Sunday, January 30, 2011

தேவை இங்கே திசைதிருப்பல் அல்ல

பேராசிரியர் சூர்யநாராயணனின் ”LIVELIHOOD OF FISHERMEN IN THE PALK BAY- SRI LANKAN TAMIL PERSPECTIVE” (28 ஜனவரி 2011) கட்டுரையைப் படிக்க நேர்ந்தது (http://www.southasiaanalysis.org/papers44/paper4304.html, நன்றி, பத்ரி சேஷாத்ரி). கட்டுரை பாக் வளைகுடா மீனவர் பிரச்சினை பற்றிய அவதானிப்புகளைத் தீவிரமாக முன்னெடுப்பது போலத் தோற்றம் தருகிறது. சமீபத்தில் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டதாக ”சொல்லப்படுவதைக்” குறிப்பிட்டு, எல்லை தாண்டி மீன்பிடிக்க வருபவர்களை பொதுவாக மற்ற நாடுகள் கையாளுவதைப் போல இலங்கை கையாளுவதில்லை என்று சுருக்கமாக அவதானிக்கிறது. என்றாலும், கட்டுரையில் வைக்கப்பட்டிருக்கிற வாதங்களும் தகவல்களும் சில கேள்விகளை எழுப்புகின்றன:

கிடைத்திருக்கும் செய்திகளின்படி 530-க்கும் மேல் இருக்கிறது கொல்லப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை. ஆனால் சூர்யநாராயணன் இறந்தவர்களின் எண்ணிக்கை 100 என்கிறார். என்ன வருடத்திலிருந்து இந்தக் கணக்கைச் சொல்கிறார் என்று எனக்குப் புரியவில்லை.

எண்ணிக்கைப் பிரச்சினை இருக்கட்டும். கட்டுரையில் சுட்டப்படுகிற ”இலங்கையின் தமிழ் மீனவர்” என்பதற்கும், “இலங்கை மீனவர்” என்கிற சொற்றொடருக்குமான பொருள் வேறுபாட்டை கவனிக்க வேண்டும். எதற்கு இந்தத் தமிழ் அடையாளம் இங்கே என்று யோசிக்கலாம். இரு விதங்களில் இந்த அடையாளம் இயங்குகிறது; (அ) தமிழக மீனவர்களின் ட்ராலர்களைக் குறைக்கச் சொல்லும்வகையில், ’நாமே’ (தமிழக மீனவர்களே) நம்மின மக்களின் (இலங்கைத் தமிழ் மீனவர்களின்) வாழ்வாதாரத்தைக் குலைக்கலாமா என்று “மனசாட்சியை” நோக்கிய கேள்வி போல் ஒன்று; (ஆ) தமிழக மீனவர்களின் சாவுக்கு அடிப்படை ’வெளியிலிருந்து’ இல்லை, ‘நமக்குள் (தமிழக மீனவர்-இலங்கைத் தமிழ் மீனவர்)’ நடக்கும் தொழில்போட்டிதான் என்று செயல்முறை விளக்கக் காரணம் காட்டும் மற்றொன்று. பிணைந்திருக்கிற இவ்விரு சொல்லாடல்களும் இலங்கை என்கிற நாட்டின் கடல்நீரில் நடந்த கொலைகளுக்கான பொறுப்பிலிருந்து அந்த நாட்டை அழகாகக் காப்பாற்றி விட முயல்கின்றன.

இதற்கு நீட்சியாக அடுத்த படியாக, நடந்த கொலைகளுக்கு இலங்கை அரசும் இந்திய அரசும் பதில் சொல்லவேண்டும் என்று தமிழகத்தில் எழத் தொடங்கியிருக்கும் கோரிக்கையை திசைதிருப்பும்முகமாக, குற்றச்சாட்டைத் தமிழக அரசில்பால் திருப்பிவிடுகிறது கட்டுரை. இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் குலைகிறது, இதற்குக் காரணம் தமிழக மீனவர்களின் ட்ராலர்கள் முதலியவை, தமிழக அரசு இதைக் கண்டும் காணாமலும் இருப்பது மனித உரிமை மீறல் என்று கட்டுரை சொல்லிக்கொண்டு போகிறது.

தொடர்ந்து தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் வரும் நிலையில், மீனவர் எதிர்கொள்ளும் வன்முறை குறித்த பேச்சை நாம் கூர்மைப்படுத்த வேண்டியிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், இக்கட்டுரை “இலங்கை தமிழ் மீனவர்” “தமிழக மீனவர்” என்கிற தொழில்போட்டி எதிரிணையை தமிழக மீனவர் எதிர்கொள்ளும் இலங்கைக் கடற்படையின் வன்முறையோடு conflate செய்து பேசுவது மிகவும் பிரச்சினைக்குரிய ஒன்று.

மேலும், ட்ராலர்களை உபயோகித்தல், அடுத்த நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டுதல் போன்றவை இன்றைய உலகளாவிய முதலீட்டியம் குறித்த இன்னமும் விரிவான ஆய்வுச்சட்டகங்களின் ஊடே அணுக வேண்டியவை. இத்தகைய அணுகுதலுக்கு மாறாக தமிழக மீனவர் தொடர்கொலை வன்முறையோடுகூட இந்த செயல்பாடுகளை இணைத்துப் பேசுவது, இந்த வன்முறையைப் புரிந்துகொள்ளவும் உதவாது; சூழலியல் மற்றும் குடிகளின் வாழ்வாதாரங்கள் பகிர்தல் போன்றவற்றின் மீதாக நாம் கொள்ள வேண்டிய தொலைநோக்கு அக்கறையையும் விசாரணையையும்கூட திசைதிருப்பிவிடும்.

7 comments:

டி.அருள் எழிலன் said...

பெருந்தேவி நல்ல கட்டுரை. சூர்யநாராயணன் மட்டுமல்ல ஹிந்து ராம் போன்றவர்காளும் இதே பிரச்சாரத்தைத்தான் செய்கிறார்காள். இது தொடர்பாக தமிழில் கட்டுரைகள் சில மாதங்காள் முன்பே வெளியிடப்பட்டுள்ளன. தமிழக மீனவர்கள்தான் பிரச்சனைக்குக் காரணம் என்று பேச்சு வார்த்தை என்ற பெயரில் வந்து போனவர்களும் சொல்லி விட்டுப் போய் விட்டார்காள். இப்போது மீனவர்களின் குரலை பிரதிபலிப்பது யார் என்பதே கேள்வி. இலங்கை மீனவர்களுக்காக இலங்கை அரசு பேசுகிறது. தமிழர்க மீனவர்களுக்காக? இந்தியாவோ, மாநில அரசோ திராவிட இயக்கங்களோ பேசாத போது என்ன செய்ய முடியும்.

1 இலங்கை : இராமேஸ்வரம் மீனவர் சந்திப்பு நடப்பது என்ன? – ல்.http://inioru.com/?p=16420

2.மீனவர் படுகொலைகள்- யார் காப்பாற்றுவார்கள்? http://athirai.blogspot.com/2011/01/blog-post_14.html

3.தண்டகாரண்யாவில் சல்வார்ஜூடும்- இராமேஸ்வரத்தில் இலங்கை கூலிப்படைகள். http://www.athirai.blogspot.com/

அனுஜன்யா said...

நீங்கள் குறிப்பிட்ட கட்டுரை முன்முடிவுகளுடன் எழுதப்பட்டது போல! In that case, its conflation arising out of convenience.

உங்கள் பதிவு இந்தத் தருணத்தில் அவசியமானது.

அனுஜன்யா

Perundevi said...

அருள் எழிலன், ஹிந்துவும் இதைத்தான் செய்கிறது. (ட்விட்டரில் சுருக்கமாக இதைக் குறிப்பிட்டிருந்தேன்) இந்தப் பதிவையும் பின்னூட்டங்களையும் வாசிப்பவர்களுக்காக ஒரு உதாரணம் இங்கே: http://www.thehindu.com/news/national/article1133363.ece
தமிழக மீனவர்கள் x இலங்கைத் தமிழ் மீனவர்கள் என்று பேசுவதில் வன்முறைப் பிரச்சினையின் core அடிபட்டுப்போகிறது.
நீங்கள் தந்திருக்கும் சுட்டிகளுக்கு நன்றி.

Perundevi said...

அனுஜன்யா, நன்றி. அறமும் உயிர்களுக்கான மரியாதையும் அற்ற ஒரு சூழலில் வாழ்கிறோம் என்று வருத்தமாக இருக்கிறது.

அ.வெற்றிவேல் said...

பெருந்தேவி!!இந்தப்பிரச்ச்சாரம் நீண்டநாட்களுக்கெ முன்னரே ஆரம்பித்துவிட்டது..நான் பேசிப்பார்தத வகையில் நான் மதிக்கும் சில அறிவூஜீவிகளே இந்தப்பிரச்னையை தமிழக மீனவர்கள் X இலங்கைத் தமிழ் மீனவர்கள் என்று தான் பார்க்கிறார்கள்..6 மாதத்திற்கு முன்னரே இந்த மாதிரி சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்..இது முழுக்க முழுக்க திசைதிருப்பும் முயற்சி..இந்த நேரத்தில் உங்களது கட்டுரை மிக முக்கியமானது..

தமிழ்நதி said...

பெருந்தேவி,

அரசுகள் இதை உயிர்கள் தொடர்பானதாகப் பார்க்கவில்லை. அவர்கள் அளவில் பிராந்திய வல்லாதிக்கம் சம்பந்தப்பட்டது இது. அதனால்தான் 530 மீனவர்கள் கொலைசெய்யப்பட்டதற்கு தகுந்த எதிர்வினை இல்லை.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கட்டுரையாளர் முன்முடிவோடு தமிழக மீனவர்பால் குற்றத்தைத் திருப்பிவிட்டிருக்கிறார்.

மேலும், ஈழத்தமிழர்கள் மீனவப் பிரச்சனையில் மட்டும் “இலங்கை“த் தமிழர்களாக்கப்படுகிறார்கள். நாங்கள் கடலில் மட்டும் ஐக்கிய இலங்கையின் குடிமக்களாகிறோம். அப்படிச் செய்வதனுாடாக ஈழ-தமிழக மீனவர்களுக்கிடையில் முரண்களை உருவாக்க நினைக்கிறார்கள்.

எவ்வளவு தெளிவாகச் சிந்திக்கின்றன மக்கள் எதிர்ப்புச் சக்திகள் அல்லது அரசுகள். இந்தச் சமயத்தில் அவசியமான பத்தி இது.

Perundevi said...

நன்றி வெற்றிவேல். அடையாள விழுமியங்களை, அரசுகள் தங்களது பொறுப்பற்ற தன்மைக்குப் பாதுகாவலாக எப்படி மாற்றுகின்றன பாருங்கள்.
தமிழ்நதி, //ஈழத்தமிழர்கள் மீனவப் பிரச்சனையில் மட்டும் “இலங்கை“த் தமிழர்களாக்கப்படுகிறார்கள். நாங்கள் கடலில் மட்டும் ஐக்கிய இலங்கையின் குடிமக்களாகிறோம்.// இன்னொரு பரிமாணத்தை உங்கள் குறிப்பு காட்டுகிறது. நன்றி.