Saturday, July 3, 2010

வீழ்நகரம், கொடும் இரவு, தீக்கனவு: தீபச்செல்வன் மற்றும் சித்தாந்தனின் கவிதை நூல்கள்; சிறு அறிமுகம்

(3 ஜூலை 2010 அன்று காலச்சுவடு நூல் வெளியீட்டு விழாவில் பேசியதன் முழுவடிவம்)

பாழ்நகரத்தின் பொழுது (காலச்சுவடு, 2010) கவிஞர் தீபச்செல்வனின் மூன்றாவது தொகுப்பு. அவரது முந்தைய தொகுப்புகள் பதுங்குகுழியில் பிறந்த குழந்தை (காலச்சுவடு, 2008) மற்றும் ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம் (உயிர்மை, 2009) என்ற தலைப்புகளில் வெளிவந்திருக்கின்றன. துரத்தும் நிழல்களின் யுகம் (காலச்சுவடு, 2010) கவிஞர் சித்தாந்தனின் இரண்டாவது தொகுப்பு. அவரது முந்தைய தொகுப்பு காலத்தின் புன்னகை (2000).

தீபச்செல்வனின் கவிதைகள், நகரத்தின் (அதிகம் யாழ்ப்பாணம், கொஞ்சம் கிளிநொச்சி) துயரைப் பொருளாகக் கொண்டவை, தீவிரப்போரின் இறுதிநாட்களைப் பதிபவை, போரின் பிறகான கைவிடப்பட்ட வாழ்வைக் காட்சிப்படுத்துபவை என மூன்று தளங்களில் விரிகின்றன. முள்ளிவாய்க்கால் படுகொலைகள், சிங்கள அரசு நடத்திய கிழக்கின் உதயம், முத்துக்குமாரின் தீக்குளிப்பு, விடுதலைப்புலிகளால் பலவந்தமாக கொண்டு சேர்க்கப்பட்டு பின் ராணுவத்திடம் சரணடைந்து வாழ்வற்ற புனர்வாழ்வு முகாம்களில் தங்கியிருக்கும் சிறார்கள், தன்னைச் சுற்றி வளைத்த இராணுவ விசாரணை போன்றவற்றை இத்தொகுப்பில் ஆவணப்படுத்தியிருக்கிறார் தீபச்செல்வன்.

ஒப்பாரியும் விசும்பல்களும் ஓலங்களும் தளும்பும் நகரம், வெளிவர முடியாப் பாதைகளால் மூடுண்ட நகரம் சித்தாந்தனின் பாடுபொருளாகவும் இருக்கிறது. சித்தாந்தனின் கவிதைகளிலும் ராணுவ வாகனங்களும் கறுப்புத்துணி போர்த்திய முகங்களும் மறந்த அடையாள அட்டைகளும் ஒடுக்கும் முள்ளுவேலிகளும் விரவிக்கிடக்கின்றன. கொடுமையும் துயரமும் நிறைந்த போர் குறித்த புலனுணர்வு இருவரையும் இணைக்கும் புள்ளியாக இருக்கிறது. இருவரும் பகிர்ந்துகொள்ளும் அவலத்தின் வரலாற்றுக் கணம் இந்த இருவரின் கவிதைகளுக்கு இடையே ஒரு உரையாடலைச் சாத்தியப்படுத்துகிறது.

வன்முறை அரசியல்களோடு பின்னிப்பிணைந்திருக்கும் பாழ்பொழுதுகளையும், கவிகிற அதிகாரத்தின் நிழல்களையும் விவரிக்கும் இருவரது கவிதைகளும் சிங்கள அரசையும் ராணுவத்தையும் மட்டும் காட்டித்தருவதாக இல்லை. துவக்குகளாலும் அச்சுறுத்தலாலும் தம் மேலாண்மையை நிறுத்தி பலிகொண்ட தமிழ்ப்போராளிக்குழு பற்றிய விமரிசனமும் உள்ளீடாக வைக்கப்பட்டிருக்கிறது கவிதைகளில். உதாரணமாக, சித்தாந்தனின் கவிதையில், ”பிடாரனின் திகைப்பூட்டும் கனவுகளிலிருந்து” தப்பிச்செல்லும் கவிதைசொல்லி இவ்வாறு விவரிக்கிறான்:

பிடாரனின் புதல்வர்கள்
பூக்களை ரசிப்பவர்கள் எனவும்
பிடாரனே ஒவ்வொரு காலையிலும்
கோடிப்பூக்களை புலர்விப்பவனெனவும்
சனங்கள் நம்பத்தொடங்கியிருந்தனர்
எங்கும் பிடாரன் பற்றிய பேச்சே
ஆகச்சிறந்த கவிதையாயிருந்தது
எனது அழகிய குடிசையில்
ஒருமுறை
பிடாரனின் விழிகளின் தீய ஒளிபட்டு
தீ மூண்டதை நான் சொன்னபோது
எவருமே நம்பவில்லை
பிடாரன் பற்றிய தூய கவிதையை
மாசுறுத்தியதாய் என்னைச் சபித்தார்கள்.
….
உயிரைச் செருகி வைத்திருக்கிற அட்டைகளுக்குள்
வாழ்வைப் பத்திரப்படுத்திக்கொண்டு
பிடாரனின் புதல்வர்களின் பார்வைகளில்
மிரண்டபடி வாழ்கிறார்கள்.

சித்தாந்தனின் இன்னொரு கவிதை, சாகசத்தை நிறுவிய பொம்மைகள் (போராளிகள் என்று இவற்றைக் கொள்ளலாமோ?), சூரியனிலிருந்து வந்தி்றங்கிய கண்கள் கொண்ட பொம்மைகள் நடுவே, அவை சூழ வாழ்ந்து பொம்மைகளாக்கப்பட்டவர்களைக் குறித்து ஆதங்கிக்கிறது:

பொம்மையுடனான சிநேகிதம்
எம்மையும் பொம்மைகளாக்கிவிட்டது
நாம் சிரித்தோம்
அது பொம்மையின் சிரிப்பு
நாம் அழுதோம்
அது பொம்மையின் அழுகை
நாம் கூத்தாடினோம்
அது பொம்மையின் களிப்பு

இப்படியாக பொம்மைகள் சூழவாழ்ந்து பழக்கத்தாலும் வேறுவழியின்றியும் பொம்மைகளாகிப் போனவர்களை, தம்மை மட்டுமே மனிதர்களாக நினைப்பவர்கள்--சிங்களப் பேரினவாதிகள் என்று கொள்ளலாம் இவர்களை--பொம்மைகள் என்றே ஒற்றையாக இனம்காண்பதை கவிதை சுட்டுகிறது. பொம்மைகளையும் பொம்மையாக ஆனவர்களையும் சிங்களப் பேரினவாத வன்முறை பிரித்துப் பார்ப்பதில்லை. எப்பாகுபாடும் பார்க்காமல் அவர்களை அழித்துச்சாய்க்கிறது அந்த வன்முறை. சித்தாந்தனின் கவிதை இப்படித் தொடர்கிறது:

பொம்மைகளுக்கிடையில்
பொம்மைகளாக வாழ்வதிலும் கொடியது
மனிதர்களுக்கிடையில் பொம்மைகளாக வாழ்வது
...

நீண்டோடிய நாட்களின் பின்
இன்று தெருவுக்கு வர நேர்ந்தது
மனிதர்கள் எம்மைச் சூழ்ந்துகொண்டு
கற்களை வீசினர்
தூசித்தனர்
உடல் கிள்ளிக் கொண்டாடினர்
எமது அழுகையை
பொம்மைகளின் அழுகை என்றனர்
எமது இரத்தத்தை
பொம்மைகளின் இரத்தம் என்றனர்
கடைசியில் நாம்
பொம்மைகளாகவே இறந்து போனோம். ….


