Monday, June 30, 2008

8.10

அதிகாலை எழும் சுசித்ரா
ஒவ்வொரு மணி நேரத்தையும்
மூச்சுவாங்க ஏறுவாள்
8.10
ஹேப்பி மணமஹால்
பேருந்து நிறுத்தத்தில் நின்றால்
அலுவலகம் தொடங்கும்போது
அங்கிருக்கலாம்
ஓர் இரவு
தட்டில் கூட கொஞ்சம் சப்ஜி
வைக்கச்சொன்ன
கணவனை ரெண்டு
கெட்டவார்த்தையில் திட்டினாள்
அப்போது
8.10
எண்களின் பரப்பில்
எட்டுக்கும் இரண்டுக்குமிடையே
மூன்றில் நான்கில்
ஐந்தில்
ஆறில் ஏழில்
அவள் கழுத்தை
நெருங்குகிற
இருகரங்களில்
ஒன்றையாவது உடைக்க
ஆசைப்படுகிறாள் தினம்தினம்.

அவநம்பிக்கையின் பிரதி

பொங்கியது கடல்
கண்ணகியை எடுத்ததால்
என்றான் நண்பன் ஸ்டெல்லா
ப்ரூஸ்
உருகிய
வெல்லப்பாகு நிலத்தில்
ஆற்றாமையின் கரும்பாம்புகள்
எழும்புகின்றன
ஊழி முதல்வன்
உருவம்போல் மெய்கருத்த
ஆழிப்பேரலை
என்றவனும் ப்ரூஸ்
தொங்கும் முன்
ஆழி போல் மின்னி
வலமும் புறமும்
நினைத்திருப்பானா
ஒவ்வொரு
நில
நடுக்கமும்
இப்போது
நெஞ்சில் தெறிக்க
அன்றும்
ப்ரூஸ்
மகிழ்ந்தேலோவை
மறந்தே போனான்.

Sunday, June 29, 2008

மூன்று கவிதைகள்

கடைத்தெருவில் குட்டிச்சீதை

குரங்குப்படைகளும்
சீதையும் லட்சுமணனும்
இல்லாமல்
தகர வில்லோடு
ராமன் வேஷமிட்ட குழந்தையைப்
பார்த்தேன் ஒருநாள்
கடைத்தெருவில்.
நீலநிறத்துக்கும்
அட்டைக் கங்கணத்துக்குமிடையே
சொறிந்துகொண்டிருந்தவனுக்கு
காசு கொடுத்துவிட்டு
சீதையைப் பற்றிக் கேட்டேன்.
அம்மாவோடு முறுக்கு சுற்றிக்கொண்டிருப்பதாகச்
சொன்னான் அவன்.
அதே வழியில் அடுத்த நாள்
சீதை வேஷமும்
அனுமானும் எதிரே.
மட்கிய பாவாடை கமகமத்தவளிடம்
ராமன் எங்கே என்றேன்.
இஸ்கூலுக்குப் போய்விட்டானாம்.
ராவணனை விசாரித்ததும்
தெரியலை
என்றுவிட்டு நகர்ந்தாள்.
குச்சிமிட்டாய் வாங்கிக்கொண்டிருந்தது
அனுமான் அப்போது.
சீதை இலங்கையை மறந்தே விட்டாளா
அல்லது
ராவணன் அவர்கள் கதைக்குள்
இன்னும் நுழையவே யில்லையா
என்றெல்லாம் விசாரித்தறிய
வாடா உறுதியோடிருந்தும்
ராவணக் குழந்தையை
இன்றுவரை நான்
பார்க்கவேயில்லை.


********


ஒரு கொள்ளை அன்புக்கும்
சின்னச்சின்ன அன்புகளுக்கும்
வித்தியாசம்
ஒரு மலைமுகட்டிலிருந்தும்
சிலபல உரையாடல்களிலிருந்தும்
குதிப்பதுதான்.

*******


அவா


ஒவ்வொரு கோபத்தையும்
கழற்றி
சலவை செய்து
அலமாரியில் வைத்துவிட வேண்டும்
உடனுக்குடன்.

பிணக்குகளின் மூட்டுகளில்
கால்களாய் பொருந்துபவற்றை
விபத்துகளின் நல்லெண்ணம்
பார்த்துக்கொள்ளட்டும்.


*******

(இந்த மூன்று கவிதைகளும் ”இக்கடல் இச்சுவை” தொகுதியிலிருந்து. காலச்சுவடு வெளியீடு, 2006)

Saturday, June 28, 2008

என்ன பருவம் இது

பூப்பே யில்லாது
போனது வசந்தம்
என்று நீ வருந்தாதே
மனிதர்களுக்காக
என்றுமே இல்லை
பொல்லாத காலம்.
பனிப்பொழுதில் அறிந்தேன் இதை.
பொம்மை
செய்யக் குவித்திட்ட பனியை
அறிவிக்காத சூரியன்
குதித்து உருக்கிவிட்டான்.
வழிப்போக்கர்களுக்கு மட்டும்
பாதியாவது கருணை காட்டுகிறது
பருவம்
வாழ்வைப்போலவே
என்பதால்
குதூகலத்தின் நிரந்திர மாளிகை
எதையும் எழுப்பாதே.
பருவமற்ற பருவத்தில்
வலி தராது
உயிரை வாங்கும்
விபத்து ஒரு மிடறு அருந்த
உன் தண்ணீர் பாட்டில்
எப்போதும் நிரம்பியிருக்கட்டும்.
உனக்குமுன் ஓடட்டும்
உன் கால்சராய்.

ஏன் ஏன்

ஒன்றும் வேண்டாம்
ஊர் அடங்கிவிட்டது
கூண்டில் நின்றுகொண்டே
உறங்குகிறது கிளி.
திரும்பிப் படுக்காத அவளது
படுக்கையின்
இந்தப்பக்கம்
அவள் கடந்துவந்த
பாதை போலும்.
அறையெங்கும்
கடவுளின் கண்ணாய்
கணினியின் ஒளித்திரை
பச்சைச் சிறுதுளி
மின்னி அருளுகிறது
ஏன் ஏன் கைவிட்டீர்
ஒரு துளி
கண்ணீரை
நாளை அவளுக்குத் தாரும்.

E.E. Cummings (2)

மனிதனாய் இருப்பதன் பரிமாணங்கள் (9)

சாவது நல்லது ஆனால் சாவு,
கண்ணே,
எனக்குப் பிடிக்காது சாவு
ஒருவேளை சாவு
நல்லதாயிருந்தால்,
ஏனெனில்
எப்போது நீ (யோசிப்பதை நிறுத்திவிட்டு)
அதை உணரத்தொடங்குகிறாயோ,
சாவு அற்புதமாகிறது
ஏன்? ஏனெ
னில் சாதல்
சரியான இயற்கை; சரியாக
அதை உயிர்ப்பில்
வைக்கும்போது (ஆனால்
சாவு நிச்சயமாக
அறிவியல்பூர்வமானது
செயற்கையானது
தீது
சட்டபூர்வமானது)
நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்
சாதலுக்காக
எல்லாம்வல்ல கடவுளே

(மன்னியுங்கள் எங்களை, வாழ்வே, மரணத்தின் பாவமே)

Thursday, June 26, 2008

புஷ்பா சேலையணிந்த முதல்நாள்

கவிதை நீக்கப்படுகிறது.

இதுவும் அது

மறதி சிறு பறவை
(படபடக்கிறது)
அது எடுத்துவந்த
மயிலிறகு
தொலைத்ததல்ல.

மறதி நல்ல ஒப்பனை
(அழகன்களின்)
கண்ணுக்கு அடியில்
அவலத்தின்
ஆரங்களைக்
காண முடியாது.

மறதி அறைக்குள் அறை
காரணமில்லாமல்
பூத்துக்குலங்கும்
(அதற்குள்)
அற்ப ஆயுள்.

மறதி இன்னொரு பெயர்.

Wednesday, June 25, 2008

நடுச்சாமத்தில்

காற்று சிலசமயம்
சூனியக்காரி
..........................சேகரித்த
கபாலங்களிலிருந்து
அவள் எறிவது
வளைந்த நகைப்பை.
இருள் சிலசமயம்
பிச்சியின்
..........................விழிகள்
அவற்றில்
சுரப்பிக்கின்றன
கேளாத சுவைகளை.
படுக்கை சிலசமயம்
..........................வரையப்படாத கடலின்
எழுச்சி இன்னும்
இரைக்குக் காத்திருக்கும்
பளிங்குச்சுறா
ஒரு அரைவட்டம்.
மாத்திரைகள் சிலசமயம்
..........................முளைவிக்கும்
பொறுப்பான மறுநாளில்
யாரும்
பதிலற்ற சூரியனோடு
உரையாடத் தேவையில்லை.

