Wednesday, February 25, 2009

நம்மைப் பிரியவில்லை கிருத்திகா

தமிழில் என்னை மிகவும் பாதித்த எழுத்தாளர்களில் ஒருவரான கிருத்திகாவின் மறைவுச் செய்தி என்னை அடைந்தபோது ஒரு கணம் நிரந்தர இழப்பின் கையறுநிலை என்மேல் கவிந்தது. கிருத்திகாவை அவர் எழுத்தின் மூலமே நான் அறிவேன். அவர் மகள் மீனா சுவாமிநாதன் அவர்களை எனக்கு நன்கு தெரிந்திருந்தாலும் கிருத்திகாவை நான் சந்தித்ததில்லை. பொதுவாகவே எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் எழுத்தின், கலையின் மூலமாகவே அணுக்கம்கொள்ளும் குணம் எனது. மேலும் எழுத்துக்கும் கலைக்கும் பின்னால் படைப்பாளியாக நிற்கும் ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்கள், அவர்களின் நேரடி உறவு, நட்பு இவற்றைவிட, எழுத்தும் கலையும் நமக்கு அறிமுகப்படுத்தும், சாத்தியப்படுத்தும் உலகங்கள் இன்னும் பெரிதாகவும் செழுமையானதாகவும் அமைந்துவிடுவதால் எழுத்தாளர்களை, கலைஞர்களைத் தேடிப்போகும் தேவையை நான் உணர்ந்ததில்லை.


கிருத்திகாவின் நாவல் வாஸவேச்வரத்தை 1990-களின் தொடக்கத்தில் நான் வாசித்தபோது, அவரது கதை சொல்லும் நேர்த்தியும் கதைக்கு அடித்தளமாக பெண்களை நிறுவும் அவர் பார்வையும் முதல்வாசிப்பிலேயே என்னைக் கவர்ந்தன. அதன்பின்னர் அவரது "புதிய கோணங்கி," "புகை நடுவில்" போன்ற மற்ற நாவல்களைத் தேடி வாசித்தேன். தமிழின் இயல்மொழி வடிவம் நவீன சிறுகதை, நாவல்களில் செயல்படும் விதம் குறித்த என் கட்டுரை ஒன்று காலக்குறி இதழில் 1999-ல் பிரசுரமானது. சிறுகதையில், நாவலில் நமக்கு ஸ்தூலமாகத் தரப்படும் மொழிக்குறிகள் (language signs) தருகிற உடனடி அர்த்தம், எவ்வாறு கதையாடலோடு தொடர்பு கொள்ளுகிறது என்பதைப் பேசுகிற அந்தக் கட்டுரையை வாஸவேச்வரத்தையும் புதுமைப்பித்தனின் சில சிறுகதைகளையும் முன்வைத்தே எழுதினேன். பின்னர் 2007-ஆம் ஆண்டு காலச்சுவடு பதிப்பகம் செவ்வியல் வரிசையில் வாஸவேச்வரத்தில் மூன்றாம் பதிப்பை வெளியிட்டபோது, நாவலுக்கு முன்னுரை எழுத என்னைக் கேட்டார்கள். மகிழ்ச்சி அடைந்தேன். இரண்டு காரணங்கள்: ஒன்று, தமிழில் மிகவும் பிடித்த நாவல்களில் ஒன்றுக்கு முன்னுரை எழுதப்போகிறேன் என்பது, மற்றொன்று இந்த வாய்ப்பினால் இன்னும் சிலதடவைகள் அந்த நாவலை வாசிக்கும் அனுபவம் கிடைக்கப்போகிறது என்பது.


