என் பதிவை வாசித்துவரும் நண்பர்களுக்கு,
இணையத்தில் எழுத ஆரம்பித்தவுடன் தான் என் கவிதைகளுக்கான ஒரு வாசிப்புத்தளம் இருக்கிறது, ஊக்கப்படுத்தும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவந்தது. நான் 90-களிலிருந்து கவிதை எழுதிவருகிறேன். முதல் கவிதை விருட்சம் இதழில் 92-93-ல் வெளியானது என்று நினைக்கிறேன். நிகழ் இதழிலும் ஒன்று வந்தது. (சிறுகதைகள், கட்டுரைகள் பற்றி எழுதப்போவதில்லை இங்கே). பின்னர் பல. தீயுறைத்தூக்கம் 1997-98-ல் விருட்சம்-ஸஹானா வெளியீடாக வந்தது. பின்னர் 2006-ல் இக்கடல் இச்சுவை (காலச்சுவடு). நிறைய சிறு, இடைநிலைப் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிவந்திருக்கிறேன் – முன்றில், கல்குதிரை, விருட்சம், உன்னதம், புனைகளம், புது எழுத்து, உயிர்மை, காலச்சுவடு, தீராநதி, திண்ணை இணையதளம் உட்பட பல. கவிதையைப் பற்றிப் பேசுகிற சிலபல எழுத்தாளர்களால் குறிப்பிடப்பட்டிருக்கின்றன கவிதைகள்.
என்றாலும் நேரடியாக வாசிப்பவர்களோடு--ஏனோ வாசகர் என்கிற சொல் எனக்கு உவப்பாக இல்லை, அதில் எழுத்தாளர் என்கிற இருமையின் மேலாண்மை உள்ளீடாகக் கட்டப்பட்டு விட்டதாக உணர்கிறேன்--தொடர்புறவோடு இருத்தல் தருகிற நிச்சயமும், பாதுகாப்பும் வேறுதான். அது இணையத்தில் மட்டுமே கிடைக்கிறது. நன்றி.
சில பின்னூட்டங்களுக்கு பதில் எழுதியிருப்பேன். சிலவற்றுக்கு எழுதமுடியாததற்குக் காரணம் ஒன்று எனக்கு திரும்பக்கூற எதுவுமில்லை, அல்லது நேரமில்லை என்பதே. (வேலைதேடிக் கொண்டிருக்கிறேன், மேலும் பொழுதன்றைக்கும் முடிவுத்தேதிகளோடு ஏதோ எழுத்துவேலைகள் காத்துக்கொண்டிருக்கின்றன. ஆக்ஸ்போர்ட் பல்கலைப் பிரசுரத்துக்காக சில லிட்டரேச்சர் ரிவ்யூ வேலைகள், இப்போது வேறொரு பல்கலைகழகத்தின் மானுடவியல் சார்ந்த கட்டுரைத்தொகுப்புக்காக ஒரு கட்டுரை, தவிர என் வகுப்பு, செமினார் என்று என்நேரம் என் போக்கில் இல்லை, வருத்தம்தான்.) அடுத்த கவிதைத்தொகுப்பு. தமிழ்ப்புதுக்கவிதை வரலாற்றை மீள்எழுதிப்பார்க்க ஆசை..….தவிர மானசரோவர், பசித்த மானுடம், ஜீரோ டிகிரி, ஈராறு கால்கொண்டெழும் புரவி, பாபுஜியின் மரணம் போன்றவை..……இவைகளுக்கு குறிப்பெழுதிவைத்துக்கூட கட்டுரை எழுத நேரமில்லாத அவலம்….. அப்புறம் என் ஆய்வேடு (அதன் தலைப்பு: “சதையின் கதைகள்: மாரியம்மன் பற்றிய மானுடவியல், காலனீயச் சொல்லாடல்கள்”), அதைப் புத்தகமாக மாற்றவேண்டும். என் ஆசிரியரும் பேராசிரியருமான ஆல்ப் ஹில்டெபெய்டல் அவர்களோடு எழுத உத்தேசித்திருக்கிற ”திரௌபதி வழிபாட்டில் பெண்கள்” புத்தகம், கூத்து மற்றும் நாடக நடிகர்களோடு நடத்திய பலவருட உரையாடல்கள், களப்பணியை வைத்து பாதி எழுதியிருக்கும் இன்னொன்று…….
