்கியம். மேலும், பெண் உடல் பேசுபொருளாகியிருக்கிற அளவுக்கு ஆண் உடல் ஏன் பேசுபொருளாகவில்லை? Object பெண்ணுடலாகவே பெரும்பாலும் இருப்பதும் அதைநோக்கியே எழுத்துகளை வாசிப்பவரின் gaze செயல்படுவதும் எப்படி? இந்த யோசனையும் கூடவே இருந்தது.

கவிதை பதிவேறி இப்பொழுது வரை நூற்றி ஐம்பது ஐ.பி முகவரிகளிலிருந்து வருகைகள் பதிவாகியிருக்கின்றன. போதும். வாசித்தவர்களுக்கும் பின்னூட்டமிட்டவர்களுக்கும் நன்றி.
பெண்-உடல்-மொழி பற்றிய கட்டுரை பகுதிகளில் வெளிவரும். வாசிக்க கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
பெருந்தேவி