நவீன விருட்சம் நூறாவது இதழில் (2016) வெளிவந்திருக்கிறது. இதழுக்கும் ஆசிரியர் அழகியசிங்கர் அவர்களுக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.
(புதுமைப்பித்தன் நினைவு தினம் ஜூன் 30, 2015 அன்று சென்னையில்
பனுவல் புத்தக நிலையத்தில் பேசியதின் கட்டுரை வடிவம்)
புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் என்னை மிகவும் ஈர்த்தது
காஞ்சனை சிறுகதைதான். அந்தச் சிறுகதைக்கு என் வாழ்வில் முக்கிய இடமுண்டு. 1995-ஆம்
ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தக் கதையைப் பற்றி திரு. நாகார்ஜுனன் அவர்களுடன்
பேசிக்கொண்டிருந்தபோது “இதைப் பற்றி நீங்கள் ஒரு கட்டுரை எழுதவேண்டும்” என்று
கூறினார். ஒரு கட்டுரையும் எழுதினேன் அப்போது வந்துகொண்டிருந்த 'வித்யாசம்' இதழுக்கு. நவீன இலக்கியம் குறித்த கட்டுரைகளில் நான் எழுதிய முதல் கட்டுரையே
அதுதான். ஆனால் 'வித்யாசம்' தொடர்ந்துவரவில்லை, நின்றுவிட்டது. கட்டுரையும்
காலத்தின் காற்றில் எங்கோ அடித்துச்செல்லப்பட்டு ஒதுங்கிவிட்டது. இப்போது
எங்கிருக்கிறது என்றுகூட தெரியவில்லை. என்ன கருத்துகளை அந்தக்கட்டுரையில்
வைத்திருந்தேன் என்பது நினைவில் நிழலாகக்கூட இல்லை. ஆனால் அதற்குப்பிறகு அதே
காலகட்டத்தில் புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் மற்றும் அகல்யை ஆகியவற்றில்
இயல்மொழித்தன்மை குறித்த என் கட்டுரை காலக்குறி இதழில் வெளிவந்தது. இன்றைக்கு, கிட்டத்தட்ட
இருபதாண்டுகளுக்குப் பின்னர் செந்திலின் தொலைபேசி அழைப்புக்குப்பின்னர் காஞ்சனையை
மீண்டும் எடுத்து வாசித்தபோது அதன் சுவாரசியம் சிறிதும் குறைவுபடாமலிருந்தது.
செண்பகமலரின் மணம் போல எண்ணத்தில் பரவிய சுவாரசியம். ஏன் இந்தக்கதை இன்றைக்கும்
இவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது, அப்படி என்னதான் செய்திருக்கிறார் இக்கதையில்
புதுமைப்பித்தன் என்ற கேள்விகளிலிருந்து விளைந்ததுதான் இக்கட்டுரை.
காஞ்சனையை வாசிக்கும்போது உடனடியாகக் கவனத்தில் வந்தது
அதன் சட்டகக் கதையாடல்பாணி (framed narrative style). இந்தக்கதையாடல் பாணி நவீனத்துவ
இலக்கியப் பண்புகளை முன்னிலைப்படுத்திச் செயல்பட்டிருக்கிறது. இந்தப்பண்புகள் என்ன
என்று பேசுவதற்கு முன்னால் இந்தச் சட்டகக் கதையாடல் பாணியை சற்று ஆராயலாம்.
காஞ்சனை கதையின் நடுவில் நிலைக்கண்ணாடி பற்றிய விவரணையொன்று வருகிறது. கதைசொல்லி
வீட்டின் முன்கூடத்தில் அமர்ந்திருக்கிறார். பின்னறையொன்றில் அவரது மனைவியும்
அவர்கள் வீட்டில் அன்றைக்கு வேலைக்குச் சேர்த்த வேலைக்காரியும்
பேசிக்கொண்டிருக்கிறார்கள். நடுக்கூடத்தில் ஒரு கண்ணாடி. அதில் அவர்களின்
முகங்களைக் கதைசொல்லியால் காணமுடிகிறது. வேலைக்காரி மனைவிக்குக் கதையொன்றைச்
சொல்கிறாள்.
“அங்கே, காசியிலே ஒரு கதையைக் கேட்டேன்;
உனக்குச் சொல்லட்டா?” என்றாள்
“சொல்லேன்; என்ன கதை?” என்று கேட்டாள் என்
மனைவி.
“அஞ்சுநூறு வருசமாச்சாம். காசியிலே ஒரு
ராசாவுக்கு ஒத்தைக்கொரு மக இருந்தா. பூலோகத்திலே அவளெப்போல அளகு தேடிப்பிடிச்சாலும்
கெடக்காதாம். அவளெ ராசாவும் எல்லாப் படிப்பும் படிப்பிச்சாரு. அவளுக்குக் குருவா
வந்தவன் மகாப் பெரிய சூனியக்காரன். எந்திரம், தந்திரம், மந்திரம் எல்லாம்
தெரியும். அவனுக்கு இவமேலே ஒரு கண்ணு. ஆனா இந்தப் பொண்ணுக்கு, மந்திரி மவனெக்
கட்டிக்கிடணும்னு ஆசை”
“இது அவனுக்குத் தெரிஞ்சுபோச்சு; யாருக்குத் தெரிஞ்சுபோச்சு?…அந்தக்
குருவுக்கு.”
கதையின் இந்தக்கட்டத்தில் நிலைக்கண்ணாடி குரூரமான
அச்சுறுத்தும் முகத்தைக் காட்டுவதாக வருகிறது. புராணத் தொன்மம், நாட்டார்கதை
வகைப்பட்டது இந்தக்காசி இளவரசியின் கதை. காஞ்சனையில் முக்கியமான கதையாடல்கூறாக,
உள்சட்டகமாக வருகிறது இக்கதை. நடுக்கூடத்திலிருக்கிற நிலைக்கண்ணாடி
விவரணையிலிருந்து இந்த இளவரசிக்கதை தொடங்கினாலும், இக்கதையே ஒருவகையில்
கதையாடல்மொழியில் நடக்கும் பிம்ப விளையாட்டுதான். ஏனெனில் இந்தக்கதையை வேலைக்காரி
சொல்ல, அதைக் கேட்டுக்கொண்டிருக்கும் கதைசொல்லி இதே கதையை தன் கையிலிருக்கும்
ஆங்கிலச் சரித்திரப் புத்தகத்தில் வாசித்துக்கொண்டுமிருக்கிறார். “அந்த மந்திரவாதிக்கு அது தெரிந்துவிட்டது” என்ற
வாக்கியத்தை வாசிக்கும்போது அதையே தெரிவிக்கும் வாக்கியத்தைக் கேட்கவும்
செய்கிறார். செவிப்புலனும் கட்புலனும் ஒரேநேரத்தில் எதிர்கொள்கிற தகவலாக
இருக்கிறது அது.
நாட்டார் கதை அல்லது புராணமாக கதைக்குள் கதையாக வருகிறது
வேலைக்காரியால் சொல்லப்படுகிற காசி இளவரசியின் கதை. இந்த உள்சட்டகத்துக்கு அடுத்த
சட்டகம் கதைசொல்லி வாசிக்கிற சரித்திர புதினம். இந்தச் சட்டகத்துக்கும் அடுத்த உள்
சட்டகமாக அவர் மனைவி, வீடு இவையெல்லாம் வருகிற everyday life என்கிறோமே அப்படியான
எழுத்தாளக் கதாபாத்திரத்தின் தினவாழ்க்கை பற்றிய புனைவு பின்னப்படுகிறது. ஆக,
இந்தப் புனைவு மூன்றாவது சட்டகம்.
இந்தச் சட்டகங்கள் அவற்றுக்கேயுரிய சொல்லாடல் மரபுகளோடும்
சுட்டுதல்களோடும் கதையில் வருகின்றன. நாட்டார் கதை தனக்கே உரித்தான வழக்கமான
தொடக்கத்தோடு இருக்கிறது. ”காசியிலே ஒரு கதையைக் கேட்டேன். உனக்குச் சொல்லட்டா?”
