சில சாயங்காலங்களில் மனம் வெறிச்சோடிப் போயிருக்கும்போது
புனைவுகளுக்குள் போய் மட்டுமே மனம் தங்குவதுண்டு. அப்படியொரு சாயங்காலத்தில் எதிரே திறந்துவைத்திருந்த
மின் திரையில், சிறுகதை ஒன்றில், முன்னறிமுகமில்லாத இரு கதாபாத்திரங்கள் ஒரு மதுக்
கூடத்தில் சுவரை ஒட்டிய ஒரு மேசையின் எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தன.
”டிப்ரெஷனுக்குக் குடிக்கறேன்னு சுருண்டு கிடக்கறது, சந்தோஷத்துக்குக்
குடிக்கறேன்னு வண்டியக் கொண்டுபோய் மோதறது, இதெல்லாம் என்னப் பொறுத்தவரைக்கும் குடிய
அசிங்கப்படுத்தறது. குடிக்குக் காரணமே தேவையில்ல, காரணம் இருக்கக்கூடாதுனு சொல்வேன்.
இது ஒரு மாதிரி, நம்ம ரொடீன்ல ஒரு பார்ட்.”
ஆண் கதாபாத்திரம் தன் பேச்சை நிற்காமல் தொடர்ந்தது. கொண்டாட்டத்துக்குக்
குடிக்கிறேன் என்று சொல்லக் கூடாது, குடிதான் கொண்டாட்டத்தை உருவாக்கவேண்டும் என்று
ஒரு ஆலோசனையை வைத்தது. அதன் எதிரில் பெண் கதாபாத்திரம் உன்னித்துக் கேட்டபடி உட்கார்ந்திருந்தது.
அது கையை மட்டும்தான் கட்டிக்கொண்டிருக்கவில்லை.
ஒருவேளை, முந்தைய ஜன்மத்தில் வேறொரு கதையில் இருவரும் குருவும்
சிஷ்யையுமாக இருந்திருக்கலாம். விட்ட குறை தொட்ட குறையாக இருக்கலாம். தனியாக உட்கார்ந்து குடித்துக்கொண்டிருந்த பெண் கதாபாத்திரத்துக்கு
எதிரே, அந்த ஆண் கதாபாத்திரம் வம்படியாக வந்து
உட்கார்ந்திராவிட்டால் அது இன்னும் சுதந்திரமாகக் குடித்துக்கொண்டிருக்குமோ என்னவோ,
பாவம்.
பெண் கதாபாத்திரம் ஒரு சிவப்பு நிற ஃபாஸினோவை வெளியே நிறுத்திவிட்டு
உள்ளே வந்திருக்கிறது என்று கதாசிரியர் ஒரு உபரித் தகவலைக் கொடுத்திருந்தார். நினைத்தால் இப்போதே இந்த முடியாத பேச்சிலிருந்து
பெண் கதாபாத்திரம் தப்பித்து ஓடிப்போய்விடலாம். இந்தக் கதாசிரியரும் பொதுவாகக் கதையில் வளவளப்பவரில்லை. அது ஓடிப்போயிருந்தால் அவர் ஒன்றும் சொல்லியிருக்கப் போவதில்லை.
ஆண் கதாபாத்திரத்துக்கு வினோதமான தன் முற்போக்கு எண்ணங்களைப்
பகிர்ந்துகொண்டு மாளவில்லை. அது சுகப்படப்போவதில்லை என்பதற்கான எல்லா அறிகுறிகளும்
பேச்சில் தெரிந்தன. குளிர்சாதனப்பெட்டியிலிருந்து ஒரு பியர் பாட்டிலை எடுத்துக்கொண்டு
மீண்டும் மின் திரையின் முன் வந்தமர்ந்தேன்.
கதையில் குடிபோதை மீறியதால் பெண் கதாபாத்திரம் வாந்தி எடுக்க
ரெஸ்ட் ரூமூக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆண் கதாபாத்திரம்
துணைக்குக் கூடவே போய் தன்னை ஒரு கண்ணியவானாக நிகழ்த்திக் காட்டியது. மீண்டும் சற்று
நேரம் கதாபாத்திரங்கள் வளவளாவென்று பேசிக்கொண்டிருந்தார்கள். என் பியர் முடிந்துவிட்டிருந்தது.
