புனைவு
கிளியொன்று மேல்நெற்றியானபோது
பச்சைவண்ணம்
என் முகம் கொண்டது.
கிளியின் மூக்கு எனதானபோது
சுவைக்காமலேயே கனிருசி அறிய
நான் கற்றேன்.
கிளியுடல் மென்மை கிட்டி
பட்டுகளின் அடுக்கானதில்
என்னில் நானே மையலுற்றேன்.
கிளியின் இறக்கைகள்
கொண்ட என் காதுகள்
காற்றுவசத்தில்
வேண்டிய திசையெல்லாம்
வரைந்து தீர்த்தன.
கிளியோடான என் பேச்சில்
நீ நீ
அல்லது
நான் நான்
தான்.
பேதமே நேராத
முதல் உரையாடலில் அகமகிழ்ந்தேன்.
கிளி நடை பயின்றபின்
ஆண் நடையை நான் மறந்தேவிட்டதாக
குற்றஞ்சாட்டினவர் பலர்.
பகுதிபகுதியாய் உடல்கள் மாறி
பின் கிளியில் என்னுயிர் தங்க
என்னுடலைத் துவேஷித்த கிளி
கிணற்றில் விழுந்து
உடல்துறந்ததாகக் கேள்வி.
கிணற்றைச் சுற்றிச் சுற்றி
"ஆயுசு உனக்கு எண்பத்தாறு"
என்று கீச்சிடுகிறது கிளி தினமும்.
சோசியக்காரன் சிறகை வெட்ட மறந்தானென்று
சொல்லிவருகின்றனர்
எங்கள் ஊரார்.
No comments:
Post a Comment