Sunday, June 22, 2008

தோன்றிய போக்கில்

(இது கட்டுரை அல்ல)

முதல்

மொழி ஒழுங்குக்கும் கலாச்சார ஒழுங்குக்கும் இடையே பிரதிபலிப்புத் தொடர்பு இருப்பது தெரிந்ததே. சில சமயம் கலாச்சார ஒழுங்கைக் கலைக்கும் பிரதிகளில் கூட சொற்களின் அதிகாரப் படிவரிசை (hierarchy) செயல்படுகிற விதம் குறித்து யோசித்தேன். குறிப்பாக, நான் விரும்பிப்படிக்கும் நாகார்ஜுனனின் வலைப்பதிவு (www.nagarjunan.blogspot.com) யூரேக்காவின் மொழிபெயர்ப்பில் பதிவிடப்பட்டிருக்கும் ழார் பத்தேயின் "விழியின் கதை." பகுதி ஒன்றிலிருந்து இங்கே:


"முட்டிமறைக்க கறுப்புநிற பட்டு ஸாக்ஸ் அணிந்திருந்தாள். ஆனால் அவள் #?*# வரை என்னால் பார்க்க முடியவில்லை (அல்குல்-யோனி என்பதற்கெல்லாம் மிக அழகான பெயர் இதுதான் என்பதால் ஸிமோனுக்கென இதையே பிரயோகித்தேன்).

...

என்மீது வைத்த விழி வாங்காமல் அவள் ஸ்கர்ட்டுக்கடியில் எரியும் தன் பிருஷ்டங்களை நான் பார்க்க முடியாதபடி, குளிர்ந்த பாலில் அமிழ்த்தியவாறு அமர்ந்தாள்."


அல்குல்-யோனி போன்ற "அழகான" பெயர்களை கதையே விட்டதில் சந்தோஷம். ஆனால் அது என்ன புxx என்று யோசித்தேன். (இப்போது அவரது பதிவில் புxx வேறு புரியாத குறியீடுகளோடு தென்படுகிறது) ஒருவேளை இணையத்திலும் எதிர்கொள்ளக்கூடிய எழுத்துத்தணிக்கை காரணமாக இந்த xx பதிவிடப்பட்டிருக்குமோ என்று நினைக்கிறேன்.

ஆனால், நெருடுவது இன்னொரு வார்த்தை--"பிருஷ்டம்." (என்னவோ, இதைக்கேட்கையில் "கஷ்டம்" என்ற சொல் முந்திக்கொண்டு மனதில் வருகிறது. :) குண்டி என்கிற வார்த்தைக்கும் "பிருஷ்டம்" என்கிற வார்த்தைக்கும்தான் சொற்களின் படிவரிசையில் எத்தனை தூரம்? இலக்கியத்துக்கும் போர்னோவுக்கும் இருக்கும் தூரம் என்று அது தோன்றவில்லை. "பிருஷ்டம்" என்கிற சொல் பேசுபொருளை செவ்வியதாக மாற்றி விடுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. குண்டி என்கிற சொல் தந்திருக்கக் கூடிய "கவித்துவம்" அற்ற tangible ஆன உணர்வு ஏன் தவிர்க்கப்பட்டிருக்கவேண்டும்? எனக்கு ப்ரென்ச் தெரியாவிட்டாலும், ஆங்கிலத்தில் நான் பத்தேயைப் படித்தவரை, செவ்வியலுக்கு எதிர்ப்புள்ளியில் அவர் எழுத்து செயல்படுவதாக நான் பார்க்கிறேன்.

நிச்சயமாக நாகார்ஜுனன் இதற்கு ஒரு காரணம் வைத்திருப்பார். தெரிந்துகொள்ள ஆவல்.


இரண்டு


போர்னோவுக்கும் போர்னோ இல்லாத இலக்கியத்துக்கும் ஆன வித்தியாசம் குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். உண்மையில் என் முதல் கேள்வி, போர்னோ இலக்கியமாக, இலக்கியத்தின் ஒரு வகைமாதிரியாக (genre) ஆக இருக்க முடியாதா என்ன? போர்னோ vs. இலக்கியம் என்று எதிர்ப்புள்ளிகளில் கட்டமைப்பதே நவீனத்தின் குரலாக இருக்குமோ? கோயில்களில் பார்க்கும் சிற்பங்களைக் கலையாகவும், அசைபடத்துடனான இன்றைய கதைகளை குப்பையாகவும் ஏன் பார்க்கிறோம்? இக்கேள்வியை மதம்/நிறுவனம்/நம்பிக்கை/அங்கீகாரம் சார்ந்தோ, கொச்சைப்படுத்தியோ நான் கேட்கவில்லை.

எனக்குப் புரிந்தவரை: இந்த வித்தியாசத்தை நிறைய சமயங்களில் நாம் படைப்பாளியின்/எழுதுபவரின் "நோக்கத்தோடு" குழப்பிக்கொண்டு விடுகிறோமோ என்று தோன்றுகிறது. பணம்/வியாபாரத்தை முன்வைத்தால் போர்னோ, அறிவு/கலையுணர்வு ஊட்டுவதாக இருந்தால் கலை என்பதுபோல. இல்லாவிட்டால் வாசிப்பவரின் நோக்கத்தோடு சம்பந்தப்படுத்தியும் குழப்பிக்கொள்கிறோம். நேரம் போக்குவதாக இருந்தால் போர்னோ, நுட்பமான உணர்வைப் பெறுவதற்காக வாசித்தால் கலை, இலக்கியம் என்பதுபோல.

இங்கே பிரதியின் செயல்பாடு என்று ஒன்றை எடுத்துக்கொள்ளலாம். வாசிக்கும்போது கட்டமைக்கப்படுவது பிரதி என்று கொள்வோமானால், இத்தகைய வாசிப்பு "நோக்கம்" என்பதைக் கருத்தில்கொள்ளாமல் செயல்படவேண்டும் என்பது என் எண்ணம். செயல்படமுடியுமா?


மூன்று

மூன்றாவது "ஆணாதிக்கம்" பாலியலைப் பேசும் பிரதியில் செயல்படும் முறை. (என் கவிதையொன்றில், தந்தைமை என்ற சொல்லின் பிரயோகத்தைப் பற்றி, அதற்கும் ஆணாதிக்கத்துக்குமான வேறுபாடு பற்றி என் நண்பர்-வாசகர் ஒருவரோடு நான் விவாதித்திருக்கிறேன், அது பின்னொரு பதிவில்)

ஒரு செய்முறைப் பரிசோதனை. இணையத்தில் ஜ்யோவ்ராம்சுந்தருடைய பதிவின் "காமக்கதைகள் 45(6)" அதன் பின்னூட்டங்களும் படிக்கக்கிடைத்தன. http://jyovramsundar.blogspot.com/

சுவாரசியமான கதை. செறிவான பின்னூட்டங்களில் வைக்கப்பட்ட கருத்துகள் கதையில் "ஆணாதிக்ககக்கூறுகள்," "காமத்தின் அதிகாரம்," "சமூகம் அனுமதிக்கும் போர்னோ/சமூகம் விலக்கிய இலக்கியம்" போன்றவற்றைப் பேசுகின்றன. அந்தக்கதையை வாசிக்கும்போது, பாலியல் அதிகாரம் செயல்படுகிறது என்றே எனக்கும் தோன்றியது. ஆனால் எப்படி? என் வாசிப்போடு ஜ்யோவ்ராம்சுந்தரோ மற்றவர்களோ உடன்பட வேண்டிய அவசியமில்லை என்று சொல்லிக்கொண்டு விளையாட்டாக இதை முன்வைக்கிறேன்.

கதையில் முக்கியமான கட்டம் "தெய்வீகக்காதலை" முற்றாக expose செய்யும் "உனக்குத் தங்கத்துலயா செஞ்சிருக்கு, அவ்வளவு கொடுக்க" என்று அதீதன் (என்ன பெயர் இது?) வனஜாவிடம் கூறுமிடம். (பின்னூட்டமிட்டிருக்கும் லக்கிலுக் கூட இந்த இடத்தைக்குறிப்பிட்டிருக்கிறார்.) வனஜா இதைக்கேட்டு அடித்துவிரட்டி விடுகிறாள். ஒருவேளை, கேள்விகேட்கப்பட்ட வனஜா முந்திக்கொண்டு அதீதனைக் கேட்டிருந்தால்: "உனக்குத் தங்கத்துலயா செஞ்சிருக்கு, இந்தப் பணம் கூட வாங்காம நான் உன்கூடப் படுக்க." கதையில் வனஜா தன் ஆட்டத்தை அடித்து ஆடியிருந்தால், கதையின் வாசிப்பு எப்படி மாறியிருக்கும் என்று யோசிக்கிறேன். தங்கத்தில் செய்யப்பட்ட பாலியல் உறுப்புகளின் பொருண்மை சந்தைப்பொருளாதாரத்தோடு அருமையாகப் பொருந்துகிறது.

