Saturday, October 2, 2010

என் கவிதைகளை எடுத்த வேசிக்கு: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (12)

சிலர் சொல்கிறார்கள் தனிப்பட்ட கழிவிரக்கத்தைக் கவிதையிலிருந்து தள்ளிவைக்க வேண்டும்,
நுண்மமாக இரு என்று, இதில் ஏதோ காரணம் இருக்கிறதுதான்,
ஆனால் ஜீசஸ்;
பன்னிரெண்டு கவிதைகள் போயே போயின, என்னிடம் கார்பன்காப்பிகள் இல்லை,
என்
ஓவியங்களைக்கூட நீ வைத்திருக்கிறாய்:
அவற்றில் ஆகச்சிறந்தவற்றை.
ஒடுக்குவதாக இருக்கிறது இது.
அந்த மற்றவர்களைப்போல என்னையும் நசுக்க நினைக்கிறாயா?
ஏன் நீ என் பணத்தை எடுக்கவில்லை?
குடித்துவிட்டுப் மூலையில் நோயுற்றுத் தூங்கும் கால்சராய்களிலிருந்து
அவர்கள் சாதாரணமாக எடுப்பதைப்போல.
அடுத்த முறை என் இடது கையை எடுத்துக்கொள், அல்லது ஒரு ஐம்பதை,
ஆனால் என் கவிதைகளை அல்ல;
நான் ஷேக்ஸ்பியர் அல்ல, ஆனால் சிலசமயம் யாரும்
அப்படி எளிதாக இருக்க முடியாது இனியும், நுண்மமாகவோ வேறெப்படியோ;
எப்பொழுதும் பணம் இருக்கும்
வேசிகளும் குடிகாரர்களும் இருப்பார்கள்
இங்கே கடைசி குண்டு விழும்வரை,
ஆனால், கால்மேல் கால் போட்டபடி கடவுள்
சொன்னதைப்போல:
தெரிகிறது, நான் படைத்திருக்கிற ஏராளமான கவிஞர்கள் அளவுக்கு
கவிதையைப் படைக்கவில்லை.

ஒன்று முப்பத்தாறு காலை: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (10)

சிலசமயம் சிரித்துக்கொள்வேன் நினைக்கும்போது
உதாரணமாக
தட்டச்சுப்பொறியின் முன்னால் செலின்
அல்லது தஸ்தேய்வ்ஸ்கி
அல்லது ஹேம்சன்
கண்கள், காதுகள், பாதங்களோடு சாதாரண ஆண்கள்
தலையில் முடியிருக்கும் சாதாரண ஆண்கள்
அங்கே உட்கார்ந்து தட்டச்சுகிறார்கள்
வாழ்க்கையோடு சிக்கல்கள் இருக்கையில்
குழம்பி கிட்டத்தட்ட கிறுக்குத்தனமான நிலையில்.

தஸ்தேய்வ்ஸ்கி எழுந்திருக்கிறார்
பொறியிலிருந்து நகர்ந்து செல்கிறார் ஒன்னுக்கடிக்க.
திரும்பி வருகிறார்
ஒரு கோப்பை பாலைக் குடிக்கிறார்
சூதாட்ட விடுதியையும்
ரூலெட் சக்கரத்தையும் பற்றி நினைக்கிறார்.

செலின் நிறுத்துகிறார், எழுந்திருக்கிறார், நடக்கிறார்
சன்னலை நோக்கி, வெளியே பார்க்கிறார், நினைக்கிறார்
என் கடைசி நோயாளி இறந்துவிட்டான், இனி நான் அங்கே
ஒருதரமும் பார்க்கப் போகவேண்டியதில்லை என்று.
அவரைக் கடைசியாக நான் பார்த்தபோது
டாக்டரிடம் கட்டணம் கட்டிக்கொண்டிருந்தார்.
கட்டணங்களைக் கட்டாதவர்களே
வாழ்ந்து வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்.
செலின் திரும்பி நடக்கிறார், அமர்கிறார்
பொறியின் முன்னால், ஒரு இரு நிமிடங்களுக்குச்
சிலையாகிறார்
பிறகு தட்டச்சத் துவங்குகிறார்.

