Saturday, March 19, 2011

ஜப்பான் அணு உலைக் காட்சிகளின் எண்வகை மெய்ப்பாடுகள் (2)

ரோஜாநிறப் புகைமேகம் ஒன்று நகரத்தின்மீது உலாவந்த ஒரு காலையில் விளையாட்டு வீரர்களும் அரசு அதிகாரிகளும் குழந்தைகளும் திரைப்படத்தாரகைகளும் பிச்சைக்காரர்களும் அடியாட்களும் அரசியல் தலைவர்களும் அவர்கள் கட்டிய கட்டாத பெண்களும் ஆட்டோக்காரர்களும் இன்னும் பலரும் உடனடியாக நகரத்திலிருந்து சென்றுவிட அறிவுறுத்தப்பட்டனர். சிலர் கார்களை ஆட்டோக்களை இருசக்கர வாகனங்களை ஓட்டிக்கொண்டு குடும்பத்தோடு சென்றனர். பலர் பேருந்துகளிலும் வேன்களிலும் உள்ளேயும் மேலேயும் ஓட்டிச்செல்லப்பட்டனர். கொஞ்சம் ரோஜா நிறமேகம் அவர்களோடும் ஆசையோடு சென்றது ஒட்டி ஒட்டி. அவர்களில் குழந்தைகள்கூட அழாமல் இறுகிய முகத்தோடிருந்தனர். ”ரோஸி, மூகமூடியை நன்றாகப் பொருத்திக்கொள்.”

விரைவாகத் துறக்கப்பட்ட நகரத்தை ரோஜாநிறம் முழுக்க தன் வெளிறிய இதழ்களில் வசப்படுத்தியிருந்தது. கடலோரத்திலும் வசிப்பிடங்கள் என்று பெயர்பெற்றிருந்த இடங்களிலும் தனித்தும் ஒட்டியும் கும்பலாயும் ஊதாவண்ணம் மினுங்குகிற பிணங்கள்.

......


இருமாதங்களுக்குப் பின், பொழுதுசாய்ந்த ஒரு பொழுதில், நகரத்தின் கொஞ்சமாக சிதிலம்கண்டிருந்த மையப்பகுதி ஒன்றில் பதுங்கிப் பதுங்கி சின்னக்குழுக்களாக உருவங்கள் வெளிவந்தன. இதுவரையில் சுவர்கள் கீழே விழாத மால்களின் கடைகளிலும் தியேட்டர் காம்ப்ளெக்ஸ்களிலும் இருந்துகொண்டிருந்தன அவை. பென்சில்போல் மெலிந்த அவர்களின் பலரின் கைகளும் இருந்த மடிக்கணினிகள் அவர்கள் தள்ளாடி நடக்க அதே தள்ளாட்டத்தோடு அசைந்தன. மின்சாரம் அப்பகுதியில் மட்டும் எப்படியோ துண்டிக்கப்படாமல் இருந்தது. உப்புக்காற்றோடு பிணவீச்சடிக்கும் வீதிகள் மொத்தமும் இரும்புத் துகள்களும் கண்ணாடிகளும் செங்கல்குவியல்களும் சாம்பலும் பிளாஸ்டிக்கும் கதவுச்சட்டங்களும் அழுகின உறுப்புகளும். இக்குழுக்கள் ஒன்றையொன்று முறைத்தபடி கிட்டத்தட்ட உறுமியபடி ஒன்றின் நோக்கத்தை இன்னொன்று யூகித்தபடி ஒன்றோடு ஒன்று போட்டியிட்டபடி மெதுவாக அப்பகுதியின் சூப்பர்மார்க்கட்களை நோக்கி நடந்தன. கைவிடப்பட்ட அந்தப் பெரிய அங்காடிகளின் குளிர்பதனப் பெட்டிகளின் நாளோடிய இறைச்சித்துண்டங்களும் பூஞ்சைபிடித்த ரொட்டிகளும் சிலநாட்கள் அவற்றுக்குப் போதுமானதாக இருக்கும். அதன்பின்னும் இதே உணவைச் சேகரிக்க அலைந்துதிரிந்தவாறு சிலகாலம் செல்லும்; பின்னர் மேலும் சிலகாலம் தனியாய் அகப்படும் உருவங்களை பிடித்து உண்டு அவைகள் இருக்குமோ?