என்பது அந்தத்தொடக்கம். “முன்னொரு காலத்திலே” அல்லது “அந்தக்காலத்திலே”
என்பதுபோன்ற நாட்டார் கதைகூறு முறையின் மரபான தொடக்கம் அது. Signature beginning
of folk narrative என்று இதைச் சொல்லலாம். இந்தத்தொடக்கம் இக்கதையை அடுத்த
வெளிச்சட்டகமான வரலாற்றெழுத்திலிருந்து வேறுபடுத்துகிறது, பிரித்துக்காட்டுகிறது.
அடுத்ததாக வரலாற்றெழுத்து. இது தெளிவாகவே புத்தகப் பெயரோடு
அடையாளப்படுத்தப்படுகிறது. “சரித்திர சாசனங்கள்” என்கிற புத்தகத்தை கதைசொல்லி
முன்னறையில் உட்கார்ந்தபடி வாசிப்பதாக வருகிறது. வாய்மொழிப்புராணம், சரித்திர
எழுத்து, இவற்றுக்கு அடுத்து மூன்றாவதாக இவையெல்லாம் புழங்குகிற எழுத்தாளரின்
தினவாழ்க்கை. பலரும் வாழ்வதைப்போன்ற சாதாரண வாழ்க்கைதான் அது என்பதுபோல
எழுந்திருத்தல், பல்துலக்குதல், காப்பி குடித்தல், சமைத்தல் போன்ற அன்றாட
நடவடிக்கைகள் சித்தரிக்கப்படுகின்றன.
ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்படுகிற சட்டகப்புனைவுகள்
அப்படியே விட்டுவைக்கப்படுவதில்லை. இந்தச் சட்டகங்கள் எல்லாம் ஒன்றோடொன்று
பின்னியும் ஏன் கொஞ்சம் குழம்பியும் வாசகரிடத்தில் தரப்படுகின்றன. உதாரணத்துக்கு
இப்படிக் கற்பனை செய்யுங்கள். ரோஜா வண்ணத்தில் வரையப்பட்டிருக்கும் ரோஜா மலரின்
ஓவியம் போல ஒரு வடிவ வண்ணம் தெரிகிறது. கூடவே அடுத்து நீலம், வயலட் நிறக்
கோலங்களும் கண்ணுக்குப்படுகின்றன. இந்த ஓவியத்தின் அடுத்தடுத்த சட்டகங்களாக இவை
இருக்கலாம். போலத் தெரிகிறது, இருக்கலாம் என்றுதான் யோசிக்கிறோம். ஏனெனில் மலரின்
நிறமும் வடிவமும் சட்டகங்களின் நிறங்களிலும் வடிவத்திலும் ஊடுருவி, சட்டகங்களின்
வடிவங்களிலும் நிறக்கோலங்களிலும் இயைந்து கலந்துவிடுவதைப்போல ஒன்றை நான்
குறிப்பிடுகிறேன். இப்படி வடிவங்களும் வகைமைகளும் கலந்தும் குழம்பியும் உருவான
அழகியலின் வார்ப்பு காஞ்சனை.
“காஞ்சனைன்னுதான்
கூப்பிடுங்களேன். கதலெ வர்ற காஞ்சனை மாதிரி” என்று கூறுகிறாள் வேலைக்காரி. கதையின்
கடைசியில், மந்திரவாதி “காஞ்சனை இனி மேல் வரமாட்டாள்” என்று அவள் காஞ்சனைதான்
என்று அவள் அடையாளத்தை உறுதிப்படுத்துகிறான். புராணச் சொல்லாடல், சரித்திரத்தின்
பக்கங்கள், தற்கால வாழ்வு. இவை அனைத்திலும் ஒரே நேரத்தில் இருக்கக்கூடிய
கதாபாத்திரங்கள் காஞ்சனையும் மந்திரவாதியும். அல்லது ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு
கணத்தில் சென்றுவிடக்கூடியவர்கள். புராணம், சரித்திரம், தற்கால வாழ்வு இவை
எல்லாவற்றின் எல்லைகளையும் இந்தக் கதாபாத்திரங்கள் கலைத்துப்போட்டுவிடுகிறார்கள்.
