மதிய உணவுக்கு அவள் ரொட்டிகள் சுடுவதில்லை
இரவுக்கு நெய்ப்பாயாசமும் வைப்பதில்லை
இரண்டாவது பொய் பொய் என்கிறான்
சூரியனின் துளி சிலிர்த்துச் சிரிக்கும்
ஆண் நண்பன்.
(இது வேறு நெய்ப்பாயாசக்கதை. சரிதான் ஐயா.
கவிதையும் கத்திரிக்காயும்
உண்மைகளைச் சுட்டுவதற்கா என்ன?)
அவனுக்கும் தமிழுக்கும் காததூரம் என்றாலும்
அவன் அவளுக்கு அமிர்தம்
ஹெடிரோ பாலியல் அரசியல் சரித்தன்மை ஆகாதுதான்.
அவனைப் பெண் ஆக மாற்றுவது பற்றி
கவிதைசொல்லி எத்துணை சிந்தித்தும் பயனில்லை.
இதேபோலத்தான்
ஏன் எழுதுபவர்கள் மழையையும் குழந்தைகளையும் பிடிக்கும்
என்று அறிவிக்கிறார்கள்
எப்படி கவிதைகளில் கொண்டாடப்படும் மாதவிலக்கு
நிஜத்தில் நாறுகிறது என்றெல்லாம் சிந்தித்தும்.
ரொட்டிகள் சுடாமல் நெய்ப்பாயாசம் வைக்காமல்
குழந்தைகளைப் பேசாமல் மழையை நேசிக்காமல்
மாதவிலக்கைச் சகித்துக்கொண்டு
பெண்ணாக
ஆமாம் பெண்ணாக
பாதி எழுதுவதும்
சன்னலுக்கு மேலே சுவர்
பாதிமறைக்க அறையில் பிய்ந்து
தொங்கும் குறைநில
வைப்போல்
மீதி ‘வாழ்’வதாக வயதேறுவதும்.
2 comments:
அபாரம் ... உங்கள் கவிதைகளின் உக்கிரம் எனக்குப் பிடித்திருக்கிறது
ம் சலிப்பும் களைப்பும் வார்த்தைகளில் படிந்திருப்பதாக உணர்கிறேன் பெருந்தேவி.
Post a Comment