Wednesday, August 20, 2008
ஒரு முத்தம் ஒரு பரம்
மிகமிக நேசிப்பவன் முத்தம் கொடுக்கப்போவது அவளுக்குத் தெரிந்திருந்தால் முந்தைய நாள் ஆன்டிபயாடிக் மாத்திரைகளை ஏன் முழுங்கியிருக்கப்போகிறாள்?/ முத்தத்தின் முடிவில் நாக்கின் வெள்ளைப்படிவு நினைவுப்பரிசாகஅவனிதழில் ஒட்டிக்கொண்டுவிட்டது/ கசப்பின் அவ்வசீகரத்தை செருகிய அவன் விழியின் அந்திமாலைச் சிகப்பு காட்டிக்கொடுக்காதிருக்கட்டும் பிறகு/ பேராபத்து, யாரும் நுழைந்துவிடக்கூடும் எந்நேரமும் என்ற அறையில் சாகசத்தின் நிறங்கொண்டுவிட்டது ஏக்கம்/ஓட்டையடைக்க வேண்டிய தன் பற்களுக்குள்ளே துழாவும் அவன் நாக்கை வழிகாட்டி நிரப்புகிறாள் அவளும்/ திரைச்சீலைகள் வினவுகின்றன, தம் அசைவுகளின் மீது வைத்திருந்த கண்களை அவர்கள் மூடிக்கொண்டது எப்போது எப்போது/ வீட்டிற்குள்ளே அவள் நுழைய அவன் களிப்பின் ஜொலிப்பால் அவை கூசியதே அப்போது அப்போது/ ஏதோ மூங்கில்கள் நெஞ்சில் நின்று எழும்புகின்றன அவர்களின் பிந்நேரம் கடந்த புல்லாங்குழல் கச்சேரிக்கு/இசையாக மாறியிருக்கும் அவள் நோய் அந்நேரம்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ஆஹா,
பிடித்திருக்கிறது. ரசித்தேன். திரைச்சீலைகளின் வினாவும், அவை பெற்ற விடையும் அழகு. மிக வித்தியாசமாக எழுதுகிறீர்கள்.
அனுஜன்யா
நன்றிஒ அனுஜன்யா, மன்னிக்கவும் தாமதமான என் பதிலுக்கு. இப்போது தான் அமெரிக்கா வந்திருக்கிறேன்.
ஆமாம், காதலர்களின் இருப்பால் உயிரற்றவையும் உயிர்பெறும் அல்லவா, திரைச்சீலைகள் கேள்வி கேட்பதும் அவ்வாறே.
"கசப்பின் அவ்வசீகரத்தை செருகிய அவன் விழியின் அந்திமாலைச் சிகப்பு காட்டிக்கொடுக்காதிருக்கட்டும் பிறகு"
- பெருந்தேவி, இவ்வரிகளுக்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என யோசித்துக் குழம்பிக்கொண்டிருக்கிறேன்.
பொழுதின் மயக்கச் சிகப்பு ஏறும் கண்களில் அந்நிறம் வலிமை குறைய கொஞ்சம் நேரம் ஆகும். அதற்குள் அந்நிறம் நிகழ்ந்ததை “காட்டிக்கொடுக்காதிருக்க” வேண்டும்.
Post a Comment