என் வேலைகளை எனக்கு ஞாபகப்படுத்திக்கொள்ள, என் பாதையிலிருந்து நான் விலகி கவனம் சிதறாமலிருக்க, என் தனிப்பட்ட வாழ்க்கையில் என்னைத் தொலைத்துவிடாமலிருக்க…….. இவ்வேலைகளை தொகுத்துக்கொள்ளும் முகமாகவே இங்கே இவற்றைச் சொல்லுகிறேன்…..மேலும் என்னை வாசிப்பவர்கள், சிலவருடங்கள் கழித்தும் இந்த வேலைகளை நான் செய்யாமலிருந்தால் எனக்கு நினைவூட்டவும் வற்புறுத்தவுமே இங்கே பதிவு செய்கிறேன்….தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மனவருத்தம் தருகிற விஷயம்….ஒருவரை இன்னொருவர் எழுத ஊக்கப்படுத்துகிற தருணங்கள் மிகவும் குறைவே. (அதுவும் பெண் எழுத்தாளராக இருந்தால் இவை அமைவது இன்னும் கடினம், என் சக பெண் எழுத்தாளத் தோழிகள் சில சமயங்களில் ’எழுதாமலேயோ,’ அல்லது எழுத்துக்கு அப்பால் ‘அழும்பு’ செய்து கவனிக்கவைப்பதாகத் தோன்றினாலும், இங்கே இலக்கியத்தளத்தில் செயல்படுகிற ஆண்சகோதரக் குழுமங்களின், வலைப்பின்னல்களின் அரசியலுக்கு முன்னால் அவற்றை விமரிசிக்க எனக்குத் தேவை இருப்பதாக தோன்றியதில்லை)
இது நம் போதாமை, துரதிர்ஷ்டம். எந்தக் சகோதரக்குழுவிலும் சேராமல், எந்த எழுத்தாளருக்கும் அடிப்பொடி ஆகாமல், எந்த அறிவுஜீவியையும் அண்ணாரப் பார்த்து வியக்காமல் எழுத்துவாழ்வைக் கொள்ளும்போது, அயராத ஊக்கத்தை, நல்ல எழுத்துகள், தனிப்பட்ட நட்புகள், முகம்தெரியாத அல்லது எந்த அஜெண்டாவும் இல்லாத வாசிக்கிறவர்கள் மூலமாக மட்டுமே பெறமுடியும்…… (சில அபூர்வமான சந்தர்ப்பங்களும் இங்கே உண்டு, தீயுறைத்தூக்கம் வந்த புதிதில், திடீரென ஒரு அதிகாலையில், முன்னே பின்னே நான் பேசியே இல்லாத, என் மதிப்புக்கும் பிரியத்துக்கும் உரிய கவிஞர் பிரம்மராஜன் வீட்டுக்கு வந்தது போன்றவை…ஆனால், தினம் பூத்தால் அது குறிஞ்சி இல்லையே….) இணையம் மூலமாக என்னைப் பார்த்தறியாமலேயே உத்சாகம் கொடுப்பவர்கள் நிறைய. நண்பர்களுக்கும் இந்த அனுபவம் இருக்கும்.
தமிழ்நாட்டு இலக்கியச் சூழலைப் பொறுத்தவரை இன்னும் சில நடப்புகளையும் சொல்லவேண்டும். குறிப்பாக, எழுத்தாளர்களை லிஸ்ட் போடுகிற தன்மை. இந்த லிஸ்டில் அந்தந்த பிராந்தியம் அல்லது சகோதரக்குழுமம் சார்ந்தவர்களுக்கே பெரிதும் இடம்கிடைக்கும், பிரதிநிதித்துவ அரசியல் சரித்தன்மையோடிருக்க, பிராந்தியம்சார் அல்லது சகோதரக்குழுமத்தோடு தொடர்பில் இருக்கிற ஓரிரண்டு பெண் எழுத்தாளர்கள் பெயரைச் சொல்லுவது உண்டு. பாராட்டில் பரஸ்பர மொய் எழுதுபவர்களைப் பார்க்கலாம். பரந்த, தற்போதைய புத்தகவாசிப்பு இல்லாமல் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டியபடி தனக்குத் தெரிந்தவர்கள், கேள்விப்பட்டவர்கள் பெயர்களை உதிர்ப்பதையும் பார்க்கலாம். அதைவிட மோசம், தனிப்பட்டமுறையில் பேசும்போது ஒருவருடைய எழுத்தைக் குறைசொல்லுவது, மேடையில் அவருடைய எழுத்தையே சில காரண,காரியங்களுக்காகப் புகழ்வது (’புறத்தே இன்சொல்வது’ என்று சொல்லலாமா இதை….?). இப்படியான சூழலில்தான் எழுதுகிறோம். ஆனால் இது மாறும். எழுத்தாளரைப் பேசாமல், பெயரைக்கூட ரொம்ப உரத்துச்சொல்லாமல் எழுத்தைப் பேச, விவாதிக்க நம்மால் முடியவேண்டும். முடியும்.