தீபச்செல்வனின் ஒரு கவிதையிலும் பொம்மைகள் வருகின்றன. ஆனால் அவை வேறு வகை: அவர் கவிதை பொம்மைகளோடான தவிர்க்கவியலா உடனிருப்பைப் பற்றியதாக, அந்த உடனிருப்பு தந்த பொம்மை உருமாற்றம் குறித்த விமரிசனமாக மட்டுமில்லை, கண்ணில்லா பொம்மைகளை கடவுள்களாக நினைத்தவர்களின் பாழ்பட்ட நம்பிக்கையை, அந்த நம்பிக்கையால் பொம்மைகளாக மாறியவர்களின் குழந்தைமையை கூடுதல் ஆதுரத்துடன் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

காணாமல்ப்போன குழந்தை
கடவுளை விளையாடக் கேட்டிருந்தது.
பொம்மைகள் தொங்கும்
திருவிழாவில்
நமது மணல்தரை சேறாகிக்கிடக்கிறது.
….
மணல்சுவர்களிற்கிடையில்
நடக்கும் திருவிழாவில்
காணாமல்போன குழந்தையை
தேடித்திரிகிற மனைவியிடம்
கண்கள் இல்லாத பொம்மைகள் இருந்தன.

கடவுளை பொம்மை என்று
குழந்தை கூறியது ஞாபகத்திற்கு வருகிறது.


தொலைபட்ட குழந்தையைத் தேடிய தாயின் கைகளில் இருப்பவையோ கண்ணற்ற பொம்மைகள். கையிலிருக்க வேண்டிய குழந்தைக்கு பதிலியாக இருக்கின்ற பொம்மையையே குழந்தை கடவுள் என்று ஏற்கெனவே கூறியதாக கவிதை முடிக்கிறபோது, மண்சுவரில் மோதுண்ட காணாமல் போன குழந்தை, பொம்மையாய் நின்ற கடவுளைத் தேடிச்சென்ற குழந்தை, கண்ணற்ற பொம்மையாய் மாறிவிட்டிருக்கிற குழந்தை என்கிற மூவகை அவலங்களும் நிறைகின்றன கவிதையில்.

தீபச்செல்வன், சித்தாந்தன், இருவரின் கவிதைகளிலும் பொம்மைகளோடுகூட நாம் மறுக்கப்பட்ட அல்லது தீய கனவுகளையும் அச்சுறுத்தும் இரவுகளையும் அடிக்கடி எதிர்கொள்கிறோம். கண்களைப் பிடுங்கிவிட்டு மிக நீண்டு செல்கிற இரவு தீபச்செல்வனின் ஒரு கவிதையில் வருகிறது. “திசைகளைத் தின்னுகிற இரவாக” உயிர்களைப் பிடுங்கித் தின்னும் காருண்யமற்ற இரவு தீபச்செல்வனின் எழுத்தில் பிசாசமாக உருவங்கொள்ளுகிறது; பிணமாக விறைத்துக் கிடக்கிறது. சித்தாந்தனி்ன் கவிதைகள் “குரோதத்தின் கத்தியோடு” “பகிர்ந்த இரவை” நம்மோடும் பகிர்கின்றன. "பிணக்கதைகளைப் புனைகிற” “கொடும் இரவைச்” சொல்லி எச்சரிக்கின்றன. “இந்த இரவை எப்படித் தாண்டப் போகிறேன் ஆசுவாசப்படுத்த எவருமில்லை” என்று ஆற்றமுடியாத ஆற்றாமையில் அரற்றுகின்றன.

கனவு தொழில்படும் வேலையையும், கலை உருவாக்கும் வேலையையும் நனவிலி மனம் சார்ந்த, நனவிலி மன சக்திகள் தீர்மானிக்கும் ஒருபடித்தன்மையதான வேலை என்பதாக விளக்கும் சிக்மண்ட் ப்ராய்ட், கவிஞனின் வேலை நமக்கான பகல்கனா காண்பது என்று சொல்கிறார். ஆனால் உறக்கம் பறிக்கப்பட்ட கொலை படிந்த இரவுகளில், அல்லது நித்திரைபோலும் சாக்காடு பொதுவிதி்யாக விதிக்கப்பட்ட இருத்தலில் கவிதைசொல்லியின் கனவுக்கான இடம்தான் என்ன? தீபச்செல்வனின் தொகுப்பில்: திறவுபடாத கதவின் வழியாக கரைந்து வெளியே போய்க்கொண்டிருக்கும் கனவு, பாழடைந்த தெருவில் சொருகப்பட்டவர்களின் குருதியின் மேலால்வடியும் சொற்களுடன் கலந்த இளம் கனவு, கனவின் சுடலை, மூலையில் எரிந்துகொண்டிருக்கும் கனவு என்று வெவ்வேறு வடிவங்களாலான கனவு, அச்சுறுத்தும் பாழ்பட்ட வாழ்வெனும் தீக்கனவாகவே அர்த்தம் கொள்ளுகிறது. பலிக்கிண்ணத்தின் முன்னே தனித்த ஆடாக தன்னை உணரும் தீபச்செல்வனின் கவிதைசொல்லி, மரணத்தூக்கத்தில் கொடுங்கனவு தன்னைத் தின்றுமுடித்து விட்டதைக் குறிப்பிடுகிறார்.

