Monday, August 18, 2008

பர்கள்பெயர்கள்நபர்கள்பெயர்கள்நபர்கள்பெயர்கள்நபர்கள்பெயர்கள்நப##############

சமீபத்தில் நான் வாசித்ததில் பிடித்த சிறுகதை எஸ். செந்தில்குமாரின் "என் மரணத்திற்குப் பிறகு நீயும் இறந்துவிடுவாய்." கதையின் சுட்டி:
http://www.kalachuvadu.com/issue-104/page18.asp

"சிகாமணி இறந்தபோது அவன் அருகே அழுவதற்கென யாருமில்லை" என்று தொடங்குகிறது கதை. யார் சிகாமணி? தேனியில் வாரச்சந்தையில் கூட்டத்தில் தவறிவிழுந்த நாணயங்களையும் ரூபாய்த்தாள்களையும் தேடி எடுப்பவன். அவனோடு கூட இன்னொருவனும் இவற்றைத் தேடி எடுக்கிறான். கார்க்கோடன் என்ற பெயரால் அழைக்கப்படும் வேறொரு பெயர் கொண்டவன் அவன். சிகாமணிக்கு எதிரிணை கார்க்கோடன். சிகாமணி போலன்றி நம்பகத்தன்மை இல்லாதவன். (திருநள்ளாறு தலபுராணத்தின்படி, கார்க்கோடகன் என்கிற பாம்பு, சனியின் தூண்டுதலால் நளனைக் கடித்தபின் விஷமேறிய நளன் உடல்வண்ணம் மாறியதாக வரலாறு. நளனோடு சேர்ந்த எதிர்மறையான விஷம் போல சிகாமணியோடு சேர்ந்த கார்க்கோடன் இக்கதையில்.) கார்க்கோடன் பிக்பாக்கட். அதனால் போலிஸால் பிடிக்கப்படுகிறான். அப்போதும்கூட எப்போதும்போல சிகாமணிக்கு அவன் இல்லாமல் அவனோடு இல்லாமல் இருப்பது பிடிக்கவில்லை. லட்சுமி தியேட்டரில் படம்பார்த்துக்கொண்டிருந்தபோது சிகாமணி கார்க்கோடனிடம் சொல்கிறான்: "நான் இறந்ததும் நீயும் இறந்திடனும், நான் இல்லாத ஊரில் நீ உயிரோடு இருக்கக்கூடாது" (நிச்சயமாக அப்போது உயிரையும் கொடுக்கும் நட்பை அல்லது உறவை விதந்தோதும் படம் திரையில் ஓடிக்கொண்டிருந்திருக்கும் என நினைக்கிறேன்)

சிகாமணியின் தாயையும் தந்தையையும் பற்றிய குறிப்பு கதையில் வருகிறது. ஆனால் கார்க்கோடன்? அவன் யாரோ, அவன் நிஜப்பெயர் என்னவோ. யாராயிருந்தால் தானென்ன? சிகாமணியை தேனியிலேயே விட்டுவிட்டு, மூணாறு செல்லும் கார்க்கோடனுக்கும் சிகாமணியின் வாழ்க்கையில் நடப்பவையே நடக்கின்றன. தேனியில் கீழே விழுந்து அடிபட்டுக்கொண்ட ஹக்கீம் என்கிற மரக்கடை முதலாளிக்கு இடுப்பில் போட்ட கட்டுக்கு எண்ணெய் ஊற்றவும் மூத்திரம் மலம் எடுத்துப்போடவும் நியமிக்கப்பட்டிருக்கிறான் சிகாமணி. "அவராக வெளிக்குப் போக ஒரு வருஷமாவது ஆகும். அதுவரைக்குக் கூட இருக்கச் சொல்லியிருக்காங்க." சிகாமணியைப்போலவே கார்க்கோடனும் மூணாறில் கீழே விழுந்து தொடையை முறித்துக்கொண்ட தேயிலைத் தோட்ட முதலாளிக்கு சரீரக்கழிவுகளை எடுத்துப்போடுகிறான். மரக்கடை முதலாளிக்கு நர்ஸாக வரும் நிஷாவின் மேல் சிகாமணிக்கு ஈர்ப்பு ஏற்படுவதைப்போலவே, கார்க்கோடனுக்கும் அவன் முதலாளிக்கு நர்ஸாக வரும் நிஷாவின்மேல் ஈர்ப்பு ஏற்படுகிறது. நிஷாவை திருமணம் செய்வது போல சிகாமணி இரவின் கனவொன்றைக் காண்கிறான்; அதே கனவை கார்க்கோடனும். இரண்டு நிஷாக்களும் அழகாக, இடது கால்களில் தலா ஆறு விரல்களோடு இருக்கின்றனர். இரண்டு நிஷாக்களும் இவர்கள் இருவரையும் ஒறுக்கின்றனர்.

கண்ணாடி பிம்பங்களாக இருவரின் வாழ்க்கை நிகழ்வுகளும் இயக்கம் கொள்கின்றன. ஆனால் வலது இடதாக மாறும் உத்தியை கவனமாக விலக்கும் கண்ணாடி இந்தக்கதை. சிகாமணி, கார்க்கோடன்: இருவரும் ஒருவரே போன்ற இருவரா, இல்லை ஒருவர் தானா?