ஆனால் என் முன்னுரையை சம்பிரதாயமானதொரு முன்னுரையாக எழுதக்கூடாது எனத் தீர்மானித்தேன். நவீனத் தமிழ் இலக்கியச்சூழலில் கிருத்திகாவின் எழுத்து அது பெற்றிருக்கவேண்டிய பரவலான கவனிப்பையும் அங்கீகாரத்தையும் பெறவில்லை என்பது எனக்குப் பெரும் ஆதங்கமாக இருந்தது. பொதுவாகவே தமிழ் நவீன இலக்கியச்சூழல் ஆண்களின் குழுக்களின் வலைப்பின்னல்களால் உருவாகியபடி இருப்பதே. இந்தக்குழுக்கள் ஓருசில பெண்களின் எழுத்துகளை முன்வந்து அங்கீகரித்தாலும் அது அந்தப் பெண்கள் வலைப்பின்னல்களோடு தொடர்புற்றிருக்கும் இடத்தைப் பொறுத்தோ, அல்லது ஒரு தவிர்க்கமுடியாத வெற்றுப் பிரதிநிதித்துவ அங்கீகாரமாகவோதான் அமைகிறது என்பதும் இலக்கியச்சூழலை அவதானிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். கிருத்திகா பரவலாகப் பேசப்படாமல் போனதையும் இத்தோடு இணைத்துப் பார்க்கலாம்.


வாஸவேச்வரம் நாவலையே எடுத்துக்கொள்வோம். நாவலின் முதல்பதிப்பு 1966-இல் டால்டன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது; மூன்றாம் பதிப்பு காலச்சுவடால் 2007-இல் வெளியிடப்பட்டிருக்கிறது. இடைப்பட்ட நாற்பது வருடங்களில் மார்க்ஸியம், இருத்தலியல், அமைப்பியல், பின் - நவீனத்துவம், பெண்ணியம் எனப் பல்வேறு இலக்கியப் போக்குகள், சிந்தனைகள், இவற்றுக்கிடையே தொடர்ந்த உரையாடல்களின் வாயிலாக நவீனத்தமிழ் விமரிசனக்களம் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த விமரிசனக்களத்தில் கிருத்திகாவின் இந்த நாவலாகட்டும், இதர எழுத்துகளாகட்டும், விரிவாகப் விவாதிக்கப்படவேயில்லை. நூல் அகம் பதிப்பகம் 1991-இல் கொண்டுவந்த வாஸவேச்வரத்தின் இரண்டாம் பதிப்புக்கு நாகார்ஜுனன் எழுதிய பின்னுரை ஒரு விதிவிலக்கு.


நவீனத் தமிழ் இலக்கியச்சூழல் குறித்த என்னுடைய ஆதங்கத்தை சமனப்படுத்த வேண்டி, முன்னுரையற்ற முன்னுரையாக, விரிவான கட்டுரையாகவே வாஸவேச்வரம் நாவலின் காலச்சுவடு பதிப்புக்கான முன்னுரையை நான் எழுதினேன். ஆண்-அதிகாரத்தை தொடர்ந்து நிலைநிறுத்தும் குடும்ப அமைப்பை, அந்த அமைப்புக்குள்ளிருந்தே பால் விழைவுகளின் ஊடாட்டத்தின்வழி நாவலின் பெண்பால் பாத்திரங்கள் எதிர்கொள்ளுவதை விவரிக்கிறது அந்த முன்னுரை. இங்கே ஒன்றைக் குறிப்பிடுவது முக்கியம்: கிருத்திகா இந்நாவலில் குடும்ப அமைப்பை கேள்விகேட்கும் பெண்ணியத்தை கோஷங்களாகவோ கருத்துகளாகவோ உயர்த்திப் பிடிப்பதில்லை. கதையை நகர்த்திச் செல்லும் முக்கியமான உணர்வெழுச்சிமிகு கட்டங்களில் ஆண்-அதிகாரத்துக்கான சவால் கதைப்போக்கிலேயே பெண் கதாபாத்திரங்களால் தீர்மானிக்கப்படுகிறது; சில இடங்களில் இந்தச் சவால்தான் இத்தகையக் கட்டங்களையே கதைப்போக்கில் நிர்மாணிக்கிறது. ஒரு சிறந்த நாவலாசிரியராக கிருத்திகா வெற்றிபெறுவது இப்படியொரு நுட்பமான எழுத்துப்பாணியை கையாண்டிருப்பதாலேயே என்று நினைக்கிறேன்.


