Saturday, July 11, 2020

பச்சைக் கண் விளக்கு



அவளுக்கு அவன் மேல் கிறுக்கு என்று தெரியும், ஆனால் இந்த அளவுக்கா? மின்திரையில் அவன் பெயருக்குப் பக்கத்தில் மின்னும் பச்சை விளக்கைப் பார்க்கும்போது அவன் கண்களை அல்லவா அவள் பார்க்கிறாள்?  நிஜமான ஒருவருக்கு இரண்டு கண்கள், ஆனால் இங்கே அவன் பெயருக்கு அருகில் மின்னுவதோ ஒன்று என்ற அடிப்படையான வித்யாசம் கூடவா  அவளுக்கு உறுத்துவதில்லை? ஆனால் நிஜம் என்பது ஒரு ஆளின் ஸ்தூல உருவம் மட்டுமா என்ன, ஒருவரை நேசிக்கும்போது அவரது பெயரும் பசுமரத்தாணி போல அல்லவா பதிந்துவிடுகிறது? ஒருவேளை ஆணி அடிக்கும்போது மரத்துக்கு வலிக்காமல் இருக்கலாம், ஆனால் காதலிப்பவர்களுக்கு ஒருவரை நேசிக்கத் தொடங்கும் கணத்திலிருந்து நேசிப்பவரின் பெயர் இதயத்தில் ஆணியைப் போல் அறையப்படுகிறது. வலி இல்லாமல் எந்தக் காதல்தான் லபிக்கிறது? அதன் பின் ஒருவேளை காதல்  மறைந்துவிட்டாலும், அந்தப் பெயர் ஒரு கோரத் தழும்பாக மேடிட்டுவிடுகிறது. இதயத்தின் வழுவழுப்பைக் காணாமலடிக்க ஒரு பெயரைத் தவிர வேறெதற்குச் சக்தி இருக்கிறது?

அவள் சற்று நேரம் பச்சை விளக்கையே உற்றுப் பார்த்தாள். அவன் கூரிய கண்கள் எப்போதும் போல தயங்காமல், திசைமாற்றம் கொள்ளாமல் அவள் கண்களையே பார்த்தன.  பார்க்கையில் பச்சை விளக்கு கண்களாகும்போது அந்த விளக்கருகே பெயர் மாத்திரம் உடலாகாதா என்ன? எல்லாம்  எடுத்துக்கொள்வதைப்  பொறுத்தது என்று நினைத்துக்கொண்டாள்.

அவனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பலாமா என்று யோசித்தாள். அவன் பதில் அனுப்புவான் என்று தெரியும். ஆனால் அவள் அனுப்புவதற்கும் அவன் பதில் அனுப்புவதற்கும் இடையிலான நேர இடைவெளியை எப்போதுமே அவளால் கணிக்க முடிந்ததில்லை. ஒருவேளை அவன் பதிலனுப்பத் தாமதமானால், அவன் கண்கள் அவளைப் பார்க்காமல் வேறு யார் யாரையோ பார்ப்பது அவளுக்கு உறுதிப்பட்டுவிடும்.  அதுவே அவன்மேல் கொண்டிருக்கும் சந்தேகங்களுக்கான நியாயத்தைத் தந்துவிடும். அதை அவள் விரும்பவில்லை. மாறாக, அவன் உடனடியாக பதிலனுப்பினாலோ அதன் பிறகு அவள் அவனோடு சாட் செய்ய வேண்டியிருக்கும். பரஸ்பர நலம் விசாரித்தல்கள், சில  வார்த்தைகள், சில வழக்கமான எமோஜிகள்.  ஆனால், அப்போது பச்சை விளக்காக மின்னும் அவனது கண்களை இப்போது  பார்ப்பது போல  கவனம் சிதறாமல் அவளால் பார்க்க முடியாது.  மேலும், பிரியம் வாடிப்போனதற்குப் பிறகு அவர்கள் இரண்டு நிமிடங்களுக்கு மேல் சாட் செய்வதில்லை. சொற்ப சம்பாஷணைக்குப் பிறகு அவன் லாக் அவுட் செய்துவிட்டால் அவள் பார்வையிலிருந்து அகன்று போய்விடும் அவன் கண்கள்.

அவள் பச்சை விளக்கின் மீது தன் சுண்டுவிரலை மென்மையாக, மிக மென்மையாக வைத்தாள். மெதுவாக அவன் கண்களை நீவினாள். இருவரும் ஒரே அடர்த்தியோடான பிரியத்தோடிருந்த காலத்தில் சேர்ந்து கேட்ட ஒரு பாடலை அவனுக்காக மெல்லப் பாடினாள்:
“A distant ship’s smoke on the horizon / You are only coming through in waves / Your lips move but I can’t hear what you’re sayin….. / out of the corner of my eye / I turned to look but it was gone / I cannot put my finger on it now…”

சட்டெனப் பச்சை விளக்கு கண் மூடியது. அவள் கை விரலின் இதத்தில் அவன் கண் செருகித் தூங்கிப் போனதாக அவளுக்குத் தோன்றியது.  அன்றிரவு அவளும் சற்று நிம்மதியாகத் தூங்கச் சென்றாள். 




No comments: