Wednesday, April 30, 2008

வாஸவேச்வரம் நாவலை முன்வைத்து (பகுதி மூன்று)

(பகுதி இரண்டு பகுதி ஒன்றோடு இணைக்கப்பட்டிருக்கிறது.)

பால்விழைவு கதையில் தனித்து வருவதில்லை. வாஸவேச்வரத் தலத்தின் புராணம் பால்விழைவை செழுமைப்படுத்தும் நீரோட்டமாக கூடவே வருகிறது. நாவலுடைய அங்கங்களின் தலைப்பைப் பாருங்கள்: பிரம்மதேவன் விளையாட்டு, இந்திரன் தாபம், மாண்டவர் சாபம். புராணத்தால் வார்க்கப்பட்ட, வளம்பெற்ற பால்விழைவு ஆர்ப்பரிக்கும் நாவலில், சமுதாயக்கனவுகள் தேநீர்க்கோப்பைப்புயலாகவும் கேலிச்சித்திரமாகவும் அன்றி வேறெப்படி இடம்பெறமுடியும்? புராண உரை கிளர்த்திய பால் விழைவில் தொடங்கும் கதைமொழி, அதே கிளர்ச்சியில் முடியவும் செய்கிறது. பார்க்கப்போனால், இக்கனவுகளின் விவரணைகளெனும் திரைக்குப்பின்னே கதையாடல் பால்விழைவு சார்ந்த ஊடாட்டங்களை, அலைக்குறுதல்களை நிகழ்த்துவதாகவே தெரிகிறது. கிருத்திகா என்கிற மனித ஜீவி பெண்ணாக இருப்பதாலும் 1960-களில் எழுதப்பட்ட நாவல் என்பதாலும், வாஸவேச்வரத்தாரின் "முறைகளைப்" போல, சிலபல இலக்கிய அல்லது ஜீவித "முறைகளுக்கு" உட்பட்டு இப்படியொரு எழுத்துப்பாணியை அவர் கையாண்டிருக்கலாம்.


ஆனால் இங்கே என் அக்கறைகள் திரைக்குப் பின் நடக்கும் பால்விழைவின் நுணுக்கமான சாகசங்களைப் பற்றியவை. நாவலில் ரோகிணி மாத்திரமல்ல, வேறு பெண்களும் ஆண்களை வசப்படுத்தியவர்களாக உலவுகிறார்கள். தன் கணவனை வக்கில்லாதவன் என்று தன் உடல் இறுக்கத்தினால் அறிவிக்கமுடிகிறது விச்சுவால். சமூக உற்பத்தியிலும் மறு உற்பத்தியிலும் பங்கேற்காத அவனுள் குற்ற உணர்வையும் கொலைவெறியையும் தூண்டமுடிகிறது. அதேபோல, பால்விழைவில் சின்னதொரு பொறாமையை, சந்தேகத்தை தூண்டிவிட்டு, திருமணத்துக்கான உத்தரவாதத்தை பப்புவிடமிருந்து பெறமுடிகிறது கோமுவால். மனைவி தங்கத்தின் வனப்பின் ஆட்படும் சுந்தாவின் மயக்கத்திளைப்பு அவன் மருத்துவக்கடமையை மறக்கடிக்கிறது. நாவல் முழுதும் விரவிக்கிடக்கும் இத்தகைய பால்விழைவு விளையாட்டுகளின் வழியாக, பெண்பால் தன்னிலையின் (feminine sexed-gendered subjectivity) உச்சாடனமாய் ரோகிணியின் பாத்திரம் நிறுவப்படுகிறது.


நாவலின் மற்ற பெண்களைப்போலன்றி, பால்விழைவை விளையாட்டாக மட்டுமோ உடனடியான தாயங்களுக்கோ ரோகிணி உபயோகிப்பதில்லை. தன்னழகை முன்நிறுத்தி, குடும்பக்களத்தை ஆளக்கூடிய பெண்பால் தன்னிலையாகத் தன்னை அவள் அங்கீகரிக்கக்கோருகிறாள். "உன் ஆக்ஞை என் விருப்பம்" என்று முழுக்க கணவன் தன்னை அவளிடம் "ஒப்படைத்துவிட" வேண்டும் என்று விரும்புகிறாள். ரோகிணிக்கும் அவள் கணவனுக்குமிடையே நடக்கும் பாலியல் "துவந்த யுத்தத்தில்" "அவளை அடைக்கலமென்று அடைந்தால் தான் பூரண மனச்சாந்தியுண்டு" என்று அவனுக்கும் தெரிகிறது. ஆனால், அந்த அறிவைப் புறந்தள்ளுகிறது உறவில் ஆணாக இருக்கும் அவன் இடம். சமூகத்தில் அவன் பெற்றிருக்கும் கௌரவமான இடத்தை அச்சுறுத்தி, அவன் இறுமாப்பை தகர்த்து அவள் வெற்றிகொண்ட பிறகு, அவனது பாத்திரம் கதாயாடலுக்கு தேவைப்படுவதில்லை, உடனேயே அவன் கொல்லப்படுகிறான். பெண்பால் தன்னிலையின் அதிகார மறுப்பு கதையாடலில் இவ்வாறு களையப்படுகிறது.


ரோகிணியின் கணவனின் கொலையில், பெண்பால் தன்னிலையின் ஏகபோக ஸ்தாபிதம் கதையாடலின் நாடகீய உச்சத்தோடு இயைகிறது. இந்த இயைதல் நிகழ்த்தப்படுமுன் பொதுவுடைமை உள்ளிட்ட கனவுகள் திரையாகக்காட்டப்பெற்று, பின்னர் விலக்கப்படுகின்றன. பெண்ணுடல்சார் பால்விழைவை மையப்படுத்துகிற புராணத்திலிருந்து உயிர்ச்சத்தைப்பெறுகிற நாவல், சம்பிரதாய குடும்ப-அரசியல் களத்தைச் சதுரங்கப்பலகையாக மாற்றிவிடுகிறது. பெண்பால் தன்னிலையே இந்தச் சதுரங்க ஆட்டத்தின் மையம். இப்படியொரு வாசிப்பின் அடிப்படையில், வாஸவேச்வரம் நாவல் நவீன இலக்கியமாக அடையாளம் பெற்றிருப்பதற்கு ஒரு புது அர்த்தத்தை நாம் கொடுக்கமுடியும். பால்விழைவைப் பிடிமானமாகப் பற்றி, மாற்று அதிகாரத்துக்கான உரிமைகோரும் பெண்பால் தன்னிலை தன்னை ஸ்தாபித்துக்கொள்ளும் மொழிப்பரப்பாக நாவலை இவ்வாறு வாசிக்கும்போது, நவீன தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை பெண்ணியப் பிரதியாக நம்மால் மாற்றி எழுதமுடியும். தமிழ் நவீன இலக்கிய வரலாற்றை பெண்தன்னிலைகளின் வரலாறாக மீட்டுருவாக்கம் செய்யவும் இவ்வாசிப்பு பயன்படும். சில சந்தேகங்கள் வரலாம். நாவலில் மாற்றுப்பாலியலுக்கு (heterosexuality) தரப்பட்டிருக்கும் முக்கியத்துவம், குடும்பச் சதுரங்கத்தில் மாத்திரமே கவனம் குவிக்கும் பெண்கள் போன்றவை பெண்ணிய வாசிப்புக்குத் தடைகள்போலத் தோன்றலாம். ஐம்பது வருடங்களுக்கு முன் வெளிவந்த நாவல் இது என்பதை மனதில் கொள்ளும்போது குறைபாடுகளை ஒதுக்கிவைக்க முடியும். முதல் புள்ளிகளிலேயே முழுக்கோலம் உருவாக முடியாதுதானே?


*****

7 comments:

Unknown said...

"பால்விழைவைப் பிடிமானமாகப் பற்றி, மாற்று அதிகாரத்துக்கான உரிமைகோரும் பெண்பால் தன்னிலை தன்னை ஸ்தாபித்துக்கொள்ளும் மொழிப்பரப்பாக நாவலை இவ்வாறு வாசிக்கும்போது, நவீன தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை பெண்ணியப் பிரதியாக நம்மால் மாற்றி எழுதமுடியும். தமிழ் நவீன இலக்கிய வரலாற்றை பெண்தன்னிலைகளின் வரலாறாக மீட்டுருவாக்கம் செய்யவும் இவ்வாசிப்பு பயன்படும்."

