Wednesday, December 2, 2009

சொல்பொருள் நியதி

வேண்டாத சொல்லின் கருநிழல்
பொருளின்மேல் படிவது இப்படித்தான்:
பொருளைச் சொல் துரத்திச் செல்லும்போது
(நேற்றை, சென்ற வருடத்தை, போன ஜென்மத்தை
நினைவுகூறும்போது,
நினைவு நினைவைக்
கோரும்போது)
ஒரு பொருள் உனக்கும் அவளுக்கும்
ஒரே அர்த்தத்தை வேறு அர்த்தங்களில் தரும்போது
(பூங்காவில் அழுத அந்தக்குழந்தையைக் கண்ட நீ
ஓடோடி அதை தூக்கிக்கொண்டதும்
அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டதும்
இப்படித்தான்)
பொருள் தன்மேல் போட்டுக்கொண்ட முக்காட்டை
அதிகப்பிரசங்கியாய் அழைப்பில்லாதவர்
நீக்கமுயலும்போது
(நாளை நண்பர்கள் குழுமத்தில்
ஐந்து க்ளாஸ் வாட்காவுக்குப் பிறகு
ராமனும் கந்தனும் மாலாவும்
தமக்குள் கண்ணடித்துக் கொண்டால்,
நம் கண்ணில் அதுபட்டால்,
நம்மை வாளாவிருக்கச் சொல்லுகிறது பொருள்
அவர்களுக்கானது அதன் சொல்)
சம்பந்தமற்ற தருணத்தில்
சொல் பொருளை
பாவனைசெய்ய முயலும்போது
(அந்தரங்க உறவில் உன் முனகலை
அடுத்த நாள் உன்னவன்
சொல்லிக்காட்டும்போது;
அல்லது இல்லாத பொருளைச் சுட்ட
அந்நேரம் நீ முனகுவாயே அப்போது.)

வேண்டாத நிழலைத் தவிர்க்கும் பொருள்
மௌனத்தின் பதுங்குகுழியில் புதைந்துகொள்கிறது
வேண்டாத நிழலிடமிருந்து தப்பிக்கும் பொருள்
தானும் மற்றொரு சொல்லாகிவிடுகிறது
குகையென அசப்பில் தோன்றும்
வெறுங்கதவுக்குப் பின்னே
நீளும் வெட்டவெளி போல.

2 comments:

Ken said...

வேண்டாத நிழலைத் தவிர்க்கும் பொருள்
மௌனத்தின் பதுங்குகுழியில் புதைந்துகொள்கிறது
வேண்டாத நிழலிடமிருந்து தப்பிக்கும் பொருள்
தானும் மற்றொரு சொல்லாகிவிடுகிறது
குகையென அசப்பில் தோன்றும்
வெறுங்கதவுக்குப் பின்னே
நீளும் வெட்டவெளி போல.


கடைசி மூன்று வரிகளில் நீங்கள் கட்டமைக்கும் மாயம் ரொம்ப நல்லாயிருக்குங்க

Perundevi said...

நன்றி கென். உங்கள்
’புகைப்படம்’ (அவதார்?) வினோத அழகாக இருக்கிறது.