Tuesday, May 6, 2008

கிளி ஆறு

தடயம்


தளிர்ப்பச்சை நிறத்தில் முகம்
எலுமிச்சை நிறத்தில் வயிறு
கண்ணாடியொளிரும் முதுகு
சிறகுகள் கடல் நீலவண்ணம்
கூர்மூக்கோ பழுத்த மாலைச்சூரியனின் கீற்று
நான்
கொலைகள் செய்ய அஞ்சாத
ஊர்மேயும் ஒருவனின்
ஆசைநாயகியின் வளர்ப்பு.
அவளது உயிர்.
அடிமை.
அவன் இல்லாத போது
அவனைப் போல
அவள் இல்லாத போது
அவளைப் போல
பேச அவர்கள் கேட்பார்கள்.
என் வெகுநீள வாலின் நுனியின் மஞ்சள்
வேறொரு நகரத்தில்
ஒளியும் அன்பும் மேன்மையுற்ற
அறையொன்றில்
அலைபாய்ந்து திரும்புகிறது இப்போதெல்லாம்.
குரலெழுப்புவதை
மறக்கச் சொல்லும்
என் எசமானிக்கு
நான் விசுவாசமாக இருக்கவேண்டும்.
இந்த என் ஆசை
பச்சோந்தியாக
நிறம் கொள்ளாதபடிக்கும்.

No comments: