Saturday, November 21, 2009

அஞ்ஞானம்

மழை எப்பம்மா வரும்?
என் குட்டிப்பையனின் கேள்விக்கு
முந்திக்கொண்டு மாமியார் சொல்கிறார்,
அந்த மேகத்தைப் பார்டா, கொக்குமாதிரி இருக்கு
அண்ணாந்துபார்த்தபடி என் மகன் கேட்கிறான்
மழை எப்பம்மா வரும்?
நான் வாய்திறப்பதற்குள்
பைக்கிலிருந்து இறங்கியபடி
கணவர் சொல்கிறார்,
வராதுடா, பெரிய காத்தடிக்கும்
மேகமெல்லாம் சிதறிப்போயிடும்
அவர் உள்ளேவரும்முன்
அடுக்களையில் நிற்கிறேன்
மழை வருமாம்மா?
விடாமல் மகன் கத்துகிறான்.
இங்கிருந்து மேகம் தெரியலைடா
உரக்கச் சொல்லுகிறேன்
வெளியே நின்றபோது எனக்கு
மேகம் தெரிந்ததா?
எப்ப மழை பெய்யும்
உங்களுக்குத் தெரியுமா?

Friday, November 20, 2009

காரின் கண்ணாடித்துடைப்பான்

இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கத்துக்கு
நகர்ந்து திரும்புமுன்
ஒருநூறு மழைத்துளிகள்
மறைத்தது
பாதையையா விழியையா
களங்கத்துக்கும் வெகுளித்தனத்துக்கும்
இடையே
கணம் நெஞ்சம் நின்றபோதும்
ஒருநூறு இப்படித்தான்
மழை இன்னும் விட்டபாடில்லை.

தோற்றவர்கள்

நாளில் ஒருதரம் கூட தொலைபேசி ஒலிக்காது
காலணிகள் இருந்தாலும் போக ஒரு இடமும் அழைக்காது
விழிகளில் கனவு தெரியாது ஏன் கனவின் அவசியமே இருக்காது
தரையிலேயே இருப்பதால் மேலிருந்து விழுவதன் வலி தெரியாது
ஒரு பூ கவிழ்த்துவைக்கப்பட்டிருப்பதால்
ஒரு நாய் கல்லடிபடுவதால்
முகத்தில் கதவை மூடி அறைவதால்
பதற்றமடைய மாட்டார்கள்.
இருப்பை நியாயப்படுத்த எந்தச் சால்ஜாப்பும்
அல்லது எதிர்கொள்ள எந்தத் தத்துவமும்
தேவையில்லை இவர்களுக்கு.
வராத மின்மடலுக்காக தினம்
பல்விளக்கும்முன்பே கணிணியைத் திறப்பவர்கள்,
தனக்குத் தானே மொபைலில்
மெசேஜ் கொடுத்துக்கொள்பவர்கள்,
ஐநூறு பேரோடு படுத்தும்
ஒருவரையும் நேசிக்கமுடியாமல் அல்லாடுபவர்கள்,
இவர்களைப் போலத் தோன்றினாலும்
இவர்கள் இல்லை.
தோற்றவர்கள் வேதாந்திகளோ
தற்கொலைக்கு முயல்பவர்களோ அல்ல.
கொட்டிநின்ற மழையின் சொட்டும் துளிகளை
அலுப்பூட்டும் லயத்தில் பெற்றுக்கொள்ளும்
தகரக்கூரையைப் போல
அடுத்தவர்களின் ஒவ்வொரு வெற்றியையும்
தமதில்லா வாழ்வில் தாங்கிக்கொள்வதே
இவர்களின் ஒரே அடையாளம்.

Thursday, November 19, 2009

அரண்

வெகுநாள் கழித்து என் அம்மாவை ஆதுரத்தோடும் கண்ணீரோடும் இன்று நினைத்துக்கொள்கிறேன். என் சிறுவயதில் இலக்கியத்தில் என்னைக் கவனம் கொள்ளச் செய்தவள் அவள். நா. பார்த்தசாரதி, அகிலன், ஜெயகாந்தன், கல்கி போன்றவர்களை அறிமுகப்படுத்தியவள். ஜெயகாந்தனைப் பிரேமித்த (அக்காலப் பெண்கள் பலரையும் போல்) வாசகி. கல்கியும் அவளுக்குப் பிடிக்கும். நான்காம், ஐந்தாம் வகுப்புகளில் படிக்கும்போது கல்கியின் பொன்னியின் செல்வனையும் சிவகாமியின் சபதத்தையும் ஏழெட்டு பெண்டிர் கொண்ட ‘சபையில்’ வாரம் சில அத்தியாயங்கள் என்று உரக்க வாசிக்க வைக்கப்பட்டிருக்கிறேன். “வெற்றிவேல் வீரவேல்” என்று கனவில் கூச்சலிட்டு கட்டிலிலிருந்து தரையில் படுத்துக்கொண்டிருந்த அவள்மேல் ஒருமுறை விழுந்துமிருக்கிறேன். மு. மேத்தாவின் கண்ணீர்ப் பூக்களைப் படித்துவிட்டு வரிகளை மடித்து மடித்து கவிதை எழுத முயற்சித்த பள்ளிநாட்களின் என் கிறுக்கல்களின் அபத்தத்தைக் கண்டு சிரித்த முதல்தோழியும் அவள்தான். நான் பார்த்த பல திரைப்படங்கள் (கடைசியாக ஜானி வீடியோ டெக்கில், 1989-ல் அவள் இறக்கும் முன்பு) அவளோடுதான்.