கவிதைகள் பொறுத்து இன்னொரு அபாயமும் உண்டு. கவிதை என்றால் குறைந்த அளவு வரிகள் என்று நினைப்பவர்கள் வாசிப்பவர்களில், ஏன் கவிஞர்களிலே கூட உண்டு. ”என்ன, ஏதோ நாலு வரி எழுதிட்டா….” போன்ற வாசகங்களை அடிக்கடி கேட்கலாம். கவிதை ஏதோ கே.ஜி. வகுப்புகள் போலவும், அப்புறம் சிறுகதை, குறுநாவல், நாவல் என்று ஏணிப்படி நாம் ஏறுவதற்காகக் காத்துக்கிடப்பதைப் போலவும். ரெண்டு தொகுப்பு வந்திடுச்சி, இனிமே சிறுகதைத்தொகுதி கொண்டுவரலாம்னு இருக்கேன் என்கிற கவிஞர்கள் உண்டு. ஏங்க, கவிதை எழுதீட்டீங்க, எப்ப நாவல் எழுதப்போறீங்க என்று என்னைக் கேட்பவர்களுக்கும் பஞ்சம் இல்லை. (எனக்கென்னவோ உளவியல் ரீதியாக தமிழருக்கு, ஆண் பெண் எல்லாருக்குமே குண்டுத்தன்மையிடம் ஒரு விழைவு இருப்பதாகவே தோன்றுகிறது. குஷ்பு இட்லியில் ஆரம்பித்து குண்டுப் புத்தகங்கள் வரை….இதனால், குண்டுப்புத்தகங்களை எழுதியிருப்பவர்களைக் குறைகூறுவதல்ல இங்கே என் நோக்கம். எழுத்துவகைமைகளை பற்றி நிலவும் கண்ணோட்டம், அனுமானம், விழைவு பற்றியே என் அவதானிப்பு,), ”என்னங்க பதிவில் கவிதையே போடறீங்க, கட்டுரை எழுதுங்க,” ”கவிதை ஏமாத்திரும் பெருந்தேவி, உரைநடையில்தான் வலிமை தெரியும்” இப்படி கூறிய பெயர்பெற்ற அல்லது வளரும் எழுத்தாளர்கள் உண்டு…….இந்த கவிதை, கதை, நாவல் ஏணிப்படியின் உச்சாணிப்படியில் கட்டுரைகள், விமரிசனங்கள் (அவை எதைப்பற்றியதாகவும் இருக்கலாம்). தமிழ் இலக்கியம் கட்டமைக்கும் அறிவுப்புலத்தில் ஏன் கவிதை இப்படிக் கடைசிப்படியில்?
எல்லோரும் கவிதை எழுதிடறாங்க அதனால் கவிதைக்கு இந்த நிலை என்பது பதிலாக இருக்கமுடியாது. எத்தனை கதைப்போலிகள், எத்தனை டவுன்லோடுக்கட்டுரைகள் உலாவுகின்றன இங்கே, இதனால் கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் இலக்கிய உலகில் மவுசு குறைந்தா போனது? என் கேள்வி: தமிழ்ச்சூழலில் எழுத்தை பண்டிதத்தன்மையிலிருந்து ஜனரஞ்சகப்படுத்திய வழிகளில், விதங்களில் எந்த இடத்தில் கவிதை இந்த ஏணிப்படி வகைப்பாட்டுக்குக் கீழ்ப்படிந்தது? வானம்பாடி, திராவிட இயக்கம் என்றெல்லாம் காரணம் சொல்வது வேலைக்கு ஆகாது. இக்கேள்வியின் புலம், இலக்கியவகைமைகள் குறித்த நம் மதிப்பீடுகளை உருவாக்கியபடி இயங்கும் இலக்கியச்சூழலைப் பரிசீலனை, சுயபரிசோதனை செய்வதில்தான் அமைகிறது.
இங்கே கவிதைகளைப் பிரசுரிப்பது குறித்தும் சொல்லவேண்டும். பக்கநிரப்பிகளாக கவிதைகள் சில பத்திரிகைகளில் உபயோகப்படுகின்றன. வாசிக்கும் நண்பர்கள் சிலராவது இதை அறிந்திருப்பார்கள். அதாவது கட்டுரைகள், கதைகள் வராதபோது, ’கவிதை பைலை’ எடுத்து தேறுவதைப் பிரசுரிப்பது. வேறுசில பத்திரிகைகளில், கவிஞர்களே, எழுத்தாளர்களே அவற்றை நடத்தினாலும், லே அவுட்களில் கவிதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆறு கவிதைகளை இரு பக்கங்களில் அடைத்து போடுவது. கவிதை என்ன வரிக்கணக்கா என்ன? வாசிப்புக்கான இடத்தை விஷுவலாகத் தரவேண்டாமா? நானூறுபக்க நாவல் கொடுக்கமுடியாத ஒரு கேள்வியை, நிறையுணர்வை, மனபூகம்பத்தை கவிதையின் மூன்றுவரிகள் உங்களுக்குத் தந்துவிடும். ஆனால், மூன்று வரிகள்தானே என இன்னும் முப்பது வரிகளோடு, அல்லது சம்பந்தமில்லாமல் ஏதோ ஒரு விளம்பரத்தோடு பந்தி இலையை நிறைப்பது போல பக்கத்தை நிரப்ப முடியுமா, வேண்டுமா? (விதிவிலக்கான பத்திரிகைகள் உண்டு, நான் ஒரு பொதுப்போக்கைச் சொல்லுகிறேன்.)