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது கொடுந்தமிழ் நடையையும் மீறி ஒரளவு புரிகிறது.
ஆனால் ஒரு நாவல் பிரதியின்
வாசிப்பினை வைத்துக் கொண்டு
நீங்கள் இவ்வாறு கூறுவது அதீத மிகைப்படுத்தல். I dont know
whether you think in Tamil
or English but your writing
is full of jargon.Not all will agree with a view that literary history is a text.Your problem lies in lack of clarity, both in substance and in syle. Anyday I would prefer to read an article
in a journal and take time to
understand that , than reading such an introduction/article in Tamil where words are thrown around
carelessly and grand claims are made just like that.

”நாவலில் மாற்றுப்பாலியலுக்கு (heterosexuality) தரப்பட்டிருக்கும் முக்கியத்துவம், குடும்பச் சதுரங்கத்தில் மாத்திரமே கவனம் குவிக்கும் பெண்கள் போன்றவை பெண்ணிய வாசிப்புக்குத் தடைகள்போலத் தோன்றலாம்”

heterosexuality ன் பொருள் தமிழில்
மாற்றுப்பாலியல் அல்ல.நீங்கள் என்ன
சொல்ல வருகிறீர்கள் என்பது தெளிவாக இல்லை.பெண்ணிய
வாசிப்பு என்பதை ஒற்றை வாசிப்பாக
கருதினால் அது சர்ச்சைக்குரியது.
”முதல் புள்ளிகளிலேயே முழுக்கோலம் உருவாக முடியாதுதானே?”

இது உண்மையாக இருக்கலாம்.
ஆனால் வாசகர்களை மிரள
வைக்கும் நடையுடன் கூடிய
வார்த்தை சிலம்பாட்டமான
இந்த முன்னுரை தேவைதானா?.

Perundevi said...

I criticize Periyar-க்கு

பெரியாரை இவர் எதற்கு criticize செய்கிறார் என்ற ஆவல் உங்கள் பெயரைப்பார்த்தவுடன் தோன்றியது.

உங்கள் கருத்துக்களை போகிறபோக்கில் 'திட்டிச்செல்வதாக' மாத்திரமே பார்க்கிறேன். மற்றபடிக்கு அதில் சாரம் ஒன்றும் எனக்குத்தெரியவில்லை. You use jargons என்றோ, உங்கள் தமிழ் நடை "கொடுந்தமிழ் நடை" என்றோ ஒருத்தர் சொல்லும்போது என்ன பதில் சொல்லமுடியும்? ஏனெனில் இவையெல்லாம் subjective ஆன உங்கள் தாக்குதல் பிரயோகங்கள். தமிழில் critical theory என்பது இருபது முப்பது வருட விஷயம் மட்டுமே. இதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் நீங்கள் கருத்து தெரிவிப்பது ஆச்சரியம் தருகிறது.

மேலும் நான் செய்தது என்னுடைய வாசிப்பு. I do not expect "all" to "agree with my view." Consensus உருவாக்குவது என் எழுத்தின் நோக்கம் அல்ல. இலக்கியத்தின் நோக்கம் consensus உருவாக்குவது என்று நீங்கள் நினைத்தால் நான் ஒன்றும் சொல்லமுடியாது.

தவிரவும் பல பெண்ணியப்பார்வைகள் உண்டு என்பதில் எந்தக் கருத்துமாறுபாடும் எனக்குக்கிடையாது. காலச்சுவடு இதழ்களில் இதை வலியுறுத்தி நான் எழுதியிருக்கிறேன்.

இலக்கிய வரலாற்றை பெண்தன்னிலைகளின் வரலாறாக மீட்டுருவாக்கம் செய்ய இவ்வாசிப்பு பயன்படும் என்று எழுதியதில் எந்த grand claim-ம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இலக்கிய வரலாறு பெரும்பாலும் ஆண் தன்னிலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தே எழுதப்படுகிறது. என் வாசிப்பு இத்தகைய போக்கில் intervene செய்யும் என நான் நம்புகிறேன்.

Perundevi said...