ஹேம்சன் தட்டச்சுப்பொறிக்கருகே நின்றபடி நினைக்கிறார்,
நான் எழுதுபவற்றையெல்லாம் அவர்கள்
நம்புவார்களா என்ன?
அமர்கிறார், தட்டச்சத் துவங்குகிறார்,
எழுத்தாளரின் தடை என்றால் என்னவென்றே தெரியாது அவருக்கு
பிரவாகம் சும்மா பெட்டை-நாயின்-மகன்
சே! பிரம்மாண்டம்
சூரியனுக்குக் கிட்டே
அடித்துத் தள்ளுகிறார்.

நானும் சிரிக்கிறேன்
சப்தமின்றி
இச்சுவர்களுக்குள் முன்னும் பின்னும் நடந்து
இந்த மஞ்சளும் நீலமுமான அழுக்கான சுவர்கள்
என் வெள்ளைப்பூனை
வெளிச்சத்திலிருந்து தன் கண்களை மறைத்துக்கொண்டு
உறங்குகிறது மேசைமீது.

இன்றிரவு அவன் தனியாக இல்லை.
நானும்தான்.

நூலை இழுக்க அசையும் பொம்மை: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (8)

ஒவ்வொருவனுக்கும் தெரியவேண்டும்
இது எல்லாமே வெகு சீக்கிரம்
மறையக்கூடிய தென்று:
பூனை, பெண், வேலை,
முன்பக்க டயர்,
படுக்கை, சுவர்கள்,
அறை; நம் எல்லாத் தேவைகளும்
காதல் உட்பட,
மணலின் அஸ்திவாரங்களில் நிற்பன –
கொடுக்கப்பட்ட எந்த காரணமும்
எப்படித் தொடர்பின்றிப் போனாலும்:
ஹாங்காங்-கில் ஒரு சிறுவனின் சாவு
அல்லது ஒமாஹாவில் ஒரு பனிப்புயல்
குலைத்துவிடக்கூடும் உன்னை.
சமையலறைத் தரைமேல்
உன் எல்லாப் பீங்கான்களும் மோதி உடைய
உன் ஆள்—அந்தப் பெண் நுழைவாள் நீ
குடிபோதையில் நிற்கும்போது,
எல்லாவற்றுக்கும் நடுவில்,
அவள் கேட்பாள்:
கடவுளே, என்ன விஷயம்?
நீ பதில் சொல்வாய்: எனக்குத் தெரியாது,
எனக்குத் தெரியாது …

உலோக ருசி

என்னுடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பு அச்சில் இருக்கிறது. டிசம்பரில் வெளிவருகிறது. வலைப்பூவில் இருக்கும் பெரும்பாலான கவிதைகள் அதில் இடம்பெறுகின்றன. கவிதைத்தொகுப்புகளை வாங்கி வாசிப்பவர் தமிழ்ச்சூழலில் குறைவு. இதில் வலைப்பூவில் கவிதைகள் விரல்நுனியில் கிடைக்கும்போது, புத்தகத்தை வாங்கி வாசிக்கும் ஆர்வம் குறைய நிறைய சாத்தியம் இருக்கிறது. ஆகவே, சிலபல கவிதைகளை வலைப்பூவிலிருந்து நீக்கியிருக்கிறேன். நண்பர்கள், குறிப்பாக பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்டு உரையாடியவர்கள், புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

நீக்கப்பட்ட கவிதைகளின் பின்னூட்டங்களை நீக்க மனமில்லை, அது தேவையில்லை என்றும் நினைக்கிறேன். கொஞ்ச காலத்துக்கு அந்தரத்தில் மறைந்த கவிதைப்பிரதிகளைப் பற்றிய உரைகளாக அவை நிற்கும். அதே நேரத்தில், இனி அவற்றை வாசிப்பவர்களுக்கு தொடர்புடைய கவிதையைத் தேடும் ஆர்வம் பெருகலாம். ...hide and seek.....

புதிய கவிதைகள் பதிவில் தொடரும். நண்பர்கள் தொடர்ந்து தரும் ஊக்கத்துக்கும் உற்சாகத்துக்கும் நன்றி.

பெருந்தேவி