ஒரு குறிப்பிட்ட வகைசார் பெண்ணிய வாசிப்புக்கு வாஸவேச்வரத்தை நான் உட்படுத்தியிருந்தாலும் கிருத்திகாவின் நாவல்கள் இவ்வாசிப்பைத் தாண்டிய பரிமாணங்கள் கொண்டவை. நவீன வாழ்க்கை தரும் தனிமனிதத் துயரும் அலைக்குறுதலும் முரண்பாடுகளும், இவற்றை தாண்டத் துடிக்கும் மனிதர்கள் சாரமற்ற சடங்கு சம்பிரதாயங்களைப் பிடித்துத் தொங்கும் வேடிக்கையும் இந்நாவலில் மட்டுமல்ல, "சத்ய மேவ" போன்ற கிருத்திகாவின் மற்ற நாவல்களிலும் பேசுபொருட்களாக இருக்கின்றன; கூர்மையான எள்ளல்தொனியோடு விவாதிக்கப்படுகின்றன. மரபின் அம்சமாக கலாச்சாரத்தைப் போற்றிக் கொண்டாடுவதையும் தூற்றி எறிவதையும் தாண்டி, "விளையாட்டு வடிவமாக" அதை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை அவர் தொடர்ந்து தன் எழுத்துகளில் முன்வைத்திருக்கிறார். "வாழ்க்கையையும் சடங்குகளையும் இணைக்கமுடியாமல் போய்விட்டால் நம் இளைஞர்கள் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தையும் சுயகௌரவத்தையும் தேடி எங்கேதான் போக முடியும்? அழகியல் ரீதியான அர்த்தத்தளம் ஒன்றை சமுதாயம் வளர்த்தெடுக்காமல் போய்விடுமானால், மனித ஆத்மாவானது அதைத் தேடி எங்கேதான் போகமுடியும்?” என்பவை இலக்கியத்தை நம்முன் நிறுத்தி அவர் கேட்கும் கேள்விகள்."சுயகௌரவம்," "அழகியல்," "ஆத்மா" போன்றவற்றுக்கான வரையறைகள் ஒருவருக்கொருவர் மாறுபடலாம்; கேள்விகளுக்கான பதில்களும் வித்தியாசப்படலாம். ஆனால் இந்தக் கேள்விகளும் இவை நம்முள்ளே எழுப்பும் சிந்தனைகளின் கண்ணிகளும் மிக முக்கியமானவை.


இன்று நம்மிடமிருந்து மறைந்தாலும் எழுத்துருவாக என்றுமே கிருத்திகா நம்மோடு இருப்பார், வலிமையோடு ஒளிரும் ஒரு நட்சத்திரம் போல, தூரத்தில் இருந்தாலும் நமக்கொரு வழிகாட்டியாக.

1 comment:

Perundevi said...

றஞ்சினி said

//பொதுவாகவே தமிழ் நவீன இலக்கியச்சூழல் ஆண்களின் குழுக்களின் வலைப்பின்னல்களால் உருவாகியபடி இருப்பதே. இந்தக்குழுக்கள் ஓருசில பெண்களின் எழுத்துகளை முன்வந்து அங்கீகரித்தாலும் அது அந்தப் பெண்கள் வலைப்பின்னல்களோடு தொடர்புற்றிருக்கும் இடத்தைப் பொறுத்தோ, அல்லது ஒரு தவிர்க்கமுடியாத வெற்றுப் பிரதிநிதித்துவ அங்கீகாரமாகவோதான் அமைகிறது என்பதும் இலக்கியச்சூழலை அவதானிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். கிருத்திகா பரவலாகப் பேசப்படாமல் போனதையும் இத்தோடு இணைத்துப் பார்க்கலாம்.//

உண்மை இதைத்தான் நானும் சொல்வது..

பெருந்தேவி கிருத்திகா பற்றிக்கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் அவரின் எழுதொன்றையும் நான் படிக்கவில்லை ..
அவரை தேடாமல் இருந்துவிட்டேனே என்ற உணர்வை நீங்கள் அவர்பற்றிக் கொடுத்திருக்கும் அறிமுகத்திலிருந்து உணர்கிறேன் ..வாஸவேச்வரத்தையும் மற்றய அவருடைய நாவல்கலையும் தேடி படிக்கவேண்டும் நன்றி ..

உங்கள் பக்கத்தின் புதிய மாற்றம் நன்றாக இருக்கிறது