"மாற்றுப்பாலியல்" குறித்து:

தமிழில் பல புதிய சொற்பிரயோகங்கள் இன்னும் standardize ஆகாமல்தான் இருக்கின்றன. post-modernism பின்நவீனத்துவம், பிந்தைய நவீனத்துவம், பிறகான நவீனத்துவம் என்று இன்றைக்கும் பல ரூபங்களில் புழங்கிவருகிறது. ஒருவகையில், standardize ஆகாமலிருப்பது தமிழ் மொழியின் படைப்பூக்கத்தை அதிகரிக்கவே செய்கிறது என்றும் நினைக்கிறேன்.

"heterosexual" என்கிற வார்த்தையின் தமிழாக்கம் இருபால் புணர்ச்சி அல்லது கலப்பின புணர்ச்சி என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அவ்வாறில்லாமல் "heterosexuality"-யை "மாற்றுப்பாலியல்" என்று நான் மொழிபெயர்த்ததற்கு காரணங்கள் உண்டு. தமிழில் மாற்று என்கிற வார்த்தைக்கு "மற்றது," "பதிலி" என்கிற பொருள்களும் உண்டு. குறிப்பிட்ட பெண்ணிய அரசியல் காரணங்களுக்காக, normative heterosexuality-யை எதிர்க்கும்முகமாகவே, அதைத் தமிழாக்கம் செய்யும்போது (lesbianism-க்கு மாற்று, பதிலி என்ற வகையில்)"மாற்று" என்கிற சொல்லை நான் தேர்ந்தெடுத்தேன். என்றாலும், சில வார்த்தைகளுக்கு, கருத்தியல்களுக்கு ஏற்கெனவே பழக்கப்பட்டவர்களுக்கு புதிய விஷயங்களும் சென்றுசேரவேண்டும் என்பதற்குத்தான் நிகரான ஆங்கிலவார்த்தையையும் தந்திருக்கிறேன்.

இதை விளக்க வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி.

May 2, 2008 5:46 PM

சன்னாசி said...

பெருந்தேவி,

பொதுவாக தமிழ் இணையத்தில் எனக்குத் தெரிந்து heterosexualityக்கு பிறபாலீர்ப்பு எனவும் homosexualityக்குத் தன்பாலீர்ப்பு எனவும் பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் கூற வருவதற்குப் பொருந்தி வருவதாகப் பட்டால் அவற்றை உபயோகிக்க முயலுங்கள்.

இணையத்தில் வாஸவேச்வரம் குறித்து பெரிதாக அறிமுகம் ஏதும் இல்லை. கதை குறித்த அறிமுகம் இல்லாதவர்களுக்கு/புத்தகத்தை வாசிக்காதவர்களுக்கு நீங்கள் குறிப்பிட்டிருப்பவை தலையும் புரியாமல் வாலும் புரியாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. சுருக்கம் சொல்வது கொடுமையானதாகத் தோன்றினாலும், இவ்வளவு பழைய புத்தகம் குறித்துப் பேசும்போது புத்தகம் பற்றியும் சுருக்கமாகத் தெரிவித்துவிடுவது வாசிப்பவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

Perundevi said...

ஆக்கபூர்வமான கருத்துக்கு நன்றி சன்னாசி. "பிறபாலீர்ப்பு" என்ற பிரயோகத்தைப்பற்றி: முதலில் எனக்குத்தோன்றிய எண்ணங்களை எழுதுகிறேன். "பிற" என்பதில் "மற்றது" என்கிற பொருள் இருக்கிறது, ஆனால் "பதிலி" என்கிற பொருள் இல்லாததுபோலத் தோன்றுகிறது.

"ஈர்ப்பு" என்பதை நான் பயன்படுத்த நினைத்து பிறகு கைவிட்டேன். ஏனென்றால், அந்தச்சொல்லில் heterosexuality-யின் கருத்தியல் மறைபட்டு, பால்சார் முனைப்புக்கு முக்கியத்துவம் இருப்பது போலத் தோன்றியது. மிகுந்த யோசனைக்குப் பிறகுதான் மாற்றுப்பாலியல் என்ற சொல்லைப் பயன்படுத்தினேன். என்றாலும் உங்கள் ஆலோசனைகளை மீண்டும் யோசிக்கிறேன்.