சித்தாந்தன் முன்வைக்கும் கனவில் துர்மணம் கொண்ட, இரட்டைநாக்குகள் கொண்ட பாம்புகள் நுழைகின்றன; அல்லது அந்தப் பாம்புகள் உறக்கத்தைக் கெடுத்து இருளில் மூழ்கடித்து பயம்காட்டுகின்றன; பின்பு, கண்கள் தன் ஒளியை இழக்கையில், பாம்புகள் கவிதைசொல்லியின் கண்ணாடி அறையின் பிம்பங்களுக்கு குடைபிடிக்கின்றன.

எதிர்காலம் பற்றிய விழைச்சின் கனவை கண்ணின் ஒளி என்று கொள்வோமானால், கனவு காணும் உந்துதலும் வேகமும் அழிபடும் போது, வெறும் பிம்பங்கள் மட்டுமே நம்மில் தேங்கிவிடுகின்றன. தனி அடையாளம் மறுக்கப்பட்ட பிம்பங்கள், துவக்குகளின் முனைகளில் ஆளப்படும் நகரத்தில் இலக்கங்களாக மாறிவிட்ட அடிமைகள், குரல்கள் ஒழிந்து வெறுமையொட்டிய ஒரேமாதிரி முகங்கள். அடையாளங்கள் பறிக்கப்பட்டவர்களைப் பற்றிய தீபச்செல்வனின் வரிகள் இவை:

வாழ்வு கூடாரத்தில் மூடிவைக்கப்பட்டிருக்கிறது.
...இலக்கங்களாலும் ஒலிபெருக்கிகளாலும்
நீ கட்டி வைக்கப்பட்டிருக்கிறாய்....
இனி கனவுகள்குறித்து மிக மௌனமாயிருப்போம்.
இரப்பர் கூடாரங்களால் நிரம்பியிருக்கிற
காணியில் முட்கம்பிகளில்
தொங்கிக்கொண்டிருக்கிறது போரின் பிறகான வாழ்வு.
நம்மை வென்றுவிட்டு கிடக்கிற யுத்தம்
அறிவிப்பின்றி மெல்லத் தொடருகிறது.
...
குடிக்கிற தண்ணீருக்கான வரிசை நீளுகிறது.


பிம்பமாக, இலக்கமாக, குடிதண்ணீருக்கான வரிசையாக இடம்பெயர்ந்து விட்டிருக்கிறது ஈழத்தமிழர்களின் சமூக இருத்தல். போரின் வன்மமும் நம்பிக்கைத் துரோகமும் குலைத்துப்போட்ட நிலப்பரப்பில் இன்று மனிதர்கள் இருந்த இடத்தில், கண்காணிக்கப்படும் திரள்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. கூடவே எஞ்சியிருக்கிறது ஒரு கேள்வி: எப்படி எவ்விதத்தில் நாம் நம்பிக்கையோடு முன்வைக்கப்போகிறோம், கவிஞர் சேரனின் “சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து எழுந்து வருக” என்ற கோரிக்கையை இனிமேல்?

1 comment:

மயூ மனோ (Mayoo Mano) said...

//எப்படி எவ்விதத்தில் நாம் நம்பிக்கையோடு முன்வைக்கப்போகிறோம், கவிஞர் சேரனின் “சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து எழுந்து வருக” என்ற கோரிக்கையை இனிமேல்?//

கையறு நிலை;
அருமை என்ற ஒரு வார்த்தை எம் மனதில் தோன்றும், சொல்ல விரும்பும் உணர்ச்சியை வெளிக்காட்டுமா என்று சில வேளைகளில் ஏற்படும் குறை இப்போதும்..இயல்பான பதிவு. புத்தகங்கள் கை சேர இருக்கும் நாளை எதிர்பார்த்து நான்..!!