......

இக்குழுக்கள் தங்களை பின்-புவியதிர்வு சீவிகள் xe1, Pu1, Ra1, Th2, ... என்று தமக்குப் பெயரிட்டு அழைத்துக்கொள்ளும். உணவுக்கு அலையத் தேவையில்லாத நேரங்களில் மடிக்கணினிகளில் சேமிக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள்— பலநாட்டுப் புல்வெளிகள், கொடை நீலமலைக்குன்று, அரபிக்கடலின் சிற்றலையின் பின்னணியில் ஒரு சிறுவன் போன்றவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும். மனிதர்கள் சிரித்துப் பேசி நடக்கும் சமநிலமான பரப்புகளைக் காட்டும் படங்கள் அவற்றுக்கு வெகுவிருப்பம்.

......

வெளியேறிச் சென்றுவிட்ட மற்றவர்களுடன் எத்தொடர்பும் கொள்ள முனைவதில்லை அவை. அவர்களைப் பற்றிக் கவலைப்படுவதுமில்லை. பின்–புவியதிர்வு சீவிகளாக அவைகள் ஆகியிருக்கலாம், அல்லது சீக்கிரம் அவைகளாகிவிடும் என்கிற அவற்றின் நினைப்பு அல்லது நம்பிக்கை இதற்குக் காரணமாக இருக்கலாம்.

--நகரத்தைப் புனையும் சிதிலம்


மெய்ப்பாடு 6: இளிவரல் (பிணியும் வருத்தமும்)


டோக்கியோவின் தண்ணீரில் கதிரியக்க அயோடின், சூடுகுறையாத ஃபூகுஷிமா அணு உலைகளின் அருகே பண்ணைகளில் கீரை மற்றும் பால் உணவுப் பொருட்களில் அபாயகர அளவில் கதிரியக்க ஐசோடோப்கள்—இவைபோன்ற தெளிந்த கதிரியக்கப் பலாபலன்கள் பற்றி இங்கே எதுவும் சொல்லப்போவதில்லை. கொடுங்கனவு போன்ற பழைய நிகழ்வொன்றில் பங்கேற்ற உடல்கள் மட்டுமே பேசப்படும்.

ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வீச்சில் தப்பிய ஒருவரின் கூற்றைச் சுட்டுகிறார் ஆன் லராபி என்கிற மனித அழிவுகளை ஆராயும் ஒரு அறிஞர் (பார்க்க, Larabee, Ann. Decade of Disaster, Univ. of Illinois, 2000):
“எங்கெல்லாம் நான் நடந்தேனோ அங்கெல்லாம் இந்த மனிதர்களைப் பார்த்தேன்…..அவர்களில் பலரும் ரோட்டோரத்தில் மடிந்தார்கள்—என் மனதில் இப்போதும் அவர்களைப் படமெடுக்க முடிகிறது—அவர்கள் நடக்கும் பிசாசுகளைப் போல் இருந்தார்கள். …இவ்வுலகைச் சார்ந்த மனிதர்களாகவே அவர்கள் தெரியவில்லை. அவர்களின் நடை தனித்த வகையில் இருந்தது—மிக மெதுவாக. அவர்களில் நானும் உண்டு.”