ஆனால் பெற்றோரோடு விலகிவிடும் சந்தர்ப்பம் துரதிர்ஷ்டவசமாக சிலருக்கு நேர்ந்துவிடும். சில காரணங்களால் எனக்கும் என் தாய்க்கும் விலகல் நேர்ந்தது. அதில் ஒன்று, என் இலக்கிய உலகப் பிரவேசத்துக்கு முன்பு, அப்போது நான் கொண்டிருந்த ஒரு நெருங்கிய நட்பு (இனக்கவர்ச்சி?). எதையும் மறைத்ததில்லை அவளிடம், அதையும் கூட. என்னை அந்த உறவிடமிருந்து விலகச்சொல்லி தொடர்ந்து நெருக்கடி கொடுத்துக்கொண்டிருந்தாள். சென்னைக்கு வேலைக்காக வந்தபோது, அந்த நெருக்கடியிலிருந்து தப்பித்த உணர்வுக்குமுன் அவளை விட்டுப் பிரிந்தது கூட எனக்கு உறைக்கவில்லை. அந்த உறவின் அபத்தம் தெரிந்து நான் விலகியபின்னரும்கூட பலவருடங்களுக்கு என் அம்மாவின் மேல் எனக்குக் கோபம் இருந்தது.அவள் இறந்தபின்கூட …. “ஏன் அவள் என்னைப் புரிந்துகொள்ள மறுத்தாள்?” அவளது இலக்கிய ஈடுபாடு, மனித உறவுகளில் அவள் காட்டிய பக்குவம் இவற்றின் மீதான மரியாதையும் நழுவிப்போன தருணம் அது.

எந்த ஒரு உறவோடும் சாவோடும் எதுவும் நிற்பதில்லையே. வேறுபல அபிமானங்கள், ஏமாற்றங்கள், அபிலாஷை ஈடேற்றங்கள் எனப் பலசக்கரத்தில் சுழன்றாடியபடிதான் காலமும் செல்கிறது. ஆனால், தலையில் ஆணி இறங்கியதுபோல எதிர்பாராதபடிக்கு ஒரு தகவல் என்னை அடைந்தது சமீபத்தில். அந்த உறவு தொடர்ந்திருந்தால் என் வாழ்க்கை எப்பேர்ப்பட்ட இருள்குகையில் முடிந்திருக்கும் என்பது தீர்மானமாகத் தெரிந்தவேளை அது. ராட்சதர்களின் குகையில் கதவு ஒரு கணம் நம்மை உட்கொண்டு வெளிவிட்டதை நாமே அறியாமல் பலகாலம் சென்று அறிந்தோமானால் எப்படி இருக்கும்? அதுவும் நாளேடுபோன்ற ஒன்றிலிருந்து அதைத் தெரிந்துகொண்டால்? பயங்கரத்திலிருந்து தப்பிக்கவைத்த ஏதோ ஒரு கருணையின் செயல் காலம்சென்று அர்த்தமாவதுகூட அந்தக் கருணையின் அதீதமாகத்தான் இருக்கமுடியும் என்று நினைக்கிறேன். என் அம்மா அவள் அறிந்தோ அறியாமலோ கருணையின் ஒளிக்கீற்றை எனக்கு ஈந்திருக்கிறாள். பலவருடங்களாக என்னில் உறைந்த ஆதங்கம் காயத்தின் வடு அல்ல, பாதுகாப்பின் முத்திரை என இப்போது புரிகிறது. என் அம்மாவோடு முழுக்கச் சமாதானமாகிவிட்டேன். இதைவிட வேறென்ன எனக்கு வேண்டும்?

Friday, October 23, 2009

எப்படி இருக்கீங்க?

உரையாடலின் ஒரே நேர்த்திக்குப்
பின்
ம், ம்ம், சரி, அப்புறம்,
பேச ஏதுமில்லை
வைன் க்ளாஸில்
ஒரு ஈ துடிக்கிறது
ஆன்மாவை
கழுவி எடுத்து அணியமுடியவில்லை
ஒரு நாயைப் போல
ஞாபகம்
குரைத்துக்கொண்டிருக்கிறது
நேரமாகிவிட்டது
இன்னமும் எதுவும்
மன்னிக்கப்படவில்லை
இருள்மூலையில்
கடைசிவரையில்
காத்திருக்கும்
நப்பாசைக்கு
நான் என்று பெயர்.

வேறு பயணங்கள்

இன்று ரயில் நிலையத்தில் மின்படிக்கட்டில் ஒரு அ
ழகன் ஏறப் பார்த்தேன்.
வெளிவந்தான்.
தொடர்ந்தேன்
இருடாலர்கள் கொடு என்றான் கொடுத்தேன்
அப்போது கவனித்தேன்
அவன் மூக்காக
ஒரு பிளாஸ்டிக்
மடிந்து இருந்ததை.
இன்று ரயில் நிலையத்தில் மின்படிக்கட்டில் ஒரு அ
ழகன் ஏறப் பார்த்தேன்.
வெளிவந்தான்.
தொடர்ந்தேன்.
இரு டாலர்கள் கொடு என்றேன்.
அப்போது கவனித்தான்
என் பிளாஸ்டிக்
ஒரு மூக்காக
மடிந்து இருந்ததை.

Monday, September 21, 2009

ஞாபகம் சிலபல

வாயில் மேலண்ணத்தில்

ஒட்டிக்கிடக்கும்

சாரமற்ற சுயிங்கம்.

எங்கோ விழுந்துவிட்டிருக்கிறது நாக்கு.