ஒருவேளை, அதீதன் தங்கம் என்பதற்கு பதிலாக செவ்விலக்கிய கதாபாத்திரம் ஒன்றை வைத்து, உதாரணமாக, வனஜாவிடம் "சத்யவதி மாதிரி உனக்கும் அங்கேயுமா மணக்குது?" என்று கேட்டிருந்தால்?

இது இலக்கியமா, வெறும் "அனுபவ எழுத்தா," கொஞ்சம் பிசகியிருந்தால் போர்னோவகையாக "குறைந்துவிடும்" எழுத்தா.....இக்கேள்விகளுக்கு புறத்தே, வாசித்தபின்னும் விளையாட்டில் ஈடுபடவைத்திருக்கிறது பிரதி என்றுமட்டும் சொல்லுவேன்.

****

Saturday, June 21, 2008

குட்டிப்பன்றியே

புலனுக்குத் தெரியா வெறிநாய்களால்
வேட்டையாடப்பட்டு
குட்டிப்பன்றியாகக் குதறப்படுகிறாய்
என்று சொன்னது பொய்தானே?
நானோ
ஒவ்வொரு நடுஇரவும்
உனக்காகவே ஒரு ஆப்பிளை
கவனக்குறைவாக
உனக்காகவே
கத்தியால் கீறி
சில சொட்டுகளைச்
சிந்துவது தவறாது
கடற்கரை நெடுஞ்சாலையில்
தம்மைப் பிணித்தபடி
செல்லும் காதல்பிணி கொள்ளா
காதலர்கள்
சிரிப்பை அறைகிறார்கள்
முகத்தில்
அந் நேரமும்
ஏன் ஏன்
எதிரே அலங்காரக்கடையின்
வண்ணவிளக்குகளில்
ஒன்றாகத்
தன்னை மாட்டித்திரிகிறது நிலா
அதில் தெரியக்கூடாது
உன் முகம் ஒருபோதும்
என்று
என் விழிப்புலனை
பிய்த்
தனுப்பினால்
நீ
கவனமாகப் பிரித்து
தாயத்தாக
உன் பல்
களில் இடுக்கிக்கொள்
என் குட்டிப்பன்றியே

Monday, June 16, 2008

தூக்கம் விடுபட்ட நாட்குறிப்பில்

மயக்கம் தராத மாலை
இன்றும் வந்தது.
விடியலின் கிரணத்தை
ஸன்ரைஸ் காப்பி விளம்பரத்தில்
அருமையாய் எடுத்திருந்தான்.
இருளின் மின்மினி
எதுவும் சொல்லாமல்
நேற்று பூச்சி கடித்தது.
மடிக்கப்பட்ட
வாசனைமிக்க விரிப்பு
மெத்துமெத்தென்று
தொடைமேல்.
ஸ்வீட்டி
என்னில்
யாரைக்காண்கிறாள்?
நான் காண்கிறேன்
ஸ்வீட்டியின் இமைகளுக்குள்
எல்லோரையும்.
மென்பழமாய் எரிகிற
விடிவிளக்கு
எண்ணூற்றிச் சொச்சத்தை
தின்றுவிட்டது.
மெகாசீரியல் காட்சியில்
வருத்தம்தோய்ந்த
ஒரு கணவன்
உருண்டு படுக்கக்
கற்றுத்தந்தான்
இப்படி இப்படி.