“நடக்கும் இறந்தவர்களின்” இந்த அனுபவத்தை, உணர்வை தொடர்ச்சியானதாக, தீர்க்கமுடியாததாக, முடிவற்றதாக விவரிக்கிறார் ராபர்ட் லிஃப்டன் என்கிற ஆராய்ச்சியாளர் (பார்க்க, லராபியின் Decade of Disaster)

被爆者 ஜப்பானிய மொழியில் ஹிபாகுஷா என்பது ”அணுகுண்டால்/கதிர்வீச்சால் உடல், மனரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள்” என்ற பொருளைத் தந்தாலுமே, அந்தப் பதம் முழுமொத்தமான அடையாளமாற்றத்துக்குள்ளானவர்களை, பொதுவெளியில் கதிர்வீச்சின் அழிவுக்குறியை உடலில் சுமப்பவர்களைக் குறிப்பது; அதுமட்டுமல்லாமல், “அணுகுண்டு நோய்” தன்னை உடற்குறிகளின் மூலம்—நிறம்மாறும் புள்ளிகள், ஓய்ச்சல், வலி போன்ற குறிகளின்மூலம் எந்நேரமும் தன்னை வெளிப்படுத்தும் (காட்டிக்கொடுக்கும்) என்கிற பயத்தைச் சுமந்தபடி இருக்கும் நிலை என்கிறார் லிப்டன். “காட்டிக்கொடுக்கும்” என்கிற பதத்தை இங்கே நான் பயன்படுத்தக் காரணம்: ஜப்பானில் ஹிபாகுஷாக்களும் அவர்கள் சந்ததியினரும் படிப்பு வேலை விஷயங்களில், இடங்களில் எதிர்கொண்ட, இன்றும் எதிர்கொள்ளும் பாரபட்ச பாகுபாடு தாம். ஹிபாகுஷாக்கள் அல்லது அவர்களின் சந்ததியினர் என்றால் சமூக ஒறுத்தல் நிச்சயம். இத்தகையதொரு அடையாளத்தையும் உடல்கள் காட்டிக்கொடுத்துவிடுமோ என்ற அச்சமும் நோய் பற்றிய பயத்தோடு கூட இவ்வுடல்களில் வரையப்பட்டிருக்கின்றன.

ஹிபாகுஷாக்களின் உடல்களின் பிம்பங்களில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறது இன்றைய அணு உலை/அணுகுண்டு எதிர்ப்பாளர்களின் சொல்லாடல், என்கிறார் லராபி. ஹிபாகுஷாக்களைப் பற்றிய தொடர்ந்த நேர்காணல்கள், மருத்துவ உளவியல் சோதனைகள், ஆராய்ச்சிகள், துயரங்களைப் பற்றித் தொடர்ந்துகொண்டிருக்கும் பத்திரிகைப்பதிவுகள் போன்றவற்றின் வாயிலாக ஹிபாகுஷாக்களின் உடல்களின் “மனித உண்மையை” மனிதர் அனைவருக்கும் நேரக்கூடிய ஒன்றாக உணரப்படுதல் சாத்தியமாகி இருக்கிறது; தவிர, தீவிரமாக எழுதப்படுகிற, கதிரியக்க அபாயங்களை வரிசைப்படுத்தி ஆதாரத்தோடு முன்வைக்கிற கட்டுரைவடிவங்களை விட, இத்தகைய பதிவுகள் மனிதப் பிரக்ஞையை ஏதோ ஒருவகையில் கேள்விகேட்கும், வடிவமைக்கும் திறன்கொண்டவையாக கருதப்படுவதையும் லராபி சுட்டிச் செல்கிறார்.

ஒரு நாடு அல்லது கலாச்சாரம் சார்ந்த மக்களின் இத்தகைய வலியையும் அவலத்தையும் அந்த நாடு, கலாச்சாரம் குறித்த ஸ்தூலமான குறியீட்டை ஒருவர் சற்றே தள்ளிவைத்து சிந்திக்கும்போது, அச்சிந்தனையின் ஊடாக அந்த வலியும் அவலமும் வையகத்துக்கே பொதுவானவையாக மாறும், மாறிவிடமுடியும். கூடவே இந்த மாற்றம் சிந்திப்பவரை தனிநபர்/குடும்பம்/நட்புக்குழு போன்றவற்றுக்கான நலனுக்கான விசாரணைகளிலிருந்து பெரும்போக்கோடு கூடிய வேறு சீரிய விசாரணைத்தளங்களுக்கு இட்டுச் செல்வதாகவும் இருக்கக்கூடும். ஜப்பான் காட்சிகளின் உள்ளுறையான இளிவரல் இதையும் யோசிக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தைத் தந்திருக்கிறது.