"கார்க்கோடன் கடைசியாக "டேய் சிகா எப்படிறா மூத்திரம் பீ எடுத்துப்போட்ட நீ! எங்க முதலாளிக்கு எடுத்துப்போட்டபோது உன்னைதாண்டா நினைச்சுப் பார்த்தேன். உவ்வே வாந்தி வருதுடா" என்றான்.
சிகாமணி 'அடப்பாவி' என்று சொல்லிவிட்டு நிறுத்திக்கொண்டான். அடுத்து ஏதும் பதில் பேசமுடியவில்லை. கார்க்கோடனும் போனை வைத்துவிட்டான். சிகாமணின்னு பேர் வைச்சவங்களுக்கு எல்லாம் அப்படித்தான் வரும் என்று அவன் நினைத்துக்கொண்டான். கார்க்கோடனைத் தான் அப்போதுவரை அவனது உண்மையான பெயரைச்சொல்லி அழைத்திருக்கவில்லை என்பதும் கூடவே நி னைவில் வந்தது. தனது பெயரும் கார்க்கோடனின் பெயரும் ஒன்றுதானே என்று நினைத்துக்கொண்டான் சிகாமணி."

தேனியில் இருந்தால் என்ன, அல்லது தேனியை விட்டுவிட்டு மூணாறுக்குச் சென்றான் என்ன? மேலும் பெயர் தான் சிகாமணியாக இருந்தால் என்ன? கார்க்கோடனாக இருந்தால் என்ன? சந்தையில் ரூபாய் பொறுக்குதலும் மலமும் மூத்திரமும் அள்ளிப்போடுதலும் வாழ வழியாக இருக்கும்போது பெயர் என்பதின் மதிப்பு என்ன? எந்த வித்தியாசமும் இல்லாத(அ)வர்களின் விளிம்புவாழ்க்கைக்களங்களில் பெயர் என்கிற இடுகுறி கொள்ளும் பொருள் (அல்லது அந்த இடுகுறியின் பொருளற்ற தன்மை) கேள்வியாக நம்முன் விரிகிறது.

பெயர் என்பது arbitrary ஆக இடப்படுவது. ஆனால் நடைமுறையில் ஒரு பெயருக்கும் அந்தப் பெயர் சுட்டும் நபரின் பிம்பத்துக்குமான ஒரு பிணைப்பு, ஒரு தொடர்பு பார்ப்பவர்கள் மனதில் பதிந்துவிடுகிறது. ஆனால் இக்கதையிலோ இந்த பெயர்-பிம்பம் பிணைப்பும் தொடர்பும்கூடத் தீர்மானமாக இல்லை. ஒரே பெயர் கொண்ட இரு நபர்களா, அல்லது ஒரே பெயர் கொண்ட ஒருவரே தானா என்கிற ரகசியத்தைப் பிரதி தனக்குள்ளேயே வைத்துக்கொள்கிறது.

"சிகாமணி இறப்பதற்குமுன் யாரிடமோ சொல்வதுபோல 'நான் இறந்ததும் சிகாமணியும் இறந்துபோவான்' எனச் சொன்னான்."

இறந்தது சிகாமணியா, சிகாமணிகளா, தெரிவதில்லை நமக்கு. யார் யாருக்கு, எத்தனை பேருக்கு இழவுத்துக்கம் காக்கவேண்டும் என்பதை அறியாமலேயே வாசித்த கதையிலிருந்து விடைபெறுகிற துயரத்தை இக்கதை வாசகருக்குத் தன் வெகுமதியாக அளிக்கிறது.

(எஸ். செந்தில்குமாரின் இக்கதை ஆகஸ்ட் 2008 காலச்சுவடு இதழ் 104-ல் வெளியாகியிருக்கிறது. இந்த என் பதிவு பின்னர் விரித்து எழுதப்படும்)

3 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஆமாம் படித்து முடித்ததும் எழுந்த வியப்பு, கதை சொல்லும் பாத்திரங்களோடு பிணந்து நின்றுவிட்டது. மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டியது...

anujanya said...

கதையை முழுதும் வாசித்தேன். உங்கள் கருத்துக்களுடன் படித்ததால், உள்வாங்க முடிந்தது. நீங்கள் சொல்வது போல் 'ஒருவரா/இருவரா' ரகசியம் கடைசிவரை காக்கப்படுகிறது. நீங்கள் விரிவாக எழுதுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். மிக மிக சாதாரண நிலையில் எனக்கு இரு சந்தேகங்கள்.

1. இது இருவர் என்றால், யதார்த்தமான கதை என்பது தவிர விசேடமாக ஒன்றும் புரியவில்லை.

2. இது ஒருவரே என்றால் (அப்படி இருக்கத்தான் என் மனது ஆசைப் படுகிறது), ஆசிரியர் ஏராளமான சுதந்திரத்துடன் எழுதுகிறார். இரு சிகாமணிகளுக்கு இடையில் நடக்கும் உரையாடல்கள் ஒரு சிகாமணியின் கற்பனையா? மர்மமாகவும் வசீகரமாகவும் இருக்கிறது.

அனுஜன்யா

Perundevi said...

ஆமாம், கிருத்திகா, நான் கூட ஒருமுறைக்குமேல் இந்தக்கதையை வாசித்தேன்.
அனுஜன்யா, ஒருவரா இருவரா என்பதை உறுதியாகச் சொல்லமுடியாததுதான் இந்தக்கதையின் வசீகரம். நிச்சயம் இதைப்பற்றி விரிவாக எழுதவேண்டும். எப்போது என்று தெரியவில்லை. :(. குறைந்த வாடகையில் இன்முகத்தோடு கூட வாழும் அறை நண்பர்களை, வீட்டைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறேன் தற்போது.