கூடவே இவற்றை இவ்வாறெல்லாம் பிரித்துப்பார்க்கிற நம் அறிதல்
அணுகல்முறைகளையும்தான்.
சொல்லப்போனால் சட்டகக்கதைகள் தமிழ் மரபுக்கோ
சம்ஸ்கிருத மரபுக்கோ அல்லது பிற இந்திய மொழிகளின் மரபுகளுக்கோ புதிதல்ல. உதாரணமாக,
குணவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்த குடக்கோ சேரல் இளங்கோ அடிகளின் வாழ்க்கை
வரலாறு சிலப்பதிகாரத்தில் சுட்டப்படுவதைச் சொல்லலாம். அதேபோல ராமாயணத்தின்
உத்தர காண்டத்தில் வால்மீகியால் கற்றுத்தரப்பட்ட ராமாயணத்தை ராமனின் பிள்ளைகள்
அவனிடமே பாடிக்காட்டுவது சட்டகக்கதைக்கு ஒரு சான்று. கதையாடல்கள் தம்மைத் தாமே பரிசீலித்துக்கொள்ளல், பிரதிபலித்துக்கொள்ளல் என்று சட்டகப்பாணியைக் குறித்து
அறிஞரும் கவிஞருமான ஏ.கே. ராமானுஜன் குறிப்பிடுவார். புதுமைப்பித்தனின் கதையில்
கதாபாத்திரமான காஞ்சனை அவள் கதையை அவளே சொல்வதாக விவரிக்கப்படுகிறது.
இங்கே இந்தச் சிறுகதையில் நவீனச் சொல்லாடலின் பங்கு என்ன என்று
பார்த்தால், பொதுவாக மரபார்ந்த கதையாடல்களில் நாம் காணும் தொடக்கம், ஒரு சிக்கல்
அல்லது பிரச்சினை, அதன் உச்சக்கட்டம், அதற்கான தீர்வு என்கிற பாணி என்பது
இச்சிறுகதையில் இல்லை என்பதுதான். இந்தப் பாணியை சிறுகதை தெளிவாக மீறுகிறது.
யோசித்துப்பாருங்கள். காசி இளவரசியின் கதையின் முடிவு சிறுகதையில்
சொல்லப்படுவதேயில்லை. “அந்த மந்திரவாதிக்கு அது தெரிந்துவிட்டது” என்கிற
வாக்கியத்தோடு உள்சட்டகக்கதைகூட முடிந்துவிடுகிறது. சிக்கலின் உச்சகட்டத்தில் என்ன
நடந்ததென்று தெரியாத ஓர் ஓட்டை, ஒரு குழப்பம் ஓர் அந்தரம். இளவரசியின் காதலை
அறிந்துகொண்ட மந்திரவாதி என்ன செய்தான்? காதலர்களுக்கு என்னதான் ஆனது? கதையில்
இவைகள் வெளிப்படுத்தப்படுவதில்லை. சரி, இரவில் சேமக்கலம் முழங்க எழுத்தாளரின்
வீட்டுக்குவந்த அந்த மந்திரவாதி. யார் அவன்? காசியில் இளவரசியின் குருவா? அல்லது
வேறொருவனா? காஞ்சனை தப்பித்தபடியே இருக்கிறாள் என்பது காதலின் நிரந்தரத்தைக்
காட்டுகிறது என்றால் அவள் பிடிபட்டபடியே இருப்பது அதன் கையறுநிலையைக் காட்டுகிறதா?
ஏன் சேமக்கலத்து விபூதி சுடுகிறது? சுடலைச்சாம்பலோ அது? தன்னிடமிருந்து தப்பித்த காஞ்சனையை
தேடிவந்த மந்திரவாதியா அவன்? அந்த வீட்டிலிருந்து காஞ்சனையை அப்புறப்படுத்துவது
எங்கே கொண்டுசெல்ல? ஒருவேளை தற்காலத்திலிருந்து அப்புறப்படுத்தி புராணத்துள்ளும்
சரித்திரத்துள்ளும் இக்கதாபாத்திரங்களைச் சிறைப்படுத்திவைக்க புதுமைப்பித்தனால்
கையாளப்பட்டிருக்கும் கதையாடல் உத்தியா இது? இப்படிப் பல கேள்விகள்.
இவற்றையெல்லாம் நாமே யோசித்துக்கொள்ள வேண்டியதுதான்.
புதுமைப்பித்தன் மணிக்கொடியில் 1932- ஆம் ஆண்டு வெளிவந்த
“சிறுகதை” என்று தலைப்பிட்ட சிறு கட்டுரையில் இப்படி எழுதுகிறார்: ”வேறொரு விதமான
கதைகளும் உண்டு. அவற்றில் முடிவு என்ற ஒன்றுகூட கிடையாது. அதாவது கதையை வாசிப்பது
நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல். இப்படிப்பட்ட கதைகள்
முடிந்தபிறகுதான் ஆரம்பமாகிறது என்றால் விசித்திரவாதமாகத் தோன்றும். ஆனால் அதுதான்
உண்மை. இம்மாதிரியாகக் கதை எழுதுகிறவர்கள் இந்த முறையின் சார்பாகக் கூறும் வாதம்
ஒன்று: வாழ்க்கையில் முற்றிற்று, திருச்சிற்றம்பலம் என்று கோடு கிழித்துவிட்டு
ஹாய்யாக நாற்காலியில் சாய்ந்துகொள்ளும்படி ஏதாவது இருக்கிறதா?” புதுமைப்பித்தன்
கூறுவதற்கொப்ப காஞ்சனையின் கதை வாசிக்கையில் வாசித்தபின்னும் எழுப்பும் கேள்விகளை
கதை நம்முள் தொடர்வதாகவே புரிந்துகொள்ள முடியும். இவை போன்ற கேள்விகளின் வாயிலாக
முடிவற்ற பிரதியாக இச்சிறுகதை வாசகர் மனதில் உருவாகியபடி இருப்பதே இந்தக்கதையின்
ஆகப்பெரிய வெற்றி.
காஞ்சனை சிறுகதை கதை நிகழ்வுகளைத் தாண்டியும் நம் சிந்தனையின்
சலனத்தைத் தூண்டுவதாகவே உள்ளது. சுற்றியிருக்கும் புற உலகைத் தொடர்ந்து கவனித்து
கணக்கிட்டு, அதன்மூலம் தன்னை, தன் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் மனித சுயத்தை,
தெகார்தே போன்ற தத்துவ அறிஞர்கள் முன்வைத்த அத்தகையதொரு மனித சுயத்தைக்
கேள்விக்குள்ளாக்குகிறது இந்தச் சிறுகதை. சுருக்கமாகச் சொன்னால், இந்த யதார்த்த
அல்லது புற உலகை, இங்கே நேர்கிற அனுபவங்களை, மனித சுயத்தை அதன் அறிதலை மையமாக
வைத்து ஒரு எண்ண ஒழுங்குக்குள் அல்லது தர்க்க ஒழுங்குக்குள், ஒரு
சேர்மானத்துக்குள் கொண்டுவர முடியும் என்பதைச் சந்தேகிக்கிறது. தன்னுறுதி (self
affirmation) குறித்த இத்தகைய சந்தேகமே இந்தக்கதை ஏற்படுத்துகிற முதன்மையான
சிந்தனைச் சலனம். கதையில் ஓரிடத்தில்
இப்படி வருகிறது:
என்னைப் போன்ற ஒருவன், ஜன சமுதாயத்துக்காக இலக்கிய சேவை
செய்கிறேன் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு மனப்பால் குடித்துக்கொண்டிருக்கும்
ஒருவன் “ஸார், எங்கள் வீட்டில் புதுசாக ஒரு பேய் குடிவந்துவிட்டது; அது என்
மனைவியை என்ன செய்யுமோ என்று பயமாக இருக்கிறது; ஆபத்தைப் போக்க உங்களுக்கு ஏதாவது
வழி தெரியுமா?” என்று கேட்டால் நான் நையாண்டி செய்கிறேனா அல்லது எனக்குப்
பைத்தியம் பிடித்துவிட்டதா என்றுதான் சந்தேகிப்பான். யாரிடம் இந்த விவகாரத்தைச்
சொல்லி வழி தேடுவது?
கதாபாத்திரத்தின் இந்த அல்லாட்டம் நவீனத் தன்னிலையின் அல்லாட்டமும்கூட.
சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் நமக்குப் பழக்கமான, முறைப்படுத்தப்பட்ட
பார்வைக்குள் கொண்டுவரமுடியாத அல்லாட்டம், அவற்றை தன்னிடம் தானே
பிரதிநிதித்துவப்படுத்திக்கொள்ள முடியாத அல்லாட்டம் அது. புதுமைப்பித்தனிடம்
வாசகர் ஒருவர் எழுப்பிய காஞ்சனை பற்றிய கேள்வியொன்றுக்கான பதிலிலும் இந்த
அல்லாட்டம் அங்கதச்சுவையோடு வெளிப்படுகிறது: ”என் கதைகள் எதுவானாலும் அதில் அழகு காணுகிற
நண்பர் ஒருவர் இந்தக்காஞ்சனைக் கதையைப் படித்துவிட்டு என்னிடம் வந்து ’உங்களுக்கு
பேய்ப்பிசாசுகளில் நம்பிக்கை உண்டா? ஏன் கதையை அப்படி எழுதினீர்கள்?’ என்று கேட்டார்.
நான், ‘பேயும் பிசாசும் இல்லை என்றுதான் நம்புகிறேன். ஆனால் பயமாக இருக்கிறதே’
என்றேன்.” என்று காஞ்சனை உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்பு நூல் முன்னுரையில்
எழுதுகிறார் புதுமைப்பித்தன்.
இத்தகைய அல்லாட்டத் தருணங்களை நாமே கூட எதிர்கொண்டிருக்கலாம்.
சிலவருடங்களுக்குமுன் இதே போன்ற ஒரு அல்லாட்டம் எனக்கு ஏற்பட்டது. காஞ்சனை போலவே
வீட்டில் வேலைசெய்ய வந்த ஒருவரால், ஒருவரோடு வினோதமான அனுபவங்கள் எனக்கும் என்
தந்தைக்கும் ஏற்பட்டது. அந்தச் சில மாதங்களில் காஞ்சனை மீண்டும் மீண்டும்
மனதிலோடாத நாளே இல்லை எனலாம். பயமும் புரியாமையும் சூழந்த அந்த நாட்களை நகைச்சுவை
உணர்வோடும் அடக்கத்தோடும் கடந்து மீள காஞ்சனை எனக்கு உதவியது. அந்தக்காலகட்டத்தில்
உற்ற நண்பராகவும் துணையாகவும் இருந்தது இச்சிறுகதை என்பதை நான் குறிப்பிடவேண்டும்.
எனக்கேற்பட்ட இந்த வாழ்வனுபவம் ஒரு வாசகராக காஞ்சனையை நான்
அர்த்தப்படுத்திக்கொள்ளும்வகையில் பிரதியோடு உணர்வுபூர்வமான ஒரு நெருக்கத்தையும்
உருவாக்கித்தந்தது. புதுமைப்பித்தன் மீதான எழுத்துக்காதல் மேலும் மேலும் ஆழமாக என்
எண்ணத்தில் அந்நாட்களில் வேர்விட்டது எனலாம். இந்தக் கட்டுரை ஒருவகையில் என் உணர்வுகளின்
பிரதிபலிப்பும் ஆகும்.