Thursday, June 12, 2008

நல்ல

குருதிகாய்ந்த தம் குதத்தை
இரவுபகல் பாராது
கழுவிவரும் வேசிகளின்
தொழில் அது அல்ல.
காலைமாலை கணக்கின்றி
ஆசைகளின் வியர்வை
ஆறோடி நனைக்கிறது
யாஹ¤ அரட்டை அறைகளை.
நல்ல கணவர்கள்
வெப்காம் பயன்படுத்தமாட்டார்கள்
என்று
நம்பிக்கொண்டிருக்கிறார்கள்
இன்னும் சில பெண்கள்.
நல்ல பெண்மணிகள்
குழந்தையைப் பேணுபவர்கள்
என்று
நம்பிக்கொண்டிருக்கிறார்கள்
இன்னும் சில ஆண்கள்.
நல்ல குழந்தைகள்
கைகளால் எழுதமட்டுமே செய்வார்கள்
என்று
பல ஆண்களும் பெண்களும்.
தொலைக்காட்சித்திரை
அத்தாட்சி வழங்கிய
நல்ல குடும்பத்தின்
ஒரு உறுப்பினர்
கடன்வாங்கப்பட்டவர்
என்று
எய்யப்பட்டு விட்டது
பொறாமைக் கடிதாசி.
எது எப்படியோ
உன் என் மனச்சுவர்களில்
ஒட்டி நகராத பல்லியை
யாரும் இன்னும் நேர்காணவில்லை.

Wednesday, June 11, 2008

வேண்டுதல்

விண்மீன்கள்
அல்லிகளாய் போதவிழும்
இரவில்
எம் தேவமாதாவே
உன் ஒளிர்க்
கன்னமதாய்
அமைதி சிறிதே
காட்டித்தாரும்.
விம்மிவிம்மி நெஞ்சம்
உறைகிற
தன்னுணர்வை
மெழுகுவர்த்திக்கு
இணையாக்கி
உருக்கித்தாரும்.
சுகங்களின் கிளிஞ்சல்கள்
கனவில்
எம் பாதங்களைக்
கிழிக்காதிருக்கட்டும்.
துயரங்களை ஆண்டடக்கிய தாயே
மகனுக்கு உண்டானதை
மகளுக்குத் தாராதேயும்.
இதயமுனதில்
ஏந்திய அம்புகளை
வாரத்தின் நாட்களாக்கிக்கொண்டோம்.
இரவுக்கும் விசனத்தை ஊட்டாதேயும்.
அல்லது
இப்போது
கதவெமதைத் தட்டுவது
ஊழ்வினையல்ல
என்ற உத்திரவாதத்தையாவது தாரும்.

நலம்

முத்தாய்ப்புகள் நிரப்பி வழிகின்றன.
இழப்புக்குத் தயார்செய்யும் விவேகம்
காந்தாரியின் வயிற்றில்
கல்லெனக் கிடக்கும் குழந்தை.
இன்னும் பிறக்கவேயில்லை.
கண்ணாடிகளே சுவரான
காபி ஷாப்பில்
வெகுநேரம் காத்திருந்த
தலைநரைத்துவிட்ட
நட்புக்கு
ஆயுள் இனி அவசியமில்லை
என்று
கோலோடு வந்த குறிக்காரி
சொல்லிவிட்டாள்.
சாமானாக
வாழ்த்து அட்டை
சேர்ந்துவிடுகிறது.
ரோஸ் நிறங்கள்
வடியும் தொண்டையில்
கசப்பு சுவைக்கவில்லை.
நீண்டதொரு
காரிடாரைப் போல
செல்கிறது
ஆரோக்கிய மாலை.

உன்மத்தமே

,
உன் கால் கொலுசாக
என்னை அணியும் முன்
சில வார்த்தை,
ரோஜா நிறத்தின் என் வாந்தியை
முதலில்
நீ நிறுத்துக.
உன் சன்னிதியில்
என் கணனியின் கடவுச்சொல்
யாரையும் காட்டிக்
கொடுக்காதிருக்கட்டும்.
ஒருபோதும்
நினைவூட்டல்களுக்கு
ஆளாகாத
பெயர்களில் ஒன்றாக
சாம்பலின் அடிவாரத்தில்
நான்
உறங்கும் வரமும் கொடு
நீ ஆடி முடித்தபின்.

எதிர்

செல்போன்
ஒளித்திரையில்
உருண்டோடுகிற
நாளைகளின்
அடுத்த வாரங்களின்
மாதங்களின்
அழைப்புகளை
எடுத்துப் பேசிவிட்டேன்.
இனித்து அலுக்கிறது நாவில்
இருவருடங்கள்
கழித்து நடக்கப்போகும்
காதணிவிழா ஒன்றின்
பூந்தித்துகள்.
ஒரு நரைமுடி நீண்டு
இறுகக் கட்டுகிறது
என்
நெஞ்சு நின்றுபோகிறது
நேற்று.

