உன் மூளையின் உள்ளிருக்கும் அந்தக்கண்கள்
உன்னைத் உற்றுத்திரும்பி நோக்கும்
நேரங்கள் உண்டு.
அது திடீரென நிகழ்வது.
நீ உள்ளேவந்து
படுக்கையில் படுக்கும்போது
சிலசமயம் நேரும் அது.
2 கண்கள் உன்னோடு சம்பந்தமில்லாதவை
உன்மூளையின் உள்ளிருந்து
உன்னை உற்றுத்திரும்பி நோக்கும்.
எழுந்து உட்காருவாய்
அவை போகும்வரை.
அல்லது நீ ஒரு குழந்தையை அதட்டும்போது
ஒரு பெண்ணை அறையும்போது—
நீ சமையலறையில் நுழைகையில்
உன் மூளையின் பின்பகுதியில்
அக்கண்கள் தோன்றும், தொங்கும் அங்கே
நீ தண்ணீர் குடிக்கையில்.
அல்லது சிலசமயம் பூங்காவின்
பெஞ்ச் ஒன்றில் ஒரு செய்தித்தாளை
வாசித்தபடி அமையும் ஒரு அமைதிப்போதில்—
வரும் அங்கே கண்கள்:
பருத்த சிவந்த தங்கநிறமான கண்கள்,
ஒரு ஜோடி.
நீ எழுந்து நகர்ந்துவிடுவாய்.
அல்லது தொலைபேசி ஒலித்து நீ பதில் அளிக்கையில்
கண்கள் மீண்டும் வரும்—
“ஆமாம். நிச்சயமாக. இல்லை. நான் எதுவும்
செய்யவில்லை, ஆம். நான் நன்றாக இருக்கிறேன்.”
வைத்துவிட்டு, குளியலறைக்குச் சென்று
நீரை உன்முகத்தின் மேல் நீ அறைகையில்.
இந்தக்கண்களை
கண்ணற்றவருக்கோ அல்லது இவற்றை எடுத்துக்கொள்ளும் எவருக்கோ
சந்தோஷமாக அளித்துவிடுவேன்.
ஓஓ, மீண்டும் அவை இங்கே.
புரியவில்லை எனக்கு.
அவற்றுக்கு என்ன வேண்டும்?
(ஆங்கிலத்திலிருந்து தமிழில் இங்கே)
4 comments:
ஆஹா, என்னமோ செய்கிறது இக்கவிதை. இந்த அகக்கண்கள், வெறும் மனசாட்சியில்லை - தவறு செய்கையில் அசௌகரியமாக எதிரில் வர. அமைதித் தருணங்களிலும் நினைவுறுத்தும் இக்கண்கள் சொல்ல வருவது தான் என்ன?
Works randomly or there is a method to madness?
Welcome back. கவிதையின் 'மூலம்' ஆங்கிலமா?
அனுஜன்யா
ஆம் அனுஜன்யா. இக்கண்கள் மனசாட்சி இல்லைதான். வேறு. முண்டக உபநிடதத்தில் ஒரு பறவை உண்பதை இன்னொன்று பார்ப்பதை இதோடு தொடர்புறுத்திக்கொள்ளலாம். ஆனால் ப்யூகோவ்ஸ்கி-யின் கவிதை நவீனம், தன்னை இன்னொரு (?) ஜோடிக் கண்கள் பார்ப்பதை உணர்கிற தன்னுணர்வுத் தளத்தில் செயல்படுகிறது. அவை வேண்டாம் என்று கவிதைசொல்லி ஒறுப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
கவிதை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துச் செய்யப்பட்டது. இதைச் சேர்த்துவிட்டேன்.
என் ஆய்வேட்டை இப்போதைக்கு முடித்துக் கொடுத்துவிட்டேன். அடுத்த வாரம் thesis defense. அதன் பிறகு அதிகமாக பதிவில் கவனம் செலுத்த முடியும் என நம்புகிறேன்.
பகிர்வுக்கு நன்றி.
பீட் எழுத்துக்கள் மொத்தமும் அந்தக் கண்களை நோக்கி எழுதப்பட்டவை தானோ? அக்கண்களினுள் தான் ஆகவிருக்கும், ஆகவிரும்பும் பிம்பத்தை மீண்டும் மீண்டும் மாற்றிப் போட்டுப் பார்த்தபடி! அதற்குள் ஒரு, பல தசாப்தங்கள் தாண்டியிருக்கும்..
அந்த கண்கள் ஏதோ செய்கிறது என்னையும்
தப்பிக்க
'கூடாத ' கண்கள்
Post a Comment