Sunday, May 4, 2008

அறிவிப்பு

பதிவுகளை வாசித்து எழுதும் நண்பர்களுக்கு நன்றி. மின் அஞ்சல் அனுப்பும் நண்பர்கள் பின்னூட்டங்களாக அக்கடிதங்களை நான் பதிவு செய்யலாமா என்பதைத் தெரிவியுங்கள்.

இன்னும் ஒரு வாரத்தில் என் Phd dissertation தொடர்பான தேர்வுகள் இருப்பதால் புதிய பதிவுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

மே மூன்றாம் அல்லது நான்காம் வாரத்தில் இந்தியா-சென்னை வருகிறேன். இந்த விடுமுறையிலாவது மூன்று வருடங்களாக நான் நினைத்து ஆனால் செய்ய இயலாதுபோன ஒன்றைச் செய்யலாம் என்று இருக்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன்பு பேராசிரியர் டேவிட் ஷ¤ல்மன் அவர்களை மேடிஸனின் ஒரு கருத்தரங்கில் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தேன். (The hungry god : Hindu tales of filicide and devotion, The king and the clown in South Indian myth and poetry, Tamil temple myths : sacrifice and divine marriage in the South Indian Saiva tradition புத்தகங்களை எழுதியவர்). சங்க இலக்கியம், பிரபந்தம், திருவாசகம், தமிழ் நவீன இலக்கியம் என்றெல்லாம் விரவிய நீண்ட உரையாடலின் ஒரு கட்டத்தில் கம்பராமாயணம் பற்றிப் பேச்சு வந்தது. கம்பராமாயணச் செய்யுளிலிருந்து இரு வரிகளைச் சொன்னவர் என்னிடம் கம்பராமாயணம் படித்திருக்கிறீர்களா என்று கேட்டார். படிக்கவில்லை என்று வெட்கிச் சொன்னேன். எப்படி பெருந்தேவி, கம்பராமாயணம் படிக்காமல் இருக்கிறீர்கள் என்று உரிமையோடு கோபித்துக்கொண்டார். கம்பராமாயணத்தின் அருமை பெருமைகளை விரிவாக எடுத்துச்சொல்லவும் செய்தார்.

அந்தவருட விடுமுறையில் சென்னைக்கு வந்தபோதும் கம்பராமாயணம் என்னைத்தொடர்ந்தது. என் நண்பன் கம்பராமாயணத் தொகுதிகளை என் வீட்டுக்கு அனுப்பியிருந்தான். ஆனால், படிக்க நேரம்தான் கிடைக்கவில்லை. (அல்லது முனைப்பு போதவில்லையோ?)

இந்த மூன்று மாத (ஜூன் - ஆகஸ்ட்) அவகாசத்தில், ஆய்வேடு எழுதுகிற வேலைக்கு நடுவிலும் கம்பராமாயண வாசிப்பைத் தொடங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நண்பர்கள் யாராவது என்னோடு கம்பராமாயணம் வாசிக்கத் தயாராக இருந்தால் என்னை மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும். முதல் இரண்டு தொகுதிகளோடாவது அறிமுகம் ஆகிவிடவேண்டும் என்பது என் அவா. மின் அஞ்சல் முகவரி: sperundevi@gmail.com

No comments: