இந்தப் படிகளில் ஏறித்தான்
வாழ்க்கைக்குச் செல்லவேண்டும்.
குறுகின படிகள்
வழுக்குப்பாசி
உதிர்கிற பக்கச்சுவர்
கைப்பிடியில் பாம்புகள்
ஆனாலும் இவ்வழியில்தான்
சென்றிருக்கிறார்கள் வாழ்க்கையை அடைந்தவர்கள்
பல காலைகள், மதியங்கள், இரவுகள்
இன்னும் பொழுதற்ற பொழுதுகள்
விபத்து, சந்தேகம், அவநம்பிக்கை
இன்னும் பெயரில்லா உணர்வுகள்
இப்படித்தான் செல்லவேண்டும்
வியர்க்கும் இரைக்கும் நுரை தள்ளும்
இன்னும் தெரியாதன செய்யும்
ஆனாலும் ஏறவேண்டும்
ஏனெனில் இப்படித்தான்
வாழ்க்கையை அடைந்திருக்கிறார்கள்
ஏனெனில் வாழ்க்கையின் வா
நம்மை விட வலுவானது
ஏனெனில் முதற்படியில்
கால்வைத்து விட்டோம் ஏற்கெனவே.
5 comments:
I would prefer to see an alternations of imagery in the steps (not all of them unpleasant and foreboding) and they need to be fresh (snakes are cliche); otherwise the poem is appealing. I like the Heideggerian note in the end which may perhaps be expanded.
.நன்றாயிருக்கிறது வாழ்த்துக்கள்...
இந்தப் படிகளில் ஏறித்தான்
வாழ்க்கைக்குச் செல்லவேண்டும்.
-- வாழ்க்கைக்கு வெளியே வாழ முடியுமா? என்கிற கேள்வியை எழுப்புகிறது இக்கவிதை. வாழ்க்கை உயரத்தில் என்பதான தோறறம் உள்ளது இவ்வரிகளில். வாழ்்க்கையை அடைய படிகளில் ஏறினால்.. படிகளில் ஏறுவது என்பது என்ன? அதான் வாழ்்க்கைக்கு வெளியில் வாழ்வதா? அல்லது வையத்துள் வாழ்வதா?
முதல்வரிக்கும் இறுதிவரிக்கும் இடையில் முரண்பாடு உள்ளதா?அல்லது எனது வாசிப்பின் கோளாறா?
வழக்கம்போல கவிதை நன்றாக உள்ளது.
Interesting question by Jamalan. Waiting to see your answer.
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் நண்பர்களே.
@ராஜன், ஆம் பாம்புகள் வழமையான இமேஜ் தான். ஆனால் வழமையான வாழ்க்கை என்று அறியப்படுவதன் (அல்லது முதல் படியின் கால் வைத்துவிட்டதன்?) ஒரு எரிச்சல் எழுதும்போதும் இன்னமும் இருக்கிறது. பாசிடிவ் இமேஜ்கள் வராததற்கும் அது ஒரு காரணம். இக்கவிதை குரங்காகத்தான் பிடிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக கவிதையை செதுக்கலாமே தவிர மறு-எழுத முடிவதில்லை எனக்கு.
@ராஜா @hai நன்றி.
@ஜமாலன்:
வாழ்க்கைக்கு வெளியே வாழமுடியுமா என்ற கேள்வியை இப்படிக் கேட்டுப்பார்க்கிறேன். பொதுவாக வாழ்க்கை என்று அறியப்படுவதற்கு வெளியே இருப்பது வாழ்க்கை ஆகுமா? ஆனால் இப்படி வெளியே இருப்பதுகள்தாம் (அ மூன்றுபுள்ளி றிணை வேண்டுமென்றே போடுகிறேன்) வாழ்க்கை என்று ஒன்றை கட்டுவனவாக இருக்கின்றன.
படிகளில் ஏறுவது படிநிலையை குறிப்பதாகத் தோன்றுகிறதோ? வாழ்க் (இன்னும் சில க்-கள்)கை ரொம்ப “உசத்தி” சொல்லப்படுகிறது அல்லவா?
வாழ்க்கையும் படிகளும் வெளியேயும் வையத்துள்.
Post a Comment