(சிலசமயங்களில் தமிழில் எழுதும்போது, பொதுவாக எந்த சொல் பயன்படுத்துவது என்பதிலேயே பாதி நேரம் போய்விடுகிறது. Sovereignty என்ற சொல்லை எப்படி தமிழ்படுத்துவது என்று நானும் என் நண்பர் ராஜன்குறையும் இரண்டு மணி நேரம் உரையாடியது நினைவுக்கு வருகிறது. இப்படி செலவுபண்ணும் நேரத்தில் ஆங்கிலத்தில் இன்னொரு கட்டுரை எழுதிவிடலாம் என்றும் தோன்றுகிறது. இன்னொன்று, என் அனுபவத்தைப் பொறுத்தவரை, ஆங்கிலத்தில் எழுதும்போது கூரிய விமரிசனங்கள் கூட collegiality-யோடு தான் முன்வைக்கப்படுகின்றன. அது எழுதுகிற அனுபவத்தை இன்னும் இனியதாக ஆக்குகிறது. என்றாலும், தமிழ் தெரிந்தவர்கள் மத்தியில் தமிழில் எழுதும்போது [சில சமயங்களில் நேரும் தேவையில்லாத உரசல்களின் கசப்பை மீறியும்] கற்றுக்கொள்ள இருக்கிறது என்றே நினைக்கிறேன்.)

வாஸவேச்வரம் நாவலை சுருங்கச்சொல்ல முடியாது. அது பிரதிக்குச் செய்யும் துரோகமாகிவிடும். வேறெப்படி அறிமுகப்படுத்தலாம் என்று யோசித்துப்பார்க்கிறேன். இப்போதைக்கு ஒன்றும் தோன்றவில்லை.

Unknown said...

"Sovereignty என்ற சொல்லை எப்படி தமிழ்படுத்துவது என்று நானும் என் நண்பர் ராஜன்குறையும் இரண்டு மணி நேரம் உரையாடியது நினைவுக்கு வருகிறது"

இறையாண்மை என்ற சொல் தமிழில் அதைக் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது. இதன் பொருத்தப்பாடு/போதாமை குறித்து
இங்கு நான் ஏதும் கூற விரும்பவில்லை. நீங்கள் எது
சரியான/பொருத்தமான சொல் என்ற
முடிவிற்கு வந்தீர்களா என்பதை
எழுதலாமே.

If you consider that homosexuality is an opposite of or the other
of heterosexuality then you better
explain that first lest the reader
should get confused between your
view and the traditional usage/
understanding of the term.If you
consider that both are different
points in a continum then the question of treating one as
opposite or the 'other' of the
other will not arise.This takes
us to the question, of whether
is there any consensus among
feminsits on this and whether
they all consider/posit homosexuality/lesbianism as
the desirable or preferble
one.
In reading articles in journals
like Signs or books one does
not face the problems one faces
in the writings in Tamil.There are
references and citations and there
is more clarity in usage of terms
and their meanings. The problem
with writings in Tamil they lack the rigor of academic writing,
nor have the clarity that will
help the average reader in Tamil.
I may be wrong.

Perundevi said...

I criticize Periyar-க்கு

நீங்கள் சொல்கிறவாறு பல்வேறுபட்ட பெண்ணியக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் எழுதி அலசியிருக்கலாம். ஆனால் என் முன்னுரை monograph ஆகியிருக்கும். விரிவஞ்சியும் விவாதங்களில் விரித்துச்சொல்லலாம் என்றும் எண்ணிச்செல்ல எழுதுபவருக்கு உரிமையுண்டு என்றே நினைக்கிறேன்.

மேலும், முன்னுரை என்கிற வடிவத்துக்கே உரித்தான போதாமை இருக்கிறது. இதுவரை வாஸவேச்வரம் பெரும் அளவில் பேசப்படவில்லை, விவாதிக்கப்படவில்லை என்பதால் தான், திறனாய்வாக நான் முன்னுரையை எழுத வேண்டியதாயிற்று. கட்டுரையில் நாவலின் கட்டங்கள் தொடர்ந்து குறிப்பிடப்படுவதால், வாசிப்பவர்கள் நாவலை உடனுக்குடன் பொருத்திப்பார்க்க ஏதுவாக, தனியாக பிரசுரிப்பதற்குப் பதிலாக முன்னுரையாகவே தரத் தெரிவுசெய்தேன்.

என்னைப்பொறுத்தவரை எந்தக்கட்டுரையும் cite செய்யாமலோ நூற்பட்டியல் இல்லாமலோ நான் எழுதியதில்லை. இது முன்னுரை என்பதால் மாத்திரமே ரொம்பவும் academic ஆக அமையவேண்டாம் என்பதற்காகவே குறிப்புகள், நூற்பட்டியல் இடவில்லை. இதை விடுபடலாகவும் நான் கருதவில்லை. பொதுப்படையாக தமிழில் எழுதுபவர்கள் cite செய்வதில்லை என்று நீங்கள் கூறுவது சரியல்ல.

இப்பதிவின் பின்னூட்டங்களைப்பார்த்தாலே, heterosexuality என்ற சொல்லுக்குத் தமிழில் 'traditional usage' என்பதாக ஒன்று மாத்திரமே இல்லை என்பது தெரியும். மேலும், புனைவெழுத்தில் heterosexuality, homosexuality--இவற்றைப்பற்றிய கருத்துப்பரிமாற்றங்கள் சென்ற வருடங்களில் (2005, 2006) காலச்சுவடு, தீராநதி இதழ்களில் தொடர்ந்து வெளிவந்திருக்கின்றன. நானும் இவ்விவாதங்களில் பங்களித்திருக்கிறேன். மிக முக்கியமாக, பாலியல்களைக் குறித்து பெண்ணியச் சிந்தனைப்பள்ளிகளின் வேறுபட்ட நிலைப்பாடுகள் இருப்பதை வலியுறுத்தி இருக்கிறேன். தொடர்ந்து வாசிக்கும் இலக்கிய வாசகர்களுக்கு பெண்ணியங்களையும் அவற்றின் பல நிலைப்பாடுகளையும் குறித்துக் குறைந்தபட்ச அறிமுகம் இருக்கும் என்றுதான் நம்புகிறேன். (இந்தப்பின்னணியை கருத்தில் கொண்டால், "average reader" என்று வாசகரை குறைத்து மதிப்பிடவோ, அல்லது "பெண்ணிய வாசிப்பு" என்ற ஒரு பிரயோகத்தை வைத்துக்கொண்டு நான் பெண்ணியத்தை ஒற்றையாகக் குறுக்கிச் சொல்வதாக உடனேயே முடிவுக்கு வரவேண்டிய தேவையோ இருந்திருக்காது)

தமிழில் எழுதுபவர்களுக்கு rigour இல்லை என்றும் நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். மாறாக, உங்கள் வாசிப்பில் rigour குறைபட்டிருப்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழில் ஒரு கட்டுரையை வாசிக்கும்போது, ஆங்கிலக் கட்டுரை மாதிரிகளைப் பேசுவதில் பிரச்சினையில்லை. ஆனால், தமிழ்ச் சூழலில் ஏற்கெனவே நடந்த, இன்று நடக்கும் இலக்கியவிவாதங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்வது நல்லது. மேலும் ஒரு கட்டுரையைப்பற்றிக் கருத்து கூறும்போது, கட்டுரையின் வழித்தடங்களையும் கண்டுபிடிப்புகளையும் புறந்தள்ளி, கடைசி சிலவரிகளை மட்டும் மேற்கோள் காட்டி முன்முடிபுகளை முன்வைப்பதை நீங்கள் தவிர்த்திருக்கலாம்.

(Signs பற்றி நீங்கள் குறிப்பிட்டிருப்பதால், ஒரு விஷயத்தைச் சொல்லி முடிக்க நினைக்கிறேன். Signs பத்திரிகையின் பொறுப்பில் இருக்கும் பேராசிரியர் ஒருவர் என்னை அப்பத்திரிகைக்கு எழுதச்சொல்லிக் கேட்டிருக்கிறார். ஆகா, Signs-ன் தரம் இனி அவ்வளவு தானா என்று நீங்கள் ஒருவேளை நினைக்கலாம். அப்படி நினைத்தால் அது என்னைப்போன்ற தமிழ் எழுத்தாளர்களுக்கு இழப்பா, இழப்பில்லையா, தெரியவில்லை)