Friday, August 8, 2008

சில ஆலோசனைகள்

ஒரு ஆண் (அவன் பெண்வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்பவேண்டுமென்றால்

நீ அவ்வப்போது பொய் சொல்லவேண்டும்
அந்தப் பொய்களுக்காக அவனிடம் (மட்டுமே)
கண்ணீர் விடவேண்டும்
ஒருபோதும் உண்மையை (அப்படி ஒன்று இருந்தால்) நேசிப்பவளாகக்
காட்டிக்கொள்ள வேண்டாம்.

ஒரு ஆண் (அவன் பெண்வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்பவேண்டுமென்றால்

ஒரு கண்ணில் அமிர்தத்துடனும்
இன்னொன்றில் விஷத்துடனும்
பார்வையில் ஒன்றுசேர விழுங்கவேண்டும் அவனை
ஒருபோதும் அமிர்தத்துக்கும் விஷத்துக்குமான வேறுபாட்டை
அவன் உணரச்செய்ய வேண்டாம்.

ஒரு ஆண் (அவன் பெண்வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்பவேண்டுமென்றால்

திரும்பவும் உன் சிறுபிராயத்தை நோக்கிச் செல்.
சிறுபிராயத்தையும் அவன் ரசிக்கத் தரவேண்டும்
அவன் இல்லாத உனக்கேயான பிராயமென்று
உன் முதுமை அமையலாம் ஒருவேளை.

ஒரு ஆண் (அவன் பெண்வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்பவேண்டுமென்றால்

திரைப்படக் காமக்காட்சியில் வீணையைப்போல்
அறிவுஜீவிகள் மத்தியில் பிரதியைப்போல்
வாசிக்கப்படுபவளாகக் உன்னைக் காட்டித்தர வேண்டும்
(ஆற்றைவிடவும் ஆழமாக)
வீணைகள் பிரதிகள் பெண்களை வாசிக்க
ஆண்களுக்கு விருப்பமென்பதை மனதில்கொள்.

ஒரு ஆண் (அவன் பெண்வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்பவேண்டுமென்றால்

அறிவில் அவனில் நீ பாதிக்குக் கீழ் எனவும்
அன்பு தருவதில் நிரம்பித்ததும்பியும்
உன்னை அறிவித்துவிடவேண்டும்.
அன்பு கொஞ்சம் குறையும்பட்சத்தில்
கார்ப்பரேஷன் தண்ணீரை இட்டு நிரப்பு பாதகமில்லை.

ஒரு ஆண் (அவன் பெண்வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்பவேண்டுமென்றால்

மழையை குழந்தைகளை நேசிப்பதாக
அவன் முத்தம்கொடுக்கும்முன் சொல்லப்பழகு
அப்போது உன் கூரிய பற்களை
உதடுகளுக்குள்ளே அடக்கிவைத்துக்கொள்
அவன் நெஞ்சில் படரும்போது
கனவுகளைக் காண்பவளாக உன்னைக்காட்டிக்கொள்
அல்லது அச்சமயம் கண்ணையாவது மூடிக்கொள்

ஒரு ஆண் (அவன் பெண்வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்பவேண்டுமென்றால்

லக்கானோ புரந்தரதாசரோ பெரியாரோ
இந்திய அரசியல் சட்டமோ, விளக்குபவனிடம்
குளிர்இமைகளை சற்றே உயர்த்திக்கேள் "அப்படி..
யா?" அதற்குமுன் உன் புருவங்களைச் செம்மை செய்ய
மறக்காதே எழுத்தாள நண்பனுக்கும் திருத்தப்பட்ட பெண்புருவம்
பிடிக்கும்
என்றாலும் அழகுநிலையத்தில் அவ்வப்போது
வண்டியில் விட அவனை அழைக்க வேண்டாம்.

பலஸ்ருதி

ஒரு ஆண் (அவன் பெண்வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்பவேண்டுமென்றால்

ஆலோசனைகளை வாசித்ததாகத்
தெரியப்படுத்த வேண்டாம் அல்லது இவற்றை
நிராகரித்ததாகச் சொல்லிக் கண்ணடித்துவிடு
அல்லது (மிகப்பணிந்து) ஏதோ ஒன்றை.
விரும்பப்படாவிட்டாலும் அவனோடு
ஆகப்பெருவாழ்வு வாழ உதவும் இவை.

12 comments:

அனுஜன்யா said...

அம்மா! peppered with sarcasm. ஆயினும் பெரும்பாலும் மறுக்கமுடியா உண்மைகள். ஒரு மாறுதலுக்கு ஆண்களுக்கும் சில ஆலோசனைகள் சொல்ல முடியுமா?

அனுஜன்யா

கிருத்திகா said...

தங்களின் பெரும்பாலான கவிதைகளில் தொனிக்கும் ஆளுமை இதில் இயலாமையை கலந்து தொனிக்கிறது....அன்பிற்கு ஏங்குவது பெண்கள் மட்டுமல்ல தோழி.. சொல்லப்போனால்.. விட்டு விடுதலையாகத்தவிப்போற்கு இதெல்லாம் அடைக்கும் தாழ் தானே...

Perundevi said...

நன்றி அனுஜன்யா, கண்டிப்பாக பின்னொருநாள் ஆலோசனைகள் தருகிறேன்.