தன் வாழ்க்கைப் பிரச்சினையால் இறுகிப்போயிருந்த பெண் கதாபாத்திரத்தின்
மனம் ஒரு கட்டத்தில் உடைந்தது. அது ரெஸ்ட்
ரூமுக்கு அழுவதற்காகச் சென்றது. அங்கேதான் எழுத்தாளர் ஆண் கதாபாத்திரத்துக்கு ஒரு
tight slap கொடுத்திருந்தார். அந்தச் சூட்சுமமான பெண் கதாபாத்திரம் அப்படியே தப்பித்து,
ஆண் கதாபாத்திரத்தை அம்போவென்று விட்டுவிட்டு, வெளியே நிறுத்தியிருந்த அதன் வண்டியிலேறி
ஓடிப்போய்விட்டது. ஆண் கதாபாத்திரம் மனம் வெறுத்து தொலைக்காட்சியைப் பார்த்தபடி விதியே
என உட்கார்ந்திருந்தது.
முடிவு சிறப்பு என்று பெண் கதாபாத்திரத்துக்குக்
கைதட்டிவிட்டு, அடுத்த பியர் பாட்டிலை எடுத்துவர கதையிலிருந்து பார்வையை எடுத்தபோது
மின் திரை சட்டென ஆழ்பழுப்பு வண்ணமானது. கதையின் எழுத்துகள் அதில் பச்சை நிறத்தில்
தெரிந்தன.
என்ன ஆயிற்றோ என்று அவசரமாக மின் திரையில் கண்ணை ஓட்டியபோது,
கதையில் அதே வாக்கியங்கள் சில தெரிந்தன. ஆனால் இப்போது அவற்றைக் கூறியதோ பெண் கதாபாத்திரம்.
”டிப்ரெஷனுக்குக் குடிக்கறேன்னு சுருண்டு கிடக்கறது, சந்தோஷத்துக்குக்
குடிக்கறேன்னு வண்டியக் கொண்டுபோய் மோதறது, இதெல்லாம் என்னப் பொறுத்தவரைக்கும் குடிய
அசிங்கப்படுத்தறது. குடிக்குக் காரணமே தேவையில்ல, காரணம் இருக்கக்கூடாதுனு சொல்வேன்.
இது ஒரு மாதிரி, நம்ம ரொடீன்ல ஒரு பார்ட்.”
பெண் கதாபாத்திரம் மேலும் தொடர்ந்தது. கொண்டாட்டத்துக்குக்
குடிக்கிறேன் என்று சொல்லக் கூடாது, குடிதான் கொண்டாட்டத்தை உருவாக்கவேண்டும் என்று ஆரம்பித்தது.
ஒரு பத்திக்குள் அதன் எதிரில் உட்கார்ந்திருந்த ஆண் கதாபாத்திரம்
பொறுக்க முடியாமல் எழுந்துவிட்டது. மதுக் கூடத்தின்
மத்தியில் வட்ட வடிவமான குறுகிய மேசையின் உயரமான பார் ஸ்டூல்களில் ஒன்றை இழுத்துப்போட்டு
உட்கார்ந்துகொண்டது. “என்ன வேணும் சார்” என்று புன்னகைத்தபடி கேட்ட பார் பணியாளர் கதாபாத்திரத்திடம்
“அந்த டேபிளிலேர்ந்து என் ட்ரிங்கை எடுத்துட்டு வந்துருங்க” என்று தான் அமர்ந்திருந்த
மேஜையை நோக்கிக் கைகாட்டியது. “அந்த அம்மாக்கு பைத்தியமா, அது பாட்டுக்கு வந்து உக்காந்துட்டு
முன்னபின்ன தெரியாதவன்ட்ட ஏதோ பேசிகிட்டே போவுது?” என்று சிரித்தது. பார் பணியாளர்
கதாபாத்திரமும் கூடச் சேர்ந்து அரைகுறையாகச் சிரித்தது.
சுவரருகே இருந்த மேசையில், ஒரு மூலைக்குள் அரை இருட்டை நோக்கியபடி
பெண் கதாபாத்திரம் உம்மென்று உட்கார்ந்திருந்தது. ஆண் கதாபாத்திரத்தோடு உரையாடியபோது
தான் என்ன தவறு செய்தோம் என்று எத்தனை யோசித்தும் அதற்குப் புரிபடவேயில்லை.
No comments:
Post a Comment