Friday, November 20, 2009
Thursday, November 19, 2009
அரண்
வெகுநாள் கழித்து என் அம்மாவை ஆதுரத்தோடும் கண்ணீரோடும் இன்று நினைத்துக்கொள்கிறேன். என் சிறுவயதில் இலக்கியத்தில் என்னைக் கவனம் கொள்ளச் செய்தவள் அவள். நா. பார்த்தசாரதி, அகிலன், ஜெயகாந்தன், கல்கி போன்றவர்களை அறிமுகப்படுத்தியவள். ஜெயகாந்தனைப் பிரேமித்த (அக்காலப் பெண்கள் பலரையும் போல்) வாசகி. கல்கியும் அவளுக்குப் பிடிக்கும். நான்காம், ஐந்தாம் வகுப்புகளில் படிக்கும்போது கல்கியின் பொன்னியின் செல்வனையும் சிவகாமியின் சபதத்தையும் ஏழெட்டு பெண்டிர் கொண்ட ‘சபையில்’ வாரம் சில அத்தியாயங்கள் என்று உரக்க வாசிக்க வைக்கப்பட்டிருக்கிறேன். “வெற்றிவேல் வீரவேல்” என்று கனவில் கூச்சலிட்டு கட்டிலிலிருந்து தரையில் படுத்துக்கொண்டிருந்த அவள்மேல் ஒருமுறை விழுந்துமிருக்கிறேன். மு. மேத்தாவின் கண்ணீர்ப் பூக்களைப் படித்துவிட்டு வரிகளை மடித்து மடித்து கவிதை எழுத முயற்சித்த பள்ளிநாட்களின் என் கிறுக்கல்களின் அபத்தத்தைக் கண்டு சிரித்த முதல்தோழியும் அவள்தான். நான் பார்த்த பல திரைப்படங்கள் (கடைசியாக ஜானி வீடியோ டெக்கில், 1989-இல் அவள் இறக்கும் முன்பு) அவளோடுதான்.
ஆனால் பெற்றோரோடு விலகிவிடும் சந்தர்ப்பம் துரதிர்ஷ்டவசமாக சிலருக்கு நேர்ந்துவிடும். சில காரணங்களால் எனக்கும் என் தாய்க்கும் விலகல் நேர்ந்தது. அதில் ஒன்று, என் இலக்கிய உலகப் பிரவேசத்துக்கு முன்பு, அப்போது நான் கொண்டிருந்த ஒரு நெருங்கிய நட்பு (இனக்கவர்ச்சி?). எதையும் மறைத்ததில்லை அவளிடம், அதையும் கூட. என்னை அந்த உறவிடமிருந்து விலகச்சொல்லி தொடர்ந்து நெருக்கடி கொடுத்துக்கொண்டிருந்தாள். சென்னைக்கு வேலைக்காக வந்தபோது, அந்த நெருக்கடியிலிருந்து தப்பித்த உணர்வுக்குமுன் அவளை விட்டுப் பிரிந்தது கூட எனக்கு உறைக்கவில்லை. அந்த உறவின் அபத்தம் தெரிந்து நான் விலகியபின்னரும்கூட பலவருடங்களுக்கு என் அம்மாவின் மேல் எனக்குக் கோபம் இருந்தது.அவள் இறந்தபின்கூட …. “ஏன் அவள் என்னைப் புரிந்துகொள்ள மறுத்தாள்?” அவளது இலக்கிய ஈடுபாடு, மனித உறவுகளில் அவள் காட்டிய பக்குவம் இவற்றின் மீதான மரியாதையும் நழுவிப்போன தருணம் அது.
எந்த ஒரு உறவோடும் சாவோடும் எதுவும் நிற்பதில்லையே. வேறுபல அபிமானங்கள், ஏமாற்றங்கள், அபிலாஷை ஈடேற்றங்கள் எனப் பலசக்கரத்தில் சுழன்றாடியபடிதான் காலமும் செல்கிறது. ஆனால், தலையில் ஆணி இறங்கியதுபோல எதிர்பாராதபடிக்கு ஒரு தகவல் என்னை அடைந்தது சமீபத்தில். அந்த உறவு தொடர்ந்திருந்தால் என் வாழ்க்கை எப்பேர்ப்பட்ட இருள்குகையில் முடிந்திருக்கும் என்பது தீர்மானமாகத் தெரிந்தவேளை அது. ராட்சதர்களின் குகையில் கதவு ஒரு கணம் நம்மை உட்கொண்டு வெளிவிட்டதை நாமே அறியாமல் பலகாலம் சென்று அறிந்தோமானால் எப்படி இருக்கும்? அதுவும் நாளேடுபோன்ற ஒன்றிலிருந்து அதைத் தெரிந்துகொண்டால்? பயங்கரத்திலிருந்து தப்பிக்கவைத்த ஏதோ ஒரு கருணையின் செயல் காலம்சென்று அர்த்தமாவதுகூட அந்தக் கருணையின் அதீதமாகத்தான் இருக்கமுடியும் என்று நினைக்கிறேன். என் அம்மா அவள் அறிந்தோ அறியாமலோ கருணையின் ஒளிக்கீற்றை எனக்கு ஈந்திருக்கிறாள். பலவருடங்களாக என்னில் உறைந்த ஆதங்கம் காயத்தின் வடு அல்ல, பாதுகாப்பின் முத்திரை என இப்போது புரிகிறது. என் அம்மாவோடு முழுக்கச் சமாதானமாகிவிட்டேன். இதைவிட வேறென்ன எனக்கு வேண்டும்?

Subscribe to:
Posts (Atom)