ந்ன்றி கிருத்திகா, ”அன்பிற்கு ஏங்குவது பெண்கள் மட்டுமல்ல தோழி” மிகச்சரி. இந்தக்கவிதையில் கவிதைசொல்லியும் அன்பிற்கு ஏங்கும், பெற்ற அன்பைத் தக்கவைக்கும் முயற்சிகள் குறித்து கிண்டல் செய்திருப்பதாகத்தான் தோன்றுகிறது. மேலும் அதிகாரத்தை வெளிப்படையாக எதிர்த்தோ கேள்விகேட்டோ தான் விட்டுவிடுதலையாகும் வழியில் செல்ல வேண்டும் என்றில்லை, அதிகாரத்தைக் கிண்டல் செய்வதும் subvert செய்வதும் கூட அவ்வழியில் பயணிப்பதுதான்.

ab said...

'எழுத்தாள நண்பனுக்கும் திருத்தப்பட்ட பெண்புருவம்
பிடிக்கும்
என்றாலும் அழகுநிலையத்தில் அவ்வப்போது
வண்டியில் விட அவனை அழைக்க வேண்டாம்.'

ஆண்கள் புருவங்களை திருத்தாவிட்டாலும் பேஷியல்
செய்து கொள்வதுண்டே.ஸ்பாவில்
தங்கள் உடல்களுக்கு மசாஜ் செய்து
கொள்வதுண்டே.சாரு என்ற எழுத்தாளர் தான் நகத்திற்கு,காலிற்கு என்று பூச்சுகள் வைத்திருப்பதை எழுதியிருக்கிறார்.இதையெல்லாம்
வெளியில் சொல்லாத எழுத்தாளர்களும் இருக்கலாமே.

கவிதாயினி காதலிக்காக தன் புருவங்களை திருத்திக் கொள்ள விரும்பும் ஆண் அறிவுஜீவி-கம்-
எழுத்தளனை/கலைஞனை கண்டுபிடிப்பது கடினமாக
இருக்கலாம்.முயன்றால்
கண்டுபிடிக்கலாம்.திருத்தப்பட்ட
உன் புருவம் லகானின் புருவம்
போல் இருக்கும் என்று சொல்லிப்
பாருங்கள், ஆசாமி மசியக்கூடும் :).

ab said...

'அதிகாரத்தைக் கிண்டல் செய்வதும் subvert செய்வதும் கூட அவ்வழியில் பயணிப்பதுதான்.'

இது கூட ஒர் எதிர்-அதிகாரத்திற்கு
துவக்கமாக இருக்கலாம்.The so called subversion may end in
affirmation in a different way.

Perundevi said...

//திருத்தப்பட்ட
உன் புருவம் லகானின் புருவம்
போல் இருக்கும் என்று சொல்லிப்
பாருங்கள், ஆசாமி மசியக்கூடும் :).//

:) :)

Perundevi said...

//ஆண்கள் புருவங்களை திருத்தாவிட்டாலும் பேஷியல்
செய்து கொள்வதுண்டே.ஸ்பாவில்
தங்கள் உடல்களுக்கு மசாஜ் செய்து
கொள்வதுண்டே.//

அனுஜன்யா, இவ்விஷயத்தை கவனத்தில் கொள்க.

தமிழ்நதி said...

உங்கள் கவிதையை எங்கு வாசித்தாலும் கண்டுபிடித்துவிடுவேன் என்றே தோன்றுகிறது.:) கசப்பு தோய்ந்த எள்ளல் வழியாக.

Perundevi said...

தமிழ்நதி, காதல், உடல் போன்றவற்றை romanticize செய்வதிலிருந்து தப்பித்து எதிர்த்திசையில் மொழிச்செயல்பாடு செல்லவேண்டும். எள்ளல் அதற்கு ஒரு வழி.

கோநா said...

"ஒரு ஆண் (அவன் பெண்வேடமிட்டிருந்தாலும்)"
பெருந்தேவி, இவ்வரிக்கான அர்த்தம் என்னவென்று கூற முடியுமா?

கோநா said...

பெருந்தேவி, "அவன் பெண் வேடமிட்டிருந்தாலும்" என்று ஒவ்வொரு முறையும் சொல்கிறீர்கள், எனில் பெண்-பெண் ஒரு பால் காதலர்களில் பெண்தன்மையுள்ள பெண்ணுக்குமான ஆலோசனையா இது? என் வாசிப்பில் பிழை இருந்தால் மன்னிக்கவும். இப்பின்னூட்டத்தை நீக்கவும் உங்களுக்கு உரிமை:) தருகிறேன்.

Perundevi said...

கோநா //பெருந்தேவி, "அவன் பெண் வேடமிட்டிருந்தாலும்" என்று ஒவ்வொரு முறையும் சொல்கிறீர்கள், எனில் பெண்-பெண் ஒரு பால் காதலர்களில் பெண்தன்மையுள்ள பெண்ணுக்குமான ஆலோசனையா இது?//
மிகச்சரி. ஆண்-பெண் என்பது உடல்ரீதியான சாராம்சம் அல்ல என்பதும் இங்கே உள்ளிடை.
அப்புறம், பின்னூட்டத்தை எதற்கு நீக்க வேண்டும், நீங்கள் வித்யாசமாகவே வாசித்திருந்தாலும்கூட?
அன்புடன்
பெருந்தேவி