Monday, June 9, 2008

கிளி பத்து: கிறுக்கன்

கவிதை நீக்கப்படுகிறது.

வேறு இனங்கள்

தடுக்கி விழுந்தாயிற்று
தரையானால்தான் என்ன?
ஆயிரம் வேலைகளுக்கு
நடுவிலும்
உன் தாய்
சொட்டுக் கண்ணீராவது
சிந்திக்கொண்டு வரவேண்டும்.
வெகுதூரத்தின்
விண்மீன்களின்
கூட்டம்
கலைந்துவிட்டது
சத்தம்கேட்டு.
கடமைபேணும்
உன் தாயை
ஏன் காணவில்லை இன்னமும்?
என் முலைகள் சொரிகிற
பாலினின்று
பீறிட்டெழுகின்றன
பெரும்புற்றுகள்.
அழுதுகொண்டோடி நீ
வந்தாலும்
விலகியே நடப்பேன்.

விழைகிறேன்

கவிதை நீக்கப்படுகிறது.

Thursday, June 5, 2008

கொஞ்சம் பெரிது

இப்போது செய்துகொண்டிருப்பது: சலிக்காமல் Ph.D ஆய்வேடு எழுதுதல், ஆய்வேடு எழுதுதல், ஆய்வேடு எழுதுதல். உடல்-தன்னிலை தொடர்பு, அம்மை, காலனீய நவீனத்துவம், மாரியம்மன் திருவிழாக்கள்-சரித்திரங்கள், மானுடவியல் மற்றும் மருத்துவ வரலாற்றுப் பிரச்சினைப்பாடுகள் சம்பந்தப்பட்டது ஆய்வு. இருவருடங்களாக கவிதை எழுதும் தருணங்களின் பெரும்பானவற்றை இந்த வேலை சாப்பிட்டுவிடுகிறது. பொதுவாக, எழுதாத நேரத்தில் எல்லாவகையான தமிழ்ப்பாடல்கள் கேட்டல், சமைத்தல், வேலை தேடுதல் (இது பற்றி தனியாக எழுத வேண்டும். American academia-ல் adjunct ஆக இருப்பது கொத்தடிமைக் கொடுமை, அமெரிக்காவின் தலைநகரத்தில் 600 டாலர்கள் மாத வருமானத்தில் சுய இரக்கமின்றி வாழ்வது குறித்து வழிவகைகளை இன்னும் சில காலம் கழித்து என்னால் பகிர்ந்துகொள்ள முடியும்), வாசித்தல்,வகுப்பறையில் கற்பித்தல்-கற்றுக்கொள்ளல் ("ஹிந்து நவீனம்", "உலகின் பெண்தெய்வங்கள்", "சிலப்பதிகாரம்," "பக்தி இலக்கிய மரபுகள்," "பிரபஞ்சம்சார் மதக்கற்பனைகள்"), இன்ன பிற. தேவி மகாத்மியம் தந்த வகுப்பறை அனுபவம் பற்றியும் தனியாக எழுதவேண்டும்.
இதுவரை கடந்து வந்திருப்பவை: வாழ்க்கையில் பதினாறு வருடங்களை அழித்து ஒன்றுமில்லாமல் ஆக்கிய அரசு அலுவலகப்பணி அனுபவம் (சாரு நிவேதிதாவும் ஜெயமோகனும் இதுபற்றி எழுதியவை சத்தியமானவை), ஆழமான பல நட்புத்தருணங்கள்-உரையாடல்கள், மறக்கமுடியாத, ஏன் 'பகுத்தறிவால்' விளங்கிக்கொள்ள முடியாத ஆய்வுக் களப்பணி அனுபவங்கள், மகளிர் சுயசேமிப்புக்குழுக்களில் கிடைத்த பட்டறிவுப் பாடங்கள், தமிழ் கூத்து, நாடக நடிகர்களோடான நெகிழ்ச்சியான சிநேகிதங்கள், இன்னமும் நினைத்து மகிழும் நவீன நாடக ஒத்திகை நாட்கள் மற்றும் நிகழ்த்துதல்கள், சிலபல அபத்தப் பொழுதுகள், மற்றும் பலரும் எதிர்கொண்டிருக்கக்கூடிய துரோகங்கள், அவமானங்கள், பெருமிதங்கள், காதல்கள், உணர்ச்சிப்பெருக்குகள், முட்டாள்தனங்கள் எல்லாமும்.