இது ஒரு பகிர்தல் மட்டுமே. ’கட்டுரைத்தன்மையோடு’ நூல்குறிப்புகள் போட்டு எழுதப்பட்ட கட்டுரை அல்ல. இதனால் இதன் நம்பகத்தன்மையைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். இங்கே பெயர் எதையும் குறிப்பிடாமல் நான் எழுதியிருப்பதற்குக் காரணம், அவர்களில் பலர் நான் அறிந்தவர்கள் அல்லது நண்பர்கள் என்பதால் மட்டுமே. மேலும் நான் எழுப்பியிருக்கிற கேள்விகளின் உண்மை உறுத்தினால் போதும்.
அன்புடன்
பெருந்தேவி
14 comments:
அருமைங்க. :)
விதூஷ், பாராட்டுக்கு நன்றி. “அருமையைத்” தாண்டி விரிவாக எழுதுங்கள். அது கருத்துப் பரிமாற்றத்துக்கு நமக்கு உதவும். சரிதானே?
வணக்கங்க,
உங்கள பக்கத்தை தொடர்ந்து வாசிப்பதுண்டு. நீங்களே சொன்ன மாதிரி என்ன சொல்றதுன்னு தெரியாது, அதனால அப்படியே போய்விடுவதுண்டு.
சரி விசயத்துக்கு வருவோம்.
கவிதைகள் குறித்து எனக்கொரு எண்ணம் உண்டு.
பல கவிதைகளை நான் வாசித்தபின் எழுதியவர் இதைத்தான் குறிப்பிடுகிறாரா என்ற ஐயத்துடனேயே செல்வதுண்டு.
நிச்சயமாக நேருக்கு நேராக முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் ஒரு படைப்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஒரு குறைந்த பட்ச ஒத்திசைவை கவிதைகள் உருவாக்குவதில்லைன்னு தோணுது.
கவிதைகள் வாசிப்பவரின் உழைப்பையும் கட்டுரைகள் எழுதியவரின் உழைப்பையும் கோருகின்றனன்னு நினைக்கிறேன்.
இது உங்கள் கட்டுரையின் ஒரு சிறுபகுதிக்கான பின்னூட்டமே, மற்றவை பெரிய அளவில் புரியல அதனால் இப்போதைக்கு கவிதைகளோட நிறுத்திகிறேன்.
கையேடு, தெரிந்தவரை சொல்லுகிறேன். சிறுபத்திரிகை, நடுபத்திரிகைகளில் வெளிவருகிற தீவிரமான கட்டுரைகளுக்கு உழைப்பு தேவைப்படும். நாகார்ஜுனன், ராஜன்குறை போன்றவர்களுடையதாக இருக்கட்டும், ஸ்டெல்லா ப்ரூஸ் ஆத்மாநாம் பற்றி எழுதிய அருமையான பதிவாக இருக்கட்டும், அல்லது வறீதையா கான்ஸ்தந்தின் மீன்பிடிச்சட்டத்தைப் பற்றி எழுதியதாக இருக்கட்டும், உழைக்காமல் எதிர்கொள்ளமுடியாது.
கவிதையைப் பொறுத்தவரை: எழுதியவரின் அர்த்தத்துக்கும் வாசிப்பவரின் அர்த்தத்துக்கும் ஒத்திசைவு இருக்கவேண்டும் என்பது என்ன கட்டாயம்? கவிதையின், ஏன் புனைவெழுத்தின் குணாம்சமே பலதளங்களில் அதன் அர்த்தப்பாடுதான். வாசித்துப் பழகும்போது ஏதோ ஒருகணத்தில் சிலதளங்கள் அண்மையில் வரும், இன்றில்லாவிட்டாலும் நாளை வரும். ஆனால் அப்படி நாம் வாசிக்கப் பழகியிருக்கிறோமா (புரிதல்/புரியாமை என்கிற இரு(ண்)மையைத் தாண்டி)? குறிப்பாக கவிதைக்கான வாசிப்புவெளியின் அறிமுகம், cultivation எத்தனை பேருக்கு இன்றைய எழுத்தில் கிடைத்திருக்கிறது? 90-களின் ஆரம்பத்தில் எங்களுக்குக் கிடைத்தது. இன்று நம் ஊரிலேயே எத்தனை கற்றறிவாளர்கள், வாசிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ்க்கவிதை பற்றி காத்திரமாக எழுதுகிறார்கள்? வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தோன்றுகிறது, தெரியவில்லை…ஆனால், முன்னெடுத்துச் செல்பவர்கள்?
இன்னொன்று: உங்கள் கருத்தையே எடுத்துக்கொள்ளுங்கள்...ஏதோ கவிதை எளிதாக எழுதப்பட்டுவி்ட்டு வாசிப்பவரின் உழைப்பைக் கோருவதாகவும், கட்டுரைமட்டுமே ‘உழைத்து’ எழுதப்படுகிற மாதிரியும்...இந்தப் பார்வை உருவாவது எப்படி என்றுதான் இப்பதிவு கேட்கிறது.
தமிழ் said...
இணையத்தில் வாசிப்பவர்கள் பலர் சிறுபத்திரிகை வாசகர்கள் போன்றவர்கள் அல்லர்.பலருக்கு இணையம் மூலம்தான் இது போன்ற கவிதைகள் அறிமுகமாகின்றன.
1990களில் அவர்கள் பதின்ம வயதில்
இருந்திருப்பார்கள் அல்லது என்னைப் போல் பிறந்தேயிருக்கமாட்ட்டர்கள்.
வைரமுத்து,சுஜாதா,சினிமாப் பாடல்களைத் ’தாண்டி’ இங்கு வந்திருக்கிறார்கள்.
இணையத்தில் கவிதை வாசிப்பதில்
சில சிக்கல்கள் உள்ளன: உ-ம்:
கவிதை சட்டென புரியாத போது அதை மீண்டும் வாசிக்காமல் விடுவது; படித்த உடன் 2செண்ட் கருத்து கந்தசாமி [லதாவின்(?) கந்தசாமியல்ல:)]யாக எதையாவது எழுதுவது (சூப்பர், :(, :), பின்னீட்டிங்க) ; கவிதையோ/கட்டுரையோ எதிர்பார்த்த நீளத்தை விட அதிகமாக இருந்தால் முழுவதும் படிக்காமல் விடுவது; தொடர்ந்த தீவிர வாசிப்பிற்கு தயாராக இல்லாமல் இருப்பது;
(பதிவுக்கு சம்பந்தமில்லாத சில வரிகள் நீக்கியிரு்க்கிறேன் --
பெருந்தேவி)
//எழுதியவரின் அர்த்தத்துக்கும் வாசிப்பவரின் அர்த்தத்துக்கும் ஒத்திசைவு இருக்கவேண்டும் என்பது என்ன கட்டாயம்?//
ஆமாங்க அப்படி எதுவும் கட்டாயம் இல்லைதான், ஆனால், குறைந்த பட்ச ஒத்திசைவு இல்லாமல், நீண்ட தூரம் இருவரும் பயணிக்க முடியாதுன்னு நினைக்கிறேன், அதிலும் குறிப்பாக கவிதைகளுக்கு. ஆனால் நீங்கள் சொன்னது போல அதுக்கு தொடர் முயற்சியும் உழைப்பும் தேவைதான் மறுக்க முடியாது.
//உங்கள் கருத்தையே எடுத்துக்கொள்ளுங்கள்...ஏதோ கவிதை எளிதாக எழுதப்பட்டுவி்ட்டு வாசிப்பவரின் உழைப்பைக் கோருவதாகவும்,//
ஆமாங்க அப்படித்தான் எழுதியிருக்கிறேன். ஆனால், கவிதையை நான் அவ்வளவு எளிமைப்படுத்த முற்படவில்லை.
எழுதியவரின் மொழிச்சிக்கனம் மற்றும் வாசிப்பவரின் சிந்தனைக்கான உழைப்பு இரண்டையும் தேவையில்லாமல் குறுக்கே ஒப்பிட்டிருக்கிறேன். தவறுதான்.
தமிழ், இந்தப்பதிவு தமிழ் இலக்கியச்சூழலை, கவிதைக்கு அங்கிருக்கும் இடம் குறித்தது. இணைய வாசிப்பு செய்பவர்கள் குறித்தல்ல. அவர்களை எள்ளும்தொனியில் பேசுவது எனக்கு உவப்பாக இல்லை. ஒருவேளை நீங்கள் கையேடு கருத்து குறித்து எழுதியிருந்தால்: அத்தகைய கருத்து இணைய வாசிப்புக்கே உரித்தானதுமட்டுமல்ல என்றே நினைக்கிறேன்.
உங்கள் ஆதங்கம் புரிகிறது... இந்த ஏணிப்படி எழுத்து மதிப்பீடு ஒரு எழுதாவிதியாக எல்லோரிடமும் இயங்கிக் கொண்டுள்ளது என்பதுதான் அவலச் சூழல்.
ஒரு நண்பர் சமீபத்தில் நீங்கள் கவிதை எழுதுவீர்களா என்று கேட்டார்? நான் கவிதையில்தான் எனது எழுத்தை துவக்கியவன்.. என்றேன். அந்த கவிதைகளை எல்லாம் புத்தகமாக போட்டுவிடாதீர்கள் என்றார். போடும் அளவிற்கு அவை கவிதைகள் இல்லை என்பது எனக்குத் தெரியும்.. என்றாலும்.. கட்டுரையாளன் கவிதை என்கிற கருத்தாக்கம் இங்கு தொழிற்படுவதையும் நீங்கள் கூறுவதுபோல ஏணியின் உச்சியில் விமர்சனம், கட்டுரைகள் வைக்கப்பட்டிருப்பதையும் உணரலாம். இத்தனைக்கும் அவரும் தமிழில் ஒரு நல்ல கவிஞர்தான். கவிஞராகத் துவங்கியவர்தான்.
அப்புறம் ஒருவர் என்னிடம் சொன்னார்.. நாவல் எழுத துவங்குங்கள்.. தமிழில் அதற்குத்தான் இப்ப மௌசு என்றார். இவரது ஏணிப்படி வேறு. ஆக ஏணிப்படிகள் என்பது மதீப்பீடுகள் வழியாக உருவாகுவதே. படைப்பின் அவசம் என்பது தனக்கான வெளிப்பாட்டு வடிவத்தை தானே தீர்மாணித்துக் கொள்கிறது. அதற்காக எழுத்தாளன் தொழிற்படும், பரிச்சயம் உள்ள, பயிற்சி உள்ள வடிவங்கள் முக்கியம். கவிதையின் உணர்வை உரைநடைகளோ புனைவுகளோ ஏற்படுத்துவதில்லை. அதேபோல் மற்றவற்றின் உணர்வை கவிதை உருவாக்குவதில்லை. படைப்பு என்றவகையில் இவை வெறும் வடிவம் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல. மடக்கி மடக்கி எழுதுவதை கவிதை என்று புரிந்துகொள்ளும் அவலம் புதுக்கவிதை தமிழுக்கு தந்த கொடை எனலாம்.
சான்றாக உங்களது லதா-கந்தசாமி 68 கவிதையை எடுத்துக் கொள்ளுங்கள். நவீன காதலை சொல்லும் இந்த கவிதையை புனைவாக்கினால் ஏற்படுத்தும் உணர்வு கவிதை ஏற்படுத்தும் உணர்விற்கு ஈடாகாது. காரணம் அந்த எண்கள் எற்படுத்தும் நவீனத் தன்மை முக்கியம். புனைவில் அதனைக் கொண்டு வருவது என்பது அத்தனை சாத்தியமான விஷயமாக எனக்குப் படவில்லை. காதல் என்பது ஒரு கணித சூத்திரமாக மாறிவிட்டிருக்கும் இந்த நவீன வாழ்வில், காதலிக்கு கடற்கரையில் பூ தரும் காதல் காணாமல் போய் காபி ஷாப்புகளில் கணிப்பொறியில் லேசர் பூக்களால் அதன் கணிதங்களால் தீர்மாணிக்கும் காதலாகிவிட்டது. நவீனவாழ்வின் பல அவலங்களில் ஒன்றுதான் இந்த ஏணிப்படி விவகாரமும். அதிலும் தமிழ் சூழலின் விசித்திர அமைப்பும், மனமும் பற்றி சொல்லப்போனால் இதைப்போல் எண்ணற்ற விஷயங்களை எழுத வேண்டி வரும்..
உணர்ச்சிவசப்படாமல் நல்லவிதமாக கவிதை கிவிதைன்னு காலத்தை வேஸ்ட் பண்ணாம நாலு கட்டுரை எழுதுங்கள்... ))) எப்பத்தான் எணிப்படியில ஏறுறதாம்... )))
அந்த குண்டு பற்றிய உளவியல் அய்வு அருமை. அதான் குண்டு குண்டா பத்தகம் போடுறாங்கலா )))
அன்புடன்
ஜமாலன்.
தல, க்ளாஸ்-க்குப் போகிறேன். வந்து விரிவாக பதில் எழுதுகிறேன்.
ஜமாலன்,
விரிவான பதிலுக்கு நன்றி. சற்றைக்கு முன், நண்பர் நாகார்ஜுனன் வலைப்பூவில் இதைப் படித்தேன்.
“தமிழ்ப் படைப்பு எழுத்தாளர்கள் பெரும்பாலும் விஸ்தாரமாகப் படித்தவர்கள் அல்லர். இன்று விஸ்தாரமாகப் படித்திருப்போர், குறைந்த பட்சம் ஆங்கிலம் அறிந்தோராக - அல்லது தமிழில் துறைகளைக் கடந்த விஷய ஞானம் உள்ளோராக இருக்க வேண்டியுள்ளது.
பலர் நாலு கவிதை எழுதிவிட்டு தலையைச் சிலுப்பிக்கொண்டு நடப்போர் தமிழில். தமிழிலும் ஃப்ரெஞ்சிலும் மூல நூல்களை வாசித்து, அவற்றின் அதீத சிந்தனைகளை, தம் ஈடுபாட்டுக்குத் தக, தெரிந்து தமிழிலும் அறிமுகப்படுத்த எப்போதும் தயாராக இருக்கிறார் நாகார்ச்சுனன்.”
இலக்கிய உலகில் அமைப்பியல் போன்ற புதுக்கோட்பாடுகளை அறிமுகப்படுத்திய நம் பிதாமகர் தமிழவன் எழுதியிருப்பது இது. மேற்கோள் இடப்பட்டதில் முதல் கருத்து எனக்கு ஒப்புதல் உடையதே. ஆனால், அடுத்த வரிகளில் சம்பந்தமில்லாமல் ‘நாலு கவிதை’ என்பதில் வெளிப்படும் அனுமானம் முக்கியமானது.. இதை நாலு சிறுகதை என்றோ, நாலு நாவல் என்றோ ஏன் சொல்வதில்லை, திரும்பவும் கவிதையின் வரிக்கணக்கு எளிதான உழைப்பாக எப்படி கருத்துருவாக்கம் பெறுகிறது பாருங்கள். ப்ரெஞ்ச் போன்ற மொழிகளிலிருந்து நேரடியான மூலநூல்களின் மொழியாக்கங்கள், ”பல நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை” அறிமுகப்படுத்தல் நமக்குத் தேவை. அதே நேரத்தில், தமிழின் படைப்புவகைமைகளில் ஒன்றான கவிதையையும் கவிஞர்களையும் ஏன் குறைத்துப் பேசவேண்டும்? இலக்கிய விமரிசகர்களின் பார்வையிலும் எப்படி இந்த ஏணிப்படி மதிப்பீடு இயங்குகிறது என்று காட்டவே இங்கே இதைக் குறிப்பிடுகிறேன்.
பதிவு ம் பின்னூட்டமும் நிறைய விசயங்களை புரியவைக்கிறது.. பத்திரிக்கைகளில் எழுதுபவர்கள் இணையத்திலும் பகிர்ந்துவைப்பது.. நினைத்தபோதெல்லாம் தோழியை சந்திப்பது போன்றது என்று தோண்றுகிறது.
நேற்று எதேச்சையாக மீண்டும் கல்லரின் “இலக்கியக் கோட்பாடு“ படித்துக்கொண்டிருந்தேன். அதில் கவிதை என்பது வரிகலள்ள என்று துவங்கி கவிதையியல் பற்றி விரிவாக பேசுகிறார் கல்லர். (உங்கள் தலைப்பும் அப்படித்தான் உள்ளது. ஆச்சர்யம்தான்.)
கவிதை என்பது இன்று நாம் இலக்கியம் என்று வளர்ச்சியடைந்த நிலையில் பேசும் ஒன்றின் ஆரம்பநிலை அல்லத மூதாதை என்று சொல்லலாம். குகை ஓவியங்களுக்குப்பிறகு மனிதகுலம் கண்டடைந்த இலக்கியவடிவம் கவிதை அதாவது பாடல்கள்.. இது குறித்து மனித உழைப்புடன் இலக்கியம் உருவான கதைப்பற்றி ஜார்ஜ் தாம்சன் விவரிக்கிறார். (“மனித சமூகசாரம்” - தாம்சன் என்றவுடன் பழைய மார்கசியவாதி என்று நீங்கள் நக்கலடிக்கக்கூடும்.) ஆக, இலக்கிய வகைமைகளில் கவிதை என்பதுதான் சிக்கலானதும், உடனடித்தன்மை வாய்ந்ததும் ஆன இலக்கிய உணர்வை உருவாக்குவது. ஒரு நாவலுக்கு அல்லது ஒரு புனைவிற்கு கிடைக்கும் உயர்ந்தபட்ச சிறந்த விமர்சனம் என்பது அது கவிதையாக படைக்கப்பட்டுள்ளதா? என்பதுதான். அதனால் இலக்கியக்குணம் அல்லது இலக்கியத்தன்மை என்பதற்கான அடிப்படை அளவுகோலே கவித்துவம் என்பதாகவே உள்ளது. உலகை கவிதையாக காண்பது என்பது ஒரு லட்சிய உணர்வாகவே ஆழ்தளத்தில் உள்ளது என்றே நினைக்கிறேன். இருந்தும் “ஏணிப்படி இலக்கியக்கோட்பாடு“ என்பது ஒரு பாஷனாகியுள்ளது. காரணம், கவிதை என்ற பெயரில், வடிவில் எழுதி தள்ளப்படும் பல கழிப்பறைக் குப்பைகளால்தான்.
மற்ற புனைவுகளுக்கு வார்த்தையும் மொழியும்தான் மூலதனம். கவிதை என்பதே வார்த்தையும் மொழியும்தான். அதனால்தான் கவிதை ஒரே நேரத்தில் மதம்சார்ந்த ஆன்மீகமாகவும், புதிய மொழியைப் படைக்கும் புரட்சிகர ஆயுதமாகவும் இருக்கிறது. அதாவது பழகிய வார்த்தைகளில் சொன்னால் பிற்போக்காகவும், முற்போக்காகவும் இருக்கிறது. இது உள்ளடக்கம் பற்றியதல்ல... வடிவம் பற்றியது. (உள்ளடக்கம் வடிவம் என்கிற பிரிவினை இலக்கியக் கோட்பாட்டில் செத்து பல ஆண்டுகளாகிறது என்பது உங்களுக்குப் புரியும்.)
தர்க்கத்தை மீறுவது கவிதை என்பதால்தான் மற்ற புனைவுகளைவிட கவிதை என்பது சமூக ஒழுங்கமைப்புடன் சதா முட்டி மோதிக்கொண்டு உள்ளது. “கவிதையும் சிதைவாக்கமும்“ என்று முன்பு “மேலும்-“-ல் ஒரு கட்டுரையில் நான்கூட கவிதை என்பது பற்றிய பல ஐயங்களை எழுதி உள்ளேன். கவிதை என்பது மதம் சார்ந்தது என்பதாக... விரிவாக மற்றொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்.
கவிதை என்பது ஒரு சோகமாக இல்லாமல் கொண்டாட்டமாக மாறுவதே “நவீனகவிதை“ என்பதே எனது தற்போதைய நிலைப்பாடாக உள்ளது. உங்கள் 68 கவிதைப்போல.. தமிழ்க்கவிதைச் சூழலை புதுக்கவிதை என்றும் நவீனக் கவிதை என்றும் இரண்டாக பிரிக்கலாம். நவீனக்கவிதை என்பது ஆத்மநாமிலிருந்து துவங்குவதாகக் கொள்ளலாம் என்பதும்கூட எனது சமீபத்திய நிலைப்பாடுதான். புதுக்கவிதை என்பதைதான் தமிழவன் மேலே குறிப்பிடும் நாலுகவிதை என்று கருதிக்கொள்ளலாம். நீங்கள் நவீனகவிதை எழுதுபவர் என்பதால் இது குறித்து கவலைக் கொள்ள வேண்டியதில்லை. )))
அன்புடன்
ஜமாலன்.
keep writing, one day the deaf will hear,the silence
பெருந்தேவி,கவிதைகள் குறித்தும் அதன் பிரசுர நிலைபாடுகள் குறித்தும் நீங்கள் பேசுவதில் சில நியாயங்கள் இருப்பதாக உணருகிறேன்.ஆனால் கவிதையின் நீள/அகல விஷங்களில் ஒற்றை முடிவுக்கு நாம் வருவது கடினம்.பல கவிஞர்கள் பிரக்ஞையற்று வெறும் வார்த்தைக் குவியல்களை கவிதையாக இன்றும் சலிப்பில்லாமை ஈனுகிறார்கள்.அதை உச்சிமுகர்ந்தலும் நடக்கத்தானே செய்கிறது.கூடவேசொல் அழகு,கவிதையின் அடுக்கு வடுவம் என்று எதிலும் அக்கறையற்று வளவளவென்று வாசகனை வருத்துவதும் நடக்கதான் செய்கிறது.
அதேபோல கவிதையை ஓர் இயலாக பார்க்கும் மனோபாவம் பல கவிஞர்களிடமே இல்லை.
அப்புறம் உரைநடை சமாச்சாரம்.அதை எழுதிப் பழகுவதில் தவறொன்றும் இல்லை.கவிதையின் பயிற்சி உரைநடைக்கு ஒருநாளும் உதாவாது.அது தனிக் கலை.கவிதையும் அப்படியே.அதனால் தான் பல உரைநடை எழுத்தாளர்கள் கவிதையின் வெளியை விட்டே வெளியேறிவிட்டார்கள்.நிறைய பேச நினைத்தேன் உங்களைபோல எனக்கும் இப்போது நேரமில்லை.
Post a Comment