ஜப்பான் அணு உலைக் காட்சிகளின் எண்வகை மெய்ப்பாடுகள் (1)

நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப (தொல்காப்பியச் சூத்திரம்)

வாழ்க்கையே அணு உலையாலே நாமெல்லாம் அதனாலே
உடலுருகிச் சாய்ந்திடுவோமே வாழ்நாளிலே (ரீ மிக்ஸ்)

மெய்ப்பாடு 8: அழுகை (இழத்தல் வகை)

மார்ச் 19, 2011. டோக்கியோ மின்சக்தி நிறுவனத்தின் (டெப்கோ) நிர்வாக இயக்குனரின் கண்ணீர்: சூடு அதிகமான அணு உலைகள், எரிபொருள்கள் மக்களுயிரைப் பறிக்கவல்லவை என்று ஜப்பான் ஒத்துக்கொண்டு, கதி்ர்வீச்சு அபாயத்தை அளவுகோலில் ஐந்துக்கு உயர்த்தியிருக்கும் வேளையில் அகியோ குமிரி அழுதார்.

பார்க்க:

http://www.dailymail.co.uk/news/article-1367684/Nuclear-plant-chief-weeps-Japanese-finally-admit-radiation-leak-kill-people.html

அழுகை மக்களுக்காகவா? டெப்கோ ஊழியர்கள் கதிரியக்கத்தைக் கட்டுக்குக் கொண்டுவராமல் உலை இடத்தைவிட்டு நீங்கக்கூடாது என்று ஜப்பானிய அரசால் கட்டாயப்படுத்தப்பட்டதற்கா? இப்போது மக்கள் மத்தியில் டெப்கோ போன்ற அணு உலை நிறுவனங்களைப் பற்றி அவநம்பிக்கை பெருகிக்கொண்டிருப்பதால் இழக்கப்போகும் வியாபார லாபங்களுக்கா?

வரலாற்றில் இதற்கு முன்பு அணுசக்தி மற்றும் ஜப்பான் தொடர்பாக ஒருவர் கண்ணீர் விட்டிருக்கிறார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்தான் அவர். இரண்டாம் உலகப்போரின் பெரும் திருப்புமுனையாக, ஜப்பான் நகரங்களின் மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி நாசமாக்கிய போது தன் அறிவியல் கோட்பாடு இவ்வாறு கொண்ட உயிர்ப்பலிகளுக்காக ஐன்ஸ்டீன் அழுததாக சொல்லப்படுகிறது. 1905-ஆம் வருடம் அவர் எழுதிய கட்டுரை அமெரிக்கா அணுகுண்டு தயாரிப்புக்குப் பெருமளவில் உதவியது; அதேபோல அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்-டுக்கு இரண்டாம் உலகப்போர் சமயத்தில் அவர் எழுதிய கடிதமே அமெரிக்காவின் அணுகுண்டு தயாரிப்புக்கு ஊக்கமளிப்பதாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மெய்ப்பாடு 7: உவகை (கேளிக்கை)

ஜப்பானியர் ஒருவரால் எடுக்கப்பட்டு கீச்சிலும் முகநூலிலும் பெருவாரியாகப் பகிரப்பட்டிருக்கும் ஒரு யூ-ட்யூப் வீடியோக்காட்சி அதன் அரசியல் சரியற்ற தன்மையோடு புலன்மயக்கத்தோடான தலைகீழ்-உவகை தருகிறது. (கீழே அதன் சுட்டி) படத்தின் கருத்து இது:

”நிலம் நடுங்கிய நாளிலிருந்து அணுவுலைப் பையனுக்கு வயிற்றுக்கோளாறு, அதனால் அவன் அவ்வப்போது நாற்றமடிக்கும் வாய்வை வெளிவிடுகிறான். மருத்துவர்கள் ஒரேயடியாக அவன் பக்கத்தில் நின்றால் அவர்களுக்கும் சுகவீனமாகிவிடும். ஆகவே ஒருவர் மாறி ஒருவர் வருகை தருகிறார்கள். அவன் நோய் குணமாக உடலைக் குளுமை செய்கிறார்கள். ஏற்கெனவே ”3 மைல் தீவு” என்ற ஒரு பையன் விட்ட வாய்வு நாற அடித்தது. அதன் பின்னர் “செர்னோபில்” பையனின் வயிற்றுப்போக்கு வகுப்பறையிலேயே நேர்ந்துவிட்டது. அப்படியெல்லாம் வயிற்றுப்போக்கு ஆகாமல் இந்தப் பையனின் வயிற்றுவலியைச் சரி செய்யவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிக்கொண்டிருக்கிறது.”

http://www.youtube.com/watch?v=5sakN2hSVxA&feature=youtu.be

நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் அச்சுறுத்தப்பட்ட சிறுவர்கள் மனிதனால் ஏற்பட்டிருக்கும் இந்த மூன்றாவது அபாயத்தாலும் இன்னும் பாதிக்கப்பட வேண்டாம் என்று ஜப்பானியர் ஒருவரால் எடுக்கப்பட்டிருப்பது போலத் தெரிகிறது. ஆனால், அணு உலை எனும் அ-மனித பேரழிவுசக்தியை நம் வீட்டுக் குட்டிப்பையனாக, ஆகவே நம் கட்டுக்குள் இருப்பது போல் ஒன்றாகக் காட்டுவது, மற்றும் பல்லாயிரக் கணக்கான வருடங்கள் ஆகியும் அழியாது அழிவுச்சுடர் வீசும் அணுக்கழிவை உயிருக்கு உதவும் விளைச்சலுக்கு உரமாகக்கூடிய மனிதக்கழிவோடு ஒப்பிடுவது, ஆகியவற்றின் அணு உலைசார் அரசியல் மிக அபாயமானது, ஏமாற்றுச் சொல்லாடலை முன்வைப்பது. ஆகவே இந்த உவகை மெய்ப்பாடு தலைகீழ் வகையிலானாது.


(தொடரும்)

Wednesday, March 16, 2011

துடைக்கப்பட்ட இடம்: ரூமி

பிரசன்னம் உருண்டோடிக் கொண்டிருக்கிறது மீண்டும்
அலமாரித்தட்டுகளைத் துடைக்கிறது கடைகளை மூடுகிறது.

ஆன்மாவின் நண்பரே ஆன்மாவின் எதிரியே
ஏன் என்னுடையதை நீங்கள் விரும்புகிறீர்கள்?

கிராமத்திலிருந்து கப்பம் கொண்டுவா
ஆனால் உங்கள் வெள்ளத்தில் கிராமமே போய்விட்டதே.

அந்தத் துடைக்கப்பட்ட இடமே வேண்டியது எனக்கு.
பின்னால் மறைந்துகொள்ள கதவற்ற
வெட்டவெளியில் வாழ். இரு சுத்த இன்மையாய்.
அந்நிலையில் ஒவ்வொன்றுமே அவசியம்.


இதன் மீதியை மௌனத்தில் சொல்லவேண்டும்
ஒளிக்கும் ஒளியைச் சொல்ல முயலும் வார்த்தைகளுக்கும்
இடையிலான பிரம்மாண்ட வித்தியாசத்தால்.

(“A Cleared Site.” The Essential Rumi, translations by Coleman Barks with John Moyne. ஜப்பான் எனக்குள் உருவாக்கிக்கொண்டிருக்கும் உணர்வுகளுக்கான ஒரு வடிகாலாய் இதை மொழிபெயர்த்தேன். இது முதல்வரைவு.. தமிழில் தலைப்பு அவ்வளவாக உவக்கவில்லை.)

Sunday, March 6, 2011

புணர்-விளையாட்டு: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (13)

மோசமானவற்றிலேயே
நிசமாகவே
ஆக மோசமானது
இரவுக்குப் பின் இரவாக
உனக்கு இனியும் புணரப்பிடிக்காத பெண்ணோடு
ஒரே படுக்கையில் கிடப்பதுதான்.

