Monday, June 29, 2009

எல்லோரோடும் தனியாய் (சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி)

சதை எலும்பை மூடுகிறது
ஒரு மனசை அவர்கள் வைக்கிறார்கள் அதில்.
சமயங்களில் ஆன்மாவையும்,
பெண்கள் ஜாடிகளை சுவர்களில் அறைந்து உடைக்கிறார்கள்
ஆண்கள் குடிக்கிறார்கள்
அதிகமாகவே.
ஒருவருக்கும் கிடைப்பதில்லை
ஒன்றும்
ஆனாலும் தேடிக்கொண்டே
படுக்கைகளின்
உள்ளூம் புறமும் ஊர்ந்தபடி
சதை எலும்பை மூடுகிறது
சதை தேடுகிறது
சதையைத் தாண்டி.

வாய்ப்பே இல்லை
ஒருமித்த விதி
ஒன்றினால் மடக்கப்பட்டிருக்கிறோம்
நாம் எல்லோரும்.

ஒருவரும் கண்டுபிடிக்கப் போவதில்லை
ஒன்றையும்.

நகரத்தில் குப்பைகள் நிரம்ப
கூளக்கிடங்குகள் நிரம்ப
பைத்திய விடுதிகள் நிரம்ப
மருத்துவமனைகள் நிரம்ப
கல்லறைகள் நிரம்ப

வேறேதும் நிரம்புவதில்லை.

Sunday, June 14, 2009

எப்படி எப்படியோ

மதிய உணவுக்கு அவள் ரொட்டிகள் சுடுவதில்லை
இரவுக்கு நெய்ப்பாயாசமும் வைப்பதில்லை
இரண்டாவது பொய் பொய் என்கிறான்
சூரியனின் துளி சிலிர்த்துச் சிரிக்கும்
ஆண் நண்பன்.
(இது வேறு நெய்ப்பாயாசக்கதை. சரிதான் ஐயா.
கவிதையும் கத்திரிக்காயும்
உண்மைகளைச் சுட்டுவதற்கா என்ன?)
அவனுக்கும் தமிழுக்கும் காததூரம் என்றாலும்
அவன் அவளுக்கு அமிர்தம்
ஹெடிரோ பாலியல் அரசியல் சரித்தன்மை ஆகாதுதான்.
அவனைப் பெண் ஆக மாற்றுவது பற்றி
கவிதைசொல்லி எத்துணை சிந்தித்தும் பயனில்லை.
இதேபோலத்தான்
ஏன் எழுதுபவர்கள் மழையையும் குழந்தைகளையும் பிடிக்கும்
என்று அறிவிக்கிறார்கள்
எப்படி கவிதைகளில் கொண்டாடப்படும் மாதவிலக்கு
நிஜத்தில் நாறுகிறது என்றெல்லாம் சிந்தித்தும்.
ரொட்டிகள் சுடாமல் நெய்ப்பாயாசம் வைக்காமல்
குழந்தைகளைப் பேசாமல் மழையை நேசிக்காமல்
மாதவிலக்கைச் சகித்துக்கொண்டு
பெண்ணாக
ஆமாம் பெண்ணாக
பாதி எழுதுவதும்
சன்னலுக்கு மேலே சுவர்
பாதிமறைக்க அறையில் பிய்ந்து
தொங்கும் குறைநில
வைப்போல்
மீதி ‘வாழ்’வதாக வயதேறுவதும்.

Saturday, June 13, 2009

அவற்றுக்கு என்ன வேண்டும்? (சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி)

உன் மூளையின் உள்ளிருக்கும் அந்தக்கண்கள்
உன்னைத் உற்றுத்திரும்பி நோக்கும்
நேரங்கள் உண்டு.
அது திடீரென நிகழ்வது.
நீ உள்ளேவந்து
படுக்கையில் படுக்கும்போது
சிலசமயம் நேரும் அது.
2 கண்கள் உன்னோடு சம்பந்தமில்லாதவை
உன்மூளையின் உள்ளிருந்து
உன்னை உற்றுத்திரும்பி நோக்கும்.
எழுந்து உட்காருவாய்
அவை போகும்வரை.

அல்லது நீ ஒரு குழந்தையை அதட்டும்போது
ஒரு பெண்ணை அறையும்போது—
நீ சமையலறையில் நுழைகையில்
உன் மூளையின் பின்பகுதியில்
அக்கண்கள் தோன்றும், தொங்கும் அங்கே
நீ தண்ணீர் குடிக்கையில்.

அல்லது சிலசமயம் பூங்காவின்
பெஞ்ச் ஒன்றில் ஒரு செய்தித்தாளை
வாசித்தபடி அமையும் ஒரு அமைதிப்போதில்—
வரும் அங்கே கண்கள்:
பருத்த சிவந்த தங்கநிறமான கண்கள்,
ஒரு ஜோடி.
நீ எழுந்து நகர்ந்துவிடுவாய்.

அல்லது தொலைபேசி ஒலித்து நீ பதில் அளிக்கையில்
கண்கள் மீண்டும் வரும்—
“ஆமாம். நிச்சயமாக. இல்லை. நான் எதுவும்
செய்யவில்லை, ஆம். நான் நன்றாக இருக்கிறேன்.”
வைத்துவிட்டு, குளியலறைக்குச் சென்று
நீரை உன்முகத்தின் மேல் நீ அறைகையில்.

இந்தக்கண்களை
கண்ணற்றவருக்கோ அல்லது இவற்றை எடுத்துக்கொள்ளும் எவருக்கோ
சந்தோஷமாக அளித்துவிடுவேன்.

ஓஓ, மீண்டும் அவை இங்கே.
புரியவில்லை எனக்கு.
அவற்றுக்கு என்ன வேண்டும்?

(ஆங்கிலத்திலிருந்து தமிழில் இங்கே)