அவர்களுக்கு வயதாகிவிடுகிறது, அவர்கள் அழகாக
இருப்பதில்லை இனிமேலும்—அவர்கள்
குறட்டைகூட விடுகிறார்கள், ஆன்மாவை
இழந்துவிடுகிறார்கள்.

ஆக, நீ படுக்கையில், சிலசமயம் கொஞ்சம் திரும்புகிறாய்,
உன் பாதம் அவளுடையதைத் தொடுகிறது—
கடவுளே, மோசம்!—
இரவு இன்னமும் இருக்கிறது வெளியே
திரைச்சீலைகளுக்கும் அப்பால்
ஒரே கல்லறையில்
உங்கள் இருவரையும் உறையிட்டுமூடி.

மேலும் காலையில் நீ குளியலறைக்குப்
போகிறாய், வரவேற்பரையில் செல்கிறாய், பேசுகிறாய்,
ஏதேதோ தொடர்பில்லாமல் சொல்கிறாய்; முட்டை பொரிகிறது, கார்கள்
கிளம்புகின்றன.

ஆனால் எதிரெதிரே உட்கார்ந்திருக்கின்றனர்
இரு அந்நியர்கள்
ஜாம் இடப்பட்ட டோஸ்டைத் தொண்டைக்குள் திணித்தபடி
உம்மென்றிருக்கும் மூஞ்சியையும் குடலையும்
காப்பியில் எரித்தபடி.

அமெரிக்காவில் பத்து மில்லியன் இடங்களில்
இதேபோலத்தான் –
ஒன்றுக்கெதிர் இன்னொன்றாக
சலித்துப் போன வாழ்க்கைகள்
எந்தப் போக்கிடமும் இல்லை.

காரில் ஏறுகிறாய் நீ
பணியிடத்துக்கு ஓட்டிச் செல்கிறாய்
அங்கே இன்னும் அந்நியர்கள், பெரும்பாலும்
ஏதோவொருவரின் மனைவிகள் கணவர்கள்
வேலையெனத் தலைக்குமேல் தொங்கும் கத்தி
தவிரவும் அவர்கள் குலாவுகிறார்கள், ஜோக் அடிக்கிறார்கள்,
கிள்ளிக்கொள்கிறார்கள், சிலசமயம்
வேறெங்கோ ஒரு துரிதப்புணர்வும் முனைந்து முடிகிறது
அதை வீட்டில் செய்ய முடியாது
மேலும் அப்புறம்
காரோட்டி வீட்டுக்குத் திரும்பி வருதல்
கிறிஸ்துமஸ் அல்லது உழைப்பாளர் தினம் அல்லது
ஞாயிற்றுக்கிழமை அல்லது அதைப் போல ஒன்றுக்கான
காத்திருத்தலோடு.

(இக்கவிதை பெண்ணியசார்புநிலை எடுப்பவராக எனக்குப் பிரச்சினையான ஒன்று, ஆனால் கவிஞராகப் பிடித்திருக்கிறதே, என்ன செய்வது? அடையாளங்களின் மோதலில் இங்கே கவிஞரே வென்றார். :))

Saturday, March 5, 2011

ஒரு காதல் கவிதை

பகல் முழுக்க பச்சைவெளி
அறையோ நீலங்களின் வானம்
உன் அருகாமை கடல்களைச் சாடி வரும்பொழுது
உப்பையும்விடச் சுவைகோரும் உன் உதடு
இல்லைகள்
உரமாகி வளர்த்த
ஒவ்வொரு நொடிப்புல்லிலும்
அகல அகலத்
திறக்கும் வாசல்கள்
புல்லின் இழைகளைவிட
நெருங்கி நெருங்கிப்
பின்னிக்கொள்ள
இடம் மாறி அடையாளம் குலையும்
நீயும் நானும்.
கலவிமுடிந்து சோம்பல்முறிக்கையில்
மூடிப்படர்ந்திருக்கும் நீலப்பச்சை
நம் தோல்
என்றும் அறிந்துகொள்வோம்.